மறுபடியும் மகாத்மா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2020
பார்வையிட்டோர்: 4,099 
 

அந்திக் கன்னி மஞ்சள் பூசிப் பொட்டிட்டுப் புன்னகை செய்து கொண்டிருக்கின்றாள் !.

விடிந்தால், மகாத்மா காந்தி பிறந்த நாள்!

‘காந்தி மகாத்மா செத்து விட்டாரென்று எந்த பயல் சொன்னவன்?

சேரிச் சாம்பான் தனக்குத் தானாகவும், தன்னின் தானாகவும் சிரித்துக்கொண்டார். சிரிப்பின் அலைகளிலே, மாறிய காலத்தின் – ஊகூம், மாற்றப்பட்ட காலத்தின் அதிசயம் சலசலக்கிறது!

ஆவணத்தாங்கோட்டைத் தேவர் குடியிருப்பிலேருந்து ஊருக்கு ஒசந்த பெரும்புள்ளியான கண்டிச்சீமைக் கங்காணி ஐயா இங்கிட்டு ரேக்ளாவிலே வந்திருந்தாக; வெத்திலை பாக்குப் போட்டுக்கிட்டாக ; காந்தி விழா கைச்செலவுக்கு நூத்தியொரு ரூவா அசல் சலவைத் தாளவே தந்தாங்க. பொறக்குமாசத் தீவாளி விருந்துக்கு என்னைய பெரிய மனசு வச்சு அழைச்சிருக்காங்க கும்பிடு கொடுத்தாக கும்பிடு வாங்கிக்கிட்டாக; அப்பாலேதான். புறப்பட்டுப் போனாங்க!…’

இம்மாங்கொத்த நிலைமையிலே, காந்தி செத்துப் பூட்டார்னு பல்லு மேலே பல்லுப் போட்ட எந்தப் புறக்குடிப் பயமவனாச்சும் செப்ப வாய்க்குமா, என்ன? – நெஞ்சின் ஈரம் கண்களில் தெரிந்தது. எட்டாக் கையிலே கிடந்த வெற்றிலைக்குட்டானை எட்டி எடுத்து விட்டார். அதிலே கூட, அவருக்கு ஒரு பெருமை; பெருமிதந்தான்!

என்னைத் தொட்டாக்கத் தீட்டு ஒட்டிக்கும்னு, நல்ல காலம் இந்த வெத்திலைங்க மாஞ்சுமடியல்லே….ப் பூவே! – இந்த வெத்திலைங்க என்ன பெரிய ஒசத்தியாக்கும்? – எட்டிப் பிடிக்க வாய்க்காத அம்புட்டு ஒசரத்திலே குந்தியிருக்கக் கூடிய கங்காணி ஐயாவே என்னோட குடிசையைத் தேடி வந்திட்டாகளே? இப்படிப்பட்ட அதிசயத் திருக்கூத்துக்கெல்லாம் யாராம் காரணம்? காந்திதான். ஆமா! எங்க காந்திச் சாமியேதான் காரணமாக்கும் ஐயையோ.. ! எங்க காந்தித் தெய்வத்தை விதியாட்டம், சொல்லாமல் கொள்ளாமல் அவசரப்பட்டுச் சுட்டுக் கொன்னுப்பூட்டானே எவனோ ஒரு பாவி?… விம்மல் வெடித்தது. நெஞ்சும் வெடித்துவிடுமோ?

காக்கை சுத்துகிறது. குருவியும் தான்! ஏக்கப் பெருமூச்சோடு ஏறிட்டுப் பார்த்தார் சாம்பான்.

எட்டடிக் குச்சி, மண் சுவரின் சனி முடுக்கில், கைக்கு எட்டும்படியாக அண்ணல் பொக்கை வாய்ப் புன்னகையைச் சிந்திக் கொண்டிருக்கிறார்

காந்திஜியைப் போன்று, சாம்பானுக்குச் சிரிக்கத் தெரியவில்லை. காலம் சடுகுடு ஆட, அந்தக் காலத்தின் மணல் வெளியில் பதிந்திட்ட அடிச்சுவடுகளென நினைவுகள் உப்புக்கோடு மறித்தனம்; அந்த ஆட்டத்தில் கங்காணியும் சேர்த்தி!

‘கடவுளே, காந்தி மகாத்மாவே! எங்களையும் மனுச சென்மங்களாய் மதிச்சு, எங்களுக்கும் ஒரு விடிமோட்சம் ஏற்படுத்துறதுக்காக நீங்க உங்க காலத்திலே எம்புட்டோ பாடுபட்டீங்க; நீங்க செஞ்ச போதனைக்கு உண்டான பலனை ஓரளவுக்கு நீங்களே கண்ணுக்குக் கண்ணாய்க் காணவும் வாய்ச்சதென்னமோ பொய் இல்லேதான்; ஆனாலும், எங்களுக்குப் பரிபூர்ண விடுதலை கிடைச்சிட்டுதுன்னு எங்களாலே இன்னமும் கூட பரிபூர்ணமாய் நம்ப ஏலலோ!

கங்காணி மாதிரி, ஆயிரத்திலே ஒருத்தர் அத்தி பூத்தாப்பிலே எங்களையும் ஒரு பொருட்டாய் மதிக்கத் தலைப்பட்டிருக்காங்க, இந்த நடப்பிலேகூட, உண்மை எந்த மட்டுக்கு ஒளிஞ்சுக்கிணு இருக்குது என்கிறதும் எங்களுக்கு மட்டுப்படல்லே. ஏன்னா, இந்த லோகத்திலே இப்பைக்கு வேசம் போடுறவங்கதான் மிஞ்சிக்கிட்டு வாராங்க! இந்தத் துப்பு ஒங்களுக்குப் புரியுமுங்க. நீங்க ஓசந்தவங்க; ஆனதாலேதான் ஈனச் செம்மங்களான எங்களையும் ஒசத்தப் பாடுபட்டீங்க.

நீங்க கண்ட கனாவோட நல்லது – கெட்டதைத் துல்லியமாய்ப் புரிஞ்சுக்கிடறதுக்கு ஏத்த சமயம் இதுதானுங்களே சாமி…? ஆனா, நீங்க எங்களையெல்லாம் தவிக்கவிட்டுப் போட்டுப் போயிட்டீங்களே? – பாளத்த பாவி ஒருத்தன் கண்ணை மூடிக்கிட்டு, ஒங்களைச் சுட்டுப்புட்டானே என்கிறதுக்காவ, நீங்களும் கண்ணை மூடிக்கிட வேணுங்களா, சாமியே?… ஐயையோ, தெய்வமே, எங்க தெய்வமே!

கிழவாடி இன்னமும் மதுரைவீரன் சிலையேதான்.

யாரோ கூப்பிட்டார்கள்.

ஊகூம், மூச்!

பணம் இருந்தும் மனம் இல்லாத – அதாவது, சமுதாய நலப் பற்றுதல் இல்லாத சமூகத் துரோகியை நினைவுகூர்ந்து நினைவூட்டிப் பிரகடனப்படுத்துகிற பாவனையில், மிக மிகப் பலவீனமாக எரிந்து கொண்டிருக்கிறது மண்ணெண்ணெய்ச் சிம்னி விளக்கு புகையிலை எச்சில் குமட்டிக் கொண்டு வரவே, சாம்பானுக்குச் சுயபிரக்கினையும் வந்தது. தலையைத் தாழ்த்தியவராகப் பத்திரமாகவே வெளியே வாசலுக்கு வந்தார். ஆத்தாடி… நல்ல மூச்சு வந்தது. வாசல்
கொட்டகையில் எத்தனை நெற்குதிர்களாம்!

“எம்புட்டு வாட்டி அலட்டுறதாம்?” என்று கோபப்படுகிற பாவனை செய்தபடி, வந்து நின்றாள் கிழவி.

“என்னையா கூப்பிட்டே, புள்ளே?

எனக்கு ஓடமை கொண்ட ஓங்களைக் கூப்பிடாம் , மறுகா யாரை கூப்பிடுவேனாம்?”

வாழ்க்கைத் தடத்தில் கிட்டத்தட்ட எழுபத்தேழு தொலைக் கற்களைத் தாண்டிவிட்ட பெரியவருக்கு இப்போதுதான் சிரிக்க வேண்டும் போலத் தோன்றியிருக்கலாம், பல் போனாலும், சொல் போகாத மானி மானஸ்தர். “எம்வூட்டு ஆசைப் பெண்டாட்டிக்குக் கோவத்தைப் பாருங்களேன், கோவத்தை பொக்கை வாயில் புன்னகை பூவாக மலர்கிறது; மணக்கிறது.

ஏண்டி அங்காளம்மைக் குட்டி! கஞ்சிப் பொழுதுக்குக் குடிசையிலேருந்து பறிஞ்ச, அமாசை இருட்டுப் பறிஞ்சடியும் வந்திருக்கீயே? என்னாவாம் சங்கதி? மூத்த பயலையும் இன்னம் கண்ணுப்புறத்திலே காண வாய்க்கல்லியே? போன எடம், வந்த எடத்திலே தட்டுப்பட்டானா?”

தன்னுடைய ரதிக்கிளியான கிழவியை விழுங்கி விடுகிற மாதிரி பார்த்தார் அவர் கிழலி என்றால், வெட்கமான வெட்கம் வரக்கூடாதென்று சட்டமா, என்ன?
அந்த நாளிலே, அழகுக் கலாபமயிலான அங்காளம்மையின் வெட்கத்தைக் கண்டும், ரசித்தும் வெட்கப்படாமல் அவளைக் கட்டிக்கொண்டவர் இந்த சாம்பான் என்பது சிதம்பர ரகசியம்!…..

“மச்சான் காரவுங்களே!”

“இந்தாலே பாருங்க, ஓங்களைத்தானுங்களே?”

தொட்டுணர்வின் இனிமையான சுகத்தில் முதியவர் இன்பமான சொர்க்கத்தை உணர்ந்திருக்க வேண்டும். சொப்பனம் கண்டு விழிப்பவர் போன்று, விழிகளை மூடி மூடித் திறந்தார்.

“ஏ… புள்ள! ஒனக்குச் சங்கதி தெரியுமாங்காட்டி?.. ஊர் நாட்டுக்கு ஒசந்த கண்டிச்சீமைக் கங்காணி முத்து வீரப்பத் தேவர் ஐயா நம்ம குடிசைக்குத் தேடி வந்து, நாளைக்குக் காலம்பற நடக்கப்போற காந்தி செயந்திச் செலவுக்கு நூத்தியொரு ரூவா தந்தாராக்கும்! ஆமாடி, அங்காளம்மே! இது நம்ம தாராடிச்சாமி சத்தியமாய் மெய்யான தாக்கலாக்கும் என்றார் சாம்பான். வாயெல்லாம் பல் இல்லை, சிரிப்பு; அடங்காச் சிரிப்பு; அது ஆனந்தச் சிரிப்பு

“காந்தியைக் கொண்டாடுறதுக்குக் கங்காணி எசமானரு நூத்தியொரு ரூவாய் குடுத்தது, மெய்யாலுக்குமே நூத்திலே யொரு சேதிதானுங்க, மச்சானே?”

“இந்த நடப்புத் தாக்கல் நாளைக்கு விடிஞ்சதும் விடியாததுமாய் ஊர் முச்சூடும் பரவி, கங்காணியைப் பெருமையோட உச்சாணிக் ஆட்சயாட்டி
கொம்பிலே குந்தவச்சுப் புடாதுங்களா? சோழியன் குடுமி சும்மாவே ஆடாதுங்க இப்பிடி நூத்தியொரு ரூவா கொடுத்ததாலே, ஊர் மத்தியிலே நாலு பேர் நல்லதனமாய்த் தம்மைப் பத்திப் பெருமையோடப் பேசுவாங்க என்கிற நப்பாசை கங்காணிக்கு மட்டும் இருக்காதா என்ன? அவரும் மனுஷப் பிறப்புத்தானுங்களே? சுயநலப் பித்து அவருக்கு மட்டும் இருக்காதுங்களா, மச்சானே? …. அது போகட்டும்! பெரிய எடத்து விசயத்திலேருந்து நம்மோட சின்ன எடத்து விசயத்துக்கு வரலாமுங்க…”

“என்னா”

“மூத்தவன் வீரமணி எங்கண்ணுக்குத் தட்டுப்படல்லே; ஆனா, அவனோட கண்ணாலம் காட்சி சம்பந்தப்பட்ட வங்க தட்டுப்பட்டாங்க; சங்கதியை நேரு சீராய் முடிச்சுப்புட்டேனுங்க சாகுபடி செய்கிறதுக்குக் கூட கோயம்புத்தூர்லே ஒரு படிப்பைப் படிச்சுப் பட்டத்தையும் வாங்கிக்கிட்ட நம்ம ராசாப் பயலுக்குப் பொண்ணு குடுக்கிறதுக்கு எங்க அண்ணாச்சி எம்புட்டோ குடுத்து வைச்சிருக்க வேணுமுங்க!”

கிழவிக்கு இருமல் வந்தது.

இந்தக் கிழவர் மறுபடி கனவு காண ஆரம்பித்துவிட்டாரோ?

“மச்சானே!”

“…………”

“ஏங்க, மச்சான்காரவுகளே! நானு பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்குப் பேசாமல் இருக்கீகளே? ஏதுனாச்சும் கனா கினா காணுறீங்களா?”

ஆமா , புள்ளே, ஆமா… நான் கனவுதான் காணுறேன் மனுசங்களுக்கு மட்டுமில்லே, தெய்வத்துக்கும் நாயமான ஒரு கனவைத்தான் காணுறேன்! ஆனா, நீ கனா காணுறதாட்டம், படிச்சுப் பட்டம் வாங்கிக்கிட்ட என்னோட செல்வத்தை ஒன்னோட படிக்காத அண்ணன் மவளுக்குக் கட்டிக் கொடுக்கவே மாட்டேன்!”

“என்னாங்கிறேன், இப்படிச் சொல்லிப் போட்டீங்க?”

“பின்னே எப்படிச் சொல்லிப் போடணுமாம்?”

“நையாண்டி நைச்சிகமா பண்ணுறீங்க, பண்ணுங்க, பண்ணுங்க!… என்ன செய்யுறது? ஒங்க காட்டிலே மழை பெய்யுதே? அது சரி, நம்ம வீரமணியை எங்க பவளத்துக்கு கண்ணாலம் பண்ணிலைக்காமல், பின்னே, ஊருக்கு ஒசத்தியான கங்காணி மகள் செண்பகத்துக்குக் கட்டி வைக்கப் போறீங்களாக்கும்?…”

***

அங்காளம்மை பேசிய பேச்சுகள் சாம்பானை சிலிர்க்க வைத்தன.

கண்கள் ஜொலிக்க அவளைப் பார்த்தார்.

“ஏண்டி, புள்ளே! எம் மகன் வீரமணிக்கு இந்தச் சாம்பான் பெத்த பிள்ளையான வீரமணிக்கு அந்தக் கங்காணி மகளை ஊர் உலகத்துக்கு ஓசந்த கங்காணி மகள் செண்பகத்தைக் கண்ணாலம் பண்ணி வச்சால் செல்லாதா, என்ன?…” சூறைக் காற்றில் பறந்த மயிர்க் கற்றையைக் கோதியெடுத்து அள்ளிச் செருகிக் கொண்டார் சாம்பான். தன்னை மறந்து சிரித்தார்; ஊர் உலகத்தையும் மறந்து சிரித்தார். ஆனால், காந்தியை மட்டும் அவர் மறந்து விடவில்லை !

“நல்லாச் செல்லும் ; செல்லும்படியும் ஆகும்; நல்லாக் கனவு காணுங்க! மேளதாளத்தோட வேணும்னாலும் கனவு காணுங்க!”

“ஏலே, அங்காளம்மை நீ எந்த அர்த்தத்திலே வேணும்னாளும் சொல்லிக்கிட்டுக்கிட, ஆனா இந்த ஒரு சங்கதியை மட்டுக்கும் ஒன்னோட இந்தச் சுங்கடி முந்தானையிலே முடிச்சுப் போட்டு வச்சுக்கிடு! இந்தச் சாம்பான் கனவு கண்டாக்க, அது நடந்தே திருமாக்கும். அந்தக் கனவு கட்டாயமாய்ப் பலிச்சே தீருமாக்கும்! ஆமா!” மதுரை வீரனுக்குப் பேசத் தெரிந்தால், இவ்வாறுதான் உக்கிரமாகவும், ரோஷமாகவும், அகங்காரமாகவும் பேசியிருப்பாரோ?

சோற்றுக் கைத் தழும்பிலே, ஒரு சொட்டுக் கண்ணீர் தெறித்தது சிதறியது!

மனிதர்களுக்குள் எந்தச் சாதி வித்தியாசமும் கிடையாதென்று காந்தி மகாத்மா படித்துப் படித்துப் பாடம் சொல்லித் தரவில்லையா?

ஆனாலும், அந்தக் காலத்தில், ஒரு கட்டத்தில், சேரிச்சாம்பான், செட்டித் தெருவில் வாசலோரமாக நடந்து செல்லப்போக, அதற்குத் தண்டனையாக, அன்பின்றி, ஈவிரக்கமின்றி, வாசலிலிருந்த பூவரச மரத்தில் கட்டி வைத்து, திருக்கை மீன்வால் கொண்டு அடி அடியென்று அடித்துப்போட்ட அதே ‘சூனா பானா’ வை நீதிதேவன் சந்நிதானத்திலே நிறுத்தி வைத்து அபராதம் கட்டச் செய்த புள்ளி ஆயிற்றே இந்தச் சாம்பான்? சாம்பான் ராஜ்யத்திலே, அவர்தான் ஆறுகரைத் தலைக்கட்டிற்குத் தலைமைப் புள்ளி. கிழக்கே தாராடிப் பொட்டல் காட்டு வெளிதொடங்கி, மேற்கில் காளி ஆத்தா கம்மாய் முடியவும், வடக்கே வாஞ்சி அய்யன் நஞ்சைத்தாக்கிலிருந்து, தெற்கே செட்டிமார் சுடுகாடு வரையிலும் அங்கங்கே தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அங்கீகாரம் பெற்ற வாய்மையைப் பரவியும் விரவியும் வாழ்ந்து வருகின்ற நாற்பத்தெட்டு குடிகளுக்கும் இவரது வாக்குத்தான் வேதம்; வேதவாக்கு ! மயிர் பிளந்து நியாயம் வழங்குவதில் மன்னர்.

பாரதி கனவு கண்டாரே, எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று! அந்த மன்னர் ரகம்! இயற்கைத் தாயின் மண் மடியிலே உழைத்து உழைத்து, உள்ளத்தை உயர்த்திக் கொண்ட சாம்பான், தன் அருமைத் திருமகன் வீரமணியை அவன் விருப்பப்படி விவசாயப் பட்டம் பெறவும் செய்துவிட்டார் அல்லவா? சாம்பான் என்றால், சாம்பான்தான்! ஒரு கெட்ட பழக்கம் உண்டா ? மூச்! ….. குடித்தால், தண்டனை என்று ராசாங்கம் விதி விதித்தது ஒரு பக்கம் இருக்கட்டும்! இங்கே, சாம்பான் ஆளுகைக்கு உட்பட்ட எல்லைக்குள் பறைச்சேரி ஆட்கள் யாருமே குடிக்கக் கூடாது; அதாவது, கள், சாராயம் அல்லது, மது எதையுமே குடிக்கக் கூடாது! இது, சாம்பான் சட்டம்! நாளைக்கே , மதுவிலக்கு ஒருவேளை தளர்த்தப் பட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலும் கூட, இந்தச் சேரிப்புறத்தில் யாருக்குமே குடிக்க அதிகாரம் இருக்காது!

சாம்பான் சிரித்தார்; மெய்மறந்து சிரித்தார்; மெய்யை மறக்காமல் சிரித்தார்; இனம் விளங்கியதும், இனம் விளங்காததுமான ஒரு தவிப்புடன் ஏக்கத்துடன் ஆதங்கத்துடன் விம்மிக் கொண்டே சிரித்தார். ‘காந்தி மகாத்மா!…’ தலையிலே ‘லேஞ் சைக் கொய்து ‘முண்டாசு’ சுற்றியவர், மறு இமைப்பில் அதை அவிழ்த்து ஏனோ ஆத்திரத்துடனும், ஆவேசத்துடனும் இயலாமையுடனும் எட்டத்திலே வீசி எறிந்தார்; வெளிச்சத்தில் செய்திப் பத்திரிகையை மீண்டும் புரட்டினார்.

வெளியே, அட்டகாசமாகவும், நிர்த்தாட்சான்யமாகவும் கை கொட்டிச் சிரிக்கிறது இருள்.

***

புது வீடு என்றால், சேரியைப் பொறுத்தமட்டில், அது சாம்பான் வீட்டைத்தான் குறிக்கும். சங்கராந்தியன்றைக்குப் புதுமனை புகுவிழா நடப்பதாக ஏற்பாடு , மின்சார இணைப்பு நடந்து முடிந்தால், முடிந்தது வேலை.

அங்கே, வேப்பந்தூரடியில் இப்போது காந்த விளக்கு எரிந்தது.

காந்தி ஜயந்திக்கான முன் ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடைபெறுகின்றன.

விழாவின் நாயகரான காந்திஜிதான் முதன் முதலில் தயாரானவர்.

தோரணங்கள் கண்களைப் பறிக்கின்றன.

இசை உபகரணங்கள், கொம்பு தப்பு தாளம் என்று சர்வ சுதந்திரத்தோடு அணிவகுத்தன.

சாம்பானுக்குக் குடிக்காணியாட்சிப் பாத்தியதை கொண்ட தோப்புக்களினின்றும் வாழைத்தார்கள், மொட்டை வண்டிகளில் வந்திறங்கின; சுமங்கலிக் கோலம் ஏந்திய ஏந்திழைகளின் பாவனை பிரதிபலித்தது.

“அப்பாலே, இன்னம் என்ன சோலி மிச்சம் சொச்சம் இருக்குது, வேலப்பா?” என்று அதிகாரத் தோரணையில் வினவினார் சாம்பான்.

“வெத்தலை – பாக்கு, சந்தனம் வாங்கனுமுங்க, பெரியப்பா!” என்று மரியாதை பளிச்சிடப் பதில் சொன்னான் வேலப்பன். குடிச் சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து, தன்னையும் தன் குடும்பத்தையும் காத்த புண்ணியவானுக்குக் காட்டுகின்ற நன்னி. அந்த மரியாதையில் முகம் பார்த்திருக்கலாம்.

“பிஸ்கோத்தும், மிட்டாயும் வாங்க வேணும்.”

“பெரிய மனுசங்களுக்குக் கொடுக்கத்தானே, பெரியப்பா?”

“மனசாலே உயர்ந்த பெரிய மனுசங்களுக்கும் கொடுப்போம்; மனசளவிலே உயரப் பழகிக்கிட்டு வர்ற நம்மளை மாதிரி ஆளுங்களுக்கும் கொடுப்போம்!”

“சவாசு! அப்படியானா, உண்டனவே வாங்கிக்கிடலாம். கங்காணி ஐயாதான், சுளை சுளையாய் நூத்தியொரு ரூபா காந்திச் சாமியோட விழாச் செலவுக்குக் தந்திருக்காரே?”

“கங்காணி ஐயா பணம் தந்தது வாஸ்தவந்தான். ஆனா, அந்தப் பணத்தை நான் தொடப் போறதில்லே!”

“ஏங்க, அந்தக் காசை நாம் தொடப்புடாதுங்களா?”

“ஆமாப்பா; தொடத்தான் படாது!”

“அது பாம்புங்களா, பெரியப்பாரே?”

“ஊம்; அந்தப் பாம்பு, நல்லதா, கெட்டதான்னு குணங்குறியைத் தெரிஞ்சுக்கிற வரைக்கும், அதை நான் தொடவே மாட்டேன்! காந்தி விழாச் செலவுக்கு , வளமைப்படி நானே செலவழிச்சுக்கிடுவேன்; காந்தி தெய்வம் தந்த பணத்தை, அந்த மகராசருக்குச் செலவழிக்காமல், பின்னே வேறே யாருக்குச் செலவழிக்கிறதாம்?”

வானக்கரையில், கண்ணுக்குச் சரிவரப் புலப்படாமல், ஆகாயக் கப்பல் ஒன்று, மெல்லிய ஓசை பரப்பி நீந்திக் கொண்டிருந்தது.

“சாமான் சட்டு அம்புட்டுத்தானே, மூத்தவுகளே?” என்று குறுக்கே பாய்ந்தார் முத்தரசன்.

காந்திப் புன்னகையை வெளியிட்டார் சாம்பான் . “யாபகம் வந்தால் சொல்லப்பா, முத்தரசா!….’ என்றார்.

“மாலை, கீலை வேணுங்களா?’ என்று கேட்டவன், பொடியன் பொன்னப்பன்.

“மாலைதான் வேணும்; கீலை வேனாம்” என்றார் சாம்பான். சிரிப்பின் சலசலப்புக்கு ஊடே காலையிலே, சாயரட்சை மாலை வாங்கியாந்திட்டேன்; ஒரு மாலை, நம்ம காந்தி சாமிக்கு இன்னொண்ணு, நாளைய விழாவுக்குத் தலைமை தாங்கிறவங்களுக்கு!” என்று விவரம் கூறினார்.

“பெரியவுக கூட்டத்துக்குத் தலைமை தாங்க யாரைப் போடப் போறாகளாம்” – அஞ்சலைப் பாட்டி.

“அக்கரைச் சீமையிலேயிருந்து இப்பத்தான் பிறந்த மண்ணை நாடி வந்து குதிச்சிருக்கிற நம்ம கண்டிக் கங்காணியைத்தான் போடலாம்னு ரோசிச்சிருக்கேன்! நம்ம ஆளுங்களுக்கு இது சம்மதமில்லைன்னா, மனசை விட்டுப் பயப்படாமல் சொல்லிப்புடலாம்; உங்க இஷ்டப்பிரகாரம் வேறே ஒருத்தரைப் போட்டுக்கிடலாம்!”

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லேங்க, நீங்க நல்லதைத்தான் செய்வீக; அதிலே, நாயமும் கட்டாயம் இருக்கும்; ஆனபடியினாலே, கங்காணியையே உங்க மனசுப்படி விழாவை நடத்திச் தரச் சொல்லுங்க” பற்பல குரல்கள். ஒரே குருலாக ஒருங்கிணைந்து, ஒருமைப் பட்டு ஒலித்தன.

“சரி, சரி, காரியங்களைச் செஞ்சுக்கிட்டிருங்க; பசியாறிட்டு ஓடியாரேன், எங்க வீரமணி இப்பவாச்சும் திரும்பியிருப்பானோ, என்னமோ? சரி, சரி, நான் வரேன்!”- புறப்படலானார் சேரித் தலைவர்.

***

வட்டிற் சோறு ஆவி பறக்கிறது; அகல் விளக்கின் சன்னமான ஒளியில், ஆவியின் புகை சன்னமாகச் சுற்றிச் சுற்றி அலைகிறது.

“உருட்டின சோத்துக் கவளத்தை லபக்னு வாயிலே போட்டுக்கிடாமே, நேரங்கெட்ட இம்மாம் பொழுதிலே கூட சொப்பனம் கண்டுக்கிட்டே இருந்தாக்க, அப்பாலே, ஒங்க மேனி என்னாத்துக்கு ஆகுமாம்?’ – அங்காளம்மை உரிமை பூண்ட உறவில் வருந்தினாள்.

“வாழ்க்கையே சொப்பனம்தான் அப்படின்னு ஒரு சித்தர் பாடியிருக்கார், அந்தச் சொப்பனத்தையே வாழ்க்கையாக்கி விளையாட வேணும். விளையாட்டுக்காட்ட வேணும்னுதான் நான் சதா சொப்பனத்திலே மூழ்கிக் கிடக்கேனாக்கும்!”

சோற்றுக் கவளங்கள் விரைந்தன.

தண்ணீர்க்குவளை காலி.

“கச்சப் பொடிக் குழம்புக்கு உப்பு திட்டம்தானுங்களே, மச்சான்காரவுகளே.”

“ஓ! உப்பு பத்தாட்டி நான் ஒன்னை விட்டீருப்பேனா?”

“ஓங்களை மாதிரிதான் ஒங்க தலைச்சன் வீரமணிப் பயலும்!”

“பலே! பலே!”

கடைக்குட்டி வாண்டு கரவொலி எழுப்புகிறான். நாளைய காந்தி விழாவை அமர்க்களப்படுத்த இவன் ஒருவனே போதும்!

அப்போது –

திட்டிவாசல் வெளியில், சைக்கிள் மணிச் சத்தம் கேட்கிறது.

“வெரசாய்ப் போய்ப் பாரேன்; முக்காலும் நம்ப ராசாவாத்தான் இருக்கோணும் ; இப்பவே, நம்ப செல்வம் வீரமணியோட மனசையும் கண்டு தண்டிக்கிணு, அவனோட கண்ணாலத்தை இந்த ஐப்பசிக் கடுத்தத்திலேயே நடத்திப்பிடலாம்; அப்பவே, புது வீட்டுக்கும் குடி புகுந்திடலாம் ! ம்… சல்தியா ஓடுடி, புள்ளே !”

இருட்கன்னி நெற்றியில் இட்டுக் கொண்டிருப்பது இரத்தத் திலகமா, என்ன?

“மகனே, வீரமணி”

அங்காளம்மை பெற்ற பாசம் துடிதுடிக்கக் கதறுகிறாள். வீரமணியின் முகம் ரத்த விளாராக இருந்தது!

***

அங்காளம்மை, தன் மகனின் முகத்தைப் பார்த்து அரற்றினாள்.

“என்னப்பா நடந்திச்சு? நானும் ஒன் ஆத்தாளும் தொட்டுத் தொட்டு அழகு பார்த்து, மாறி மாறி முத்தம் கொடுத்து ஆனந்தமடைஞ்ச உன் கன்னங்க ரெண்டிலேயும் ரத்தம் பீறிடுதே?” – யாரப்பா உன்னை இப்படி ஈவு இல்லாம், இரக்கம் இல்லாம் அடிச்சுப் போட்டது?…… ஊம், சொல்லு வீரமணி, சொல்லு!” – மூர்த்தண்யமாகப் பெற்ற பாசம் சீற முழங்கினார் சேரிச் சாம்பான். கண்கள், மிளகாய்ப் பழங்களாகச் சிவந்தன; சுடுசரம் சுடுகிறது; வழிகிறது.

“வாயைத் தொறந்து பேசுடா, எந்தங்கமே!’ – தாய் அலறுகிறாள்; கதறுகிறாள்.

“அப்பாரே, கேட்டுக்கிடுங்க; நடப்புப்படி சொல்லுறேன். அடிநாளையிலே, நானும் நம்ம கங்காணி ஐயா மகள் செண்பகமும் காளி ஆயி ஒழுங்கை மணலிலே கமுக்கமாகச் சந்திக்சுக்கிட்டு, மணல் வீடு கட்டி, புருசன் பெண் சாதி விளையாட்டு விளையாடுவோம். ஒன் ஃபைன் மார்னிங்….. ம்… வந்து… ஒரு அழகான காலைப் பொழுதிலே, அது மாதிரியே நானும் செண்பகமும், புருஷன் பெண்டாட்டி விளையாட்டு விளையாடினப்ப, எங்களுக்குள்ளே சண்டை மூண்டிடுச்சு; கணவன் மனைவின்னா, சண்டை சச்சரவு வாராமல் இருக்குமுங்களா? இருக்கலாமுங்களா? எங்களுக்குள்ளாற சண்டை வந்ததாலே, என்னோட அது செண்பகம் டூ, போட்டுடுச்சு!… ஆனா, அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நானும் செண்பகமும் சந்திக்கவே வாய்க்கல்லீங்க; அது அக்கரைச் சீமைக்குப் போயிடுச்சு. இப்ப, நானும் படிப்பை முடிச்சு இங்கிட்டு பிறந்த மண்ணை மிதிச்சேன்; செண்பகமும் இப்ப திரும்பிடுச்சு, செண்பம் பிஞ்சுப் பிரயாத்திலே என்னோட டூ போட்டுட்டுப் பிரிஞ்ச அந்தத் துயரத்தை இன்னைக்கு வரைக்கும்கூட, என்னாலே மறக்கவே முடியல்லீங்க! அந்தத் துன்பம் என்னோட அன்பான நெஞ்சிலே, செண்பகம் கொலு இருக்கிற என்னோட பாசம் மண்டின மனத்திலே ஒரு வடு கணக்கிலே ஏற்பட்டு உறுத்திக்கிட்டே இருந்திச்சு. அதனாலே, எப்பாடு பட்டாச்சும், செண்பகத்தை சமைஞ்சு பக்குவமடைஞ்சிட்ட செண்பகத்தைக் கண்டு பேசி, என் கூட போட்டிருந்த டூ வைக் கலைச்சு என்னோடே அந்தச் செண்பகத்தை ராசி ஆகிப்பிடச் செஞ்சிட வேணும்னு தீவிரமான வைராக்கியம் கொண்டேன்; என் ஆசை கூடிவந்திச்சு; காலமும் கை கூடிச்சு; செண்பகத்தைச் சந்திச்சேன், அந்தியிலே; என் மனசைத் திறந்து காட்டினேன், செண்பகம் ஆனந்தக் கண்ணீர் விட்டுச்சு! வீரமணி! … நீங்களும் நானும், புருஷன் பெண்சாதி விளையாட்டு, விளையாடினப்ப, நான் உங்களோட ‘டூ’ போட்டேன்; இத்தனை வருஷம் கழிச்சு, நான் உங்க கூட போட்ட அந்த ‘டூ’ வைக் கலைச்சு நான் உங்களோட ‘ராசி’ ஆகணும்னா , நீங்களும் நானும் மறுபடியும் நிஜமாகவே புருஷன் பெண்சாதி ஆகிப்புட வேணுமாக்கும்! என்று செருமிச்சு! என்னோட நெஞ்சத்துக் கனவை இனம் புரிஞ்சுகிட்டாப்பிலே, அது அந்தச் செண்பகம் பேசினதும், நானும் அப்பவே ‘சரி’ ன்னு என் சம்மதத்தைச் சொல்லிட்டேன்! செண்பகம், வானத்துக்கும் பூமிக்குமாகக் குதியாட்டம் போட்டுச்சு; ‘டூ கலைஞ்சுது; நாங்க ரெண்டு பேரும் ‘ராசி’ ஆனோம்! … மகமாயி சந்நிதியிலே நானும் செண்பகமும் விதியையே சாடிட்ட பெருமிதத்தோட ஜோடியாய் நின்னு கும்பிடு போட்டுக்கிட்டிருந்தோம்! அப்பத்தான், மகளைத் தேடிக்கிட்டு வந்தார் எங்க ஒசத்தியான கங்காணி! அவரேதான் இப்படி என்னை சவுக்குமிளாறினாலே அடிச்சுப் போட்டார்! செண்பத்தோட கண்ணீருக்காக, என்னோட செண்பத்தோட அந்தப் புனிதமான உயர்வான சாத்தியமான தருமமான அந்தக் கண்ணீருக்காக நான் மௌனப்பிண்டம் ஆயிட்டேன். கங்காணிக்கும் ‘மாப்பு கொடுத்தேன்!… வினாத் தெரிஞ்ச காலந்தொட்டு, என் நெஞ்சைத் தொட்டு, என் நெஞ்சிலே கண்கண்ட தேவதையாகக் குடியிருக்கிற அந்தப் பரிசுத்தமான நெஞ்சைச் சுமந்துக்கிட்டு இதோ, உங்க சந்நிதானத்திலே வந்து நிற்கிறேனுங்க அப்பாரே!”

வாழ்ந்து காட்டிய சேரிச் சாம்பானின் குழிவிழுந்த கண்களின்றும் கண்ணீர் முத்துக்கள் குழி பறித்துச் சிந்தின.

அது ஆனந்தக் கண்ணீ ர்!

மாட்டுத் தொழுவத்திலிருந்து பிணைக் கயிற்றைக் கட்டறுத்துக்குக் கொண்டு வெளியே ஓடி வந்து குதித்தது செவலைக்கன்று.

பாதிச் சோற்றோடு எழுந்த சாம்பான், கை கழுவியானதும், நேராகக் காந்தி அண்ணலைச் சந்தித்தார். அண்ணலின் திருச்சந்நிதியில், அகல்ஒளியில் மண்டியிட்டார். காலடியிலே திருக்கை வார் மண்டியிட்டுக் கிடந்தது.

“மகாத்மா! நீங்க வேடிக்கையான இந்த மனுசங்களோட நெஞ்சுகளிலே விதைச்சிட்டுப் போன அன்புவித்து இப்ப அபூர்வமாய், அதிசயமாய் மூளை கிளம்ப ஆரம்பிச்சிடுசின்னுதான் தோணுது!… கேட்டீங்களா, எங்க வீரமணியோட கதையை?.. அன்புக்குச் சாதி இல்லே , மதம் இல்லே அப்படி இப்படின்னு நீங்க ஏகமாச் சொல்லிட்டீங்க! பரிசுத்தமானது; நியாயமானது ; யதார்த்தமானது என்கிறதுக்கு இந்தப் பறைச்சாம்பான் மகன் வீரமணியும், அந்த ஒசந்தகுடிக் கங்காணி மகள் செண்பகமும் சாட்சியாய் நிற்கிறாங்க! ஆனா, கங்காணிக்குப் புத்தி சொல்லிக் கொடுக்கிறதுக்கு, நீங்க இப்ப இருந்திருக்கப்படாதுங்களா? … ஐயாவே, என்ன கமுக்கமாய்ச் சிரிக்கிறீங்களே? …. ஓ, எங் காலடியிலே கிடக்குதே, அந்தத் திருக்கை மீன் வாரைக் கண்டா , அப்படிச் சிரிக்கிறீங்க?…. என் மகனை அடிச்சவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும், அவனைப் பதிலுக்குப் பதில் அடிக்காம விடவே மாட்டான் இந்தச் சாம்பான்! ஆனா, நீ பாடம் சொல்லித் தந்திருக்கிற அந்த அன்புதான் என் கைரெண்டையும் கட்டிப் போட்டுப்புடுச்சீங்களே, சாமியே? … இப்ப, இந்த ராத்திரி வேளையிலே, நானும் எம்மகனும் அந்த உயர்வான கங்காணி பங்களாவுக்குப் புறப்படுறோம்; உங்களையும் உங்க அன்பையும் துணையாய்க் கொண்டுதான் புறப்படுறோம்! போயிட்டு வாரோமுங்க தெய்வமே!”

வீரமணியின் அழகான கண்களில் கண்ணீ ர் நிறைகிறது.

இருதலைமணியன் பாம்பு மாதிரி சுருண்டு நெளிந்து கிடந்த திருக்கை மீன் வாரை, தூர வீசி எறிந்தார் சாம்பான். “மகனே! புறப்படு!” என்றார்.

“நானும் வாரேனுங்க, மச்சான்காரரே”

பட்டி வண்டி புறப்பட்டது.

***

கண்டிக் கங்காணியன் பேரழகுப் பெருமனையின் தலைவாசலில், மின்னொளி வெள்ளத்தில், மக்கள் நெரிந்தனர்.

புறப்படத் தயாராக நின்ற கங்காணியின் ரேக்ளா வண்டிக்குக் குறுக்கே பாய்ந்து நின்றது சாம்பானின் பெட்டி வண்டி.

“அடடே, சாம்பானா? வாங்க! வாங்க!!” என்று வரவேற்றார் கங்காணி. “உங்களைத் தேடித்தான் இப்ப புறப்பட்டு கிட்டு இருந்தேன்” என்று தொடர்ந்தார்.

“என்ன விசயம், சொல்லுங்க” – சாம்பானின் பேச்சி நெருப்பு தூள் பறந்தது.

“நீங்க வந்த விசயத்தை முன்னாடி சொல்லப்புடாதா?”

“காந்தியோட பிறந்த நாள் கொண்டாட்டச் செலவுக்காக நீங்க நன்கொடையாய்க் கொடுத்த நூத்தியொரு ரூபாயை உங்ககிட்டவே திரும்பக் கொடுத்திட்டுப் போக வேணும்னுதான் வந்தேன். காந்தி மகாத்மா செத்துப் போயிட்டதாக நான் இன்னமும் கூட நம்பாமல் தான் இருந்துக்கிட்டிருக்கேன்! . இந்த நிலைமையிலே, ஊரார் மெச்சு வெளிவேஷம் போடுற உங்களை மாதிரி போலி மனுசங்களோட நன்கொடையை காந்தி விழாவுக்கு உபயோகப்படுத்தினா, அது தெய்வத்துக்கே அடுக்காது! காந்தி மெய்யாலுமே செத்துத்தான் போயிட்டார்னு நான் கூட நம்பத்தான் நேரிடும்…. அப்பாலே?”

“ஊம், அப்பாலே?”…..

“என் மகன் வீரமணிக்கு உங்க மகள் செண்பகத்தைப் பெண் கேட்கவும் வந்தேனுங்க, கங்காணி ஐயாவே”

கங்காணி விம்மினார்; உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே விம்மினார். “சாம்பான், ஒங்களுக்குக் கோடிப் புண்ணியம் கெடைக்கும், காந்தி பிறந்த நாள் விழாவுக்கு நான் தந்த நன்கொடையை மட்டும் என்கிட்டே திரும்பத் தந்திடாதீங்க… என்னையும் ஒரு மனிதனாகத் தலைநிமிர்ந்து நடமாட ஒரு சந்தர்ப்பத்தையும் கொடுத்திடுங்க… என்ன, சரிதானே? ….. ம்…. வீரமணி! என்னோட கொஞ்சம் உள்ளே வாங்க என்று வீரமணியை அழைத்தார். “சாம்பான், நீங்களும் வாங்க; அங்களாம்மை! நீங்களும் வாங்க!” என்றார்.

அப்போதுதான், செண்பகம் கண்களை மெள்ளத் மெள்ளத் திறந்தாள்.

வீரமணி செருமினான்.

“வீரமணி, என்னோட மகளை உங்களோட அன்புக் கைகளிலே ஒப்படைக்கப் போற நல்ல சேதியைச் சொல்லத்தான் நான் உங்களைத் தேடிப் புறப்பட்டேன். தெய்வம் தேடி வர்றமாதிரி, நீங்களே வந்தீட்டீங்க… உங்களுக்குச் சொந்தமாக இருக்க பொசிப்பு இல்லாத உயிர் வேண்டவே வேண்டாம்னு எங்க பாதாளக் கேணியிலே விழுந்த எம் மகள், உங்களுக்காகவே செத்துப் பிழைச்சிருக்காளுங்க, வீரமணி! அன்பின் சட்டம் சரணாகதி அடைகிறதுதான் அப்படின்னு காந்தி சொன்ன பேச்சோட உண்மையும் நியாயமும் தருமமும் இப்பத்தான் எனக்குப் புரிஞ்சுதுங்க, வீரமணி! விம்மி வெடிக்கிறார் கங்காணி.

***

காந்திஜியின் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

தாயின் மணிக்கொடியின் பட்டொளி நிழலில் கொலு வீற்றிருந்தார் அண்ணல் காந்தியடிகள்.

விழாத் தலைமையாளர் கண்டிச் சீமைக் கங்காணி எழுந்தார்; காந்திஜிக்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மாலை அணிவித்தார். திரும்பினார். “மகாஜனங்களே! ஊர் உலகத்தைப் போலே நானுந்தான் காந்தி செத்துப் போயிட்டார்னு நம்பிக்கிட்டிருந்தேன்; ஆனா, காந்தி செத்துப் போயிடல்லே என்கிற ஒரு சத்தியமான உண்மையை நேத்து ராத்திரிதான் நான் புரிஞ்சுக்கிட்டேன்? இந்தப் புதுப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தவளே என்னோட அருமைப் பொண்ணு செண்பகம்தான் திருவாளர் சாம்பான் அவர்களின் மகன் வீரமணிக்கு சொந்தமாவது என் மகள் செண்பகத்தின் உயிர் என்கிற தெய்வ நீதியையும் நான் தெரிஞ்சுக்கிட்டேன்! என்னோட வீட்டிலேயிருந்து இந்தக் கலியாணத்தை நான் நடத்தி வைக்க வேணும்னா, காந்தி மகாத்மா மறுபடியும் புதிதாகப் பிறந்துதான் தீரணும்! ஆனதாலே, நானும் சேரிவாசிகளிலே ஒருத்தனாக மாறி, இந்தக் கலியாணத்தை, காந்தி பிறந்த இந்தப் புனித நாளிலே நடத்தி வைக்கப் போறேன். அன்பு உள்ளம் கொண்ட உண்மையான காந்தி பக்தர்கள் புது மணத் தம்பதியை அன்போட வாழ்த்தும்படியும் கேட்டுக் கொள்கிறேன்!”

அவர்கள் மட்டுமா வாழ்த்துகிறார்கள்.

– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *