மறைந்து போன குற்ற உணர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 3,524 
 

நம்ம ராமச்சந்திரனுக்கு கல்யாணமாம், இந்த செய்தி அரசல் புரசலாய் என் காதுக்கு வந்த போது ஒரு விதமான நிம்மதி மனதுக்குள் வந்தது. அப்பாடி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் குற்றவாளியாய் ராமச்சந்திரனை பார்க்கும் போது எனக்குள்ளே மருகியிருக்கிறேன்.

இதற்கும் ராமச்சந்திரன் இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே என்னிடம் பேசாமல் இருந்தான், அதன் பின் பேசினான் என்றாலும் என்னால் அவன் முகம் பார்த்து பேச முடியாமல் போயிருந்தது.

ஒரு காலத்தில் நானும் ராமச்சந்திரனும், அவ்வளவு நெருக்கமானவர்கள். இருவரும் ஒரே நேரத்தில் இந்த கம்பெனியில் பணிக்கு சேர்ந்திருந்தோம். இருவருமே இருபத்தி ஐந்துக்குள் இருந்தோம். இதனால் நட்பு உடனே ஈர்த்து கொள்ள அங்கு பணி புரிந்த நானூறு பணியாளர்களின் கவனத்தை ஈர்ப்பவர்களாக இருந்தோம்.

இதற்கும் ராமச்சந்திரன் தயாரிப்பு பிரிவிலும், நான் வியாபார பிரிவிலும் இருந்தோம். இருந்தாலும் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிறு இரவு வரை ஒரே இடத்தில்தான் இருப்போம். அது சினிமா தியேட்டராய் இருந்தாலும் சரி, மதுக்கடையாய் இருந்தாலும் சரி.

இருவருக்குமே சிறிதளவு ஆல்கஹால் உபயோகப்படுத்தும் பழக்கம் இருந்தது. ராமச்சந்திரன் சிறிதளவு உபயோகிப்பவன் என்றாலும், என்னை விட அதிகமாகவே இந்த பழக்கத்தை வைத்திருந்தான். என்னுடன் பழக்கம் வந்த பின்னால் ஓரளவு குறைத்து விட்டதாக சொன்னான்.

கிட்டத்தட்ட இருவருமே இங்கு வந்து சேர்ந்து ஆறு வருடங்களை ஓட்டியிருந்தோம். இருவருக்கும் திருமணம் எப்பொழுது? என்று கேட்காத நபர்களே இல்லை. எனக்காவது பெண் பார்த்து மணம் முடித்து வைக்க யாரும் இல்லை என்கிற காரணம் இருந்தது. ஆனால் ராமச்சந்திரனுக்கு!

அவனது ஊர் மதுரையில் இருந்து திண்டுக்கல் போகும் பாதையில் உள்புறமாய் அமைந்த ஒரு கிராமம். ஓரளவு நல்ல வசதி உடையவனாக இருந்தான். ஓரிருமுறை என்னையும் ஊருக்கு அழைத்து போயிருக்கிறான்.

இரண்டு சகோதரிகளுக்கு நடுவில் பிறந்தவனாய் இருந்ததால் அந்த குடும்பத்தில் செல்லமாகத்தான் இருந்தான். நான் அவனது நண்பன் என்றவுடன் அவர்கள் குடும்பம் என்னை விழுந்து விழுந்து கவனித்தது.

இவ்வளவு செல்வாக்காய் இருப்பவன் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாய்? நானே அவனிடம் நிறைய முறை கேட்டு விட்டேன்.

அதற்கு பதிலே அவனது ஊருக்கு போகும்போதுதான் சொன்னான். அவன் உறவுக்கார பெண்னை விரும்புவதாகவும் ஆனால் அந்த உறவுகள் இவர்கள் குடும்பத்துக்கு பெரும் விரோதிகளாக இருப்பதால் எங்களது திருமண விஷயங்களை தள்ளி போட்டு கொண்டிருக்கிறோம், என்று தெரிவித்தான்.

இதற்கும் பெண் கல்லூரி வரை படித்திருக்கிறாள். வேலைக்கு போவதற்கு அவர்களது உறவுகள் பெரும் எதிர்ப்புடன் இருந்தார்கள். நம்முடைய வசதிக்கு நாம் ஏன் இவளை வேலைக்கு அனுப்பவேண்டும்?, இவர்கள் இப்படி சொன்னாலும் உண்மையில் ராமச்சந்திரன் இவளிடம் தொடர்பில் இருக்கிறான் என்பது தெரிந்து கொண்டுதான் அவளை வேலைக்கு அனுப்ப மறுத்து வந்தார்கள்.

ஆனாலும் இவன் பிடிவாதமாக இவளைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று காத்திருப்பதாக அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தான்.

அன்று மதியம் சாய்ந்து மணி நான்கு ஆகியிருக்கலாம், நான் டீ குடிக்கும் நேரம், ராமச்சந்திரனுடன் இந்நேரம் காண்டீனில் உட்கார்ந்திருப்பேன். ஆனால் அவன் இரண்டு நாட்கள் ஆகும் என்று ஊருக்கு போயிருக்கிறான். தனியாக எழுந்து காண்டீன் போகவும் சோம்பேறித்தனமாக இருந்தது.

என்ன செய்யலாம் ? யோசித்து கொண்டிருந்த வேளையில் யாரோ என்னை பார்ப்பதற்காக அலுவலக முன்னறையில் காத்திருப்பதாக சொன்னார்கள்.

எழுந்தவன் முன்னறைக்கு வந்தேன். ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார், அவரை ராமச்சந்திரனுடன் அவன் ஊருக்கு போயிருந்த போது பார்த்திருக்கிறேன்.

என்னங்க ஐயா இந்த பக்கம்? தம்பி கண் கலங்கியபடியே நின்று கொண்டிருந்தார். எனக்கு மனம் பதட்டமானது, ஐயா என்னாச்சு ஏன் பதட்டமாயிருக்கீங்க?

நம்ம தம்பி இங்க வந்துச்சான்னு பார்க்க வந்தேன்.

ராமச்சந்திரன் ஊருக்குத்தானே போயிருக்கான், நாளை கழிஞ்சுதான வருவேன்னு சொல்லிட்டு போனான். இப்ப நீங்க வந்து இப்படி கேட்கறீங்க.

தம்பி மோசம் போயிடுச்சு, அவங்க அப்பா அம்மா கூட கோபிச்சுகிட்டு ஊர்ல இருந்து கிளம்பி வந்துடுச்சு, அதனால அவங்க அம்மா மருந்தை குடிச்சுட்டு இப்ப முடியாம கிடக்காங்க, அதுதான் தம்பிய சமாதானப்படுத்த நானே வந்தேன். அதற்குள் இரண்டு மூன்று இளைஞர்கள் அவர் அருகில் வந்து நின்று கொண்டனர்.

நான் இவர்கள் யார்? பார்வையால் அவரை கேட்டேன். இவக எல்லாமே தம்பியோட கூட்டளிங்கதான், தம்பிய எப்படியாவது சமாதானப்படுத்தி கூட்டிட்டு போக என்னோட வந்திருக்காங்க.

எங்கபோயிருப்பான்? செல்போன் எடுத்து அவன் நம்பருக்கு அழைத்தேன். ரிங்க் போய்க்கொண்டே இருந்தது, எடுக்கவே இல்லை.

அப்படியே ஊர்ல இருந்து வந்திருந்தாலும் ஒண்ணா ரூமுக்கு போயிருக்கணும், இல்லையின்னா என் ரூமுக்கு வந்திருக்கணும்.

வாங்க அவன் ரூமுல இருக்கானான்னு பார்த்திடுவோம்.

தம்பிய அங்க போயி தேடி பார்த்தோம், அங்க வரலைன்னு சொன்னதால ஆபிசுக்கு வந்திருப்பாருன்னு தேடி வந்தோம். அந்த பெரியவர் சொல்ல எனக்கு ஒரே குழப்பம் எங்க போயிருப்பான்? என்னைய விட்டா அவனுக்கு ..! ராஜசேகர், பழனி,..குமார், இவங்க எல்லாம் என்னோட காலேஜுல ஒண்ணா படிச்சவங்க என்று ஒரு முறை அறிமுகப்படுத்தி இருக்கிறான். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் இருப்பவர்கள். ஏதேனும் ஒரு முறை சந்தித்து அளாவுவார்கள், கூட நானும் இருப்பேன்.

என்ன தம்பி யோசிக்கறீங்க? பெரியவர் கேட்க, இல்லை நாங்க நாலைஞ்சு பேர்தான் அவனுக்கு பிரண்ட்ஸ், ஆனா எல்லாரும் ஒவ்வொரு இடத்துல இருக்கோம், இருங்க அவங்களோட செல் நம்பர் இருக்கான்னு பார்த்துட்டு விசாரிப்போம்.

சட்டென பெரியவருடன் கூட வந்திருந்த இளைஞன், வேணாங்க, நீங்க கூப்பிட்டு விசாரிச்சீங்கன்னா அண்னனுக்கு விஷயம் தெரிஞ்சு மறுபடி கோபிச்சுகிட்டு வேற எங்கியாச்சும் போயிடும், அதனால நாம அவங்க இடத்துலயே போய் அவரை சமாதானப்படுத்து கூட்டிட்டு போயிடலாம்.

எனக்கும் இந்த யோசனை சரியாகப்பட அலுவலகம் வந்து ஒரு மணி நேரம் அனுமதி பெற்று என் வண்டியை எடுத்து அவர்களுடன் கிளம்பினேன்.

கிட்டத்தட்ட அவனது நண்பர்கள் அனைவரின் இல்லங்களுக்கும் சென்று பார்த்து விட்டோம், அவனை காணவில்லை. சட்டென எனக்கு ராமச்சந்திரனின் உறவு முறை அக்காள் அண்ணா நகரில் குடியிருந்தது ஞாபகம் வந்தது.

நானும் அவனும் ஒரு முறை ஞாயிறு அன்று ஒரு முறை போய் விருந்து சாப்பிட்டு வந்தது ஞாபகம் வந்தது. தலையை உதறியபடி சார் .அவன் சிஸ்டர் ஒருத்தங்க இங்க இருக்காங்க, வாங்க போய் பார்த்துடலாம்.

காலிங் பெல் அடித்து நானும் பெரியவரும் காத்திருக்க, அந்த இளைஞர்கள் காரை விட்டு இறங்கவில்லை. அப்பொழுது எனக்கு விகல்பமாக படவில்லை.

ஆனால் கதவு திறக்கப்பட்டு ராமச்சந்திரனின் அக்கா வெளியே வர பின்புறமாய் ராமச்சந்திரன் எட்டி பார்த்தான்.

அடுத்தநிமிடம் காருக்குள் இருந்த இளைஞர்கள், சடாரென்று ஓடி வந்து கதவை வலுக்கட்டாயமாக தள்ளி உள்ளே சென்றார்கள்.

நான் பிரமை பிடித்தாற்போல நின்று கொண்டிருந்தேன். உள்ளிருந்து ஒரு பெண்ணை தலை முடியை பிடித்து இழுத்து வந்து காரில் ஏற்றி செல்வதை என்னால் பார்த்து கொண்டுதான் இருக்க முடிந்தது.

யார் இந்த பெண்? பாவி இவன் இப்படி செய்வதாய் இருந்தால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாதா? நான் உஷாராக இருந்திருப்பேன். இல்லையென்றால் இவனை காட்டி கொடுக்காமலாவது இருந்திருப்பேன்.

கிட்டத்தட்ட அவன் முகத்தை பார்த்து பேசவே வெட்கப்பட்டேன். இப்படி ஒரு காரியத்தை செய்து அவனது வாழ்க்கையை முடித்து விட்டோமே. நமக்கு இது ஒத்து வருமோ இல்லையோ இவனது வாழ்க்கையை கெடுத்தவனாய் ஆனதில் என்னால் அவனது முகத்தை பார்க்கவே கூசினேன்.

அதற்கு பின் ராமச்சந்திரன் ஊருக்கு போகவே இல்லை என்பதும் அக்கம் பக்கத்தார் சொல்ல கேள்விப்பட்டேன். எங்காவது சந்தித்து கொள்ள நேரிட்டால் கையை தூக்கி ஹலோ சொல்லி விலகி கொண்டோம்.

இதோ இப்பொழுது கூட அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பாதி அளவுக்காவது பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்துக்கு அழைத்திருக்கிறான். எனக்கு கொடுக்கவே இல்லை.

அவன் செய்தது சரிதானே, அவன் வாழ்க்கையை கெடுத்த எனக்கு அடுத்த வருடமே நல்ல இடத்திலிருந்து ஒரு பெண்ணை கொடுத்து கல்யாணம் செய்வித்தார்கள். அப்பொழுது அவனுக்கு பத்திரிக்கை வைக்க வெட்கப்பட்டு (பயந்து) அவனை தவிர்த்து விட்டேன். அவன் பாவம் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

இடையில் எனக்கு ஒரு குழந்தையும் பிறக்க, ஒவ்வொரு நல்ல காரியம் நடக்கும்போதும் அவனது முகம் எங்காவது தென்பட்டால் எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை அப்படியே வந்து ஒட்டிக்கொண்டு நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே.

கல்யாண பத்திரிக்கை கொடுத்து முடிந்து அவன் ஊருக்கு கிளம்பி போனது வரைக்கும் செய்திகள் என் காதுக்கு வந்து கொண்டுதான் இருந்தன. கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடியிருந்தது.

ராமச்சந்திரனை அகஸ்மாத்தமாய் பார்த்த பொழுது கொஞ்சம் ஊறியிருந்தான். முகம் சந்தோஷத்தில் இருந்ததை காண முடிந்தது.

அன்று மாலை என் பணி முடிந்து கிளம்பலாம் என நினைத்து எழும்போது என் எதிரே ராமச்சந்திரன் வந்து நின்றான். எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை, வா, சுருங்கி அழைத்தேன்.

புதுசா கல்யாணம் ஆகி வந்தவனை வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடமாட்டியா? அவன் கேட்டான்.

நான் விழித்தேன். சாரி..எனக்கு அந்த நிகழ்ச்சி மறக்க முடியலை. எனக்கு தெரியாமலேயே அந்த தப்பை பண்ணிட்டேன். அதனாலதான் உன் கூட பேசறதுக்கு தயங்கறேன்.

அதை விடு, நான் மறந்துட்டேன், இப்ப என்னை விருந்துக்கு கூப்பிடுவியா மாட்டியா?

சட்டென மகிழ்ச்சி மனதுக்குள் பரவ நாளைக்கு நீயும் உன் மனைவியும் கட்டாயம் எங்க வீட்டுக்கு வரணும். காலை டிபன், மதியம் லஞ்ச் எல்லாம் நம்ம வீட்டுலதான்.

ஓ.கே..அப்ப நாளைக்கு உன் வீட்டுல சந்திக்கலாம்.

மறு நாள் மனைவி,குழந்தையுடன் இவனுக்காக வாசலில் காத்திருந்தேன். அதற்கு முன் நடந்ததை எல்லாம் மனைவியிடம் சொல்லியிருந்ததால் அவளும் என்னை விட இவர்களுக்காக ஆவலுடன் காத்திருந்தாள்..

காரில் வந்திறங்கிய தம்பதிகளை பார்த்தவுடன் எனக்கு வியப்பு. இந்த பெண்ணை எங்கோ.. எங்கோ..! பார்த்திருக்கிறேன், எங்கே எப்படி? யோசிப்பதற்குள் ஞாபகத்திற்கு வந்தாள், அன்று தலை முடியை பிடித்து இழுத்து போனார்களே அந்த பெண்தான்.. அப்படியானால் அவன் விரும்பிய பெண்ணே அவனுக்கு கிடைத்து விட்டாளா!

ராமச்சந்திரன் மனைவியே அந்த கதையை சொன்னாள். அவளை அப்படி கூட்டி போனாலும் அவளுக்கு அவ்வளவு சீக்கிரம் வரன் கூடி வரவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருடம் வரும் மாப்பிள்ளை எல்லாம் தட்டி போயிருக்கிறது. (இதில் இவள் கைங்கர்யம் கூட இருந்ததாம்) அப்புறம் என்ன அவர்களே ராமச்சந்திரன் குடும்பத்திடம் நெருங்கி வந்து சம்பந்தம் பேச..எல்லாம் கை கூடி நல்ல படியாக முடிந்தது.

ஏண்டா முட்டாள், இதை அப்பவே செய்து உங்களது கல்யாணத்தை நடத்தியிருக் கலாமில்லை.

அப்படி செஞ்சிருக்கலாம்தான், இருந்தாலும் அந்த நிகழ்ச்சி நடந்த பின்னாலதான் இவளுக்கு கல்யாணம் தள்ளி போக ஒரு காரணமாச்சு, இல்லையா?

ஆமாம், என்று சொல்வதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை.

என்றாலும் எனக்கு அதுவரை ஏற்பட்டிருந்த குற்ற உணர்ச்சி மறைந்து எங்கோ போயிருந்தது என்பது மட்டும் உண்மை.உண்மை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *