மழை வனப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 5,164 
 
 

(இதற்கு முந்தைய ‘கோழிக்கோட்டில் வரவேற்பு’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

பரஸ்பர விசாரிப்புகள் முடிந்தன.

ராஜாராமன் அவனுடைய மனைவி பொற்கொடியை அறிமுகம் செய்து வைத்தான். பெரிய அளவில் வெற்றி பெற்று, பெரிய அளவில் செல்வமும் திரட்டி இருக்கும் புகழ்பெற்ற டாக்டரின் மனைவி என்கிற பூரிப்பும் மகிழ்ச்சியும் பொற்கொடியின் தோற்றத்தில் பொங்கித் தெரிந்தது.

ராஜாராமனும் நானும் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்த நேரம் பூராவும் அவளும் எங்கள் பேச்சில் கலந்து கொண்டபடி கூடவே இருந்தாள். ராஜாரமனுடன் சேர்ந்துகொண்டு அவளும் என்னுடைய பல கதைகளைப் பாராட்டி பேசிக் கொண்டிருந்தாள்.

தற்பெருமை போல் இல்லாமல் மிக இயல்பாக ராஜாராமனின் மருத்துவ வெற்றிகள் பற்றியெல்லாம் நிறையச் சொன்னாள். அளவற்ற பணமும் ஏகப்பட்ட சொத்துக்களும் அவர்களிடம் குவிந்திருப்பது அவளது பேச்சில் இருந்து எனக்குப் புரிந்தது.

எல்லா நவீன வசதிகளோடு மிகப்பெரிய புது ஹாஸ்பிடல் ஒன்றையும் ராஜாராமன் ஐந்து வருடங்களுக்கு முன்னால் கட்டிமுடித்து அதற்கு அவனுடைய அம்மாவின் பெயரை – அதாவது என் சித்தியின் பெயரை வைத்திருந்தான்.

கமலாச் சித்தி மிகவும் வயதாகி கோழிக்கோட்டில் மகனோடுதான் இருந்தாள். ஆனால் நான் அங்கு போயிருந்த நேரம் அவள் அவளுடைய கடைசி மகளைப் பார்த்துவிட்டு வருவதற்காக திருவனந்தபுரம் போயிருந்தாள்.

ராஜாராமனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் டாக்டர் படிப்பு முடிந்து சில மாதங்களுக்கு முன்புதான் மேல் படிப்பிற்காக அமெரிக்கா போயிருந்தான். சின்னவன் கரக்பூரில் பிடெக் படிக்கின்றான். அன்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் ராஜாராமன் வீட்டில் இருந்தேன்.

அந்தச் சந்திப்பில் மனதிற்குள் எனக்கு மற்றொரு அவசியம் இருந்ததால் உள்ளுக்குள் சிறிது ரெஸ்ட்லெஸ்ஸாக இருந்தேன். நான் புலால் உண்ண மாட்டேன் என்பதை ஞாபகம் வைத்திருந்த ராஜாராமன் அது இல்லாத மதிய விருந்து தந்து அன்புடன் உபசரித்தான்.

சந்திப்பு முடிந்தது. மழை சிறிது நின்றிருந்தது. நான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு என்னைக் கொண்டுபோய் விட ராஜாராமனே தன்னுடைய ஆடி காரை ஓட்டியபடி வந்தான். சிறிய தூறலுடன் மழை கொட்டி முடித்த சாலைகளில் வைப்பர்கள் இயங்க கார் மெதுவாக அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. நூதனமான காட்சி நடந்து கொண்டிருப்பது போன்ற மெலிதான் தத்தளிப்பில் தவித்துக் கொண்டிருந்தது என் மனம்.

இருக்காதா பின்னே?

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ராஜாராமனுக்கு நாச்சியப்பன் செய்த உபதேசம் என் மனதின் மேல் விளிம்பிற்கு வேகமாக எழும்பி வந்து தற்போது பெரிய கனவான் போல் காரை ஓட்டிக் கொண்டிருந்தவனை உற்று நோக்கியது.

அதே சமயம் அவனின் முகபாவம் எனக்குத் தைரியத்தை தந்தது. அதேநேரம் சின்ன ஊசி முனையளவு ஒரு தயக்கமும் இருந்தது. எத்தனையோ வருஷத்திற்கு முந்தைய சமாச்சாரத்தை இப்போது கிளறப்பட இன்றைய சந்திப்பில் ஏற்பட்டிருக்கும் மன மகிழ்ச்சி கீழே விழுந்து சிதறும் கண்ணாடிப் பொருளாய் உடைந்து நொறுங்கிப் போனால் என்ன செய்வது?

அந்தரங்கமான விஷயத்தைக் கேட்டுவிட்ட நாகரீகமற்றதாய் என் கேள்வியை அர்த்தப்படுத்தி விட்டால்; அதனால் அவனின் மனம் காயப்பட்டு விட்டால் என்ன பண்ணுவது? அப்படி எதுவும் நேர்ந்து விடக்கூடாது. இது ரொம்ப முக்கியம். அதே நேரம் இன்று கிடைத்திருக்கிற மாதிரி ஒரு வசதியான சந்தர்ப்பம் இனி கிடைக்குமா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயமாக இருந்தது.

இத்தனை எண்ணங்களோடும் நான் ராஜாராமனையே பார்த்துக் கொண்டிருந்த வினாடி சட்டென அவன் என்னைத் திரும்பிப் பார்த்தான். தயக்கத்துடன் என் கண்கள் ராஜாராமனின் பார்வையைச் சந்தித்தன.

“என்ன அண்ணாச்சி, உங்களோட பார்வை என்னை ஏதோ கேக்கிறதுக்கு யோசிக்க மாதிரி இருக்கே?” ராஜாராமன் ரொம்ப இயல்பாகக் கேட்டான். உடனே எனக்குள் இருந்த தயக்க சுவர் விலகிக் கொண்டது. நான் பேச்சை ஆரம்பித்துவிட்டேன்.

“யெஸ் ராஜாராமன்; உன்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிறதுக்காக ஒரு பெரிய கேள்வி இருபத்தைந்து வருடங்களாக கேக்கிறதுக்கான வாய்ப்பே இல்லாம எனக்குள்ள இருந்திட்டு இருக்கு…”

ராஜாராமன் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

“இருபத்தி ஐந்து வருடங்களாகவா? அப்படி என்னங்க அண்ணாச்சி என்னைக் கேக்கிறதுக்கு இருக்கு?”

“அதுவும் அந்தக் கேள்வி உன்னைப் பத்தினது ராஜாராமன்.”

ராஜாராமன் காரின் வேகத்தை மிகவும் குறைத்தான். காரை சாலையின் ஓரமாக நிதானமாக நிறுத்தினான். அவனுடைய முகம் சிறிது தீவிரப் பட்டிருந்தது. நான்கு புறமும் கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருந்த காருக்கு வெளியில் கோழிக்கோட்டின் மழை வனப்பு நிசப்தமாக இருந்தது.

“கேளுங்க அண்ணாச்சி, எந்தக் கேள்வியா இருந்தாலும் கேளுங்க..” தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சில் மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்துக்கொண்டான்.

நான் சற்றுப் பீடிகையுடன் ஆரம்பித்தேன்…

“உன்னோட அந்தரங்கமான பர்சனல் விஷயத்தை தெரிஞ்சிக்கிற சாதாரணமான ஆசையில கேக்க நினைக்கலை. ஒரு மோசமான உபதேசம் நிஜமா உனக்குள்ள என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்திச்சி என்கிறதை தெரிஞ்சிக்கிற கவலையோடதான் கேக்குறேன்…”

“நிஜமாகவே நோ ப்ராப்ளம் அண்ணாச்சி. அது எவ்வளவு அந்தரங்கமான விஷயமாக இருந்தாலும் பரவாயில்லை; தாராளமா கேளுங்க. எதுவா இருந்தாலும் நீங்க என்னைக் கேட்கலாம். அந்த உரிமை உங்களுக்கு எப்போதும் உண்டு. நானும் எதையும் மறைக்காம நிஜத்தைச் சொல்றேன்…”

“ராஜாராமன்; இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் நீ இதே வேணுகோபால் மகளை, இதே பொற்கொடியை, கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லாம; பிடிவாதமா மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தே. ஆதனால ஒருநாள் உன் அம்மா நம்ம நாச்சியப்ப மாமாகிட்டே போய் அழுது; அவரை உனக்கு புத்திமதி சொல்லச் சொல்லி அந்தக் கல்யாணத்துக்கு உன்னைச் சம்மதிக்க வைக்கணும்னு அவரைக் கெஞ்சி கேட்டுக்கிட்டாங்க. உடனே அவரும் உன்னைப் பார்க்க வரச்சொல்லி உனக்கு புத்திமதி எல்லாம் பெரிசா சொல்லி அனுப்பினார் இல்லையா?”

“ஆமாம்… இன்னுமா அண்ணாச்சி அதை நீங்க ஞாபகத்துல வச்சிருக்கீங்க.?”

“அன்னக்கி நான் திம்மராஜபுரத்தில் எங்க வீட்லதான் இருந்தேன். உன்கிட்ட நாச்சியப்பன் அன்னிக்குப் பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் ஞாபகத்துல அப்படியே இருக்கு ராஜா. அப்ப நாச்சியப்பன் உனக்குச் சொன்னது ரொம்பக் கேவலமான அட்வைஸ்.”

“………………………..”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *