மாதவி மரணம்….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2017
பார்வையிட்டோர்: 6,207 
 
 

பெஞ்சில் மாலை போட்டு இருந்த மாதவி உடலைச் சுற்றி உற்றார், உறவினர், ஊர் கூட்டம்.

தலைமாட்டில் தாய் ஆண்டாள் தலைவிரிகோலமாய் அமர்ந்து, ”அம்மா…! அம்மா…! என் மவளே !” என்று கதறினாள்.

”மவளே! தாயீ,…” மாதவன் தன் மனைவிக்கருகில் நின்று மனசுக்குள் கதறி வாயில் துணி வைத்து விம்மி கண்ணீர் விட்டார்.

கண்ணனும் கதிரேசனும் கைகட்டி, முகத்தில் சோகம் அப்பி அந்த கூட்டத்தில் சுவரோரம் ஒதுங்கி எல்லாவற்றையும் கண்ணால் பார்த்து, காதால் கேட்டு அசையாமல் நின்றார்கள்.

”பாவி ! இவள் புருசன்தான் என் மகளைச் சாகடிச்சான். போய்க் கேளுடா கேளுடான்னு கூப்பாடு போட்டேன். அண்ணன்காரன் கேட்டானா ? கேட்கலை. அவனும் சேர்ந்து இவளைக் கொன்னுட்டான். நான் பெத்த மவ ஒரேயடியாய்ப் போய்ட்டாள் !” ஆண்டாள் துக்கத்தில் இவர்களைத் தூற்றினாள்.

அதற்கு மேல் அங்கு நிற்க பிடித்தமில்லாமல் அவர்கள் வாசலுக்கு வந்தார்கள். துக்கத்திற்கு வந்தவர்களை விட்டுத் தள்ளி ஆளுக்கொரு நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.
கண்ணன் மனசுக்குள் படம் விரிந்தது.

நேற்றுதான் மாதவி சொன்னதாக இவன் மனைவி மஞ்சுளா சொன்னாள். கேட்ட கண்ணனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனால் நம்பவே முடியவில்லை.

”ஆமாங்க. கதிர் அண்ணன் பொழுதுக்கும் போதையாம். ‘அதுக்கு’ ராத்திரி பகல் இல்லாம…வாடி வாடின்னு பொண்டாட்டியைக் கையைப் பிடிச்சு இழுக்கிறாராம். வரலைன்னா…. என்கிட்ட வராம எவன்கிட்ட போகப் போறேன்னு ? கத்தி கலாட்டாவாம். இதுக்குப் பயந்துகிட்டே மாதவி…சம்மதிச்சாலும் ஒரு பொம்மனாட்டி எத்தனைத் தடவை அப்படி இருந்து எழுந்திருக்க முடியும் ?! இதைவிடக் கொடுமை… புருசன் பொண்டாட்டி ராத்திரி படுக்கையில உடல்ல ஒட்டுத்துணி இல்லாம இருக்கனுமாம். அப்படி இல்லேன்னா ஏச்சாம், பேச்சாம், அடியாம். உடம்பே கூசுது. நெனைச்சி பார்க்கவே அவமானமாய் இருக்குன்னு…. மாதவி வந்து சொல்லி ஒரே புலம்பல், அழுகை.” கொட்டினாள்.

கண்ணனுக்கு இதைக் காது கொடுத்துக் கேட்க கஷ்டமாக இருந்தாலும்…. அதைவிட அதை மனசுக்குள் இறக்க ரொம்ப கசப்பு, அருவருப்பாய் இருந்தது.

மாதவிக்குப் பக்கத்து ஊரில்தான் திருமணம். கண்ணனும் கதிரேசனும் சிறுவயது முதலே விளையாட்டு நண்பர்கள், வகுப்புத் தோழர்கள் என்பதால்….ஒருத்தர் வீட்டிற்கு ஒருத்தர் வரப் போக இருக்க……மாதவிக்கும் கதிரேசனுக்கும் காதல். இரு வீட்டு பெற்றோர்களுக்குமே சம்மதம், சந்தோசம். திருமணத்தை முடித்தார்கள். காலா காலத்தில் ஆணொன்று பெண்ணொன்று குழந்தைகள். கதிரேசன் பெற்றவர்கள் பேரன் பேத்திகளை எடுத்துக் கொஞ்சி விட்டு கடமை முடிந்த கணக்கில் போய்ச் சேர….. கணவன் மனைவி தனிக்குடித்தனம். பத்தாண்டுகளாகப் பிரச்சனையே இல்லை. கடந்த ஆறுமாத காலங்களாகத்தான் கதிரேசன் குடியில் விழுந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிரச்சனை.

”என்ன யோசனை ? பொண்டாட்டி விருப்பமில்லாம புருசன் தொட்டா தண்டனை.! போய்க் கேளுங்க. நீ என்ன மனுசனா மிருகமா, பொண்ணு…பொம்பளையா, எந்திரமான்னு.” மஞ்சுளா இவனை விரட்டினாள்.

‘சட்டம் சரி. என்னத்தைக் கேட்பது ? எப்படி சாத்தியம் ! போதை என்ன வயக்கராவா பெண்ணைப் எப்போதும் தொந்தரவு செய்ய ? சரி போகட்டும். ஒரு குடும்பப் பெண்ணால் எப்படி கணவன் அழைத்த நேரமெல்லாம் உடன்பட முடியும் ? அது என்ன சாதாரணமாய் படுத்து எழுந்திருக்கும் பயிற்சியா?! தாம்பத்தியம்! எந்த நேரமும் கதவு சாத்தி இருக்க… அது என்ன வீடா இல்லை பலான தொழில் கூடமா ?!’ – நினைத்துப் பார்க்க கண்ணனுக்கு ஆத்திரமாக இருந்தாலும் இதைப் போய் நண்பனிடம் எப்படிக் கேட்பது ? – இவனுக்குத் தயக்கமாக இருந்தது.

”போய் அவரை இது சரியாடான்னு கண்டிச்சு வாங்க. நீங்க கேட்க வெட்கப்பட்டு, கூச்சப்பட்டால் நாளைக்கு உங்க தங்கையை உசுரோடு பார்க்க முடியாது. மாதவி அந்த அளவுக்கு மனசால, உடலால பாதிக்கப்பட்டிருக்காள்.” கறாராயச் சொன்னாள்.

”என்னடி சொல்றே ?” இவன் பதறினான்.

”நிசம்தான். குடிக்கட்டும் ! சொத்தை அழிக்கட்டும்! அதுக்காக எந்த நேரமும் எப்படி இப்படி இருக்க முடியும் ? பகல்ல பொழுதுக்கும் கதவு சாத்தி இருந்தால் அக்கம் பக்கம் என்ன நினைக்கும்? கேடு கெட்டதுகள்ன்னு காறித் துப்பாது?! தேவடியாள்கூட இப்படி இருக்க சம்மதிக்க மாட்டாள். காரியம் முடிஞ்சதும் இழுத்துப் போர்த்திக்குவாள். பத்து வயசுல பையன் இருக்கான். எட்டு வயசுல பொண்ணு இருக்கு. அப்படி என்ன அந்த ஆளுக்கு மனுச மக்கள் பார்க்காம வெறி.! மாதவி புள்ளைங்க முகத்துல முழிக்கவே வெட்கப்படுது. அதுங்களைப் பார்க்கக் கூசுது, நாக்கைப் புடுங்கிட்டு சாகலாம் தோணுதுன்னு சொல்லி அழுது. அந்த அளவுக்கு அது உடல், மனசு பாதிச்சிருக்கு. அலட்சியமா இருக்காதீங்க… சொல்லி;ட்டேன்.!” எச்சரித்தாள்.

இந்த அளவிற்கு ஒருத்தி சொல்ல… அதற்கு மேல் ஒருத்தனுக்கு எப்படி சும்மா இருக்க முடியும் ?

‘என்ன மனுசனிவன் ?’ – கண்ணன் கோபம் கொப்பளிக்க உடனே தங்கை வீட்டுப் படி ஏறினான். கதிரவன் வீட்டில் நல்லத்தனமாகவே அமர்ந்திருந்தான்.

”வாடா” வரவேற்றான்.

”மாதவி எங்கே ?”

”வெளியில போயிருக்காள் ?”

”எப்போ திரும்புவாள் ?”

”தெரியலை..”

”ஏன் இப்படி பண்றே ?”

”புரியலை ?”

”புரியாதது மாதிரி நடிக்காதே!”

”………………………..”

”என்னடா கேட்கிறேன். பதில்லே.”

”ஒன்னும் கண்டுக்காதன்னு அர்த்தம். இது என் குடும்ப விவகாரம்.”

”என்ன மயிரு குடும்ப விவகாரம் ? ”

அதிர்ச்சியாய்ப் பார்த்தான்.

”வேணாம் போயிடு. உனக்குத் தெரிஞ்சா வலி. என்னோடு இருக்கட்டும் போயிடு.”

”என்னடா வலி மசுருன்னு பசப்புறே.?!” கண்ணனுக்குள் அதுவரை கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆத்திரம் பீறிட்டது. ஓங்கி அறைந்தான்.

கதிரவன் ஆத்திரப்படவில்லை. மாறாக…

”இதனால கோபம் தணிஞ்சிருச்சின்னா போயிடு” பொறுமையாகச் சொன்னான்.

”என்னடா அநியாயம் பண்ணிட்டு நல்லவனாட்டம் நடிக்கிறே ?” முகத்தில் குத்துவிட்டான்.

கடைவாயில் வழிந்த ரத்தத்தை துடைத்த கதிர், ”என்னை அடிச்சது போதும் உன் தங்கச்சியை அடி.” சொன்னான்.

”ஏன் ????”

அவன் டக்கென்று விசும்பி குலுங்கினான்.

”ஏய்…. கதிர் என்னாச்சு ? ஏன் அழறே ?”

”நானே அந்தக் கண்றாவியைக் கண்ணால பார்த்தேன். நான் என்னடா இவளுக்குக் குறை வைச்சேன் அடுத்தவனோட படுக்கனும்….”

”கதிர் !!”

”நிசம், சத்தியம்டா. என்கிட்ட என்ன குறை ? மனசு தாங்காமத்தான் குடி. இந்த சுகத்துக்காகத்தானே போனே.. இது உனக்கு சலிக்கனும், வெறுக்கனும்ன்னுதான் அந்த சித்திரவதை. என்னை மன்னிச்சுடுடா.” கதிர் சட்டென்று கண்ணன் மார்பில் சாய்ந்து அழுதான்.

ஊமையன் கனவு கதை. கண்ணனுக்குள் இடி.

வெளியே வந்தான். வாசலில் எல்லாவற்றையும் கேட்டவளாய்க் கூனிக்குறுகி மாதவி.

ஒரு வார்த்தை பேசவில்லை. அத்தனை வெறுப்பு.

காறி ” த்தூ….” துப்பிவிட்டு விடுவிடுவென்று வந்தான்.

அண்ணனுக்கு தெரிந்து விட்ட அவமானம். அடுத்த அரை மணி நேரத்தில் மாதவி தூக்கில் தொங்கல்.

படம் முடிய…….

அருகில் இருந்த கதிரை, கண்ணன் ஆதரவாக அணைத்தான்.

‘எதுவாய் இருந்தாலும் மாதவி மரணம் ஒரு உயிர் ஈடு செய்ய முடியாத இழப்பு.!’ – கதிர் குலுங்கிக் குலுங்கி அழ……கண்ணனுக்குள்ளும் கலக்கம். கண்களில் கண்ணீர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *