கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 8,862 
 
 

வலுவான அடர்த்தியான கனமழை. மூன்று நாட்களாக விட்டுவிட்டும் இன்று காலையிலிருந்து ஓயாமலும் பெய்து கொண்டிருந்தது. திருவல்லிக்கேணி சமுத்திரக் கரையில் எண்பது வருட பழைய வீடு. மூன்று ஒண்டுக் குடித்தனங்கள். ஓவ்வொரு குடித்தனத்துக்கும் இரண்டே அறை. பொதுவான முன் முற்றம். சாக்கடை. கனிந்த பிள்ளைத் தாய்ச்சிச் சுவர்கள்.

இப்போதெல்லாம் மழை பெய்தால் மனம் குளிருவது போய் பயம் வந்து விடுகிறது. அரவிந்த் மனதில் இன்றும் பயம் கவிந்து வர ஆரம்பித்தது. வானொலியில் புயல் அபாயம் பற்றிய செய்தி வேறு இடியாய் இறங்கியது.

போன மழையில் சுவரோரமாகக் கூரையிலிருந்து (மெட்றாஸ் டெரஸ்) ஒழுகி ட்யூப் லைட் கம்பி மத்தாப்பு போல தெறித்து அணைந்தது. இப்போது அறுபது வாட் பல்ப் மட்டும்தான். மேஜையிலிருந்த பாடப் புஸ்தகங்கள் வெயிலில் ஒரு வாரம் காய்ந்த பிறகும் உருவிழந்து போயின.

அப்பாவின் படுக்கை மேல் நல்ல வேளையாக மழை ஒழுகவில்லை. அம்மா ஒரு மூலையில் சுருண்டு விட்டாள். அப்பா இன்னும் ஒரு மணி நேரத்துக்குக் கூப்பிட மாட்டார். குறட்டை சத்தம்.

வெள்ளம் வந்தால் என்ன செய்வது என்ற பயம் அரவிந்தை வாட்டியது. இது வரை திருவல்லிக்கேணியில் வெள்ளம் வந்ததாக நினைவு தெரிந்து சரித்திரம் இல்லை. சுனாமிக்கும் இது போன்ற மழைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் அப்பா பாரிச வாயு தாக்கி கை கால் விளங்காமல் போனதிலிருந்து உலகம் தலைகீழாகித்தான் விட்டது.

குழந்தையாய் இருக்கையில் தாத்தா இறந்தபோது அப்பாவிடம் சொல்லி யிருக்கிறான் அரவிந்த்: “நான் சாமி கிட்டே வேண்டிக்கப் போறேன். எனக்கு இந்த மாதிரியெல்லாம் ஆகக் கூடாதுனுட்டு”. ஆனால் எது வேண்டுமனாலும் நடந்து விடும் என்று தெரிந்த பிறகு மனம் வேண்டுமென்றே பெரிய அபாயத்தை கண் முன் நிறுத்தி புருவத்தை உயர்த்தி வினவுகிறது.

கரப்பான் பூச்சிகள், மூட்டைப் பூச்சிகள் பயமெல்லாம் மழை பயத்தின் முன் காணாமல் போயின. ஒண்டுக் குடித்தன வீட்டில் ஈரித்த சுவர்களாலான அறை கிட்டத்தட்ட எதிரே கூரைகள் மீது சாக்கு கொண்டு மூடி இருந்த ரிக்ஷாக் காரர்கள் இருப்பிடம் போலவே பாதுகாப்பற்றுப் போகிறது. அவர்களாவது சுலபமாக எதிரில் உள்ள இந்த வீட்டில் புகுந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை கொண்டு இருக்கலாம். வீடு இடிந்து விழாது என்றுதான் படுகிறது.

வீட்டுக்கு ஒரு கம்பிக் கதவு. அதைத் தாண்டி கோவில் கதவு போல ஒரு பெரிய தடிமனான கதவு. இரண்டுக்கும் இடைப் பட்ட பத்தடிக்குப் பத்தடியில் மழை வலுத்த காலங்களில் எதிரிலிருந்த ரிக்ஷாக்காரர்கள் ஒண்டிக் கொள்வார்கள். அப்பா நடமாடிக் கொண்டிருந்த காலத்தில் மழை வலுத்தாலே வெளிக் கதவைத் திறந்து விட்டுவிடுவார். அவர்கள் எல்லாம் வர ஏதுவாக. இப்போ கதவு தட்டப் படுவதும், “சாமி, சாமி!” என்ற குரல்களும் கேட்டன. அரவிந்த் போய் பெரிய கதவைத் திறந்தான். பிறகு கம்பிக் கதவை. ஏழெட்டு பேர் ஆணும் பெண்ணுமாக வந்தனர். அவர்களோடு சாராய, பீடி வாடையும். அவன் உள்ளே போகும் வரை காத்திருந்து விட்டு பின் உள்ளே வந்தனர். பெரிய கதவை சாத்தி தாளிட்டு விட்டு வந்தான். அப்பா இப்படி ஒரு முறை திறக்கும் போது கால் கட்டை விரல் நகம் கதவிடுக்கில் சிக்கி பெயர்ந்து விட்டது. ஒரே ரத்தம். அன்று கடைசி போர்ஷன் மூத்த பையன் சினிமா நைட் ஷோ பார்த்துவிட்டு வந்திருந்தான். கம்பிக் கதவை இடி இடியென்று இடித்தான். அப்பாதான் திறந்தார். கால் நகம் பெயர்ந்ததற்கு அப்பா ஒன்றும் சொல்லவில்லை. நல்ல வலி. இப்போ விரலை என்ன காலையே கோடாலியல் வெட்டினாலும் அப்பாவுக்குத் தெரியாது.

இந்த வீட்டில் ரிக்‌ஷாக்காரர்களுக்கு பாக்கி யாரும் கதவைத் திறந்து விட்டது கிடையாது. அதற்கு பிரதி பலனாகத்தான் பராலிஸிஸ் போலும். இப்படி மாற்றிப் போட்டால் மட்டும் கணக்குக்குள் இந்த சூட்சுமங்கள் வந்து விடுமா?

அம்மா கண்ணயர்ந்து கிடந்தாள். ராப்பகலாக அப்பாவைப் பார்த்துக் கொள்ள வேண்டி உள்ளது. அவருக்கு சகலமும் படுக்கையில்தான். அந்தண்டை இந்தண்டை நகரக் கூட முடியாது. வாய் இழுத்து விட்டது. கோபம், பயம், கேள்வி….வாழ்வது முழுக்க பெரும்பாலும் கண்களால்தான், சிற்சில முக்கல்களைத் தவிர. அப்பா உள்ள வரை பென்ஷனாவது கொஞ்சம் அதிகம் கிடைக்கும். அது மட்டுமில்லை. அப்பா அம்மாவிடம் அன்போடுதான் இருந்தார். ரெண்டு பேரும் நல்ல தம்பதிகள்தான். ஆனால் அவர்களுடைய அப்பாவித்தனம் அரவிந்த்துக்கு கல்லூரியில் சேர்ந்ததுமே புரிய ஆரம்பித்து விட்டது. உலகம் அவர்கள் கற்பித்ததல்ல. அவ்வளவு நல்லதுமல்ல. அவ்வளவு பொல்லாததுமல்ல. கணந்தோறும் மாறும் கலடைஸ்கோப் – இவ்வளவு தெளிவான வரிகள் மனதில் ஓடாவிட்டாலும் அதன் ரசம் மனதில் பட்டு விட்டது.

எல்லாவற்றுக்கும் எல்லாருக்கும் பயந்து நேர்மைச் சிலுவையை பிறர் பார்க்கத் தூக்கி நடந்த அவர்கள் போன நூற்றாண்டுக்கும் முந்தியவர்கள் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. இல்லாவிட்டால் யாராவது மின்சார வண்டியில் (ஸீஸன் டிக்கட் எவ்வளவு கம்மி) போவது ஆபத்து என்று இருபது கிலோ மீட்டர் பஸ்ஸில் அவனைக் கல்லூரிக்கு அனுப்புவார்களா? அவன் வகுப்பு மாணவர்கள் எல்லாரும் அவனை கேலி பேச இதுவும் ஒரு அவல்.

இதுவரை ஒரு எக்ஸ்கர்ஷன் அனுப்பியதில்லை. இன்னமும் என்.சி.சி.யில் சேர வேண்டாமே என்று பதைப்போடு சொன்ன அவர்களைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. ஆனால் உலகம் என்ற பள்ளிக் கூடத்தின் ஸிலபஸே வேற. அதற்கு ஸிலபஸே கிடையாது. எல்லாம் அவுட் ஆஃப் போர்ஷன்தான்.

அரவிந்த் பயத்தைப் புரிந்து அதை உதற ஆரம்பித்திருந்தாலும் அவனுக்கு சில அடிப்படையான பயங்கள் புதிதாக முளைத்து இருந்தன. ஒன்று மரணம். இன்னொன்று செக்ஸ் கிடைக்குமா என்பது பற்றி. தனக்குக் கல்யாணம் ஆகுமா? தானும் எல்லாரையும் போல எல்லாவற்றையும் போல எதையும் அனுபவிப்போமா? என்ற பயம் இருந்தது. அவன் மதிக்கும் மேதைகள் திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் இருந்தது ஒரு நிம்மதியைத் தந்தாலும் சாவு அந்த நிகழ்ச்சியைத் தடுத்து விடும் அல்லது விபத்து அது கூடாமல் செய்து விடும் என்று நம்பினான்.

இப்போது மழை. மழை கூட நேரடி பயமல்ல. மரணத்துக்கு இட்டுச் சென்று விடுமோ, அதுவும் செக்ஸை அனுபவிப்பதற்கு முன், என்ற பயம். மழை பெய்தால் மரங்கள் விழுகின்றன. வீடுகள் விழுகின்றன. மின்சாரக் கசிவும் மின்னலும் ஆள் பார்த்தா தாக்குகின்றன? ஒரு வேளை ஆள் பார்த்து… பயந்தாங்கொள்ளிகளாகப் பார்த்து.

இப்போதுதான் பயம் ஒழுகலினாலும், பிள்ளைத் தாய்ச்சி சுவரினாலும், வெடித்த ட்யூப் லைட்டாலும். மேலும் வெள்ளம் வந்தால் என்றெல்லாம். அப்பா நடமாடிக் கொண்டிருந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை பயம் கிடையாது. காப்பாற்றுவது அப்பா பொறுப்பு. இப்போ பீமன் மாதிரி தன்னால் அப்பாவை, அப்பா மட்டுமென்ன அம்மாவையும்தான் தோளில் தூக்கிச் செல்ல முடியுமா என்று யோசித்தான், இந்த ஒழுக்கு மாளிகையிலிருந்து. தனக்கே நீச்சல் தெரியாது. அம்மாவும் தானும் இந்த மழையிலிருந்து தப்பித்தால் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும், அப்பாவுக்கு ஒரு டயராவது வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என்று நினைத்தான். இந்த நினைவின் அபத்தம் அவனுக்கு லேசாகத் தெரிந்தது. ஆபத்துக்கு ஆயிரம் வழிகள். எந்த ஓட்டையை அடைப்பது?

அப்பாவின் படுத்த படுக்கை ஆண்டவன் மேலிருந்த சந்தேகத்தை அதிகப் படுத்தி அவனால் ஒன்றும் பிரயோசனமில்லை என்ற மன நிலைக்கு அவனைத் தள்ளி விட்டிருந்தது. இன்னும் மூன்று மாதத்தில் படிப்பு முடிந்து, வேலை தேடி, வேறு வீடு பார்க்க வேண்டும். இது கொஞ்சம் பைத்தியக்காரத் தனம் இல்லாத யோசனையாகப் பட்டது.

அம்மா படுத்தபடியே கண் விழித்து “மழை விட்டுடுத்தாடா?” என்றாள்.

அவனுக்குத் துணுக்குற்றது. அவளைப் பயப்படுத்த விரும்பாமல் “விட்டுடும்மா. வலு குறைஞ்சுடுத்து” என்றான்.

உண்மையில் இரைச்சலும், இடியும் அதிகமாகி இருந்தன. இதே மாதிரி விடாது பெய்தால் நாளைக்குள் பொது முற்றம் நிறைந்து அறைக்குள் தண்ணீர் வந்துவிடும்.

வீடு கழுவி வெளியே தண்ணீரைத் தள்ள வைத்திருந்த ஓட்டையைத் துணியால் மீண்டும் நன்கு அடைத்தான்.

இப்போ அப்பாவுக்கு மூச்சுத் திணறலோ அம்மாவுக்கு கால் பிளாடர் (Gall bladder) வலியோ வந்து விடக் கூடாதே என்று மனம் வேண்டுமென்றே பூச்சாண்டி கட்டியது. அலமாரியில் இந்த இரண்டுக்குமான மத்திரைகள் இருக்கின்றனவா என்று எழுந்து பார்த்த போது பட்டென்று மின்சாரம் நின்று விட்டது. மனத்தின் பதைப்பு அதிகமாகியது.

அம்மா, “மெழுகு வத்தியும், தீப்பெட்டியும் ஜன்னல் கட்டையிலே இருக்கு பாரு” என்றாள். அவன் மெள்ள நகர்ந்து அவற்றை எடுத்து மெழுகு வர்த்தியை ஏற்றி மேஜை மேல் வைத்தான்.

மின்சாரம் நின்றதுமே மழையின் இரைச்சல் தனியாக ஒரே லயத்தில் கேட்டது.

“நீயும் படுத்துக்கோடா. கார்த்தால காலேஜ் போகணும்” என்றாள் அம்மா. “காலேஜ் இருக்காது. இந்த மழைக்கு லீவ்தான்” என்று கூடவே சொன்னாள்.

“சரி” என்று சொல்லி விட்டு அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஒரு ஜமக்காளத்தை விரித்து தலையணையைப் போட்டு விட்டு, “மெழுகு வத்தியை அணைச்சுடட்டுமா” என்று கேட்டான்.

“வேண்டாம். நான் பார்த்துக்கறேன்”.

ஒரு டார்ச் வாங்க வேண்டும். பல தடவை நினைத்ததுதான். ஒவ்வொரு மாதமும் அதை விட எத்தனையோ முக்கிய செலவுகள்.

பெரிய மின்னலொன்று வீட்டுக்குள் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை ஒரு கம்பியாய்ப் போயிற்று. அவன் முப்பது எண்ணுவதற்குள் காதைப் பிளக்கும் சப்தத்துடன் இடியோசைக் கேட்டது.

இந்த பயத்தை யாரிடம் சொல்வது. அம்மாவை பயமுறுத்த அவனுக்கு இஷ்டமில்லை. அம்மாவின் மனதிலும் இந்த எண்ணங்களே வேறு விவரங்களோடு ஓடிக் கொண்டிருக்கலாம்.

பத்து வருஷங்களுக்கு முன்னால் இடி மழையில் ஊருக்குப் போய் அப்பா பாட்டியைப் பார்த்து விட்டு வருகையில் ஊரில் பாதையெங்கும் வெள்ளம். இருட்டு. மரங்களின் வீழ்ச்சி. அப்போது நான்கு மைல் தூரம் ஒருத்தர் கூட வந்து வழி காட்டி ரயில்வே ஸ்டேஷனில் விட்டு விட்டு நன்றி சொல்ல திரும்பிப் பார்த்தால் சுவடே இல்லாமல் காணாமல் போய் விட்ட விஷயத்தை அப்பா மெல்லிய குரலில் மிகை இன்றி கூறி அதை அம்மா அண்டை வீட்டுக்காரர்கள், சொந்தக் காரர்களிடம் ஒரு பிரமிப்போடு கூறி வந்தது ஞாபகம் வந்தது. அது பேயோ கடவுளோ. வெறும் மனிதன்தானோ. ஆனால் அப்பா ரத்தக் கொதிப்பு அதிகமாகி கீழே விழுந்து, வாந்தி எடுத்து, கண் செருகி, அதன் பின் இரண்டு வார ஆஸ்பத்திரி வாசத்துக்குப் பிறகு அசைவின்றி படுத்த பின்பு அம்மா அது பற்றி பேசவில்லை என்றும் ஞாபகம் வந்தது.

மெழுகு வர்த்தியின் ஒளி ஒரு மாயத் தோற்றத்தை அறைக்கு அளித்தது. சுடர் ஆடுகையில் அறை ஆடியது. அதன் வெளிச்சம் கூட கண்களைக் கூச வைத்து வலிக்கிற மாதிரி இருந்தது. ஈரிப்பு. ஈரத்தால் வந்து பரவிய இணுக்கு நாற்றம். திடீரென்று உணர்ந்த கால் வலி. இன்று உறக்கம் வருமா என்று தெரியவில்லை. மழையின் இரைச்சல் பிடிவாதமாக ஒரே சீராகக் கேட்டுக் கொண்டே இருந்தது.

அப்பா எழுந்து உட்கார்ந்தார். திரும்பி அவன் இருபுறமும் தன் இரு கைகளையும் வைத்து எம்பி அவனைத் தாண்டி அவனுக்கும் அம்மாவுக்கும் மத்தியில் லாகவமாகப் படுத்துக் கொண்டார். அப்பா என்ன சிகப்பு. அந்த புஜங்களும் அகன்ற மார்பும் ஆஜானு பாகுவான கரங்களும். அம்மாவின் கை அப்பா மேல் விழுந்து அவன் மேலும் பட்டது. அவன் கன்னங்களை வருடியது.

மழை ஆனந்தம். காயங்களையும் சூட்டையும் எரிமலைகளையும் ஆதரித்து அரவணைக்கும் அரு மருந்து. மழை தாய். மழையின் நாதம் சுகம். மழையில் எல்லா பயத்தின் கங்குகளும் நனைந்து போய் விடுகின்றன. அப்பாவும் அவனும் எல்லா வீட்டுக்கும் பொதுவான மொட்டை மாடியில் எத்தனையோ தரம் மழையில் ஆடி இருக்கிறார்கள். அந்த வாசனை. அதன் வண்ணம். கண்களை மூடிக் கொண்டு மழையின் வாசனையை அனுபவித்துக் கொண்டு அதன் சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நினைவின் நினைவு அற்றுப் போகும்.

அரவிந்த் கண் விழித்தபோது அம்மாவைக் காணோம். மெழுகு வர்த்தி அணைந்திருந்தது. அதன் புகை நாற்றம் கொஞ்சம் மிச்சம் இருந்தது. அறையில் இருள் இல்லை. அப்பா வாய் திறந்தபடி கறுத்துப் போன முகத்தோடு அதே நிலையில் தூங்கிக் கொண்டிருந்தார். வாயில் எச்சில் வழிந்து தலையணைக்குப் பாலமிட்டது.

மார்க்கண்டேயனின் சிவலிங்கத்தைப் போல கைக்குள் கிடந்த டிரன்ஸிஸ்டரை அனிச்சையாக ஆன் செய்தான். இவனுக்காகவே காத்திருந்ததைப் போல ஏற்கனவே பதிவு செய்த செய்தியைத் திரும்பச் சொல்வது போல கம்பீரமான ஆண் குரல் ” சென்னைக்கு புயல் அபாயம் நீங்கியது” என்று அறிவித்தது. அவன் மனதில் வெள்ளம் வடிந்திருந்தது. நிம்மதி. அதற்கு அறையில் பரவ ஆரம்பித்த காலை வெளிச்சமும், புயல் போனதும் மட்டும் காரணமில்லை என்று தெரிந்தாலும் வேறென்ன என்பது அவனுக்குத் தெளிவாகவேயில்லை. அதைத் தெரிந்து கொள்ள அவன் பிரயத்தனப் படவும் இல்லை.

– சொல்வனம், ஏப்ரல் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *