கந்தனுக்கு இரவு தூக்கம் வர மறுத்தது. தான் வாழும் ஊருக்கு பக்கத்து ஊரில் வாழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் சொத்துக்காக சண்டை போட்டுக் கொண்டதோடு பாரம்பரியமாக அவரது தாத்தா ராக்கி ஆரம்பித்து நடத்திய பிரபலமான பலகாரக்கடையை இழுத்து மூடி விட்டதாக நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டதிலிருந்து மன நிலையே சரியில்லாதவர் போல நடந்து கொண்டார்.
“என்னாச்சுங்க உங்களுக்கு? பைத்தியகாரர் மாதிரி பேசுனதையே திருப்பித்திருப்பி பேசறீங்க. நேரத்துக்கு தூங்கறதே இல்லை” கவலையுடன் கேட்ட மனைவி வள்ளியிடம் “ஒன்னுமில்லை. பக்கத்து ஊர்ல பிரபலமான பலகாரக்கடைக்காரங்க நல்ல வேவாரம் ஆயிட்டிருந்த கடைய இழுத்து மூடிப்போட்டாங்களாம். தொழிலே அமையாம பல பேரு வேதனைப்பட்டிட்டிருக்கிற இந்தக்காலத்துல நூறு வருசம் பாரம்பரியமா நடத்திட்டு இருந்த கடைய மூடிட்டாங்களாம். பைத்தியகாரப்பசங்க”என்றார் வேதனையுடன்.
“நீங்க என்ன உங்க மகனுக இப்படிப்பண்ணிட்ட மாதிரி பேசறீங்க…?”
“பின்னே… “என்றவர் பற்களைக்கடித்தவாறு “சொந்தப்பசங்க செஞ்சுட்ட மாதிரியே மனசு வலிக்குது” அதுதான் என மழுப்பி சமாளித்தார்.
“என்னமோ… எல்லாம் அந்த முருகனுக்கே வெளிச்சம்” என்றாள் சலிப்புடன் கந்தன் மனைவி வள்ளி.
ராக்கி எனும் பெயரைக்கேட்டாலே இனிப்பு தான் ஞாபகத்துக்கு வரும். திருப்பதி லட்டின் சுவையோடு லட்டு தயாரித்ததால் விற்பனை அமோகம். ராக்கியின் மறு பெயர் லட்டு என்றாகி விட, மற்ற கடைக்காரர்களும் ராக்கியைப்போலவே தயாரித்து சாதிக்க முடியாமல் கடைகளை மூடி விட, ராக்கி இனிப்பு மட்டும் சுற்று வட்டார சிறு நகரங்களில் பத்துக்கு மேற்பட்ட கடைகள் துவங்கப்பட்டு அமோகமாக விற்பனையாகின.
இதற்கெல்லாம் முழு காரணம் ராக்கி எனும் பெயர் கொண்ட ராக்கியப்பன் தான். ராக்கியப்பனுடைய தந்தை விவசாயத்தில் விளைச்சல் இல்லாமலிருக்கும் காலத்தில் தனது மாட்டின் பால் தவிர பக்கத்து தோட்டங்களில் இருக்கும் மாடுகள் கறக்கும் பாலை வாங்கி பக்கத்து நகரத்துக்கு கொண்டு போய் விற்பார்.
ஆனால் ராக்கியப்பனோ தந்தை கொண்டு வரும் மீதமான பாலைக்காய்ச்சி பால்கோவா செய்து விற்று விடுவார். இவ்வாறு வீட்டில் துவங்கிய பலகாரம் செய்து விற்கும் பழக்கம் கடை போட்டு விற்கும் நிலைக்கு உயர்ந்தது.
திருமணமாகி நான்கு ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் வாரிசுகள் உழைப்புக்கு வந்தபின் வெளியூரிலும் கடைகளைத்தொடங்கி வாரிசுகள் நான்கு பேருக்கும் திருமணம் நடத்தி வீடுகள், வாகனங்கள், சொத்துக்கள் என கோடிக்கணக்கில் பணம் சேர கோவில் கட்டுவது, அன்னதானம் செய்வது, அனாதைகளுக்கு உதவி செய்வது என ஊரில் பெரிய வள்ளல் என பெயர் பெற்றவர் திடீரென ஒரு நாள் உறங்கும்போதே இறந்து விட்டார்.
ராக்கியப்பன் இறந்து ஐம்பது வருடங்கள் ஓடி விட்டன. அவரது நான்கு மகன்களும் இதுவரை ஒற்றுமையாக இருந்து நடத்தி வந்த நிறுவனங்களை தங்களுக்கு வயதாகி விட்ட காரணத்தால் அவர்களது வாரிசுகளிடம் ஒப்படைக்க, பிரச்சினை ஆரம்பித்து கடைகளை மூடும் நிலைக்கு வந்தது சுற்று வட்டார மக்களுக்கும் கவலையளித்தது.
ராக்கியப்பனின் வாரிசுகளால் தங்கள் வாரிசுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
கோர்ட், வழக்கு என பிரச்சினைகள் அதிகரித்தது போட்டியாளர்களை மகிழ்ச்சியடையச்செய்திருந்தது. இந்த செய்திதான் ஐம்பது வயது கந்தனை கவலை கொள்ளச்செய்தது.
இதற்கு மேலும் ராக்கி குடும்பத்தை சந்திக்காமல் இருப்பது தலையே வெடித்து விடும் போலிருந்தது. ஒரு நாள் தனது நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு ராக்கியின் வீட்டிற்குச்சென்ற கந்தன், கோபத்தில் ராக்கியின் பேரன்களை திட்டுவது போல் பேசினார். அவர்களும் இவர் நம் வாடிக்கையாளர் போலிருக்கிறது. அதனால் கோபப்படும் உரிமை அவருக்கும் உள்ளது என நினைத்து அமைதியாகவே இருந்தனர்.
அனைவரையும் தன்னருகே வருமாறு அழைத்து, “நீ அந்தக்கடையை வெச்சுக்கோ, நீ இந்தக்கடையை வெச்சுக்கோ” என கூறியவர், ராக்கியின் மூத்த மகன் ஏகனை அழைத்து “அந்த பழைய இரும்பு பெட்டில இருக்கிற ஐநூறு பவுன் தங்கக்காசுகள உள்ளூர் கடையை நடத்தரவங்களுக்கு கொடுத்துப்போடு. ஏன்னா அந்தக்கடைல வேபாரம் சுமாராத்தான் இருக்கும்” எனக்கூறியதைக்கேட்டு அரண்டு, மிரண்டு போயினர் ராக்கியப்பன் குடும்பத்தினர்.
ராக்கியப்பனின் மூத்த மகனான ஏகனோ, வியப்பின் உச்சிக்கே சென்றவர் ‘அந்த தங்கக்காசுகள் தன்னிடம் இருப்பது தன் தந்தைக்கும், தனக்கும் மட்டுமே தெரிந்திருந்த நிலையில், அவர் இறந்து ஐம்பது வருடங்களுக்குப்பின் இவருக்கு எப்படித்தெரிந்தது?’ என நினைத்து, “நீங்கள் யார்?” எனக்கேட்க, “நானா? நான்… வந்து….” கந்தன் தடுமாறியதைக்கவனித்த அவருடன் வந்த நண்பர் குறுக்கிட்டு “இவர் ஒரு பெரிய ஜோதிடர். எதையும் முகத்தைப்பார்த்தே சொல்லி விடுவார். இவர் சொல்வதைக்கேட்டால் தொழில் நல்லபடி நடக்கும்” என பொய் சொல்லி சமாளிக்க, பெரியவர் ஏகன் ஓடி வந்து கந்தனின் காலிலேயே விழுந்து விட்டார்.
“நீங்க என்னை விட வயசுல சின்னவராத்தெரியறீங்க. ஆனா என்னோட அப்பா ராக்கியப்பனே நேர்ல வந்து என் கிட்ட சொன்னமாதிரி இருந்துச்சு. இனி மேல் நீங்க என்ன சொன்னாலும் நாங்க கேட்கறோம். நாளைக்கே கடைகளைத்திறந்து வியாபாரத்தை நடத்தறோம்”
என ஏகன் கூறியதை குடும்பத்தினர் அனைவரும் பகை மறந்து ஆமோதித்ததோடு கந்தனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.
கடந்த ஒரு வாரமாக கந்தன் மனதில் இருந்த கவலை இன்று முழுவதும் நீங்கியது. கனவில் வந்த சம்பவங்களோடு இந்த வீடும், இங்கிருப்பவர்களும் ஒத்துப்போவதாலும், ஏற்கனவே தனக்குப்பழக்கப்பட்டவர்களைப்போல் இருப்பதாலும், ராக்கியப்பன் இறந்த பின் தான் பிறந்ததாலும், தான் அவருடைய மறுபிறவி என உறுதியாக நம்பினார் கந்தன்.