மாட்டுத் தொழுவம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 3,272 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகார பூர்வமான சட்ட திட்டங்களால் மனித வர்க்கத்தை அடக்கி ஆண்டுவிட முடியும் என்று நம்புவது அறியாமை. மனிதன் நினைத்தால் அந்தச் சட்ட திட்டங்களை மீறிவிட முடியும். ஆனால் அன்பின் ஆக்கினைகளை மீறுவதற்கு மனிதன் சக்தியற்றவன். ஆகையால்தான் நமது நாட்டில் அவ்வப்பொழுது தோன்றி மறைந்த மகான்கள், ‘அன்பே ஆண்டவன்’ என்று கூறியிருக்கிறார்கள். வாழ்க்கையில் அன்புக்கு இடமில்லையென்றால் இன்பத்துக்கு இடம் ஏது?

அனைவரும் பொதுவாக அன்பில்தான் பிறக்கிறோம்; அன்பில்தான் வளர்கிறோம். ஆனால் எல்லோருமே அன்பில் வாழ முடிகிறதா? இல்லை. அப்படி வாழ முடியாத தரித்திர தேவதைகளில் நானும் ஒருத்தி.

பாவாடை கட்டி நான் எல்லோரும் பார்க்கக் கூடிய பாலகியா யிருந்தபோது அன்பைக் கண்டேன். அந்த அன்பின் காரணமாகப் பலவிதமான ஆடை அணிகளை அணிந்து பார்த்தேன்; விதவிதமான பட்சணம் பழ வகைகளைத் தின்று பார்த்தேன்; அழகான பொம்மைகளுடன் ஆடிக் களித்தேன். அப்பாவின் அருமைப் பெண்ணாயிருந்து, அம்மாவின் கொஞ்சும் கிளியாயிருந்து எத்தனையோ ஆடல் பாடல்களைப் பார்த்தும் கேட்டும் அனுபவித்தேன். ஆனால் இன்றோ?

அந்தக் காலம் மலையேறி விட்டது, எத்தனையோ நாட்கள் என்னை யாரும் பார்க்கமுடியாத இருட்டறையில் இருந்த பிறகு, கடைசியில் ஒரு நாள் அவர் வந்தார். அவருடன் சில ‘தரகர்’களும் வந்திருந்தனர். ‘தரகர்கள்’ என்றால் இங்கே நிஜத் தரகர்கள் என்று அர்த்தமில்லை! எல்லாம் அவருடைய உற்றார், உறவினர்தான். ஏதாவது ஆடு, மாடு வாங்கும்போது பேரம் நடக்கும் பாருங்கள், அதே மாதிரிதான் ஏறக்குறைய என்னுடைய கல்யாணப் பேச்சும் நடந்தது. பேரமெல்லாம் ஒருவாறு பேசி முடித்தார்கள்; ஒரு நாளையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அன்று இரு வீட்டாருமாகச் சேர்ந்து ஊரார், உறவினரைக் கூட்டினார்கள். நான் கழுத்தைக் குனிந்து கொடுத்தேன்; அவர் தாலியைக் கட்டி வைத்தார். அவ்வளவுதான்; அன்றைய தினத்திலிருந்து நான் அவருடைய ஏகபோக உரிமைப் பொருளாக ஆகிவிட்டேன்.

அதாவது, அவர் இனி என்ன என்ன செய்தாலும் சரி; ‘கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன்!’

ஆனால் இந்த நியாயம் அவருக்கு மட்டும்தான்; எனக்குக் கிடையவே கிடையாது-சமுதாயத்தின் சட்ட திட்டப்படி!


தெரிந்த ஊரை விட்டு, பிறந்த வீட்டைவிட்டு, பெற்ற தாயைவிட்டு, வளர்த்த தந்தையை விட்டு, தெரியாத ஊருக்குள் நுழைந்தேன்; பிறக்காத வீட்டுக்குள் புகுந்தேன். பெற்ற தாயின் பரிவுக்குப் பதில் வாய்த்த மாமியின் கொடுமையைக் கண்டேன்; என்னை வீட்டுக் காரியம் செய்ய விடாத தந்தைக்குப் பதில் எடுத்ததற்கெல்லாம் என்னையே காரியம் செய்யவிடும் மாமனாரைக் கண்டேன்.

இவர்கள் மட்டுமா? தினந்தோறும் காலை இரண்டு மணிக்கே எழுந்து நான் அடுப்பைக் கட்டிக் தொண்டு அழ வேண்டுமென்பதற்காக, அடுத்த ஊரிலுள்ள கலாசாலையில் படிக்கும் இரண்டு மைத்துனன்மார் எனக்கு இருந்தனர். மாமியார் தினசரி என்னுடன் மல்லுக்கு நிற்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஒரு மைத்துனியும் இருந்தாள். அவள் பெயர் மாலினி, பெயரில் இருக்கும் இனிமை சுபாவத்தில் கிடையாது. மாடும் ஒன்று இருந்தது, தினசரி இரண்டு வேளையும் பால் மட்டும் கறந்து கொடுத்து விட்டுச் செல்வதற்காக ஒரு வேலைக்காரனும் இருந்தான். மற்ற வேலைகளுக்குத்தான் நான் ஒருத்தி இருக்கிறேனே!

ஆனால், அவர் மட்டும் என்னிடம் அன்பாயிருந்திருந்தால் இத்தனை துன்பங்களும் என்னை ஒன்றும் பாதித்திருக்காது; பாதித்திருக்கவும் முடியாது.

அதுதான் இல்லை; அவருடைய சுபாவமே அலாதியாயிருந்தது. அவரைப்போல் இந்த உலகத்தில் வேறு யாராவது இருப்பார்களோ, இருக்கமாட்டார்களோ—எனக்குத் தெரியாது. ஆனால் அவர் மட்டும் அப்படியிருந்தது உண்மை.

தனக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டியிருக்கும்போது தான் அவர் என்னுடன் பேசுவார். அப்படிப் பேசும் போதும் அவருடைய பேச்சில் அன்பைக் காண முடியாது; அதிகாரத்தைத்தான் காணமுடியும்.

என்னுடைய பேதை உள்ளம் அவருடன் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று துடியாய்த் துடிக்கும். என்னலானவரை அந்த ஆசையை அடக்கிக்கொள்ள முயல்வேன். ஆனாலும் இரண்டு துளிக் கண்ணீராவது சிந்தாமற் போனால் அந்தப் பாழும் ஆசை அடங்குவதேயில்லை.

நினைத்த போதெல்லாம் அவர் வெளியே போவதற்குக் கிளம்புவார். அப்பொழுது எனக்கும் ஏனோ அவருடன் போக வேண்டுமென்ற ஆசை தோன்றும். அத்துடன் அவர் ‘எங்கே போகிறார்?’ என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் என் உள்ளத்தை அரிக்கும். என்னையும் அறியாமல் பொங்கி வரும் மகிழ்ச்சியுடன், “வெகு தூரமோ?” என்று கேட்டுவிடுவேன்.

அவ்வளவுதான்; அவர் முகம் அனலைக் கக்கும். “உன்னிடம் சொல்லிக் கொண்டுதான் போக வேண்டுமோ?” என்று சீறி விழுவார். அப்பொழுது என் முகம் எப்படி இருந்திருக்குமென்று இப்பொழுது உங்கள் கற்பனையில் தோன்றுகிறதல்லவா?—பார்த்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுதாவது ஒரு சமயம் அவர் நேரம் போவதே தெரியாமல் காப்பி கேட்காமலே இருந்து விடுவார். நானே எடுத்துக்கொண்டு போவேன். அப்பொழுது அவர் என்ன சொல்வார் தெரியுமா? “ஏன், மாலினி இல்லையா? எதற்காக நீ எடுத்துக் கொண்டு வந்தாய்? இப்பொழுது நான் உன்னுடைய அழகை அவசியம் பார்க்க வேண்டுமாக்கும்!” என்பார்.

இதை அவர் அலட்சியமாகத் தான் சொல்வார். ஆனால் அது என்னை எவ்வளவு தூரம் வேதனைக்கு உள்ளாக்கி விடுகிறதென்பதை அந்தப் புண்ணியவான் அறிவதேயில்லை.

இப்படித்தான் சொல்கிறாரே, நாமே எதற்காக எடுத்துக்கொண்டு போவது என்று பேசாமலிருந்து விட்டாலோ, “தங்களைக் கேட்டால்தான் கொடுக்க வேண்டுமோ!” என்பார் எகத்தாளமாக.

எப்படி வேடிக்கை?

கடைசியில் இன்னும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நான் இங்கே ஓரளவு வெட்கத்தை விட்டுச் சொல்லத்தான் வேண்டும். அது இதுதான்:—

இரவில் அவர் படுக்கையறைக்குள் நுழைந்ததும் நான் பாலை எடுத்துக் கொண்டு பின்னால் செல்வேன். பாலை மேஜையின் மேல் வைத்துவிட்டு, வழக்கம்போல் அடுத்த அறையில் தனியே படுத்துக் கொள்வதற்காகத் திரும்புவேன். எப்பொழுதாவது ஒரு நாள், “என்ன அவ்வளவு அவசரம்?” என்பார் அவர்—அதுவும் அன்புடன் அல்ல; அதிகாரத்துடன்தான்!

இந்த அழகான கேள்வியின் அர்த்தம், நான் அவருடன் கொஞ்ச நேரம் இருக்கவேண்டும் என்பதுதான்.

குறிப்பறிந்து நானும் என்னையறியாத நடுக்கத்துடனும் பயத்துடனும் அவரை நெருங்குவேன்…

இப்படிப்பட்ட வாழ்க்கையில்தான் நான் இன்று இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாராக விளங்குகிறேன்.

இவ்வளவு துன்பங்களையும் நான் எதற்காகச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும்?

வயிற்றுச் சோற்றுக்காகவா?

இல்லை; அதைப்பற்றி நாய்கூடக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பின் எதற்காக? “பெண்ணாய்ப் பிறந்ததற்காக !”


வீட்டில் அவர் வைத்ததுதான் சட்டம். ஆனால் அவருடைய சட்டதிட்டங்கள் என்னைத் தவிர வேறு யாரையும் கட்டுப்படுத்தாது. அவர் வீட்டில் இல்லாத வேளையில் அவருடைய சட்டதிட்டங்களை அமுல் நடத்தி வைக்கவும், அவசியமானால் அவசரச் சட்டங்கள் போடவும் என் மாமியார் இருந்தாள். நான் எந்த மாதிரிப் புடவைக் கட்டுவது, எந்த மாதிரி ரவிக்கை போடுவது என்பதுபோன்ற விஷயங்களில்கூட என் மாமியாரின் சட்டதிட்டங்கள்தான் செல்லும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அவளுடைய குண விசேஷத்தைப் பற்றி ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். அதாவது, அவர் என்னை எவ்வளவுக் கெவ்வளவு படுத்துகிறாரோ, அவ்வளவுக்கவ்வளவு அவளுக்குத் திருப்தி! — அவளுடைய மனோபாவம் அப்படியிருக்கும்படியாக நான் அவளுக்கு என்ன தீங்கு செய்தேனோ, தெரியவில்லை.

இத்தனைக்கும் என்னுடைய கல்யாணத்திற்கு முன்னால் நான் யாரோ, அவள் யாரோ? ஏற்கனவே சேர்ந்து வாழ்ந்திருந்தாலும் ஏதாவது பழைய மனத்தாங்கல் இருப்பதற்குக் காரணமிருக்கலாம். இப்போதுதானே அவளை எனக்கும் என்னை அவளுக்கும் தெரியும்? அதற்குள் என்னிடம் ஏன் அவளுக்கு அத்தனை வெறுப்பு?

பார்க்கப் போனால் பிறக்கும்போதே அவள் மாமியாராகப் பிறந்துவிடவில்லை. ஒரு காலத்தில் அவளும் இன்னொரு மாமியாரின் கீழ் மருமகளாய்த்தான் வாழ்ந்திருக்க வேண்டும். இப்பொழுது என் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் அப்பொழுது அவள் உள்ளத்திலும் தோன்றியிருக்க வேண்டும்; நான் இன்று அனுபவிக்கும் கஷ்டத்தை அவளும் அன்று அனுபவித்திருக்க வேண்டும்; நான் அடையும் வேதனையை அவளும் அடைந்திருக்க வேண்டும்; நான் காணும் கனவுகளையெல்லாம் அவளும் கண்டிருக்க வேண்டும்; என்னைப் போல் இளமையின் ஆசைக் கடலில் வீழ்ந்து அவளும் ஒரு காலத்தில் தத்தளித்திருக்க வேண்டும்; துன்பத்தைக் கண்டு துடித்து, இன்பத்தை நினைத்து ஏங்கியிருக்க வேண்டும். ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. அவள் கடவுளைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறாள். இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக நானும் அவளைப் போல் ஜபமாலை உருட்டி வெறும் வேஷதாரியாக வேண்டுமா? வீட்டுக் காரியங்களைத் தவிர இந்த ஜன்மத்தில் எனக்கு வேறொன்றும் வேண்டாமா? இதற்குத்தான நான் இவளுடைய வீட்டுக்கு வந்தேன்? அப்படியானால் என்னுடைய பிறந்தகத்திலேயே எவ்வளவோ காரியங்கள் நான் செய்வதறகு இருக்கின்றனவே!

தினசரி என்னுடன் சண்டையிடுவதற்கு அவள்தான் எத்தனை சந்தர்ப்பங்களைச் சிருஷ்டி செய்து கொள்கிறாள்!— “சந்தர்ப்பங்களை நோக்கி நான் காத்திருக்க மாட்டேன்; நானே வேண்டும்போது அவற்றைச் சிருஷ்டி செய்து கொள்வேன்!” என்று சொன்ன வீராதி வீரன் நெப்போலியன் கூட இவளிடம் ‘ராஜதந்திர’த்துக்குப் பிச்சை எடுக்க வேண்டும் போலிருக்கிறதே!


இடைவேளையில் எப்பொழுதுதாவது ஒரு நாள் எதிர் வீட்டு அகிலா எங்கள் வீட்டுக்கு வருவாள். எனக்கும் அன்று அழுக்குத் துணிகளைத் துவைத்துப் போடும் வேலையில்லாமலிருந்தால், சிறிது நேரம் அவளுடன் ஏதாவது பேசிக் கொண்டிருப்பேன். அவள் தன் கணவருடன் சேர்ந்து நடத்திய ஊடல், காதல் இவைகளைப் பற்றியெல்லாம் என்னிடம் வெறி பிடித்தவள் போல் சொல்வாள். அப்புறம் அவளும் அவளுடைய கணவரும் சேர்ந்து கண்டு களித்த ஆடல் பாடல்கள், கண் காட்சிகள் முதலியவற்றைப் பற்றியெல்லாம் என்னிடம் விவரிப்பாள். அவற்றையெல்லாம் கேட்கக் கேட்க எனக்கு என்னவோ மாதிரி இருக்கும். “அதெல்லாமிருக்கட்டும், அகிலா! வேறு எதைப் பற்றியாவது பேசேன்!” என்பேன் நான் மனம் நொந்து.

“ஏன், அதற்குள் உனக்கு உலக வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு விட்டதோ?” என்று நகைப்பாள் அவள்.

“இல்லை. அதைப்பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் என் மாமிக்குக் கோபம் வந்தாலும் வரும்!” என்று பழியை அவள் மீது போட்டு வைப்பேன், ரகசியமாக.

ஒரு நாள் அகிலா, என்னிடம் கோடி வீட்டுக் குமுதத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். அப்போது பேச்சு வாக்கில், “அவளுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைத்தது. வீட்டில் அவளும் அவளுடைய அகத்துக்காரரும்தானாம். மாமியார் நாத்தனார் என்று ஒரு தொத்தரவும் கிடையாதாம்!” என்றாள் அவள்.

நான் சும்மா இருந்திருக்கக் கூடாதா? “என்னமோ, அவள் பாக்கியசாலி!” என்று சொல்லி வைத்தேன்.

அவ்வளவுதான்; உடனே என் மாமியார், “நீ பாக்கியசாலியில்லையாக்கும்? ஏன்னா, நான் ஒருத்தி இன்னும் உயிரோடு இருக்கேனோ இல்லையோ, அது உன் கண்ணே உறுத்துகிறதாக்கும்!” என்று ஆரம்பித்து விட்டாள்.

நான் என்னத்தைச் சொல்வது? “அதைத்தான் நாம் ஏன் சொன்னோம்?” என்று எண்ணி வருந்தினேன்.

அன்று மாலை அவர் வேலையிலிருந்து வந்ததும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது என் மாமியாருக்கு உண்மையாகவே கண்ணீர் வந்ததோ இல்லையோ, அவள் தன் மேலாக்கினால் கண்களைத் துடைத்துக் கொண்டே, “உன்னைப் பெற்று வளர்த்ததற்கு இத்தனை நாளும் நான் அடைந்த சுகம் போதும்டா அப்பா, போதும்! இனிமேல் ஒரு விநாடிகூட நான் இந்த வீட்டில் இருக்கவே மாட்டேன்!” என்று வழக்கமாக ஆரம்பிக்கும் பீடிகையுடன் ஆரம்பித்து, “எதிர் வீட்டில் அகிலா என்று ஒருத்தி இருக்கிறாளோ இல்லையோ, அவளை யாரும் கேட்பார், மேய்ப்பார் கிடையாது. தினசரி இங்கே வந்து இவளுடன் ஏதாவது அரட்டையடித்து விட்டுப் போவாள். இன்று மத்தியானமும் வந்திருந்தாள். அவளிடம் இவள் என்னவெல்லாம் சொல்கிறாள், தெரியுமா? என்னைத் தொலைத்துத் தலை முழுகுவதற்கு இவள் பாக்கியம் செய்யவில்லையாம். நான் ஒருத்தி இன்னும் உயிரோடிருப்பது இவளுக்குத் தொந்தரவாயிருக்கிறதாம். எந்நேரம் பார்த்தாலும் இவளைப் பிடுங்கித் தின்றபடி இருக்கிறேனாம். நான் இல்லாவிட்டால் இவள் இஷ்டப்படி எவளோடாவது, எவனோடவாவது பேசிக் கொண்டிருக்கலாமோ, இல்லையோ?” என்றெல்லாம் சொல்லி ஓலமிட்டு அழுதாள்.

அவருக்குத்தான் தம்முடைய தாயார் வாக்கு வேதவாக்காச்சே, உடனே கிளம்பிவிட்டார்! – “ஓஹோ ! அவ்வளவு தூரத்துக்கு வந்து விட்டாளா? ஆமாம், பேய்க்கு இடம் கொடுத்தாலும் கொடுக்கலாம்; பெண்ணுக்கு இடம் கொடுக்கக் கூடாது!’ என்று பெரியோர்கள் தெரியாமலா சொன்னார்கள்? அந்த எதிர் வீட்டுக்காரி இங்கே வருவதற்கும், அவளுடன் இவள் அரட்டையடிப்பதற்கும் கொஞ்சம் இடம் கொடுத்ததால் வந்த வினை இது! நாளையிலிருந்து ஆகட்டும், அந்த அகிலாவின் அகமுடையானிடம் சொல்லி அவளை இங்கே வரவிடாமல் செய்து விடுகிறேன்!” என்றார்,

இதைக் கேட்டதும் எனக்கு என்னவோ போலிருந்தது. அது என்ன காரணமோ, என்னைத்தான் அவர் வெளியே போக விடுவதில்லை. இந்த விஷயத்தில் நானும் எங்கள் வீட்டுப் பசுவும் ஒன்று. அதையும் நாங்கள் இருந்தது நகரமானதால் ஒரு நாளும் தனியாக அவிழ்த்து விடுவதில்லை. எப்பொழுதாவது ஒரு நாள் சற்றுக் காலாறுவதற்காக அவர் அதை வெளியே ஓட்டிக் கொண்டு செல்வார். அதே மாதிரிதான் நானும். ஏதாவது கல்யாணம், கார்த்திகைக்கு அவருடன் செல்வேன். அதுவும் அவருடைய அதிகார அழைப்புக்குப் பயந்துதான்! – அன்பு, ஆசை, மண்ணாங்கட்டி, தெருப் புழுதி இதெல்லாம்தான் எங்கள் வாழ்க்கையில் மருந்துக்கும் கிடையாதே! – அப்படிப் போகும்போதுதான் நானும் சற்றுக் காலாற நடந்து செல்வேன். ஆனால் இந்த விஷயத்தில் எனக்கும் எங்கள் வீட்டுப் பசுவுக்கும் ஒரே வித்தியாசம் இருந்தது. திரும்பி வந்ததும் பசுவைக் கட்டிப் போட்டு விடுவார்கள்; என்னைக் கட்டிப் போட மாட்டார்கள்.

இந்த லட்சணத்தில் என் இருளடைந்த உள்ளத்தில் எப்பொழுதாவது ஒரு நாள் விளக்கேற்றி வைக்க வந்தவள் அகிலா ஒருத்திதான். அவளையும் இப்பொழுது தடுத்து விடுவதென்றால்……….. !

பேய்க்கு இடம் கொடுத்தாலும் கொடுக்கலாம்; பெண்ணுக்கு இடம் கொடுக்கக் கூடாதாம். உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் நான் மட்டும்தானா பெண்? அவருடைய தாயார்?……… அவள் ஆணாக்கும்!


என்னுடைய வாழ்க்கையைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் அவ்வளவையும் சொல்லி உங்களுடைய அருமையான நேரத்தை வீணாக்குவதில் என்ன பயன்? துன்பம் நிறைந்த என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் அனுபவிப்பதற்கு என்ன இன்பம் இருக்கப் போகிறது?

கடைசியில் எனக்கும் அகிலாவுக்கும் இடையே தொங்கவிடப்பட்ட படுதாவை என்னால் கிழித்து எறிய முடியவில்லை. விட்டுப்போன அவளுடைய நேசம் என்னை மிகவும் பாதித்தது. நாளடைவில் நான் சூரிய வெப்பத்தைக் காணாத செடிபோல் சுருங்கிப் போனேன்.

இந்த நிலையில்தான மூன்றாவது தடவையாக என் முழுக்கு நின்றது. ஏற்கெனவே, உள்ளமும் உடலும் சோர்ந்து போயிருந்த எனக்கு இதுவும் வாய்த்தால் கேட்கவேண்டுமா? என்னால் வீட்டுக் காரியங்களைச் செய்ய முடிய வில்லை. அசதி அதிகமாயிருந்தது. சாப்பாடும் சரிவர ஏற்றுக் கொள்ளவில்லை. வேலை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. வசவுகளுக்கோ ஓர் அளவில்லை. வீட்டிலோ அடிக்கும் கையைத் தவிர, அணைக்கும் கை இல்லை.

ஒரு நாள் இரவு பாருங்கள் – வழக்கம்போல் எல்லோரும் சாப்பிட்டான பிறகு நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது மாடு ‘அம்மா, அம்மா!’ என்று ஓயாமல் கத்திக் கொண்டிருந்தது. வெளியே உட்கார்ந்திருந்த அவர், கொஞ்சம் வைக்கோலை எடுத்துக் கொண்டு போனார். அன்று எனக்குப் பதிலாக அவர் அந்த வேலையைச் செய்து விட்டது, அவருடைய தாயாருக்குப் பொறுக்கவில்லை. “ஏண்டா, அப்பா! நீதான் காலையில் போய் சாயங்காலம் வரை அங்கே உழைத்துவிட்டு வருகிறாயே, வீட்டில் இருக்கும் அவளுக்கு என்ன கேடு? மாடுதான் அத்தனை நாழியாக் கத்துகிறதே, கொஞ்சம் வைக்கோலைக் கொண்டுபோய்ப் போட வேண்டாமோ?” என்று உருகினாள்.

“அவள் சாப்பிடுகிறாள், அம்மா!” என்றார் அந்தப் புண்ணியவான்.

“எத்தனை நாழியாச் சாப்பிடுவது? சமைப்பதை அப்படியும் இப்படியுமாக ஆளுக்குக் கொஞ்சம் காட்டி விட்டு, கடைசியில எல்லாவற்றையும் அவளே விழுங்கி வைக்க வேண்டுமென்றால் அத்தனை நாழிதான் ஆகும்!” என்றாள் அவள்.

எப்படியிருக்கிறது, நியாயம்? நமது நாட்டில் சாதாரணமாக எல்லாப் பெண்களுமே கடைசியில் சாப்பிடுவதுதான் வழக்கம். நானும் அப்படித்தான். எல்லோருக்கும் போக ஏதாவது மிஞ்சினால் உண்டு; இல்லையென்றால் இல்லை. அதிலும், கணவனுக்கு வேண்டியவரை வைத்துப் பெருமையடைவதில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கே ஒரு தனி ஆனந்தம். இந்த அனுபவத்தை என் மாமியாரும் மருமகளாயிருந்தபோது அறிந்துதான் இருக்கவேண்டும். ஆனாலும் அவள் ஏன் இப்பொழுது இப்படிப் பேசுகிறாள்? – அவர் உழைத்துவிட்டு வருகிறாராம்; நான் உழைக்காமலிருக்கிறேனாமே?


இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள். என்னால் பொறுக்க முடியவில்லை. மாதம் ஆக, ஆக எனக்கு ‘வேலை செய்யமுடியவில்லையே!’ என்ற குறை; மாமியாருக்கோ ‘வேலை செய்யவில்லையே!’ என்ற குறை. இந்தக் குறைகளுக்கு இடையே எனக்கு ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. எல்லாப் பெண்களும் முதல் பிரசவத்துக்குத் தான் பிறந்தகம் செல்வது வழக்கம். இந்த விஷயத்தில் மட்டும் என் மாமியாருக்கு வேறு யாருக்கும் இல்லாத விசாலமான மனம், அவள் பிரசவத்துக்குப் பிரசவம் என்னைப் பிறந்தகத்துக்குத்தான் அனுப்பி வைப்பாள்.

அதே கதிதான் எங்கள் வீட்டு மாட்டுக்கும். பிரசவத்துக்குப் பிரசவம் அதையும் கிராமத்துக்கு ஓட்டி விடுவார்கள் – நியாயம்தானே? பால் மறத்துப்போன அந்த மாட்டுக்கு யாராவது தண்டத் தீனி போட்டுக் கொண்டிருப்பார்களா?

அதனுடைய நிலைதான் என்னுடைய நிலையும் – வீட்டுக் காரியங்களையோ என்னால் இப்பொழுது செய்ய முடிவதில்லை. பின் ஏன் எனக்கு வெட்டிச் சோறு?

ஆச்சு; மாடும் இப்பொழுது சினையாய்த்தான் இருக்கிறது; நாளைக்கு அதைக் கிராமத்துக்கு ஓட்டி வைக்கப் போகிறார்கள். பெற்றுப் பிழைத்தால் திரும்பி வரும். வந்தால் மீண்டும் பாலைக் கறந்து குடிப்பார்கள். வராமல் செத்தொழிந்தால் வேறு மாடு வாங்கிக்கொள்வார்கள்.

இதோ, அப்பாவுக்குக் கடிதம் எழுதி அவரும் என்னை அழைத்துக்கொண்டு போக வந்துவிட்டார். நானும் நாளைக்குப் போகிறேன். பெற்றுப் பிழைத்தால் திரும்பி வருவேன். பழையபடி வீட்டுக் காரியங்களையும் கவனித்துக் கொள்வேன். அவரும் என்னைக் கவனித்துக் கொள்ள வேண்டிய விதத்தில் கவனித்துக் கொள்வார். வராமல் செத்தொழிந்தால் என்ன பிரமாதம்? அவர் வேறு கல்யாணம் செய்து கொண்டு விடுவார்.

அவ்வளவுதான்; இப்பொழுது நீங்களே சொல்லுங்கள். நான் வாழ்வது, மனிதத் தொழுவமா? இல்லை, மாட்டுத் தொழுவமா?

– ஒரே உரிமை, 1950, வெளியீடு எண்:6 – அக்டோபர் 1985, புத்தகப் பூங்கா, சென்னை.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email
விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *