கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,635 
 

தரகர் கொடுத்து விட்டு போன மாப்பிள்ளைகளின் புகைப்படங்களும், வாழ்க்கைக் குறிப்புகளும், மேஜையில் சிதறிக் கிடந்தன.
மெலாமைன் கோப்பையில் நிறைந்திருந்த தேநீரை உறிஞ்சியவாறே, புகைப்படங்களை வெறித்தேன். எனக்கு பின் நின்று, என்னை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் என் மனைவி.
மறுமகன்இந்த புகைப்படங்களில் உள்ள மாப்பிள்ளைகளில், யார் என் மருமகன் (அ) மறுமகன்? ஜோசியக்கிளி போல் ஒரு புகைப்படத்தை கவ்வினேன்.
மாப்பிள்ளையின் பெயர், பஜல் முகமது; வயது 27. உயரம், 5’10”. மாநிறம். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், உயர் அதிகாரியாக பணியாற்றுகிறான். வருடம், ஆறு லட்சம் ரூபாய் சம்பளம். இரு முதுகலை பட்டங்கள் பெற்றவன். மாப்பிள்ளையின் அத்தா, மாப்பிள்ளையின் பத்தாவது வயதில் மவுத்தாகி விட்டார். மாப்பிள்ளைக்கு மூன்று அண்ணன்கள்; ஒரு அக்கா. மாப்பிள்ளை தான் கடைகுட்டி. பிறந்த ஊர் மதுரை.
“”இந்த மாப்பிள்ளை எனக்கு பிடிச்சிருக்கு பாப்பா. ஆனா, இவன் என் ஆசையை, ஆதங்கத்தை நிறைவேற்றுவானான்னு தெரியல!”
“”உங்க ஆசை அல்லது ஆதங்கம் என்ன புருஷா?”
“”நம் நீண்ட நாள் வாசக நண்பர் விஜயபாஸ்கர், சின்ன சேலத்துல இருக்காரில்ல… அவருக்கு வாய்ச்ச மருமகன் கோபியை பாத்தேல்ல… மாமனாரும், மருமகனும், ஒரு போர்வைக்குள், இரு தூக்கம் கொள்வர். இருவரும் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து அசத்துவர். ஒண்ணுக்கு போகணும்னா கூட, மாமனாரைக் கேக்காம போக மாட்டான் அவரோட மருமகன். கோபி, விஜயபாஸ்கருக்கு மருமகனல்ல; மறுமகன். எனக்கு வரும் மருமகனும், மறுமகனா திகழணும்!”
மனைவி சிரித்தாள்…
“”விஜயபாஸ்கரை பார்த்து நீங்க சூடு போட்டுக்காதீங்க. முஸ்லிம்ல, நீங்க கேக்கற மாதிரி மருமகன் கிடைக்க வாய்ப்பே இல்ல!”
“”தன்னம்பிக்கை நூல்களின் தந்தை அப்துற் றகீமின் புத்தகங்களை, அவரது மருமகன் ஷாஜகான், ஒரு மகனின் ஸ்தானத்தில் நின்று பதிப்பித்து வருகிறார். வபாத்தான மாமனாரின் புகழை, அகில உலகெங்கும் பரப்பி வருகிறார் மருமகன். எனக்கும் அப்படி ஒரு மருமகன் ஏன் கிடைக்காது?”
“”உங்க மகன் இப்னு பத்ர், உங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை தகுந்த நேரத்துல செய்வான்… சொந்த மகனிருக்க, இரவல் மகன் கேட்டு ஏன் இறைஞ்சுகிறீர்கள்?”
“”இடது தோளில் என் மகனையும், வலது தோளில் என் மருமகனையும் கோர்த்துக் கொண்டு நான் ஸ்டைலாக நடந்து வர ஆசைப்படுகிறேன்!”
“”தேவையில்லாத ஆசைப்பா உனக்கு. உலகத்துல எல்லா மருமகன்களும், வசூல் மன்னன்கள் தான். மாமனாரிடம் எதையாவது வாங்க தான் ஆசைப்படுவர்; கொடுக்க ஆசைப்பட மாட்டார்கள்.
“”எங்கத்தாவுக்கும், உங்களுக்கும் என்னைக்காவது சுமூகமான உறவு இருந்துச்சா… ஹியரிங் எய்டு பொருத்தியிருந்த அவர், உங்களை குறுகுறுன்னு பார்ப்பார். “புத்தகங்கள் வாங்கியே காசை கரியாக்குறீயே…’ என்றும், “அழகுச்சிலை மாதிரி இருக்கும் என் மகளை, கருங்குரங்கு மாதிரி இருக்கும் உனக்கு போய் கட்டி வச்சேனே…’ என்றும் முறைப்பார்.”
“”ஆமா!”
“”எங்கக்கா புருஷன், ஐதராபாத்துல இருக்கும் தன்னோட மருமகனை பார்க்க போயிருக்கார். விடியக்காத்தால, தூங்கிக்கிட்டிருந்த மருமகன்கிட்ட போய் சலாம் சொல்லிருக்கார், எங்க மச்சான். அவ்வளவு தான்… தூக்கம் கலைஞ்ச மருமகன், “உன் விடியாமூஞ்சியக் காட்டி, நீ சலாம் சொல்லலைன்னு எவன்ய்யா அழுதான்… இன்னைய பொழுது பூராவும் எனக்கு கெட்ட பொழுது தான்…’ன்னு, லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டான்.
“”ஐஸ்வர்யா ராயை, அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கும்; ஆனா, ஐஸ்வர்யா ராயின் அப்பனை பிடிக்காது. ஆரஞ்சு சுளைகள் பொண்டாட்டிமார்னா, ஆரஞ்சுதோல் மாமனார்கள். பழம் வாய்க்குள் போகும்; தோல் குப்பைக்கு போகும்.”
“”எல்லா மாப்பிள்ளைகளும், நீ சொல்ற மாதிரி இருக்க மாட்டாங்க!”
“”எல்லா மாமனார்களும் வரி ஏய்க்கும் பணக்காரர்கள்னா, எல்லா மாப்பிள்ளைகளும், இன்கம்டாக்ஸ் ரெய்டு பண்ணும் அதிகாரிகள்.”
“”சுருக்கமா பேசு… முடிவா என்ன தான் சொல்ல வர்ற?”
“”ஹலோ மிஸ்டர் எழுத்தாளர்… உங்க மகளுக்கு மாப்பிள்ளை பாருங்க; உங்களுக்கு மறுமகன் தேடாதீங்கன்னு சொல்றேன்!”
மகள் எட்டினாள்.
“”நீ என்னம்மா சொல்ற?” – வினவினேன்.
“”அம்மா சொன்னது தான் என் கருத்தும்!” என்றாள் மகள்.
அதன் பின் மதுரை மாப்பிள்ளை, பஜல் முகமது தான் சரியான வரன் என பேசி, தீர்மானித்தோம். மாப்பிள்ளை வீட்டார் வந்து, பெண்ணை பார்த்து செல்ல, நாங்கள் மாப்பிள்ளை வீட்டாரை சென்று பார்த்தோம். மாப்பிள்ளையை முதன் முறையாக பார்த்தேன். நன்றாகத் தான் இருந்தான். அவனுடன் ஒரு மணி நேரம் பேசினேன். பேச்சுக்கு இடையில், அவனது கைகளை பற்றிக் குலுக்கினேன். முதுகில் தட்டிக் கொடுத்தேன். நான் எது சொன்னாலும் சிரித்தான். அப்துல் கலாமை சந்திக்கும் எட்டாம் கிளாஸ் மாணவன் போல நடந்து கொண்டான். இவன் நிச்சயம் மருமகனாக அல்ல, மறுமகனாக நடந்து கொள்வான்.
மானசீகத்தில், மறுமகனை உப்பு மூட்டை தூக்கி பிரபஞ்சம் சுற்றினேன்.
நிச்சயதார்த்தம் முடிந்தது. அடுத்த ஒரு மாதத்திற்குள் திருமண தேதியை குறிப்போம் என்றேன். மாப்பிள்ளையோ, என் யோசனையை மறுத்து, ஐந்து மாதம் கழித்து ஒரு தேதியை சொன்னான்.
தொடர்ந்து நான் எதை சொன்னாலும், எதை செய்தாலும், மாப்பிள்ளை அதற்கு தலைகீழாகத் தான் சொன்னான்; செய்தான்.
மாப்பிள்ளைக்கு, நீல நிறத்தில் புல்சூட் எடுத்தால், நல்லா இருக்கும் என்றேன். சாம்பல் நிறத்தில் புல்சூட் எடுத்தான் மாப்பிள்ளை.
மணப்பெண்ணுக்கு மெரூன் நிறத்தில் பட்டுப்புடவை எடுங்கள் என நான் சொன்னதற்கு, அதற்கு மாறாக, பச்சை நிறத்தில் புடவை தேர்ந்தெடுத்தான் மாப்பிள்ளை.
“”கொடைக்கானலில் ஹனிமூன்!” – இது நான்.
“”அண்ணனும், அவர்களது மனைவிமார்களும் வர அடம்பிடிக்கின்றனர். நோ ஹனிமூன்!” – இது மாப்பிள்ளை.
“”திருமணத்தின் முந்தின நாளும், திருமணத்தன்றும், இரு நூல் வெளியீட்டு விழாக்கள் நடத்துகிறேன். விழாவுக்கு சரியான நேரத்தில் வந்து, விழாவை கண்ணியப் படுத்துங்கள்!” – இது நான்.
முந்தின நாள் விழா மாலை, 4:00 மணிக்கு ஆரம்பித்தது. மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் இரவு, 7:45 மணிக்கு வந்தனர். மறுநாள், 10:00 மணிக்கு விழா ஆரம்பம். 11:45க்கு, மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் வந்தனர்.
விழாவில் வெளியிடப்பட்ட புத்தகங்களில் ஒரு பகுதி, பார்சல் பண்ணி வைக்கப்பட்டிருந்தது. பார்சலை உடைத்து, மாப்பிள்ளை வீட்டார் புத்தகங்களை தூக்கிச் சென்று விட்டனர். “அவர்களிடம் பேசி புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள் மாப்பிள்ளை…’ என்றதற்கு, “புத்தகம் கேட்டால், கோபித்துக் கொள்வர்; நான் கேட்க மாட்டேன்…’ என்றான் மாப்பிள்ளை.
தனிக்குடித்தனம் செல்ல யோசனை சொன்னேன். யோசனையை நான் சொன்ன ஒரே காரணத்துக்காக, மூன்று மாதம் தாமதமாக தனிக்குடித்தனம் சென்றனர்.
மைசூரிலிருந்து போன் வரும், மகளிடமிருந்து, மருமகனிடமிருந்து இருவரில் யார் பேசினாலும், என் மனைவியோடு தான் பேசுவர். சம்பிரதாயத்துக்காக கூட என் மருமகன், என்னோடு ஒரு வார்த்தை பேச மாட்டான். நானும் வீம்பாய் பொறுமை காத்தேன்.
இரண்டு வருடங்களாய், நாமக்கல்லில் உள்ள ஒரு உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி, பிளஸ் 2 படித்து முடித்த என் மகன், வீடு திரும்பினான். அவனுக்காக பஸ் நிலையத்தின் வெளிவாசலில் காத்திருந்து, அவனை வரவேற்றேன்.
அவனது இரு கன்னத்தில் முத்தமிட்டேன்; பதிலுக்கு முத்தமிட்டான். கட்டியணைத்துக் கொண்டேன். முதுகில் தட்டிக் கொடுத்தான்.
“”எப்டிப்பா இருக்கீங்க?”
“”நல்லா!”
“”கதையெல்லாம் எழுதறீங்களா?”
“”ஓ!”
“”எங்க பள்ளி டைரக்டர் குருவாயூரப்பன், உங்களை குசலம் விசாரிச்சு கடிதம் குடுத்திருக்கார். இந்தாங்க!” – வாங்கி சட்டை பாக்கட்டுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டேன்.
“”உங்க மகளும், மறுமகனும் எப்படியிருக்காங்கப்பா?”
“”அவங்களுக்கென்ன… பிரமாதமாயிருக்காங்க!”
“”உங்க மருமகன், மறுமகனா இல்லாம, மருமகனாக இருக்கார்ன்னு ஆவலாதி படுறீங்களாமே… நீங்க எது சொன்னாலும், அதுக்கு ஏட்டிக்கு போட்டியா செய்றாராமே உங்க மருமகன்?”
“”ச்… ஆமாண்டா!”
“”அவர் செய்றது உங்களுக்கு தேவை தான்!”
“”என்னடா சொல்ல வர்ற?”
“”விஜயபாஸ்கர் அங்கிள், நான்காம் வகுப்புலயிருந்து கோபிக்கு வாத்தியார். தவிர, அங்கிளின் மகளை, கோபி லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டார். காதல் திருமணத்தால், பெற்றோரை வெறுத்து ஒதுங்கி நிற்கும் கோபி, விஜயபாஸ்கர் அங்கிளோட நெருக்கமா இருக்கிறது ஆச்சரியமில்ல. மருமகன், மறுமகன் ஆகக் கூடாதுப்பா. அப்படி ஆனா, உங்க பொண்ணுக்கு, மறுமகன், அண்ணன் முறை ஆயிடுவார். தேவையா? நான் தான் ஒரு மகன் இருக்கேனே உங்க புகழ் பாட, உங்க மேல அன்பை கொட்ட. இன்னொரு மகன் எதுக்கு உங்களுக்கு? என்ன தான் நெருங்கினாலும், மருமகனோ, மருமகளோ, மகளாக, மகனாக ஆக மாட்டர்கள்.
“”ஐ லவ் யூப்பா… உங்க தட்டுல நிறைய பதார்த்தம் வச்சிக்கிட்டு, பக்கத்து தட்டும் வேணும்மின்னு ஏன்ப்பா அடம்பிடிக்கிறீங்க… உறவுகளை, கற்பனைகளோடு அணுகாதீங்க; யதார்த்தமா அணுகுங்க!”
“”என் செல்ல மகனே… எனக்கே அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்திட்டியேடா!” – கட்டியணைத்துக் கொண்டேன்.
கணவனிடம் கனிவாக கேட்டாள் மகள்…
“”எங்கப்பா உங்களை மகன் போல பாவித்து நெருங்கும் போதெல்லாம், நீங்க ஏறுக்குமாறா நடந்து, அவர் மனசை புண்படுத்துறீங்களே… இது சரியா? கொஞ்சம் அவரை அட்ஜஸ்ட் பண்ணி போகக் கூடாதா?” – இறைஞ்சினாள்.
“”மாமனாரை அப்பாவா பாவிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, கொஞ்சம் நிஜத்தை யோசிச்சு பாரு. எங்கத்தா, நான் அஞ்சாவது படிக்கும் போது, அதாவது என் பத்தாவது வயதில் இறந்திட்டார்.
“”எங்க குடும்பம், வறுமையில தத்தளிச்சிச்சு. எங்க குடும்பத்துல யாருமே படிக்காதப்ப, நான் எதிர்நீச்சல் போட்டு படிச்சு, வேலைக்கு வந்திருக்கேன். ஒரு ஆணுக்கு எந்தெந்த காலகட்டத்தில் ஒரு தகப்பனின் அரவணைப்பும், பாசமும் இருக்க வேண்டுமோ அது எனக்கு கிடைக்கவில்லை. இப்ப அது உங்கப்பா வழில எனக்கு கிடைச்சு என்ன பிரயோஜனம்?
“”இப்ப எனக்கு தேவை, புதுசா அப்பா இல்லை; பொண்டாட்டி தான். நீ கிடைச்சிருக்க… அது போதும். உங்கப்பாவை நான் தந்தையா நினைச்சு அன்பு செலுத்தவில்லையே தவிர, மாமனாரா நினைச்சு மரியாதை செலுத்திக்கிட்டுத் தான் இருக்கேன். ஆயிரம் தான் இருந்தாலும், மாமனார், தகப்பன் ஆக முடியாது செல்லம்!”
“”இந்த கோணத்தை, என் எழுத்தாளர் அப்பா விரைவில் புரிஞ்சுக்குவார்!” என்றாள் மகள்.

– நவம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *