மயக்கம் தெளிந்தது…

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 5,226 
 
 

அரவிந்திடம் எவ்வளவு தடவை சொன்னாலும் அவன் சொன்னதையே தான் சொல்லிக் கொண்டிருப்பான்.

“அப்பா, நீங்க வரவர ரொம்பவே பிடிவாதம் பிடிக்கிறீங்க. இங்க ஏறினா ஒருமணிநேரம்.கோயம்புத்தூர்!

ஏறினோமா, இறங்கினோமான்னு.எட்டுமணி நேரம் ரயில்ல கஷ்ட்டப்பட்டு, தேவையா?”

“அரவிந்த். எனக்கென்னவோ நீதான் பிடிவாதம் பிடிக்கிறியோன்னு தோணுது. நீங்கள்லாம் பொறந்ததிலேர்ந்து பிளேன்ல பறந்து பழகிட்டீங்க. நாங்க ரயில்ல போய் பழகினவுங்க. ஒரு மணிநேர ஃபிளைட்டுக்கு இரண்டு மணிநேரம் விமானநிலயத்துல.. முடியலப்பா.”

“சரி.விடுங்கப்பா.18 ம்தேதி ராத்திரி நீலகிரி எக்ஸ்பிரஸ்ல மூன்றாவது ஏ.சி கோச்.. லோயர் பர்த் ..சரியா ..??”

“ரொம்ப தாங்ஸ்ப்பா.!!”

அரவிந்த் ஸ்டேஷனுக்கு வந்து S 2 கோச்சில் என்னுடைய ஸீட்டில் .. ஜன்னலோரம்.உட்கார்த்தி வைத்துவிட்டு.

“இதோ வந்திட்டேன்..”என்று சொல்லி விட்டுப் போனான்.

சரியாக பத்து நிமிஷத்தில் ஒரு மினரல் பாட்டிலும் இரண்டு வாழைப்பழமும் கையுமாய் வந்தான் . இது வழக்கமாய் நடப்பது தான்.

“பிளாட்பாரத்திலேயே நில்லுங்க…சிவா வருவான்..”

“சரிப்பா.நீ கிளம்பு.. நிறைய நேரம் இருக்கு.. பாத்துப் போ.”

ஒன்பது மணி ரயிலுக்கு ஏழு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பாவிட்டால் என் தலை வெடித்து விடும். அநேகமாய் முதலில் ஏறி உட்காருபவன் நானாகத்தான் இருப்பேன். பத்து நிமிடம் கழித்து எதிர் ஸீட்டில் ஒரு வயதானவர் வந்து உட்கார்ந்தார். நானும் வயதானவன்தான். எனக்கு எழுபது ஆகிறது. அவருக்கு ஒரு அறுபத்தைந்து இருக்கும். கிராமத்து மணம் வீசியது..

“நீங்க இந்த ஊருதானா ?”

“இல்லீங்க. நான் மேட்டுப்பாளையம். கொஞ்ச நெலபுலம் இருக்குதுங்க. விவசாயம்.

இங்க ஒரு உறமுற வீட்டுக்கு வரவேண்டியதாப் போச்சுதுங்க.

ஒரே நாள்ல திரும்ப போகோணம்..முந்தி மாதிரி இல்லீங்க..முடிய மாட்டேங்குது..”
இனிமையான கொங்கு தமிழ்.

“நீங்க கோயமுத்தூருங்களா ..??”

“இல்ல.. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன். ரெண்டு பையன். சென்னைல ஒருத்தன். கோயமுத்தூர்ல ஒத்தன்..பர்வதம் போனதிலிருந்து மாறி மாறி இருக்க வேண்டியதாய் போச்சு”.

என் பக்கத்தில் ஒரு இளைஞன் வந்து உட்கார்ந்தான்.ஒரு முப்பது வயது இளைஞன். அடிக்கடி பயணம் செய்பவன் போல. யாரையும் திரும்பி பார்க்கவில்லை. வந்ததுமே கையிலிருந்த செல் ஃபோனையும் சார்ஜரையும் எடுத்தான். பிளக்கில் செருகி விட்டு கையிலிருந்த இன்னொரு மொபைலை எடுத்து பேச ஆரம்பித்துவிட்டான். அங்குமிங்கும் நடந்து கொண்டே ஏதோ ஆஃபீஸ் விஷயம் போலிருக்கு.

அடுத்து ஏறினவர் நமது கதையின் நாயகன். அவருக்கும் ஏறத்தாழ என் வயதுதான் இருக்கும். கூட வந்தவர் டிரைவர் என்று புரிந்தது.

“ஸார். இதுதான் உங்க ஸீட்டு.. ஆதார் அட்டை எடுத்து வச்சுக்குங்க. இன்னும் பதினஞ்சு நிமிஷம் இருக்கு..இருக்கட்டா.?”

“அட நீ வேற. நா என்னமோ புதிசா போறமாதிரி.. எல்லாம் எனக்கு தெரியும்..நீ கெளம்பு.போய்ட்டு போன் பண்றேன்னு சொல்லு..”

ஆசாமி கொஞ்சம் கெத்தாகவே இருந்தார்.

“என்ன ‘சீனியர் சிட்டிசன் கம்பார்ட்மென்ட் ஒண்ணு தனியாக ஆரம்பிச்சுட்டானா..?”

“இல்ல ஸார்.அங்க பாருங்க..”

கண்ணால் ஜாடை காண்பித்தேன். பக்கத்து ஸீட் பையன் இன்னும் மொபைலிலிருந்து காதை எடுக்கவில்லை. அதில சார்ஜ் தீர்ந்ததும் இதை எடுப்பான் போல.

“ஸார், நம்ம நாடு உருப்பட வழியே இல்லை.கார நிறுத்திட்டு இறங்கறதுக்குள்ள பட்ட பாடு. யாருக்கும் பொறுமை இல்லை. இரண்டு ஷட்டில வச்சிண்டு இரண்டாயிரம் பேர ஏத்திக்க முடியுமா?. நடந்து வரதுக்குள்ள, கிருஷ்ண..கிருஷ்ணா!”

“ஸார் இந்த ஊருதானா?”

“இதே ஊரு. தாத்தா காலத்திலேர்ந்து. இந்த ஊர்ல என்ன இருக்கோ? கட்டிப் போட்டு வச்சிருக்கு ஸார். அந்த பார்த்தசாரதி படியளக்கறான்”

திருமண்ணைக் குழைத்து பூசி யிருந்தார்..

“எம்பொண்ணுக்கு ஃபோன் பண்ணி சொல்லலைனா ருக்மணி அவள தொலச்சு எடுத்துடுவா”

“ராதா, பாலன் சௌர்யமா உக்காத்தி வச்சுட்டு போய்ட்டான். அம்மாவ கவலப்படாம இருக்கச் சொல்லு. போனதும் கூப்படறேன்.”

டக்கென்று போனைக் கட் பண்ணி விட்டார். கறார் பேர்வழிதான்.

கிளம்ப ஐந்து நிமிடம் இருக்கும் போது நடுத்தர வயது தம்பதி.

“ஸார் இது S2 தானே! உக்காரு அம்மணி”

“உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் கொட்டு வாயில நின்னுப் போட்டுதான் வண்டி ஏறுவீங்க..முடியலடா சாமி.. படபடன்னு வருது”

இளைஞனின் பக்கத்து ஸீட்டில் பொத்தென்று உட்கார்ந்து கொண்டாள் அம்மணி.பெருத்த சரீரம்..

பின்னாலேயே இளம் தம்பதிகள்.. கையில் இரண்டு வயது குழந்தை.ஸைட் பர்த் .

அவர்கள் உட்கார்ந்ததுமே வண்டி கிளம்பிவிட்டது…

“எல்லா சாமானும் எடுத்திட்டிங்களா?. அந்த கறுப்பு பை இருக்குதான்னு பாருங்க. நேரத்தில பொறப்புட்டா என்ன கொறஞ்சு போச்சு?”

“ஏறிட்டோமில்லா, பேசாம இரு அம்மிணி”

எதிரே இருந்தவர் ஒரு சாப்பாட்டு பொட்டலத்தை எடுத்து பிரிக்க ஆரம்பித்தார்.

“நீங்க சாப்பிட்டீங்களா?”

பொதுவாக கேட்டார்.

“ஏழரைக்கு சாப்பிட்டு முடிக்கணும் ஸார். லேட்டா சாப்பிட்டு படுத்தா ஜீரணம் ஆகாது.. நான் டையாபடிக் வேற.. நல்லவேளை. மாத்திரை சாப்பிடணும்.”

நாமக்காரர் பையைக் குடைந்து இரண்டு மூணு மாத்திரைகளை எடுத்து போட்டுக் கொண்டார்.

“நீங்க மெட்ராஸா?”

கணவனைக் கேட்டார்.

“இல்ல ஸார். அவினாசி.கோயமுத்தூர் . இங்க ஒரு உறமுற வீட்டு விசேஷம். தாய் மாமன் சீரு செய்யணோமில்ல”

அதற்குள் அம்மணி அம்மாளுக்கு பொறுக்கவில்லை..

“தம்பி.நீ அந்தப்புறம் போயி உக்கார முடியுமா? இங்க அவிக உக்காந்தா சவுரியமா இருக்கும்.”

கணவனை வெற்றிகரமாக அந்த கூட்டணியிலிருந்து பிரித்த மகிழ்ச்சி அம்மணி முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது..

கணவன் ஏதும் உளறிவிடுவாரோ என்ற பயமோ என்னமோ?

பக்கத்து இளைஞனும் இதற்காகவே காத்திருந்த மாதிரி உடனே எழுந்து நின்று விட்டான்.

இந்த கூத்தெல்லாம் பத்து மணி வரை தானே. அப்புறம் ஏறிப்படுத்தால் கோவை.

எதிர்த்த ஸீட் தம்பதிகளின் குழந்தை ‘நை..நை’ என்று அழுது கொண்டிருந்தது.

மாறி மாறி ஏதோ ஜுஸ், சாக்கொலேட், சிப்ஸ் என்று குடுத்து அதன் வாயை அடைத்துக் கொண்டிருந்தார்கள்.

நாமக்காரரால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியவில்லை.

“குழந்தைக்கு ரொம்ப இனிப்பு குடுக்கக் கூடாது ஸார், ரொம்ப ஹைப்பர் ஆய்டுவான். அது விஷம் ஸார் விஷம். வேற பழம். இல்லைனா கேரட் அந்தமாதிரி குடுத்து பழக்குங்க”

“சாப்பிட மாட்டேங்கிறானே ஸார். ரொம்ப பிடிவாதம்.”

“காலையிலேர்ந்து ராத்திரி வரைக்கும் நாம சாப்பிடறதெல்லாமே விஷம் தான் ஸார்..

எண்ணைல பொரிக்கிறது.

இல்லைனா நெய்யக் கொட்டி இனிப்பு. கண்ட கண்ட எண்ணைய்.

நம்ப ஊரு சமோசா தான் அதிகமாக கொழுப்பு சத்துன்னு சொல்றாங்க தெரியுமா…??”

“அட நீங்க வேற..வெளி நாட்ல சாப்பிடாத சிக்கனும் மட்டனுமா நாம சாப்பிடறோம்.??”

நானும் பதிலுக்கு சொன்னேன்.

“ஆனா நம்மள மாதிரி இனிப்பு யாருமே சாப்பிடறதில்லை”

“ஸார் சொல்றது சரிதான்.எம்பையன் வெறும் சக்கரையையே வாரி வாரி முழுங்குவான்..

பையனின் அப்பா குறை பட்டுக் கொண்டார்.

இப்போது நாமக்காரரின் கவனம் பக்கத்து இளைஞன் மேல் திரும்பியது.

“நீங்க மெட்ராஸ் தானா?”

“ஆக்சுவலா சொந்த ஊர் நாகர்கோவில்.

ஒரு வருஷமா சென்னை. சின்னதா ஒரு டெக்ஸ்டைல் யூனிட் ஆரம்பிச்சிருக்கேன்.

அப்பா. .அம்மா..ஊர்ல..

திருப்பூர்ல நிட்டிங் ஆலையில கொஞ்சம் வேலை இருக்கு..”

“அப்பா.. அம்மா..தனியா இருந்துப்பாங்களா?”

“ஸார்..நானே இன்னும் செட்டில் ஆகல.. அப்பா.அம்மா..நல்லாவே இருக்காங்க.

ஊருல அவங்களுக்கு நிறையவே வேலை இருக்கு”

“வேல..வேலன்னு அம்மா அப்பாவ மறந்துடாதீங்க தம்பி”

அந்த இளைஞனுக்கு லேசாய் கோபம் வந்திருக்க வேண்டும்.

“ஸார். நீங்க என்ன தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க.கூட வச்சிக்கலைன்னா பாசம் இல்லைன்னு அர்த்தம் இல்லை.

மத்தவங்க என்ன நெனப்பாங்களோன்னு கூடவே வச்சிட்டு ஒரு வேள சாப்பாடு கூட போடாம வாயால புண்படுத்தறவங்க எத்தனையோ பேர்..

நான் மாசம் ஒரு தடவையாவது போயிட்டு தான் இருக்கேன்.அவங்க ரொம்ப சந்தோஷமாவே இருக்காங்க.”

நாமக்காரர் வாயை மூடிக்கொண்டார்.

நமது கதாநாயகன் கிராமத்துக்காரரையும் விட்டு வைக்கவில்லை.

“நீங்க என்ன பயிர் விவசாயம் பண்றீங்க. இப்ப மழையும் சரியான பெய்யறதில்லையே. அரசாங்க உதவி கிடைக்கறதா ..? லாபம் இருக்கோ..??’

“அதையேன் கேக்குறீங்க.. முதல்ல வாழதான் நிறைய போட்டோமுங்க..

யான நடமாட்டம் தாங்கல.எல்லாம் நசிச்சு போடுமுங்க..

காய்கறி வியாபாரம் ஓரளவுக்கு லாபம் பாக்கலாமுங்க.இப்போ எல்லாமே சம்பங்கி பூவுதாங்க.. நல்லா போவுது..”

“நீங்க லாபத்துக்காக எல்லாத்திலேயும் மருந்தடிச்சு விட்டுடுறீங்க. புது புது வியாதியெல்லாம் வருது”

“ஸார்.. மனசாட்சி இல்லாம அப்படியெல்லாம் செய்யமாட்டோம். எங்க குழந்த குட்டிகளும் அதத்தானே சாப்பிடுதுங்க..

TTR வந்து எல்லாம் செக் பண்ணிவிட்டு போய் விட்டார்.

இளைஞன் மேல் பெர்த்திலிருந்து எல்லோருடைய கம்பளி. போர்வை எல்லாம் எடுத்துக் கொடுத்தான்..

எனக்கும் மேட்டுப்பாளையக்காரருக்கும் கீழ். பெர்த்.

அம்மணியம்மாள் குசுகுசுவென்று கணவனிடம் ஏதோ சொன்னாள்.

“ஸார்.சிரமமில்லைனா ஒரு சின்ன உதவி”

கணவன் பொதுவாய் எல்லோரையும் பார்த்து சொன்னார்.

“அம்மணியால மேல ஏற முடியாது. உங்களுக்கும் வயசாச்சு! கேக்கறதே தப்பு!

யாராவது முடிஞ்சா . கீழ் பெர்த் கிடைக்குமா?”

கொஞ்சம் கூட யோசிக்காமல் கிராமத்துக்காரர்,

“அம்மா, நீங்க தாராளம என் பெர்த்தில் படுத்துக்குங்க. எனக்கு ஒரு கஷட்டமும் இல்லை”

கிராமத்து உழைப்பு. மேல் பெர்த்தில் கூட ஏறிவிடுவார் போலிருந்தது .

“நான் மேல போயிடறேன். ஸார் நீங்க நடு பெர்த்தில படுத்துக்குங்க”

என்று கணவனிடம் கூறிவிட்டு பதிலைக்கூட எதிர் பார்க்காமல் ஒரே தாவாய் மேலே ஏறி படுத்துவிட்டான் இளைஞன்..

நாமக்காரர் நல்ல உயரம்.நடு பெர்த்தில் ஏறுவதில் சிரமம் இல்லைபோல் இருக்கிறது..

காலைத் தயாராக வைத்தவர் அப்படியே தலை சுற்றி மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.

முகமெல்லாம் வேர்த்துக் கொட்டியது.. வாய் குழறியது..

எல்லோருமே ஒரே நேரத்தில்’ ஐய்யோ. ஸார்’ என்று கத்தி விட்டோம்.

டக்கென்று உடனே மேல் பெர்த்திலிருந்து குதித்து விட்டான் இளைஞன்.

இரண்டு பேராகத் தூக்கி பெர்த்தில் உட்கார வைத்தார்கள்.

“சுகர் குறஞ்சிருக்கும்னு தோணுது’ என்றான் இளைஞன்..

எதிர்த்த ஸீட் தம்பதிகளின் குழந்தை அமர்க்களம் பண்ணிவிட்டு ஒருவழியாக தூங்கினப்புறம் , அப்போதுதான் ஒரு பெரிய டிபன் பாக்ஸை திறந்து வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கியிருந்தனர் அந்த இளம் தம்பதிகள்..

“இருங்க தம்பி. என் மனைவி நர்சிங் படிச்சவதான். அவ பாத்து சொல்லிடுவா..”

அதற்குள் அம்மணி அம்மாள் தன் ஹாண்ட்பேகிலிருந்து ஒரு க்ளுக்கோமீட்டரை எடுத்தாள்.

“தம்பி.. நானும் சுகர் பேஷன்ட்டுதான்தான்..கையிலேயே வச்சிருப்பேன்.”

எதிர் ஸீட்டு பெண் அதை வாங்கி பெரியவரை test பண்ணினாள் ..

“நீங்க சொன்னது சரிதான் தம்பி. சுகர் 70 கிட்ட வந்திட்டது..”

அதற்குள் பெரியவர் லேசாய் கண்ணைத் திறந்து மாத்திரை. மாத்திரை .”என்றார்.

அந்தப்பெண் உடனே கணவனிடம் “
“பாப்பா டப்பியிலிருந்து ஒரு ஸ்பூன் சக்கரை எடுங்க..”

என்றாள்.அத கொஞ்சம் தண்ணியில கரச்சு தாங்க.. ஒரு ஸ்பூனும் குடுங்க.”

கிராமத்து பெரியவர் அவரின் தலையை மடியில் வைத்துக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்பூனில் சர்க்கரை தண்ணியை வாயில் ஊட்டினாள்..

மறுபடியும் கணவனைப் பார்த்து,

“பாப்பா பைக்குள்ளாற ஒரு மிட்டாய் இருந்தா எடுங்க.”

பெரியவர் கண்ணை நன்றாக முழித்துப் பார்த்தார்..

“ஒண்ணும் பயப்படாதீங்க.. சுகர் குறஞ்சிட்டது. அதான் லேசான மயக்கம்.. இந்த மிட்டாய வாயில அடக்கிக்குங்க. அப்பறம் ஒரு இட்லி வேணா சாப்பிடலாம்..”

அவள் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“நீங்க சாப்பிடுங்க..”என்றாள் அம்மணி.

பெரியவர் தட்டுத் தடுமாறி எழுந்திருக்க முயற்சி செய்தார்.

“ஸார். பேசாம படுங்க..பசிச்சா மட்டும் சொல்லுங்க.!”

“அப்போ நீங்க.??”

“பாத்துக்கலாம் ஸார்.”என்றேன் !!

கிராமத்து பெரியவர் பையிலிருந்து ஒரு காகித பொட்டலத்தை எடுத்தார்.

கொஞ்சம் விபூதியை எடுத்து நெற்றியில் பூசிவிட்டார்..

“மாரியாத்தா ஒரு குறையும் வைக்க மாட்டா “

பெரியவர் ஏதோ முணுமுணுத்தார்..

“தெரியாம இரண்டு மாத்திரை சாப்பிட்டு தொலச்சிருப்பேன்.”

“போகுது.விடுங்க. என்றான் அம்மணியின் கணவன்.

எதிர் ஸீட்டு குழந்தையின் அப்பா என்னைப் பார்த்து.

“ஸார். உங்களுக்கு ஆட்சேபம் இல்லைனா நீங்க கீழ் பெர்த்ல படுத்துக்குங்க. என் மனைவி குழந்தையோட மேல படுத்துப்பா..”

“என்ன மகி..??”

“எனக்கு ஒரு சிரமும் கிடையாது.”

“இதோ பத்து நிமஷத்தில சாப்பிட்டு முடிச்சிடுவோம்.”

இரண்டு இட்லியை தட்டில் வைத்து கொஞ்சம் தக்காளி சட்னியும் வைத்து பெரியவரிடம் நீட்டினாள்.

அவர் எழுந்து உட்கார்ந்து இட்லியை விண்டு வாயில் போட்டுக் கொண்டார்.

“நான் என்ன புண்ணியம் பண்ணியிருக்கேனோ.. ரங்கன் என்னை இந்த கம்ப்பார்ட்மென்ட்ல ஏத்தி விட்டிருக்கான். என்னால உங்களுக்கெல்லாம் எத்தனை கஷ்டம்.!!”

“ஸார்.பேசாம படுங்க. நான் உங்க பக்கத்தில்தான் உக்காரப்போறேன்..

குறைஞ்சது இரண்டு தடவை சுகர் செக் பண்ணிட்டு தான் மேல போவேன்.”

“தம்பி. உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்.?”

“எங்கம்மா பயங்கர சுகர் பேஷன்ட். ஊருக்கு போனா நான்தான் அவங்கள பாத்துக்குவேன்..பழக்கமாயிடிச்சு ஸார். நிம்மதியா தூங்குங்க..!”

எல்லோரும் லைட்டை அணைத்து விட்டு படுக்கப் போனோம்..

முன்னப்பின்ன தெரியாதவர்கள். ஏறும் போது நினைத்துப் பார்த்திருப்போமா??

அடுத்தவர்களைப் பற்றி தவறான கணிப்பு .இப்போதோ ஒரே குடும்பமாய்!

இதில் ஒரு வேடிக்கையை கவனித்தீர்களா??

ஒருத்தர் கூட அவர்களுக்கான பெர்த்தில் படுக்கவில்லை.!!

“God does not play Dice!”

“கடவுள் பகடை உருட்ட மாட்டார்!”

Print Friendly, PDF & Email

2 thoughts on “மயக்கம் தெளிந்தது…

  1. உங்கள் விமரிசனத்துக்கு மிக்க நன்றி பாரதி..

  2. மனித மனங்களை பற்றி அழகிய நடையில் கூறும் அருமையான கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *