மவுனத்தின் குரல்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,308 
 
 

மனோகருக்கு, “விர்’ ரென்று ஒலியெழுப்பிய அலாரத்தின் ஓசை, திடுக்கிட்டு விழிக்கச் செய்தது. உருப்படி புரியாத ஏதோவொரு கனவுதான் என்றாலும், அது ஏதாவதொரு சந்தோஷமான கனவு என்ற அளவில் தான் நினைவு இருந்தது. ஏனென்றால், அவன் எதற்காகவோ, மகிழ்ச்சியுடன் கனவில் சிரித்த போதுதான், இந்த வீரிட்டு அலறிய அலாரம், அவன் கனவு, சிரிப்பு எல்லாவற்றையும் சிதைத்தது.
மவுனத்தின் குரல்!“சை…’ என்று அ<லுத்தபடி, அலாரத்தை நிறுத்தி, எழுந்து அமர்ந்தான். பத்மா, அருகில் இல்லை. அவள் எழுந்து, சமையலறையில் வேலை செய்வது, நீளமாக படுக்கையறை வாசலின் அருகே வீழ்ந்த ஒளியிலிருந்து தெரிந்தது.
இன்று வேலை நிமித்தமாக, ஐதராபாத் போக வேண்டும் மனோகர். வர, வர ஆபீசில் வேலை, இவன் மீது அதிகம் சுமத்தப்படுவதுடன், குற்றச்சாட்டுகளும் அதிகமாகிக் கொண்டே இருந்தன. படித்து முடித்தவுடன், ஆசை, ஆசையாகச் சேர்ந்த வேலை. ஆறு வருஷங்களிலேயே ஆயாசத்தை தர ஆரம்பித்து விட்டது.
எழுந்து சோம்பல் முறித்து, பாத்ரூமுக்குள் சென்று பார்த்த போது, பேஸ்ட் இல்லை என்பது தெரிந்தது.
“”பத்மா, பத்மா…” என்று குரல் கொடுத்தான்.
திருமணமான புதிதில் இருந்த காதலும், கனிவும், ஆசையும் இப்போது அவளிடம் மனோகருக்கு இல்லை; ஏன்… பத்மாவுக்கும், அவனிடம் இருப்பதாக தோன்றவில்லை.
கையில், புதிய பற்பசையுடன் வந்தாள் பத்மா; அவளை குரோதமாகப் பார்த்தான் மனோகர்.
“”ஏன்… இதை முன்னாலேயே எடுத்து வைக்கக் கூடாதா… நான் கத்தின பிறகுதான் கொண்டு வர வேண்டுமா?” என்றான் சினத்துடன்.
அவன் முகத்தைக் கூடக் பார்க்காமல், நீட்டிய அவன் கையில் ட்யூபை வைத்து, மவுனமாக அங்கிருந்து சென்றாள் பத்மா. அது, ஆத்திரத்தை மேலும் கூட்டிய போதும், எதுவும் சொல்லாமல், தன் வேலையில் ஈடுபட்டான் மனோ.
அவன், தன் வேலைகளை முடித்து, டைனிங் டேபிளில் செய்தித் தாளுடன் வந்து அமர்ந்தான். மேலோட்டமாகச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த போதே, காபியைக் கொண்டு வந்து, அவன் எதிரில் வைத்து, உள்ளே சென்றாள் பத்மா.
காபியைக் குடித்தபடி யோசனையில் ஆழ்ந்தான் மனோ. தெரிந்தோ, தெரியாமலோ, அவனுக்கும், பத்மாவுக்கும் இடையே, விரிசல் விரிந்து கொண்டே போவது போல் தோன்றியது; ஏன் என்று தான் புரியவில்லை.
இந்த அழகில், வேலையில் சேர்ந்த அடுத்த வருஷமே நடந்த கல்யாணம். ஏதோ ஒரு வகையில், காதல் கல்யாணம் தான். பார்த்ததுமே சொல்லத் தெரியாத காரணங்களில், ஒருவருக்கொருவர் பிடித்துப் போனது… இரண்டு குடும்பங்களிலும், முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடைசியில், மனோ – பத்மா இருவரின் இளமையின் பிடிவாதம் தான் வெற்றி பெற்றது. நண்பர்கள் வேறு ஆதரவு கொடுத்தனர்.
இருவரும் கிட்டத்தட்ட, எண்பது சதவீதம், இரு குடும்பத்தாரின் ஒப்புதலுடன், வெற்றிகரமாக மணவாழ்க்கையை ஏற்றுக் கொண்டனர். முதல் இரண்டு வருஷங்களில், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் சொர்க்கமாக இருந்தது.ஆனால், அதற்குப் பிறகு தான், ஒருவரின் மறுபக்கம், மற்றவருக்குத் தெரிய ஆரம்பித்தது.
மனோவின் குடிப்பழக்கம், ஊதாரித்தனம், பெண்களிடம் உள்ள பலவீனம், எல்லாவற்றிற்கும் மேலாக, எதற்கெடுத்தாலும் சட்டென ஏற்படும் முன்கோபம், சுயகர்வம் இவை வெகுவாகவே, பத்மாவை, பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கியது.
பத்மாவிற்கு, மனோகருக்கு நேர் எதிரான குணங்கள், பொறுமை, அமைதி, பயந்த குணம், தயக்கம், கொஞ்சம் அசட்டுத்தனம் இவையெல்லாம், மனோவின் ஆளுமைக்குள் ஆட்டிப் படைக்கப்பட்டன.
எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பது, மனோ – பத்மா காதல் நிரூபித்தது என கூறலாம்.
ஆனால், அது தொடர்ந்து ஈர்ப்பாகவே இருந்ததா என்பது தான் கேள்வி. பிரசன்னா பிறந்த பிறகு, உலகில் உள்ள எல்லாப் பெண்களையும் போல், பத்மாவின் முழு கவனமும் குழந்தையின் பக்கம் திரும்பியது. அவனைக் கொஞ்சுவது, கவனிப்பது, வேடிக்கை காண்பிப்பது, பாடம் சொல்லித் தருவது என்று அவளது நேரத்தை, முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டான் பிரசன்னா.
பிரசன்னா, பிறந்த உடனேயே வேலையில் இருந்து நின்று விட்டாள் பத்மா; அது, மனோகருக்குப் பெரும் இழப்பாகத் தோன்றவில்லை. தான் தான் குடும்பத்தின் தலைவன் என்ற, அவனது சுய கர்வத்துக்கு அது தீனியாக அமைந்தது.
பத்மாவின் சம்பாத்தியம் பெருமளவிற்கு சேமிப்பில் இருந்தாலும், மனோவின் கணினித்துறை வேலை, கை நிறைய சம்பளத்தைத் தந்தாலும், கஷ்டங்கள் அதிகமாகப் பொருளாதார ரீதியில் தலை எடுக்கவில்லை. பத்மாவுக்கும் ஆசைகள் அதிகமில்லை. தான், தன் கணவன், வீடு, குழந்தை என்ற வட்டத்திற்குள்ளேயே சுழன்று கொண்டிருந்ததால், பிரச்னைகள் தோன்றவில்லை.
மனோவின் அதிகாரங்கள், ஏவல்கள், குற்றச்சாட்டுகள், அலட்சியம் எல்லாவற்றையுமே, ஒரு சராசரி இந்திய மனைவியாக ஏற்றுக் கொண்டாள் பத்மா.
அவனுடைய பலவீனங்கள் முதலில் சற்று அதிர்ச்சியைத் தந்தாலும், போகப் போக, அவனது அசமந்த குணம் அவற்றை ஒரு கடமையாக ஏற்று, சிலுவையாகச் சுமக்க ஆரம்பித்தது.
தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை இது. இனி, தன் உலகம், தன் நான்கு வயதுப் பிள்ளை தான் என்ற ரீதியில், வாழ்க்கையைப் பழக்கிக் கொண்டாள் பத்மா; ஆனால், மனோகர் அப்படியில்லை.
கொஞ்ச நாட்களாகவே, அவனுக்கு பத்மாவின் மீது உள்ள அலட்சியமும், வெறுப்பும் அதிகமாகிக் கொண்டே போனது. போதாக் குறைக்கு பிரசவத்திற்கு பின், பருமனாகிப் போனாள் பத்மா. அந்தப் பருமனான தோற்றம், அவளைச் சற்று வயதானவளாகக் காட்டியது.
மனோகருக்கு, இன்னும் இளமையின் துடிப்பும், வேகமும் பாக்கி நிறையவே இருந்தன. அதன் விளைவு, அவனுக்குத் தன் மனைவியைப் பார்க்கும் போதெல்லாம் சீறிக் கொண்டு வெளிப்பட்டது.
எப்போதுமே, எதிராளி மவுனம் காத்தால், கோபம் இன்னும் அதிகமாகும். பத்மாவின் அடங்கிப் போகும் குணமும், பொறுமையும் மனோகரின் சினத்தை மேலும் தூண்டியது; கிடைத்த போதெல்லாம் வார்த்தை சாட்டைகள் சொடுக்கப்பட்டன.
இருவரும் வெவ்வேறு துருவங்கள் ஆகிப் போன போதிலும், திருமணம் என்ற மரபைக் கட்டிக் காக்கும் வகையில், ஓர் கூரையின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
மனோகரின் ஐதராபாத் பயணம், அவனது வாழ்க்கையில் மிக சுவாரசியமான மற்றோர் அத்தியாயத்தைத் திறக்கும் என அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
அவனுடன், அவன் நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த காமினி உடன் வந்தாள். இன்றைய நவநாகரிக யுவதியின் அத்தனை அம்சங்களும் காமினியிடம் இருந்தன.
உடலைக் கவ்விப் பிடிக்கும் ஜீன்ஸ் பேன்ட், கவர்ச்சி காட்டும் மேல்சட்டை என்று கவலை இல்லாமல் உடை அணிந்ததோடு, ஆண் – பெண் என்ற பேதம் கொஞ்சம் கூட இல்லாமல், சரளமாகப் பழகும் குணமும் காமினியிடம் இருந்தது.
மனோகர் தான், அவளுடைய நேரடி அதிகாரியாக இருந்ததால், அவனுடன், அவள் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டன. ஐதராபாத் பயணம், அவர்கள் நெருக்கத்தை அதிகமாக்கியது.
மனோகரின் பலவீனம் என்ன என்பதை, சடுதியில் புரிந்து கொண்ட காமினி, அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள ஆரம்பித்தாள். மேம்போக்கான தொடல்கள், சாகசங்கள், கண் சிமிட்டல், இரண்டு அர்த்தப் பேச்சுகள் எல்லாவற்றையும் தாண்டி, படுக்கையறையில் வந்து முடிந்தது காமினி – மனோவின் உறவு.
காமினியின் அழகும், இளமையும் மனோவுக்கு அசாத்தியமான கிறக்கத்தைத் தந்தது. பத்மாவிடம் இல்லாத பல அம்சங்கள் காமினியிடம் இருந்து தனக்குக் கிடைப்பதை உணர்ந்தான் மனோ.
ஏதோ ஒரு கட்டத்தில், “இனி, இது உதறிவிட வேண்டிய உறவு…’ என்ற எண்ணம், மனோவின் மனதில் தோன்ற ஆரம்பித்தது. அதன் வெளிப்பாடாக, பத்மாவிடம் அவன் காட்டிய எரிச்சல், கோபம் எல்லாம், பல மடங்காகப் பெருகியது.
அன்று மத்தியான இடைவெளியில் காமினியுடன் பேசும் போது, தன்னுடைய மண வாழ்க்கையின் சோகக் கதையைப் பகிர்ந்து கொண்டான் மனோ.
“”எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டிற்குப் போக வேண்டும் என்ற நினைப்பே கசக்கிறது காமினி!” என்றான் மனோ வெறுப்புடன்.
நாசூக்காக, தன் உணவை ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே, “”பிறகு ஏன் இன்னும், அந்த வீட்டிற்குப் போய்க் கொண்டு இருக்கிறாய்… உதறி எறிய வேண்டியது தானே?” என அலட்சியமாக கூறினாள் காமினி.
“”யூ மீன் டிவோர்ஸ்?” என்றான் மனோ.
“”எஸ்!”
“”செய்யலாம்… ஆனால், அவள் ஒப்புக் கொள்ள வேண்டுமே… அவள் மறுத்தால், பிரச்னையாகி விடாதா?”
சிரித்தாள் காமினி.
“”தினம், தினம் வசவும், திட்டும் வாங்கி, குடும்பம் நடத்த அவளுக்கு மட்டும் என்ன இனிப்பாகவா இருக்கப் போகிறது… அவளுக்கும், குழந்தைக்கும் சேர்த்து, ஒரு மொத்தத் தொகையை கொடுத்து விட்டு, விடுதலை அடையும் வழியைப் பார்.”
அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் மனோகர்.
“”அப்படியா சொல்கிறாய்… அவளுக்கு வேறு வேலை கூட இல்லை.”
“”அதனால் என்ன? இதற்கு முன் வேலைக்கு சென்றவள் தானே… வேண்டுமென்றால், தானே தேடிக் கொள்கிறாள்.”
மவுனத்தில் ஆழ்ந்தான் மனோ; ஆனால், அவன் மனம் வேகமாக வேலை செய்தது.
“இது தான், இந்த போர் அடிக்கும் வாழ்க்கையில் இருந்து தப்பிக்க வழி… தொலைத்துக் கட்டுவோம்… பத்மா இதற்கு எப்படி, “ரீ ஆக்ட்’ பண்ணுவாள்… அழுவாளா, இல்லை எப்போதும் போல், மவுனமாக ஏற்றுக் கொள்வாளா… எப்படி இருந்தால் என்ன… இன்று அந்தப் பேச்சை ஆரம்பித்து விட வேண்டியது தான்… இனியும் காலம் கடத்தினால், அது மடத்தனம்..’ என, முடிவு செய்தான் மனோகர்.
அன்று இரவு, அவன் வீட்டுக்கு வந்த போது மணி, 10:00.
“டிவி’ பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மா. அவன் வந்ததும், அதை நிறுத்தி, சமையலறைக்குச் சென்று, உணவைச் சூடுபடுத்த ஆரம்பித்தாள்.
அவன் டைனிங் டேபிளில் அமரும் போது, அவனுக்கு முன் தட்டும், இரவு உணவும் தயாராக இருந்தன. பத்மா அவன் உட்கார்ந்ததும், உணவை எடுத்துப் பரிமாறினாள். அவன் சாப்பிடும் போது, மனதைத் தயார் செய்து கொண்டான்.
சாப்பிட்டு கை கழுவி விட்டு வந்ததும், டைனிங் டேபிளைச் சுத்தம் செய்து கொண்டிருந்த பத்மாவிடம், “”உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்…” என்றான் மனோகர்.
கை வேலையை நிறுத்தாமலே, அவனை நிமிர்ந்து பார்க்காமல், “”நானும் உங்களிடம் பேச வேண்டும்…” என்றாள் பத்மா.
மனோவுக்கு ஆச்சரியமாக இருந்தது. “இவள் என்ன பேசப் போகிறாள்… வீட்டுச் செலவுக்குப் பணம், பிரசன்னாவின் ஸ்கூல் பீஸ், இல்லை பிறந்த வீட்டுக்குப் போக அனுமதி… இப்படி ஏதாவதாகத்தான் இருக்கும்..’ என்ற நினைப்பில், “”ஓ… அப்படியா?” என்றான்.
சோபாவில் அமர்ந்திருந்த மனோவின் எதிரில், வந்து அமர்ந்தாள் பத்மா.
அவனை நேராகப் பார்த்து, “”ம்… சொல்லுங்கள்… ஏதோ பேச வேண்டும் என்றீர்களே?” என்றாள்; இதுவே, மனோவுக்குச் சற்று ஆச்சரியமாக இருந்தது.
இருந்தாலும், தன் வியப்பைக் காட்டாமல், “”நீ கூடத்தான் ஏதோ பேச வேண்டும் என்றாய். அதை முதலில் சொல்லு; அப்பறம் நான் சொல்கிறேன்,” என்றான்.
ஓர் வினாடி, அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தாள் பத்மா. பின் தெளிவாக, அமைதியான குரலில் சொன்னாள்…
“”எனக்கு விவாகரத்து வேண்டும்!”

– செப்டம்பர் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *