(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நிலாக் காய்ந்துகொண்டிருந்தது. மேல்மாடியில் திறந்த வெளியில் நானும் குஞ்சரியும் கதை பேசிக்கொண்டிருந்தோம். அன்று எங்கள் பள்ளிக் கூடத்தில் உபாத்தியாயர், சிநேகத்தைப்பற்றி ஒரு பிரசங்கம் பண்ணினார். அதைப்பற்றிப் பேசினோம்; அதிலிருந்து பேச்சு வளர்ந்தது. நானும் குஞ்சரியும் இளமையிலிருந்து பழகவில்லை. பழகி மூன்று வருஷ காலமே ஆயிற்று. ஆனாலும் எவ்வளவோ வருஷங் கள் பழகியவர்களைப்போல் எங்கள் உள்ளம் ஒன்று பட்டன. எங்கள் இரண்டுபேருடைய ஆசைகளும், கோபதாபங்களும் ஒரேமாதிரி இருந்தன. இந்த நட்பின் சுவையை நாங்கள் எப்பொழுதும் அநு பவிக்கப்போகிறவர்களைப்போல அவ்வளவு அஸ்தி வாரங்கள் போட்டோம். எல்லாம் பேச்சுத்தான். பேச்சுக்கிடையில் குஞ்சரி எதையோ நினைத்துக் கொண்டு சிறிதுநேரம் பேசாமல் இருந்தாள். திடீ ரென்று, “அம்மணி, நீ ஆணாகப் பிறந்திருந்தால் எவ் வளவு நன்றாயிருக்கும்!” என்றாள்.
“ஏன் உனக்கு அப்படித் தோன்றுகிறது? அப் படியிருந்தால் நாம் கலந்து பழக முடியுமா? நாம் இருவரும் பெண்களாக இருப்பதனால்தான் இரண்டு பேருடைய மனசையும் விண்டுகாட்டிப் பேசிக் கொள்கிறோம்,பழகுகிறோம். நான் புருஷனாக இருந் தால் நீ என் பக்கத்தில் ஏன் வருகிறாய்? இங்கிலீஷ் காரர்களா நாம்? அவர்களானால் எல்லோரும் வித்தி யாசமில்லாமல் பழகுவார்கள். அது கிடக்கட்டும். இந்த ஞாபகம் உனக்கு வருவதற்குக் காரணம் என்ன?”
“ஒன்றும் இல்லை. உன்னுடைய தகப்பனாரும் சர்க்கார் உத்தியோகஸ்தர்; ஊர் ஊராய் மாற்றப் படும் நிலையில் உள்ளவர். என்னுடைய தகப்பனாரும் அத்தகையவரே. திடீரென்று இரண்டுபேரில் ஒரு வரை மாற்றிவிட்டால் நாம் இப்படிப் பழகுவது போல் பழக முடியுமா? உன்னைப்போல் வேறொரு சிநேகிதியை நான் வேறு எங்காவது பார்க்கத்தான் முடியுமா?”
“அதற்காக?”
“அதற்காகத்தான், நீ புருஷனாக இருந்தால் நம் முடைய பழக்கத்தை வேறு வகையில் திருப்பி விடலாமே?” என்று சொல்லிச் சிரித்துவிட்டு, “நான் சொல்வது புரிகிறதா?” என்று கேட்டாள்.
“புரியாமல் என்ன? உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ளலாம்; நாம் இருவரும் கணவன் மனைவியாக இருக்கலாம் என்பதுதானே உன் உத்தேசம்?”
“அதுதான்” என்று சொல்லிவிட்டு அவள் மீண்டும் சிரித்தாள்.
“அப்படி மாற்றிவிட்டால் தபால் இருக்கிறது; அடிக்கடி கடிதங்கள் எழுதலாம். பார்க்கவேண்டு மென்றால் வந்து பார்த்துக்கொள்ளலாம்.”
“அது எப்போதும் முடியுமா? பெண்களுக்கு அவ்வளவு சுதந்திரம் வந்துவிடுகிறதா? கல்யாணம் ஆகும் வரையில் அப்படிச் செய்யலாம். பிறகு நம் முடைய புருஷர்கள் ஸ்வபாவம் எப்படி இருக் கிறதோ! கடிதம் எழுத முடிகிறதோ இல்லையோ? வந்து பார்க்கத்தான் முடியுமோ, முடியாதேர்!”
“என்ன பைத்தியம்மாதிரி பேசுகிறாய்? எதற்காக அனாவசியமான சந்தேகங்களும் வீண்பயமும் கிளப் பிக்கொண்டு அவஸ்தைப்படுகிறாய்? நம்முடைய பிரியம் அவ்வளவு லேசில் முறிந்துவிடுமா?’ என்று சமாதானம் சொன்னேன்.
குஞ்சரி கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. போலீஸ் டெபுடி பரிண்டெண்டாகிய என்னு டைய தகப்பனாரை அடுத்த வாரத்திலேயே சர்க்கார் பெல்லாரி ஜில்லாவில் தூக்கிப்போட்டாலும் போட லாம்; ஸப்மாஜிஸ்டிரேட் உத்தியோகம் பார்க்கும் அவளுடைய அப்பாவைத் திருநெல்வேலி ஜில்லா விற்கு அனுப்பினாலும் அனுப்பலாம். இரண்டு பேருடைய வேலைகளும் குற்றவாளிகளுடன் பழகும் வேலை; ஜனங்களுடைய அபவாதத்துக்கு ஆளாகும் வேலை. குஞ்சரி இவைகளையெல்லாம் மனத்தில் வைத்துக்கொண்டே பேசினாள். அவள் தீர்க்கா லோசனை செய்பவள்.நான் சிறிது சோம்பேறி; ‘சுடச்சுடச் செய்தால் போகிறது’ என்று அசட்டையாக இருப்பவள்.
குஞ்சரியின் பயம் வாஸ்தவமாகிவிட்டது. என் தகப்பனாரைக் காக்கிநாடாவுக்கு மாற்றிவிட்டார்கள். அவள் பயந்த நிலை உண்மையிலே வந்துவிட்டது. அப்பொழுது என் மனம் பட்ட வேதனையை எப் படிச் சொல்வேன்! ‘என் கல்யாணம் முந்தி நடந்தால் இப்படி நடப்பேன்; உன் கல்யாணம் முந்தி நடந் தால் அப்படி நடப்பேன்’ என்று குதூகலமாகப் பேசிய பேச்சுக்களும் எண்ணிய எண்ணங்களு டும். வீணாகப் போய்விட்டனவென்ற உணர்ச்சி தோன்றி யது. அவளுக்குத் தைரியம் கூறிய நான்தான் அதிக மாக அழுதேன். என்னுடைய தாய் தந்தையர்கூட என் துக்கத்தைப் பார்த்து வருத்தப் பட்டார்கள் “நம்முடைய சிநேகம் ரெயில் வண்டிச் சிநேகம் ஆகி விட்டதுபோல் இருக்கிறதே!” என்று நான் வருந்தினேன்.
“என்ன நீ இப்படிச் சொல்லுகிறாய்? அன்றைக்கு நீ சொன்னது ஞாபகம் இல்லையா? தபால் இருக் கிறது கடிதம்போட; ரெயில்வண்டி இருக்கிறது வந்து பார்க்க. அப்பா அம்மா தடை சொல்லப்போகிறார்களா?” என்று அவள் எனக்குத் தைரியம் சொன் னாள். தன் ஹிருதயத்துக்குள் அடித்துக்கொண்ட அடிப்பை அவள் வெளியிடவில்லை.
“அம்மாமி, அவள் கல்யாணத்துக்கு நான் அவ சியம் வருவேன்; பத்திரிகை அனுப்ப மறந்துவிடாதே யுங்கள்” என்று குஞ்சரி என் அம்மாவைப் பார்த் துச் சொன்னாள். அவள் தன் துக்கத்தை அமிழ்த் திக்கொண்டு மேலே விளையாட்டுப்பேச்சு வேறு பேசத் தொடங்கினாள்.
“குஞ்சரி, என்னை மறந்துவிடுவாயா? கடிதம் போடாமல் இருந்துவிடுவாயா?”
மேலே என்னால் பேசமுடியவில்லை. தொண்டை அடைத்துக்கொண்டது.
“வாரத்திற்கு ஒரு கடிதம் போடுகிறேன்” என்று அவள் சொன்னாள். “தினமும் ஒன்று போடுகிறேன் என்று சொல்” என்றாள் என் தாய்.
“இல்லை அம்மாமி; வாரம் ஒரு கடிதம் போடு வதே கஷ்டம். அதன்படியே நடந்தால் போதாதா?” என்று அவள் கேட்டாள். என்னைக் காட்டிலும் அவள் உலக அறிவு அதிகம் வாய்ந்தவள்.
“நான்… நான்…” விம்மினேன்; ‘போய் வருகிறேன்’ என்று சொல்ல வாய் வரவில்லை. சிநேக பாசம் மிகவும் கொடிது. அதைப்போல் நல்லதும் இல்லை; பிரிவு நேரும்போது அதைப்போலத் துன்பங் தருவதும் வேறு இல்லை.
வேலூரிலிருந்து காக்கிநாடாவுக்கு வந்தபிறகு ஒரு மாதம் வரையில் நான் அழுதவண்ணமாகவே இருந்தேன். அங்கே எனக்குக் குஞ்சரியைப்போல உற்ற தோழி யார் இருக்கப்போகிறார்கள்? எல்லோ ரும் முரட்டுத் தெலுங்கப் பெண்கள். அவர்கள் பாஷையில் ஓர் அக்ஷரம் எனக்குத் தெரியாது.திவ்ய மான பூஞ்சோலையை விட்டுவிட்டு ஒரு பாலைவனத் துக்கு வந்ததுபோல் இருந்தது எனக்கு.
வாரத்துக்கு ஒரு கடிதம் தவறாமல் குஞ்சரியி னிடமிருந்து வந்து கொண்டிருந்தது. வேலூரி லிருந்து அவள் தகப்பனாரை நாமக்கல்லுக்கு மாற்றி யிருப்பதாக எழுதியிருந்தாள். வாரத்துக்கு ஒரு கடிதமாக இருந்தாலும் அழகாகவும், அன்பு ஒழுக வும் இருக்கும். அந்த வாரத்தில் நடந்த முக்கியமான சமாசாரங்களையெல்லாம் கோவைப்படுத்தி எழுதுவாள்; தன்னுடைய புதிய தோழிகளைப்பற்றி எழுதுவாள்; தான் படித்த புஸ்தகங்களைப்பற்றி எழுதுவாள்; நாங்கள் ஒன்றாக இருந்த காலத்தில் நடந்தவற்றைப்பற்றி எழுதுவாள். அவைகளை வாசிக்கும்போது எனக்குப் பழைய ஞாபகங்கள் வந்துவிடும். அவைகளிலே புதைந்து கிடப்பேன். சந்தோஷத்தில் நீந்துவேன். திடீரென்று தெலுங்கு. தேசத்தில் காக்கிநாடாவில் இருப்பது ஞாபகத்துக்கு வரவே துக்கம் வந்துவிடும்; கண்கள் கலங்கும்.
நான் சில தடவை தினத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன். விஷயம் ஒன்றும் இராது. சில சமயங் களில் சேர்ந்தாற்போல் பத்துநாள் கடிதம் எழு தாமலே இருந்துவிடுவேன். இந்தமாதிரி நான் ஒழுங் கீனமாக இருந்தும் அவள் கடிதம்மாத்திரம் சூரிய பகவான்மாதிரி குறித்த காலத்தில் வந்துகொண்டே இருந்தது.
திங்கட்கிழமையன்று தபால்காரனை ஆவலோடு எதிர்பார்த்தேன். ஒவ்வொரு திங்கட்கிழமையும். தவறாமல் எனக்கு வரும் கடிதம் அன்று வரவில்லை. ‘சரி, நாம் செய்வதை அவள் செய்ய ஆரம்பித்திருக். கிறாள். இது நமக்குத் தண்டனைபோல் இருக்கிறது என்று எண்ணினேன். மறு நாள் வருமென்று நம்பி னேன்; வரவில்லை. அடுத்த நாள் எதிர்பார்த்தேன்;
வரவேயில்லை. உடனே மிகவும் கோபமாக அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். எவ்வளவோ முறை நான் சரியானபடி கடிதம் எழுதாமல் சோம்பேறியாக இருந்ததெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அவள் ஒருதடவை தவறினதற்கு எனக்கு அவ்வளவு கோபம் வந்துவிட்டது.
பதிலே வரவில்லை. மறுபடியும் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. ஒரு பெரிய இடி விழுந்த மாதிரி இருந்தது. ‘குஞ்சரி ஏன் எழுதவில்லை? அவள் எழுதாமல் இருக்கமாட்டாளே! ஏதாவது உடம்பு அசௌக்கியமோ? இல்லை. அவள்…’ இப்படி நினைக்கும்போது என் அடிவயிறு பகீரென்றது. அவள் ஊரைவிட்டுப் பிரிந்தாளாயினும் அவளுடைய கடிதங்களாலும், மீட்டும் பார்ப்போமென்ற எண் ணத்தாலும் ஆறுதலடைந்திருந்தேன். இப்பொழுது பகவான் வேறுவிதமாகச் செய்திருந்தால்? என்னுடைய குஞ்சரி இந்த உலகத்தை விட்டுப் போயிருந் தால்…? எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. துக்கம் பொங்கியது. அழுதேன். என் தாய் வந்து சமாதானம் சொன்னாள்; “சீ பைத்தியமே! அவள் சௌக்கியமாக இருப்பாள். கல்யாணத்துக்கு ஏற்பாடாகியிருக்கும். அவளுக்கு வேலை அதிகமாக இருக்கலாம்” என்றாள்.
நின்றது நின்றதுதான்; அப்பால் எனக்குக் கடிதமே வரவில்லை. நாமக்கல் எங்கே?காக்கிநாடா எங்கே? யார் சிரத்தை எடுத்துக்கொண்டு அவளைப் பற்றி நமக்கு வந்து சொல்வார்கள்? குஞ்சரியை இழந்தோம் என்றே தீர்மானித்துக்கொண்டேன். ஒரு வருஷத்தில் காக்கிநாடாவிலிருந்து மங்களூருக்கு என் தகப்பனாரை மாற்றிவிட்டார்கள்.
2
எனக்குக் கல்யாணம் ஆயிற்று. வட ஆர்க்காடு ஜில்லாவில் கடுகனூரில் மிராசுதார் ஒருவருடைய பிள்ளைக்கு நான் வாழ்க்கைப் பட்டேன். என கணவர் ஆங்கிலம் படித்தவர். அவருக்குத் தகப்பனா ரும் இல்லை; தாயாரும் இல்லை. தமையனார் ஒருவர் இருந்தார். அவரே குடும்பத்துக்குத் தலைவர். அந்த ஊரில் அவர்களுடைய குடும்பம் நிறைந்த செல்வாக் குடையதாக இருந்தது. என் மைத்துனருடைய மனைவி, தங்கம்மாள். அவளுடைய அதிகாரந்தான் வீட்டில் நடந்துவந்தது.என்கணவர்கூட அவளுடைய ஆக்ஞைகளுக்குப் பயப்படுவார். என் மைத்துனரோ சாது; அவர் உண்டு; காணிகள் உண்டு.
நான் அந்த வீட்டிற் புகுந்தது முதல் என் னுடைய வாழ்க்கையும் இயல்புகளும் மாறிவிட்டன. என் கணவர் மானியென்பதையும் குடும்பத்திலுள்ள ஒற்றுமையைக் கலைக்காமல் இருக்கவேண்டு மென்ற எண்ணமுடையவரென்பதையும் உணர்ந்து கொண் டேன். அவர் தம் தமையனாருடன் விவசாயமே செய்து வந்தார்.
என் ஓரகத்தியின் கொடுமை பொறுக்கமுடிய வில்லை. வீசைக் கணக்காக நகைகளைச் சுமப்பதைத் தவிர அவளுக்கு வேறு சிறப்பொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. குழந்தை குட்டிகளோ இல்லை. எப்பொழுதாவது வேறு ஊரிலிருந்து தன் தமையனார் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வரு வாள். இரண்டு மூன்று மாதம் அக்குழந்தைகள் இருக்கும். அவர்களுக்கு ஆசார உபசாரங்கள் நடைபெறும்.
நான் புஸ்தகம் படிப்பதைக் கண்டால் அவ ளுக்கு ஆவதில்லை. கோணல் வகிடு ஒரு நாள் எடுத்துக் கொண்டதற்காக அவள் ஒரு மாதம் என்னைக் கடிந்துகொண்டதை இப்பொழுது நினைத் தாலும் அழுகை வருகிறது. ஒரு சமயம் என்னுடைய தாய்க்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு என் விலாஸமிட்டுப் பதில் வந்தது. ‘கடிதப் போக்கு வரத்து வேறேயா?’ என்று அவள் குதித்தது ஈசுவர னுக்குத்தான் வெளிச்சம். இப்படி, சாதாரண விஷயங்களையெல்லாம்
பிரமாதப்படுத்தி என்னை அழவைத்த அவளுக்குக் கடவுள் எப்பொழுதாவது இரக்க உணர்ச்சியைத் தரமாட்டாரா என்று நான் ஏங்கினேன்.
என்னுடைய வாழ்க்கையில் நான் பல வகை யான ஏமாற்றங்களை அடைந்துவிட்டேனென்று எனக்குத் தோன்றியது. என் அருமைச் சிநேகிதி குஞ்சரியை இழந் அவள் இறந்து போயிருந் தால், அது எவ்வளவோ மேலென்று நினைத்தேன். இந்தக் கொடூர சித்தமுடைய பெண்பேயைப் போன்றவர்களிடம் சிக்கிக்கொண்டு அவஸ்தைப் படுவதிலும் உலகத்திலிருந்து விடுதலை பெறுவது சிறந்ததல்லவா? சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமென்றுகூட என் அவசர புத்தியில் தோன்றும். ஆனால் என் கணவருடைய மாசு மறுவற்ற காதல், தூய உள்ளத்தோடு அவர் இரங்கிக் கூறும் சமாதான வார்த்தைகள் இவை எனக்குப் பாலைவனத்தில் தனிமரம் போல் உதவின.
என் வேண்டுகோள் அதுவல்ல. நான் யாருக் கும் தீங்கு நினைக்கமாட்டேன். அவள் மனம் மாறி என்பால் அன்பு கொள்ளவேண்டுமென்பதே என் பிரார்த்தனை. ஆனாலும் உலகம் அதை நம்புமா? “பாவம்! ஒன்றும் அறியாத பெண்ணைப் படாத பாடு படுத்தினாள்; தொலைந்தாள்” என்று நாக்கில் நரம் பில்லாதவர்கள் சொன்னார்கள். அதற்கு நானா பொறுப்பாளி? தங்கம்மாள் தன்னுடைய அதி காரத்தையும், ஒரு மணங்கு தங்க நகைகளையும், இருபது பட்டுப் புடைவைகளையும், பாத்திரங் களையும், பண்டங்களையும் விட்டுவிட்டு மறு உலகத் திற்குப் போய்விட்டாள்; நரகத்திற்கென்று ஊரார் சொன்னார்கள். நான் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
“நீ செய்த பூஜாபலம்; உன் பிரார்த்தனை நிறை வேறியது. அவள் போய்விட்டாள். இனிமேல் நீதான் வீட்டுக்கு எஜமானி” என்று பக்கத்துவீட்டுப் பாட்டி சொன்னாள்.
“இல்லை,பாட்டி; நான் அப்படி நினைக்கவே இல்லை. நீங்கள் அப்படிச் சொல்லாதீர்கள். அவள் இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்” என்று நான் பதில் சொன்னேன்.
என் மைத்துனருடைய உண்மையான இயல்பு இப்பொழுதுதான் வெளிப்பட்டது. அவருடைய குழந்தை போன்ற ஸ்வபாவம் தங்கம்மாளுடைய சார்பினால் கலங்கியிருந்தது. இப்போது அது தெளி வாயிற்று. உண்மையிலே வீட்டின் பொறுப்பு முழு தும் என்னிடத்திலே விட்டுவிட்டார். என் கண வரும் உத்ஸாகம் கொண்டார். குடும்ப பாரத்தை வகிக்கத்தக்க சாமர்த்தியம் என்னிடம் இல்லாவிட் டாலும் ஒருவாறு நடத்தி வரலாமென்ற தைரியம் மாத்திரம் இருந்தது.
என் மைத்துனருக்குத் தங்கம்மாளைச் சிறு வயதிலேயே கல்யாணம் செய்துவிட்டார்கள். தாய்க் குத் தலைப்பிள்ளையாகையால் அவர் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு பார்க்கவேண்டுமென்று அவருடைய பாட்டி சொன்னாளாம். அவருக்குக் கால்கட்டுப் போட்டுவிட்டால்தான் தன் நெஞ்சு வேகுமென்று அவள் அடிக்கடி சொல்லி முறையிட்டாளாம். என் மாமனார் தம் தாயினுடைய கண்களுக்குச் சந்தோஷம் உண்டாக்குவதற்காகவும், அவள் இறந்துபோனால் தாம் போடும் நெருப்பு அவளது நெஞ்சோடு போராடித் தோல்வியுறாமல் இருப்பதற்காகவும் தம் மூத்த குமாரனுக்குத் தங்கம்மாளைத் தேடிப் பிடித் துக் கல்யாணம் செய்தாராம். இரண்டு பேருக்கும் ஆறே மாதம் வித்தியாசமாம். ஈடு சரியில்லை, பெண் பெரியவள்’ என்று சிலர் தடுத்தார்களாம். “எல்லாம் வயசுவந்தால் ஆண்பிள்ளைக்குப் பெண் பிள்ளை அடக்கந்தான்” என்று பாட்டி சொல்லி விட்டாளாம்.
இப்போது என் மைத்துனருக்கு வயச் முப்பத்திரண்டு. அவருக்கு மற்றொரு கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்பது பெரியவர்கள் இஷ்டம். தங்கம்மாளுடைய குணவிசேஷங்களால் பந்துக்களுடைய போக்குவரத்து எங்கள் வீட்டில் அதிகம் இராமல் இருந்தது. பலர் என் மைத்துனர் பொல்லாதவரென்று எண்ணினார்கள். எப்படியோ பரமஸாதுவான அவருக்குக் கெட்டபெயரை ஏற் படுத்திவிட்டுத் தங்கம்மாள் பரலோகம் போய் விட்டாள். பந்துக்கள் பெண் வைத்திருந்தும் கொடுக்கவில்லை.
எங்கள் புக்ககத்து ஒன்று விட்ட மாமாவுக்கு மைத்துனர் ஒருவர், எங்கே இருந்தாவது ஒரு பெண்ணைப் பார்த்து என் மைத்துனருக்குக் கட்டி வைத்துவிட்டுத்தான் மறு காரியம் பார்ப்பதென்று கங்கணங்கட்டிக்கொண்டார். ஒரு பெண்ணைத் தேடிப் பிடித்து நிச்சயமும் செய்துவிட்டார். பெண்ணை நாங்கள் பார்க்கவில்லை. மைத்துனர் மாத் திரம் போய்ப் பார்த்து வந்தார். அவசரம் அவசர மாகத் திருப்பதியில் கல்யாணம் ஆயிற்று. அந்தக் கல்யாணத்திற்குக்கூட நாங்கள் போகவில்லை.காமா சோமாவென்று மூன்றாம் பேருக்குத் தெரியாமல் நடத்திவிட்டு வருவதாகச் சொன்னார்கள். பெண் பெரியவளாகி நான்கு வருஷங்கள் ஆகிவிட்டன வாம். இது பல பேருக்குத் தெரிந்த ரகஸ்யம். பரம ஏழையாம். தாய் தகப்பனார் இல்லையாம். அதனால் ஏதோ பேருக்குக் கல்யாணமென்று நடத்திவிட்டுப் பெண்ணைக் கையோடே அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்.
எல்லாம் எனக்கு நாடகம் போல இருந்தது. என்னுடைய மைத்துனருக்குக் கல்யாணம் நடக்கிற தென்பதனால் என் மனத்தில் சந்தோஷம் உண்டாக வில்லை. அந்தப் பெண்ணின் நிலையைப்பற்றி நான் நினைத்து வருந்தினேன். பெண்களின் நிலை எவ்வளவு கேவலமாக இருக்கிறதென்பதை எண்ணி எண்ணி உருகினேன். கல்யாணமென்பதன் தத்துவம் எவ்வளவு தூரம் மனிதர் கருத்திலிருந்து விலகி விட்டதென்றும், இல்லறமென்பது உத்தியோகசாலையைப்போல், ஒருவர் போனால் ஒருவர் என்ற ரீதியில் நடக்கிறதென்றும் நினைக்கும்போது இந்த விசித்திர உலகத்தின் போக்கே எனக்கு விளங்கவில்லை.
3
“அடியே, குஞ்சரியா நீ! வாஸ்தவமாக என் அருமைக் குஞ்சரியா! என் உயிர்த்தோழி குஞ்சரியா? வேலூரில் இருந்தாயே, அந்தக் குஞ்சரியா! இவ் வளவு நாள் எந்த உலகத்தில் இருந்தாய்? என்னை இப்படி அநியாயமாக மறந்திருக்கலாமா?” என்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போனேன். ஆச் சரியம், சந்தோஷம், துக்கம் எல்லாம் சேர்ந்து ஒன்றையொன்று மீறி வந்தன.
அவள் பழையகாலத்துப் பொறுமையோடே தான் பேசினாள். ஆனாலும் கண்களில் நீரருவி எழுந்தது; இடையிடையே அதில் ஒரு பிரகாசம் தோன்றியது. கப்பல் உடைந்ததனால் கடலில் வீழ்ந்த ஒருவன் நெடுங்காலம் கடலின் பேரலை களோடு போராடி உள்ளமும் உடலும் ஓய்ந்துபோன போது ஓர் ஓடம் வந்து மீட்டால் எப்படி இருக் கும்? அப்படி இருந்தது அவளுக்கு. அவள் கதையை அவளே சொல்வாள்; கேளுங்கள்:-
உனக்கு நான் கடைசிக் கடிதத்தை ஒரு ஞாயிற்றுக் கிழமை எழுதினேன். மறு வெள்ளிக்கிழமையே என் வாழ்வு மாறிவிட்டது; எங்கள் குடும்பக்கப்பல் சுக்கு நூறாகிவிட்டது. நாமக்கல்லில் திடீரென்று உண்டான காலராவில் என்னுடைய தாய் வியாழக்கிழமை யமன் கையில் என் தகப்பனார் மறுநாள் அவளைத் தொடர்ந்தார். என் தம்பியும் நானுமே மிஞ்சினோம். தந்தி பறந்தது. என்னுடைய மாமா, ஓர் ஏழைக்கர்ணம். அவர் வந்தார். எங்களுக்கு வேறு துணையில்லை. என் தகப்பனார் வெறும் படாடோபத்தினால் தம் வரும்படியெல்லாம் செலவழித்துவிட்டார். கடன் வேறு வாங்கியிருந்தார். துரைத்தனத்தார் கொடுத்த பணத்தைக்கொண்டு அந்தக் கடனுக்கு ஈடு செய்தோம்.
வறுமை, கஷ்டம் ஏதும் அறியாத நிலை மாறி யது. உள்ளங்கை வெள்ளையாகவும் மிருதுவாகவும் இருக்கிறது. அதைத் திடீரென்று மறித்துப் பார்த் தால் எலும்பும் நரம்பும் உள்ள புறங்கை தோன்று கிறது. அகங்கை புறங்கை ஆனாற்போல் என் வாழ்வு திடீரென்று மாறிவிட்டது.பாவம்! எங்கள் மாமாவுக்கு ஆறு பெண்கள். நான்கு பெண்களுக் குக் கல்யாணம் செய்வதற்குள் அவர் ஆண்டியாகி விட்டார். போதாக்குறைக்கு நாங்கள் வேறு பாரமா கப் போய்ச் சேர்ந்தோம்.
தாய் தந்தை இருவரையும் திடீரென்று இழந்த எனக்கு இந்த உலக ஞாபகமே இல்லை. திக்பிரமை பிடித்துக் கிடந்தேன். இனிமேல் நாம் ஒரு நடைப் பிணந்தான்’ என்று நிச்சயித்துக்கொண்டேன். உனக்குக் கடிதம் எழுதவேண்டுமென்ற ஞாபகமே வரவில்லை. பைத்தியமாகவே இருந்தாலும் தேவலை; அதுவும் இல்லை. தெளிவான மனநிலையும் இல்லை. வயசுமட்டும் ஏறிக்கொண்டே வந்தது. ஒருநாள் ஏதோ நினைத்துக்கொண்டேன். காக்கிநாடா விலாஸ மிட்டு உனக்குக் கடிதம் எழுதினேன். அது எனக்கே திரும்பி வந்துவிட்டது. என்னுடைய துரதிருஷ் டம் வரவர அபிவிருத்தி அடைந்ததென்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.
என்னுடைய தேகம் எனக்கு அடங்காமலே வளர்ந்தது. நானும் இயற்கையிலே ஓர் அங்கம் அல்லவா? ‘வளர்ச்சியில் எனக்கு விருப்பமில்லை அதனால் இயற்கை தன் தொழிலினின்றும் சோம்பி யிருக்குமா? என் மனக்கலக்கத்தோடு, நான் பெரிய வளாகிவிட்டேன் என்ற துக்கமும் சேர்ந்துகொண்டது. கிராமத்து ஜனங்கள் வம்பளக்க ஆரம்பித் தார்கள். என்னால் என் அருமை மாமாவுக்குப் பல வகையிலும் துன்பங்கள் ஏற்பட்டன. எப்படி யாவது ஒரு பிராமணனுக்குக் கட்டிக் கொடுத்து விடவேண்டுமென்று படாத பாடு பட்டார். பணம் இல்லாமல் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள இந்தத் தமிழ்நாட்டில் யாருக்குத் தைரியம் இருக் கிறது? அகம்பாவமும் போலிவீரமும் பேச்சளவில் தியாகமும் உடைய ஜனங்களின் கூட்டத்திலிருந்து அவஸ்தைப் படுவதைவிட என் அருமைப் பெற்றோர் சென்ற வழியையே நானும் பின்பற்றிவிடலாமென்று எண்ணினேன்; ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது.
‘இன்னும் என்ன என்ன துன்பத்துக்கு ஆளாக வேண்டுமோ அவைகளையெல்லாம் பட்டுத்தானே சாகவேண்டும்?’ என்ற வெறுப்போடு காலந்தள்ளினேன்.
திடீரென்று ஒருவர் வந்தார். கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் நடந்தன.”இரண்டாந் தாரமாகப் போவது உனக்கு ஸம்மதமா?” என்று என் அருமை மாமா ஆதரவோடு கேட்டார். கணவன், கல்யா ‘ணம், வாழ்க்கை, சுகம் என்பவை என்னளவில் இல்லையென்றே நான் நிச்சயம் செய்துகொண்டிருந் தேன். என் மாமாவுக்குப் பாரமாக இருப்பதாவது நீங்கட்டுமென்ற நினைவு முன்வந்தது. ஒப்புக் கொண்டேன்.
அம்மணி! என் கண்மணி! நம்பிக்கை இழந்த என் வாழ்க்கையில் நீ மறுபடியும் துணையாகத் தோன்றிவிட்டாய். நீ எனக்குப் புருஷனாக இருந்தால் வாழ்வு முழுவதும் பிரியாமல் இருக்கலாமென்று நான் அன்றொரு நாள் சொன்னது ஞாபகம் வருகிறது. நீ புருஷனாகாவிட்டாலும் வாழ்வு முழுவதும் சேர்ந்து இருக்கும்படி பகவான் அநுக்கிரகித்தாரே, அதுவே போதும்!
மேலே அவளால் பேச முடியவில்லை. கோ வென்று அழுதாள்.
“அடி பைத்தியம்! அழாதே. என் மைத்துனர் உன்னைத் தங்கமாக வைத்துக்கொள்வார். அவர் பரம ஸாது. இந்த வீட்டின் எஜமானர் அவர். அவருக்கு மனைவியாக வாய்த்த நீயே இந்த வீட்டுக்கு எஜமானி. நான் உன் வேலைக்காரி; உயிர்த்தோழியாகவும் இருப்பேன். இந்தா! சாவி!”
இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டோம். எங்கள் வாழ்வு மறுபடியும் மலர்ச்சி பெறுவதற்குரிய சுபசகுனம்போலக் கோயிலில் சாயங்கால பூஜையின் மணியொலி கேட்டது.
– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.