கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 6,796 
 
 

“என்னாதிது?” அறை கதவை அடைத்துவிட்டு கைலியை மடித்துக் கட்டிக்கொண்டே கேட்டான்.

“பின்ன? நேத்து அரச்சது எப்டியிருக்கும்?”, அவள் நிமிர்ந்து கூட பார்க்காமல் எரிச்சலுடன் கூறியது அவனை சுடவில்லை, புன்னகைத்துக்கொண்டான். அவளின் பொய் கோபங்கள் கூட தெரியாதவனில்லை. கைபேசி திரையை தடவிக்கொண்டே கட்டிலயே சுற்றி சுற்றி பார்த்தான், மனம் மருதாணி வைத்துகொண்டிருக்கும் அவளையே சுற்றி வந்தது. அவளிடம் எதாவது பேசலாம், சில்மிஷம் செய்யலாம் என்றது.

கைபேசியை அணைத்துவிட்டு அருகே போய் அமர்ந்தான். “குடு நா வக்கிறேன்”, கையை நீட்டினான்.

“எதுக்கு?”, என்றாள் அதே தோனியில்.

“நா வச்சி விடுறேன்டீ”, என்றான் அவளின் சந்தேக கேள்வி அப்பாவி போல.

“தேவயில்ல” என்று ஒரே சொல்லில் முடித்தாள். அவளுக்கு அவன் மருதாணியை வாங்கி மேலே பூசிவிடுவானோ அல்லது கையை அலங்கோலப்படுத்திவிடுவானோ என்ற சந்தேகம்.

” நீ எப்புடி சொல்றியோ அப்டியே வக்கிறேன்டீ”, அவள் சந்தேகம் எதற்காக என புரியாவிட்டாலும் இவ்வாறு ஒப்புக்கொண்டான்.

அவளும் “ம்ம்ம்… இந்த கைல போட்டலாம்”, என வலக்கையில் மருதாணி வைப்பதிலிருந்து கவனத்தை திருப்பாமல் இடக்கையை காட்டி சொன்னாள். அவன் கைகளை அலங்கோலப்படுத்திவிடுவானோ என்பதை தாண்டி, அவன் அவளுக்கு ஆசையாய் மருதாணி வைக்கும் அழகை பார்க்கும் வாய்ப்பை தவறவிட மனமில்லை இவளுக்கு என்று தான் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் அவன் மருதாணியை மேலே பூச நினைத்தாலும் அதை வேண்டாமென தடுத்து, சிணுங்கி, பதிலுக்கு பூசி கிளுகிளுப்பாகதான் இருக்கும். இதுபோல பல சமயங்களில் அவன் சேட்டைகளுக்கு வழிவிட்டு அதை இனிமையான தருணங்களாக்கி இரசித்திருக்கிறாள்.

இப்போது அவன் அமைதியாக படுத்துக்கொண்டு தன் முறைக்காக காத்திருந்தான்.

நேற்று அவள் எடுத்து வந்த ஓரங்களில் மருதாணி காய்ந்து போன எவர்சில்வர் கிண்ணத்திற்கு ஜோடியாக ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து தொட்டு வைக்கிறாள்.

நேற்று அவள் இந்த கிண்ணத்தை எடுத்து வந்தபோது “இன்னைக்கி என்ன கைல?” என்று கேட்டதற்கு அவள் அதிர்ந்து போய், ” எல்லார்க்கும் வச்சிவிட்டனா எனக்கும் ஆசையா இருக்குப்பா” என்று அவள் ஆசையாக கூற “இருக்கும் இருக்கும்” என்று தலையாட்டிக்கொண்டே அவள் அருகே சென்று “கொன்றுவே” என்றவனிடம் “அப்போ, நாளைக்கு விடணும்” என்று கிண்ணத்தை நெஞ்சோடு சேர்த்து கேட்டாள்.

“ம்ம்..ம்ம்..” என்று அவள் கைகளிலிருந்து கிண்ணத்தை விடுவித்தவனின் விரல்கள் மார்பில் உரசி கூசி நின்றவளுக்கு தெரியும் இவ்வாறு நடக்குமென்று. இருப்பினும் கிடைக்கும் நேரத்தில் அரைத்து விடுவோம். தவிரவும் இனி எப்போது மாலதியக்கா மருதாணி பறிக்க அனுமதிப்பாளோ என்றே இன்று அரைத்து வைத்தாள்.

பின்பு இவளை நெருங்கி முத்தமிட்டதையும் கட்டிலில் கிடத்தி செய்த மற்றதையும் நினைத்து புன்னகைத்துக் கொண்டே டம்ளரில் இருந்து நீரை கையில் எடுத்து மீண்டும் டம்ளரிலேயே ஊற்றியவனின் விரல்களிலிருந்து சொட்டிய செம்மஞ்சள் நிற துளிகளை பார்த்து புன்னகைத்தவள் நினைவுகளில் நேற்று நிகழ்வுகள் ஓடியது.

சீமந்தம் முடித்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்த நாத்தனாரின் சடை மாலையை நோகாமல் அவிழ்க்கும் போது அத்தை ஆரம்பித்தாள்”அட்டியேய்! நேத்து எத்தன மணிக்குடீ படுக்க போன?”, அத்தைக்கு பதில் தெரியுமென்றாலும் இவள் அம்மா பெரியம்மாவின் இவள் செய்கையைத் தெரியப்படுத்தவே அடித்தளம் போட்டாள்.

“ரித்தி, சௌமிக்கெல்லா வச்சிட்டு ராஜி சித்திக்கு எதுத்த வீட்டு அக்காக்கும் போட்டு முடிக்க லேட்டாயிடுச்சு அத்த”, என்று பதில் தெரிந்த அத்தையிடம் காரணத்தை சொன்னாள்.

“அவளவோளுக்கு என்னா? நைட்டு பனண்டு மணிவர ராவிக்கு ரெண்டு மணிவரைக்கு கத அளந்து படுக்க போவாளுவோ” என சந்தடி சாக்கில் அண்டை வீட்டாரை வைதுவிட்டு “ராவிக்கி ஒரு மணிக்கி உள்ள போறா ஆயி!” என அம்மாவிடம் அளந்தாள். இவளுக்கு அப்போது மணி பன்னிரண்டு நாற்பத்தி ஐந்து என்பது நினைவுக்கு வந்தது. “ம்ம்… புள்ள என்னாண்ணி நெனைப்பான்” என்று தொடர்ந்தபோதே அவன் “ரம்யா… ரம்யா…” என அழைக்கும் குரல் கேட்டது. இப்போது அழைப்பை அலட்சியபடுத்துவது கோபத்தை உண்டாக்குமென அறையை நோக்கி சென்றவள் காதுகளில் “என்னா மூனாம் நாளு அவன் கெளம்பிடுவா, நாள கெழச்சி இவளு பள்ளிகொடம் கெளம்புறாளோ என்னவோ?” நாள் கணக்குகள் காதில் விழுந்தது சென்று கொண்டிருந்தவளுக்கு.

உள்ளே சென்றவள் “என்னாச்சி?” என்று கிசுகிசுப்பாக கேட்டாள்.

நிமிர்ந்து பார்த்தவன் ” என்னடீ வரேன் வர்லனு சொல்லாம வர, இத எங்க வக்கிறதுனு தெர்லடீ” என்று ஒரு ஆணுறையை எடுத்து நீட்டினான். அவனை பொய்யாக ஒரு முறை முறைத்து விட்டு வாங்கியவளிடம், “பர்ஸ்லையும் வைக்க முடியாது” என்றான்.

“பீரோல வக்கவேண்டிதான” எனக் கூறி பீரோவை இவள் திறப்பதற்குள் அறையை விட்டு சென்றுவிட்டான்.

திரும்பி வந்து சடையை பிரிக்க ஆரம்பிக்க, “சின்னபுள்ளதான, சித்தி?” என பெரியம்ம இவள் சார்பாக பேச, அம்மாவோ “என்னாக்கா சின்னபுள்ள”, என இவளை முறைத்தாள்.

“இந்த மாரிதான கல்யாணோம் ஆன புதுசுல ராதிகா சரியா பேசமாட்டுது வரமாட்டுதுனு ரவி கோச்சிக்கிட்டு அது சித்தி வூட்டுக்கு கெளம்புச்சி” எனக் கூற தலையை காட்டிக்கொண்டிருந்த கலை நிமிர்ந்து “ம்ம்ம்???” என்று ஆச்சரியமாக கேட்க “நெஜந்தான், சித்தி” என்று கண் உருட்டி கூறி “அம்மாவும் பெரிமாவும் போய் அக்காகாக கெஞ்சினாங்க” என சிரித்தாள்.

அதற்குள் கொள்ளைப்புறத்தில் முகம் கழுவி வந்தவன், “ரம்யா, யேன் டவல் எடேன்” என வெளியே நின்றபடியே கேட்டுக்கொண்டே உள்ளே இவர்கள் அருகே வந்து நிற்க, அருகே கொடியில் தொங்கிய துண்டை எடுத்து நீட்டினாள்.

“அப்றம் தம்பி, ரம்யா என்னா சொல்லுது?”, என பெரியம்மா ஆரம்பித்தாள்.

“எதுவும் சொல்லலயே! எத பத்தி?”, என்று பதில் கேள்வி கேட்டான் புரியாமல்.

“ஒன்னுல்லப்பா, சண்ட ஒம்பு இல்லாம இருக்கீங்களான்னு கேட்டோம்?” என்று அம்மா விவரித்தாள்.

“எதுவுயில்லையே மாமி. யேன்?”, என்றான் இவளைப் பார்த்து புரியாமல்.

“ஒன்னுல்ல” என்று சிரித்தவளைப் பார்த்து புரியாமலே இவனும் சிரித்துக்கொண்டே அவள் அருகே செல்வதுப் போல கொடியில் துண்டைத் தொங்கவிட்டு சென்றவனிடம், “சாப்டீங்களா?” என்றாள்.

“ம்ம்… நானு மாமாவு பந்தலயே உக்காந்து சாப்ட்டுடோம்” என்று திரும்பி பார்த்து சொல்லிக் கொண்டே சென்றான்.

நினைவலைகளின் நடுவே ஞாபகம் வந்தவளாக தீவிரமாக மருதாணி வைத்துக் கொண்டிருப்பவனிடம், “காலைலயே மீன் வாங்கிட்டு வந்தீங்கன்னா கொழம்பு வச்சிட்டு கெளம்புவ” என்றாள்.

“ஆங்… நீ வக்க வேணா. ஒன்ன ஸ்கூல்ல விட்டுட்டு நானே வக்கிறே. நீ வந்ததுந்தா ஊருக்கு கெளம்புவ” என்றவனை அமைதியாக பார்த்தாள். இவ்வாறு விடுமுறைக்கு வருபவனுக்கு இவளை பள்ளியில் சென்று விட விருப்பம். இவள் வேண்டாம் என்று கூற வாய்ப்பளிக்க கூடாதென வரவா எனக் கேட்காமல் வருகிறேன் என்று கூறி விடுவான்.

நேற்று முன் தினம் இரவு பன்னிரண்டே முக்காலுக்கு வந்தவளிடம், “மணி என்னடீ?” என்று கேட்டதற்கு, “சின்னபிள்ளங்க… எல்லா கோன வாங்கி வச்சிட்டு முழிச்சிட்டு இருந்துதுங்க… இடுப்பு வலியெடுத்துடுச்சு” என காரணத்தைச் சொல்லி இடுப்பைப் பிடித்து பின்பக்கமாக வளைந்து காட்டியவளிடம் தலையணையை சரி செய்து, “சரி வா வந்து படு. காலைல அஞ்சு மணிக்கே எழுந்திருக்கனு. நா தவசிபுள்ள சொல்லுறதெல்லா செய்வே நீதா அவரு சொல்லுற பொருலெல்லா யெனக்கு எடுத்து தரனு” என்று சொல்லி கொண்டே கண்ணை மூடியவனுக்கு இப்போது இவளிடம் எதாவது பேச வேண்டும் போல இருந்தது.

“பேசியே ரொம்ப நாளான மாறி இருக்குல்ல” என ஆரம்பித்தான்.

“ம்ம்…”, என்றவளின் நினைப்பு முழுக்க நாளை யாரேனும் இவள் சிவந்த கைகளைப் குறித்து கேட்கும் போது இந்த இரவையும் இவனையும் நினைத்து அவர்கள் அறியாமல் மனதிற்குள் சிலிர்க்க போவதைச் சுற்றியே இருந்தது.

ஒரு நொடி அவனை பார்த்தவள் அவனின் தீவிரமான விரல்கள் சற்று நேரத்தில் சிவந்து நாளை பிறர் முன் இவனை விழித்து நிற்க வைக்க போவதை நினைத்து குறும்பு புன்னகை புரிந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *