மாமாவின் பாசம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 8, 2012
பார்வையிட்டோர்: 8,603 
 
 

மாலை வெய்யில் சுத்தமாய் மறைந்தது. தெரு விளக்குகள் எரியத் துவங்கின் ஆற்றின் நீரோட்டம் கூட அமைதியாகவே இருந்தது. தூரத்தில் படித்துறை அருகே ஒன்றிரண்டு பேர்கள் துவைத்துக் கொண்டிருந்தனர்.

மஞ்சு, சுந்தரபாபுவின் மடியில் எழ மனமில்லாமல் படுத்திருந்தாள்.

“என்ன மஞ்சு. இருட்டாயிடுச்சே தனியா பயமில்லாம வீட்டுக்குப் போயிடுவியா?”

“ஆமாமா இன்னிக்கிதா புதுசா போறனாக்கும்.”

“அதுக்கில்லே ஊருக்குள்ளே ஒரே ரகளையா கெடக்குது பொறுக்கிப் பசங்க எது வேண்ணாலும் செய்வாங்க அதுக்குத்தான்.”

“அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே” என்று சொல்லிய மஞ்சு சுந்தரபாபுவின் முகத்தைப் பார்த்தாள்.

ஒரு செயற்கையான அசட்டுச்சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, “ம் ஆமாமா. நீங்க இப்படியே ஒவ்வொண்ணுக்கும் பயந்துட்டே இருங்க. கடைசிலே எங்க மாமாவுக்கே கழுத்தே நீட்டும்படி ஆயிடும்.”

“அதெல்லாம் ஒவ்வொண்ணுமில்லே மஞ்சு ஒரு முன் ஜாக்கிரதைக்கொசரம் சொன்னேன்.”

“நீங்க என்ன சொல்லுங்க எங்க மாமாவக் கண்டாலே எனக்கு பிடிக்கல்லே பத்தீட்டு வருது. எவ்வளவு கரிசனை. சந்தைக்குப் போனா, பட்டணம் மல்லிப்பூ ஜாக்கெட் துணி எல்லாத்தையும் வாங்கிட்டுவந்து பல்ல இளிக்கும். பாக்கவே சகிக்காது. ஆனா எங்கம்மாவாகட்டும். வேறே யாராவாகட்டும் ஒரு வார்த்தை சீறினா மாதிரி பேசினாக்கூட அதுக்கு பொறுக்காது. ஆவாளை அடிக்ககூட போயிடும் நீஙக என்னடான்னா? நா உங்கள மனசாரக் காதலிக்கறதும் உங்கமேலே உயிரே வச்சிருக்கற மாதிரி நீஙக என்னை…” என்று மஞ்சு முடிக்கும் முன் அவள் வாயைப் பொத்தினான் சுந்திரபாபு.

“ஏன் இப்படியெல்லாம் பேசுறே நானும் உன்னை மனசாரக் காதலிக்கறது மாத்திரமல்ல கல்யாணம் சீக்கரமா நடக்க உங்க வீட்டுக்கு நாளைக்கே வரப்போறேன்.” என்று அவளின் கரங்களை இறுகப்பற்றினான ஆற்றங்கரையில் மெல்ல தென்றல் இதமாய் தழுவியது.

இருவரும் எழுந்து கொண்டனர். அரசமரப் பிள்ளையார் கோவிலைத் தாண்டும் போது திடீரென்று நாலைந்து பேர் மேடையிலிருந்து ‘குப்’ பென்று குதித்து அவர்களை வளைத்து நின்றார்கள். வந்தவர்களில் ஒருவன் சுந்திரபாபுவின் கன்னத்தில் ‘ரப்’பென்று அறை ஒன்றை இறக்கினான். அடுத்த அறைக்குக் காத்திருக்காமல் ஊரை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

மஞ்சு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “ஐயோ என்னைக் காப்பாத்துங்க காப்பாத்துங்க.” என்று தன் அடி வயிற்றிலிருந்து பலங்கொண்ட மட்டும் கத்தினாள். அவளுடைய அந்த அவலக்குரல் அந்த பிரதேசமெங்கும் எதிரொலித்தது.

கயவர்கள் தங்கள் காரியத்தை ஆற்றத்துவங்கினார்கள். அவளை குண்டுகட்டாக தூக்கியபடி பக்கத்திலிருந்த தாழைப் புதர்களுக்கிடையில் கொண்டு சென்றார்கள். அவள் கத்த முடியாதவாறு வாயில் துணி வைத்து அடைத்தனர்.

தாழைமடல்கள் வெய்யிலில் காய்ந்து கருவாடாய் கருவாடாய் கிடந்தன. எங்காவது ஒன்று பச்சையாய் இருந்தது. புதர்களுக்கிடையில் அவளை கிடத்தியபோது திடீரென அந்த புதர் முழுக்க தீ பிடித்து எரிந்தது. எதிர்பாராத இந்த நிகழ்ச்சி அந்த நால்வரின் மனதில் அதிர்ச்சிக்கு இடம் தந்தது. நிலைமையை சமாளித்த மஞ்சு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊருக்குள் ஒடினாள்.

அவள் பின்னால் வந்த அவள் மாமன் அவளைக் கைபிடித்து அழைத்துச் சென்றான். இரவு வெகுநேரத்துக்குப் பின்பு கூடத்தில் மாமாவின் பேச்சொலி கேட்டு திடுக்கிட்டெழுந்தாள் மஞ்சு இதுவரை கண்டது கனவா?

சிந்தித்துப் பார்த்தாள். முதுகெலும்பே இல்லாத வெறும் பகட்டோடு இருக்கும் சுந்தர பாபுவை விட தன் மாமா ரங்கன் எந்தவிதத்திலும் குறைந்தவரல்ல. என்பதை பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறள். அன்றிரவு கண்ட கனவும் அவளுடைய நினைவை உறுதிசெய்தது. கொஞசம் முன்பு நடந்ததாக கண்டகனவை நினைத்தபோது நடுங்கினாள்.

அவள் மனம் மாமாவின் பாசத்துடன் நெருங்கத் தொடங்கியிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *