கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2022
பார்வையிட்டோர்: 965 
 
 

நாள் முழுக்க உழைத்து களைத்திருந்தாலும் கூட மாலைத்தென்றல் உடலுக்குப் புத்துணர்ச்சி தந்திருந்தது. அந்திவானச் சிவப்பு, கருப்பாக மாறிக் கொண்டிருக்க “தேவகி! சோத்துப பானையை எடுத்துகிட்டு கிளம்பு. நான் டவுன்ல கீரையை போட்டுட்டு வந்துடரேன்!“ மாணிக்கம் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு சாக்கு மூட்டையை சைக்கிளில் ஏற்றினான்.

தலையில் மூங்கில் கூடையும் தோளில் சாப்பாட்டு வாளியு மாய் அவள் புறப்பட்ட மகள்கள் ஆளுக்கொரு பக்கம் அவளுடன் நடக்க ஆரம்பித்தனர்.

“கைக் குழந்தையைத் தூக்க முடியலே. உங்ககூட சைக்கிள்ல அழைச்சுப் போயேன்ய்யா!”

மாணிக்கம் வண்டியின் விட்டத்தில் துணியை சுற்றி குழந்தையை அதன் மேல் அமர வைத்து “மழை வரமாதரி இருக்கு. சுருக்கமா வீடு போய் சேருங்க!” என்று பெடல் சுற்றினான்.

பசுமையும், கீரை பாத்திகளின் செழுமையும் தேவகிக்கு சந்தோஷம் தந்தது. இதுமட்டும் இல்லையென்றால்…. எங்கள் பிளைழப்பு என்னாகும்?

வானம் பார்த்த காட்டில் விளைச்சல் ஏதுமில்லை. வேண்டிய நேரத்திற்குப் பெய்யாமல் வேண்டாத நேரத்தில் உள்ள பயிர்களையும் அழிப்பதற்காக மழை வந்து போகிறது.

என்ன செய்யலாம். பிள்ளை குட்டிகளை எப்படிக் காப்பாற்றுவது என்று யோசித்த போதுதான்-ஆற்றோரப் படுகையில் அரசாங்க நிலம் பட்டா போட்டு கிடைத்தது.

சின்ன இடம்தான். புதுரும் முட்காடுமாயிருநததை சீர்பண்ணி, ஆற்றில் ஊற்று வெட்டி ஏற்றம்கட்டித் தண்ணீர் பாய்ச்சி இந்த கீரைத் தோட்டம்!

மாணிக்கம் சால் மொண்டு விட – ரப்பர் பை உப்பலாய் தண்ணீர் ஒழுகிக் கொண்டு – மேலே வர தேவகியும் – மகளும் இழுட்ததுக் கொண்டு நடப்பர். தண்ணீர் வாய்க்காலில் கொட்டப்பட்டதும் – மறுபுறம் தொங்கிப் போய் கீழே போவதை பிள்ளைகள் ரசிப்பர்.

கீரைத்தோட்டத்தில் பெரிய செலவில்லை. கொஞ்சம் உரம். களைபறிக்கணும். இரண்டு நாட்களுக்கொருமுறை பறித்து மார்க்கெட்டிற்குக் கொண்டுப்போனால் உடனடி காசு.

ஆனால் குடும்பம் முழுக்க இங்கே குடியிருக்க வேண்டும் – இல்லாவிட்டால் ஆடு மாடுகளை விட்டு அழித்துவிடுவார்கள். நரி நோண்டிப் போட்டுவிடும். அதனால் பொழுது விடிந்ததும் சோறு ஆக்கி – கழனி தண்ணியுடன் அங்கே வந்தால் பொழுது சாய்ந்ததும்தான் வீடு திருமப முடியும்.

சந்தையில் விற்பவர்களும் வாங்குபவர்களுமாய் சலசலப்பு! கசகசப்பு! வைக்கிள், வண்டி, காய்கறிகள், பூ, கீரை என அங்கங்கே ஏலம்! பேரம்!”

மாணிக்கம் வாடிக்கையாளர் என்பதால் வியாபாரியிடம் பேரம் பேச வேண்டிய அவசியமில்லாமல் சாக்குகட்டை இறக்கினதும் எடை! கல்லாப் பெட்டியிலிருந்து பணம்!

நாள் முழுக்க வெயிலும் வியர்வையுமாய் உழைந்ததிற்கு அந்தப் பணம் மகிழ்வுதந்தது திருபதி. சேர்ந்த உழைப்பு, யாரையும் ஏய்க்கவில்லை கெடுக்கவில்லை. குடும்ப ரத்தம்!

இதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவில்லை.

சைக்கிளை தள்ளிக் கொண்டு வெளியே வந்து, குழந்தைக்குப் பலூன் பஞ்சுமிட்டாய் வாங்கினான். வயிறு பசிக்கவே டீக்கடையில் பக்கோடாவும் டீயும். வீட்டுக்கும் பக்கோடா, சமுசா பார்சல்!

குழந்தையை அமரவைத்து வண்டியை எடுத்தபோது “ஏ.. மாணிக்கம் இன்னிக்கு என்ன மேகா வசூலா!” என்று தோளில் கரம் ஒன்று அழுத்திற்று.

திரும்பினால் மீசை சவரம் செய்யப்படாத முள்தாடி லுங்கி பனியனுமாய் நண்பர்கள்! அவர்களின் கண்களிலும் வாயிலும் சிகப்பு! பீடி நாற்றம். துவைக்க வேக் கூடாது என்று சத்தியம் பண்ணிக் கொடுத்த மாதரி துணிகளில் கப்பு!

கிராமத்துக கூட்டாளிகள்! அங்கே உழைக்கவும் பிழைக்கவும் தயாராக ல்லாமல் டவுனுக்கு வந்து கூலியாய் – கூவித் திரிபவர்கள்.

“ஐ! அண்டர்வியர் பையில் பெரிய முடைப்பு! அப்போ செம வரும்படிதான்!” என்று ஒருவன் தட்ட, மாணிக்கம் ஒதுங்கினான்.

“ஏய் இத தொடாதீங்க உரம் வாங்கணும்! பூச்சி மருந்து! வீட்டுக்கு மளிகை!”

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். வாடா ஒரு பெக்!”

“ம்கூம் வேணாம். அது தப்பு!”

“எதுடா தப்பு? நீ என்ன திருடுகிறாயா – வரண்டுகிறாயா – எவன் சொத்தையாவது கொள்ளையடிக்கிறாயா?… இல்லை கற்பழிப்பா…?”

“அதானே! அதெல்லாம்! இல்லியே. இவற்றையெல்லாம் செய்றவன் நாட்டுலு நலமாயிருககாங்க. உனக்கேன் கலக்கம் மவனே? சொந்தக் காசில் குடிப்பது என்ன தவறா?”

“இல்லை விடுங்க. குடி குடியைக் கெடுக்கும்!”

“அது வெறும் சுலோகம்டா. கொஞ்சம் ஊத்திப்பா – உடம்பு வலி போகும். களைப்பு மாறும். மறுநாள் இன்னும் தெம்பாபோட உழைக்கலாம்”

“வேணாம். என் தேவகிக்கு இதெல்லாம் பிடிக்காது!”

“தேவகி என்ன தேவதைக்கே பிடிக்கும். தோ பார் உனக்கு உடம்பு முடியலேன்னு மருந்து சாப்பிட்டா உன் பெஞ்சதி வேணான்னுருமா?”

“இல்லை. இதும் கூட மருந்துதாண்டா. அதும் நாட்டு மருந்து தப்பேயில்லே!”

“எங்கிட்ட அவ்ளோ பணமில்லை.”

“அதான் சொல்றோமே. நாட்டுமருநதுன்னு! பிரைவேட்டு! ஷோக்கா இருக்கும். இன்னும் ஜாஸ்தி போதை! மாணிக்கம் உழைச்சா மட்டும் போதாதுடா. அதை அனுபவிக்கவும் தெரியணும். சந்தோஷமா வாழணும். நீ என்ன மாடா? மறத்துப் போக?

அவர்களின் வற்புறுத்தலில் மாணிக்கத்தின் மனமும் இறங்கி வந்தது. மனிதனை ஆக்குவதும் அழிப்பதும் சுற்றுப்புறச் சூழல்தான். ஒருவனின் முன்னேற்றத்திலும் கலாச்சாரத்திலும் நண்பர்களின் குண நலன்களைச் சொல்கிறேன் என்பார்கள்.

உண்மை.

பழக்கவழக்கங்களும், நற்பண்புகளும் நட்பைப் பொறுத்து அமையும். கெட்டவர்களின் சகவாசம் தீய காரியங்களையும் செய்யத் தூண்டும். மனசாட்சியை அடமானம் வைக்கும்.

மாணிக்கமும் அடமானம் வைக்கத் தயாரானான்.

அதற்குள் குழந்தை வீலென அலற ஆரம்பித்தது. “ப்பா வீத்துக்குப் போலாம்! போலாம்….!”

“போலாம்டாகண்ணு!”

“இப்பவே போணும். அம்..மா..ம்மா!”

“மாணிக்கம் அவர்களிடம் கெஞ்சி, “குழந்த் அழுதுடா. பயப்படுது. நான் வரேன்!”

“டவுனுக்கு வரும்போது எதுக்குடா இந்த அகிபடி லக்கேஜ்? வீட்டுலயே விட்டுர வேண்டியதுதானே!”

“தேவகி பாவம்டா. ஏற்கனவே ரெண்டு பிள்ளைக சோத்து மூட்டை! இதையும் எப்படி சுமப்பா- நான் கிளம்பறேன்!”

தடி நண்பன் ஹேண்டில் பாரைப் பிடித்து நிறுத்தி “இன்னிக்கு விடறோம் – மவனே நாளைக்கு நீ தனியாத் தான் வரணும் ஆமா- சொல்லிபுட்டோம்!”

மறுநாள்-

கீரைத் தோட்டத்திற்குத் தண்ணீர் இரைத்து, உரம்போட்டு, களை பறித்தபோது மாணிக்கத்தின் சிந்தை அங்கில்லை

“உழைச்சா பத்தாதுடா அனுபவிக்கவும் தெரியணும்!”

“களைப்புக்கும் உடல் வலிக்கும் இது மருந்துடா”

அவனுக்கு உடல் முழுக்க வலி! இத்தனை நாள் தெரியாத வலி! களைப்பு! இன்று மட்டும் ஏன்! மனதில் விஷம் பரவிற்று.

குடித்துத்தான் பார்ப்போமே. உடம்பு வலி குறைஞ்சா சரி. இல்லேன்னா விட்டிடறது! நாட்டுல பாதிக்கு மேல் குடிக்கிறாங்க. எல்லோரும் கெட்டாப் போனாங்க? கவர்மென்டே ஊத்திக் கொடுக்குது!

எப்போது பொழுதுசாயுமென்றிருந்தது அவனுக்கு.

ஆறு மணிக்கு எல்லாவற்றையும் சாக்கில் அள்ளிக்கட்டி “தேவகி நீ குழந்தையை அழைச்சுப்போ. நான் மார்க்கெட்டுக்கு…”

“எல்லாத்தையும் நான் எப்படிய்யா… குழந்தை உன்கூட தானே தினம் வரும்!”

அதற்குள் குழந்தை சைக்கிளை பிடித்து தயாராய் நின்று “போலாம்பா!”

“வேணாம் மழை வரமாதிரியிருக்கு!”

தேவகி அண்ணாந்து பார்த்து “மேகத்தையே காணோமே”.

“இல்லை. சொன்னாக் கேள். தினம் நாலு மைல் நான்தான் காத்துலயும் மழையிலும் அவஸ்தை படறேன்னா குழந்தை ஏன்? அதுக்கு குளிர் ஒத்துககாது, அழைச்சுப்போ!”

மாணிக்கம் அதட்டிவிட்டு புறப்பட்டான். இந்த மனுஷனுக்கு இன்னிக்கு என்னாச்சு? தேவகிக்கு எதுவும் விளங்கவில்லை. தலையில் சாப்பாட்டுக் கூடை, இடுப்பில் கைக்குழந்தை என நடக்க ஆரம்பித்தாள்.

“எங்களுக்குத் தெரியும் நீ வருவேன்னு! வா.. மவனே.வா”

கூட்டாளிகள் உறிசாகமாய் மாணிக்கத்தின் தோளை அரவணைத்து குடிசை ஒன்றிற்கு அழைத்துப போயினர். அங்கு பிசிறின முடியும். கசங்கின சதையுமாய் வசீகரித்த பெண்ணிடம் அமரவைத்து கண்ணாடி டம்ளர்கள்!

“இந்தாடா பிடி! குடி! அடி!”

“அடி மவனே அடி! அப்புறம் பார் நீ எங்கேப் போறேன்னு!”

தயக்கத்துடன் டம்ளரை வாங்கி முகர்ந்ததுமே மாணிக்கத்திற்கு குமட்டிற்று. ஒருவாய் வைத்ததும் கசப்பு! துவர்ப்பு ! தேவகி கண்ணில் தெரிந்தாள். பிள்ளைகள் அவர்களது கிழிந்த துணி!

“போலாம்ப்பா ம்… மா….. ம்மா…”

குழந்தையின் நேற்றைய அழுகை. வயிற்றைக் கீறிற்று.

இண்டாம் வாய் அவனுக்குச் செல்லவில்லை வெளியே கொப்பளித்தான்.

“ஏண்டா. எனக்கு வேணாம்” அப்போதும் காதுக்குள் மகளின் குரல். ‘போலாம்ப்பா.. போலாம்‘

“அதான் ஏன்னேன்”

“முடியலே..”

“ஏன் மவனே?”

“என் தேவகி பாவம்டா. நான் மட்டும் உழைக்கலே. அவளும் தான் கஷ்டபடறா. அவங்களை விட்டுட்டு நான் இப்படி சரியாப் படலே.

“அப்போ அவளுக்கும் வாங்கப்போ!”

“ஆமா. பார்சல்!”

“இல்லை வேணாம் என்னை விட்டிருங்க!”

“அடச்சீதப்புகெட்டவனே! ஆம்பளையாடா நீ? பொட்டைபய!”

“இருந்துட்டுப் போறேன்!”

“ஏய்… அழைச்சு வந்துட்டு நம்பிக்கை துரோகமா?” போதை ஏறினவர்கள் அவனது சட்டையைப் பற்றினர். “ஒண்ணாவந்துட்டு மவனே எங்களை விட்டுட்டுப் போயிருவியா…நீ?”

“ஆமா அப்ப போய்தானுகணும்னா… துட்டைக் கொடுத்துட்டுப் போ!”

“துட்டுதானே- இந்த ஆளைவிடுங்க!”

மாணக்கத்திற்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. புரண்டுக் கொண்டேயிருந்தான். மனதில் இனம்புரியாத கலக்கம். உறுத்தல். ஒரு வாய் குடித்ததிற்கே வயிற்றில் கலவரம். நாலு முறை புதர்ப்பக்கம் போய் வந்துவிட்டான்.

தேவகி… கண் விழித்து “என்னய்யா… வயிறு சரியில்லையா… ஜீரகம் – உப்பு தரட்டுமா?” என்று முனகினாள்.

“வேணாம். நீ தூங்கு.”

மறு நாள் மாலை.

“தேவகி! குழந்தையை நானே அழைச்சுப் போறேன்” என்று மாணிக்கம் சொல்ல அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை “உனக்கு சிரமமில்லையா…?”

“இல்லை.”

“சந்தையில் கீரையில் விற்றுப் பணத்துடன் வெளியே வந்த போது பசங்கள் தென்படுகிறர்களா என்ப் பார்த்தான். இல்லை. மனதில் நிம்மதி – பயம் சங்கடம். மளிகைக் கடைக்குப் போன போது அங்கே தொலைக்காட்சியில் ‘குப்பத்தில் விஷசாராயம் குடித்து அம்பது பேர் பலி! நேற்று குடிசையில் சாராயம் குடித்து…” என்று செய்தி வாசித்து அரசாங்க மருத்துவமனையில் பிணங்களை காட்டின போது வரிசையாய் அடுக்கப்பட்டிருந்தவர்களில் அவனது நண்பர்களது உடல்களும்! அவனுக்குப் பகீரென்றிருந்தது. அடக்கடவுளே! நேற்று இவர்களுடன் சேர்ந்து. குடித்திருந்தால் நானுமல்லவா… அப்புறம் என் குடுமபம் குழந்தைகளின் கதி…

வழக்கமாய் ‘போலாம்ப்பா…வீத்துக்குப் போலாம்ப்பா…’ என்று அழும் குழந்தை – ஹான்ட்பாரில் அமர்ந்தபடி புன்னகைக்க அள்ளி எடுத்து அவளை முத்தமிட்டான். ‘மவளே உன்னலதான் நான் பிழைச்சேன்!’

– வானத்ததை தொட்டவன் (மினனூல் வெளியீடு: http://www.freetamilebooks.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *