துவண்டு போயிருந்த நம்பிக்கையை விக்கிரமாதித்தன் போல் தோளில் சுமந்து கொண்டு, வீட்டுக்குப்போய் என்ன சமாதானம் சொல்லலாமென்று சிந்தித்தவாறே நடந்தான். அவனுக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கக் கூடாதுதான். அவனை நோக்கித்தான் எத்தனையெத்தனை ஆயுதங்கள்! இரண்டு நாட்களுக்கு முன் அவன் வேலை பார்க்கும் கம்பெனி அவன் மீது எய்த சென்னைக்குச் செல்வதற்கான மாற்றல் ஆணை வந்தது. மாற்றல் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனாலும் அது இவ்வளவு சீக்கிரம் வருமென்று எதிர்பார்க்கவில்லை.
வழக்கம் போலவே, ‘இதைத் தவிர்க்க முடியாதா, வேறு வழிகள் கிடையாதா?’ என்று மனைவி நிர்மலாவின் கேள்விக்கணையிலிருந்து தப்புவதற்காக அவனுக்குக் கிடைத்த கேடயம்தான் ‘எதற்கும் கோபாலகிருஷ்ணனிடம் சொல்லிப்பார்க்கலாம்’ என்று காலையில் சொன்ன வார்த்தை. அவள் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சாயந்திரம் போய்ப் பாருங்கள் என்று நூறு முறை அரித்தெடுப்பாள் என்று தெரியாமல் போயிற்று. அவனுக்குத் தெரியும், அது இயலாதென்று. ஆனாலும், அவளுக்காக அவரைப் பார்த்துவிட்டு வந்தான்.
கோபாலகிருஷ்ணன் ஒன்றும் கம்பெனி பிரம்மாக்களில் ஒருவரல்ல. சிவனேயென்று கிளையலுவலகத்தில் அமர்ந்திருக்கும் கிளை உதவி மேலாளர். அவ்வளவுதான். கோபாலகிருஷ்ணன் தன் வார்த்தைகளில் சர்க்கரை தடவி, அவரும் அவர் குடும்பத்தாரும் இந்த மாற்றல் உத்தரவால் வருந்துவதாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துவிட்டு, மாற்றலை நிறுத்துவது; உயிரை விடுவது இவ்விரண்டையும் தவிர மற்ற அனைத்து உதவிகளையும் தம்மால் செய்ய முடியும் என்பது போல் பேசினார்.
ஆயிற்று… இப்போது வீட்டுக்குச் செல்லவேண்டும். அவனுக்குள்ளே எதிர்பார்ப்புகள், கனவுகள் எதுவுமில்லை. ஆகவே அது உடையவுமில்லை. ஆனால், வீட்டில் நிலைமை அவ்வாறு இல்லையே! மனைவி நிர்மலா, குழந்தைகள் சரவணன், திவ்யா எல்லோரது எதிர்பார்ப்பும் உடைந்து போகுமே.
அவர்களுக்கென்னவோ இந்த ஊர் மிகவும் பிடித்துப் போயிற்று. இதுவரை தங்கியிருந்த ஊர்களில் இந்த கும்பகோணம் மட்டும் சட்டென்று அவர்களது மனதில் இடம் பிடித்துக் கொண்டது.
நிர்மலாவுக்கு இங்கு வந்த பிறகுதான் முன்னேற்றத்தின் படிகள் தெரிவதாக ஒரு நம்பிக்கை. அதற்கு அவளுக்கு ஆதாரமாய் திகழ்ந்தவள் மூன்றாவது வீட்டு சவுந்திரம்மாள்.
சவுந்திரம்மாள் ரொம்ப கெட்டிக்காரி என்று அடிக்கடி நிர்மலா சொல்வாள். நிறைய வித்தைகள் தெரிந்தவளாம். வீட்டில் சின்னச் சின்ன கைவைத்தியம் செய்வது, புதுப்புது பலகாரங்கள் பண்ணுவது, கோலங்கள் கற்றுத் தருவது, நகரில் வந்திருக்கும் சினிமா பற்றி காரசாரமாக விமர்சனம் பண்ணுவது… இன்னும் நிறைய.
அவற்றுள் ஒன்றுதான் பணம் பண்ணும் வித்தை. எப்படி சிக்கனமாக இருந்து பணத்தை சேமிப்பது, அப்படிச் சேர்த்த பணத்தை எப்படி விருத்தி செய்வது என்பதையெல்லாம் அவன் மனைவி அவளிடம் கற்று சமர்த்தானது குறித்து அவனுக்கும் மகிழ்ச்சிதான். அநாவசிய செலவுகள் குறைந்தது. அவனுடைய பாக்கெட் மணி வழக்கமும் ஒழிந்தது. அடுத்த மாதம் கூட ஏதோ சீட்டு பிடிக்கப் போவதாகச் சொன்னாள். இந்த வேளையில் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று அவனுக்குப் புரியவில்லை.
கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவதற்கு முன் நைசாகப் பேசி குழந்தைகளைச் சமாதானப் படுத்தும் நோக்கில், “மெட்ராஸ்ல அட்டகாசமான பீச் இருக்கு; பெரிய்ய பெரிய்ய ஹோட்டல்களெல்லாம் இருக்கு; அப்புறம்… Zoo… அங்க இந்த சிங்கம் புலி கரடியெல்லாம் கர்புர்ன்னு சப்தம் போட்டுகிட்டு பார்க்கவே தமாஷாயிருக்கும். பொய்ய்ய்ங்ன்னு சத்தம் போட்டுட்டு எலெக்ட்ரிக் ட்ரெய்ன் இல்லே… அது இப்படியும் அப்படியும் போயிகிட்டு இருக்கும்; அப்புறம் என்னென்ன… ம்… துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பாக்கின்னு திக்கி திக்கி திவ்யாகுட்டி கடைசியில டுமீல்ன்னு சுடுமே… அந்தக் குறள் எழுதுன வள்ளுவர் பேருல ‘வள்ளுவர் கோட்டம்’ன்னு… எப்பா… அந்த வானம் முட்டுக்கும் ஒரே ஒசரமாயிருக்கும் தேரெல்லாம்… ஆங்… மாடி பஸ் கூட உண்டு டட்டடய்ங்க்… அதெல்லாம் பார்க்க வேணாமா?” என்றான்.
“ம்ஹீம்… வேணாம்ப்ப. நாம இங்கியே இருந்துடலாம். இருந்தா ஜாபரு மயில் தோகை தரேன்னு சொன்னான். அதை புத்தகத்துல வச்சி அதுக்கு தென்னை மரத்துலயிருந்து காய்ஞ்ச பட்டையை சுரண்டி வெச்சா குட்டி போடுமாம்!” என்றான் சரவணன், அவனது சால்ஜாப்புக்கெல்லாம் சற்றும் சலனப்படாமல்.
“ஆமாம்ப்பா. நான் கூட தோட்டத்துல ரோஜா செடி வெச்சிருக்கேன். அது பூக்கறதைப் பார்க்காம எப்படிப் போறது?” என்றது மழலை மாறாமல் திவ்யா.
தன் வித்தை பலிதமாகாமல், “அப்படியா… ரோஜாப்பூ வெச்சா உனக்கு ரொம்ப அழகாயிருக்குமே…” என்று அவளது கன்னங்களை வழித்து நெட்டி முறித்துவிட்டு, “சரி போய் விளையாடுங்க” என்று அனுப்பி வைத்தது நினைவுக்கு வந்த போது அவனையுமறியாமல் கண்களில் கண்ணீர் சூடாக வழிந்தது.
வீட்டுக்குள் வந்ததும், குழந்தை திவ்யாவை வாரி மடியில் போட்டுக் கொண்டு, சரவணனை ஒரு பக்கம் சாய்த்து, எப்படி அவர்களைச் சமாதானப் படுத்துவது என்று குழம்பி மெளனத்தை உபாயமாய் கையாண்டான். பின் அவர்களைப் படுப்பதற்காகப் பெட்ரூமுக்குப் போகச் சொன்னான்.
அப்போது அடுப்படியிலிருந்து வந்த நிர்மலா, “ஏன் இவ்வளவு நேரம்? நான் இன்னும் ஆளைக் காணுமேன்னு நெனைச்சிட்டு இருக்கேன். சாப்பிட வேணாமா?” என்றாள்.
“வேணாம். கொஞ்சம் காபி மட்டும் கொடு. பசிக்கலை”.
அவள் காபி கலக்குவதற்காக மறுபடியும் அடுக்களைக்குள் சென்றாள். அங்கிருந்தவாறே குரல் கொடுத்தாள். “போய்ப் பார்த்தீங்களா? அவரு என்ன சொன்னாரு?”
அவனுக்குத் தெரியும். நேரடியாக கேட்க மனமில்லாத போதெல்லாம் அவள் அடைக்கலமாகுமிடம் அடுக்களைதான்.
“ம்… பார்த்தேன். ட்ரை பண்றாராம். ஆனால் நிறைய காசு செலவாகுமாம். அதுவுமில்லாம ட்ரான்ஸ்ஃபரையெல்லாம் மறுக்காம ஏத்துகிட்டா சீக்கிரம் ப்ரமோஷன் கிடைக்குமாம். அப்புறம் பிரச்சினையில்லாம ஜம்முன்னு ஒரே ஊருல இருக்கலாமாம். இப்பக் கொஞ்சம் பல்லைக் கடிச்சிகிட்டு இதைச் சமாளிங்கன்னு சொன்னாரு. எனக்கும் அதுதான் தோணுது. நாம இங்கிருந்து போகறதுல அவருக்குத்தான் பாவம் ஏக வருத்தம். அவர் என்ன பண்ணுவாரு?”
அவன் மேலும் அங்கிருக்க மனமில்லாமல், குழந்தைகள் படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தான். குழந்தைகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொண்டு தானிருந்தனர். ஒரு குற்றவாளியைப் போல குறுகுறுக்கும் மனத்துடன் அருகில் சென்றான்.
“இன்னும் தூங்கலையா?”
“ம்ஹீம்… ஏம்பா மெட்ராஸ்ல மயில்தோகை நிறையக் கிடைக்குமாமே… அம்மா சொன்னாங்க” என்றான் சரவணன்.
இதை எதற்கு இப்போது கேட்கிறான் என்று புரியாமல், என்ன சொல்வது என்று விழித்த போது, காபியுடன் உள்ளே நுழைந்த நிர்மலா, கண்சிமிட்டி சமிஞ்சை செய்தாள்.
இவன் புரிந்து கொண்டு, “ஆமாம்ப்பா… நிறைய கிடைக்கும்”.
“அப்படின்னா மெட்ராஸ் போகலாம்ப்பா”.
“ஆமாம்ப்பா… நான் கூட செடியை எடுத்துகிட்டு வந்திடறேன். மெட்ராஸ்ல ஆரஞ்சு கலர் ரோஜா, மஞ்சள் கலர் ரோஜா செடியெல்லாம் கிடைக்குமாமே…” இது திவ்யா.
“சரி தூங்குங்க. காலையில சீக்கிரம் எழுந்திரிக்கணும்” என்று அவர்களை தூங்க வைக்க முயற்சித்தாள் நிர்மலா.
படுக்க மனமில்லாமல், கேட்க எத்தனித்த கேள்விகளைத் தளராமல் ஸ்டாக் வைத்திருந்த சரவணன், அதிலிருந்து ஒன்றை சலித்துப் பொறுக்கியெடுத்து மீண்டும் சந்தேகத்துடன் கேட்டான். “ஏம்பா மயில் தோகை குட்டி போடுமா?”
“ஓ! போடுமே”
கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் ஏதோ ஒரு நிம்மதியில் கண்ணயர்ந்தார்கள்.
எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிர்மலா அவன் முன் வந்தமர்ந்தாள். மனதில் இருந்த எத்தனையோ கனவுகளையும் திட்டங்களையும் கலைத்துவிட்டு குழந்தைகளின் மனதில் தளர்ச்சி ஏற்படுத்தாமல் அவர்கள் வழியிலேயே தேற்றியிருக்கிறாயே… உன்னை நான் எப்படி சமாதானப் படுத்துவது? என்பது போல் பார்த்தான்.
‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்பதுபோல் கண்களைத் தாழ்த்திப் பார்த்துவிட்டு அவன் கைகளில் முகம் புதைத்து தூங்க முயற்சித்தாள் நிர்மலா. அவனுக்குத் தெரியும். அவள் எத்தனைக் காயப்பட்டிருப்பாளென்று. அவளது சின்னச் சின்ன ஆசைகளை எதிர்பார்ப்புகளைக் கூட நிறைவேற்ற முடியாமல்…
கடவுளே… ஏன் என்னை ஒவ்வொரு முறையும் நிராயுதபாணியாகவே போர்க்களத்துக்கு அனுப்புகிறாய்…?
தூங்கும் புஷ்பங்களைப் பார்த்தான். சரவணன் ஏதோ கேட்கப்போகும் பாவனையில் தூங்கிக் கொண்டிருந்தான்.
மெட்ராசுக்குப் போனதும் எங்காவது மயில் தோகை வாங்கி வந்து மறக்காமல் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனான்.
– 11-03-1990