கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 8,785 
 
 

திரு. பரந்தாமன் அன்றைய மாலைப்பொழுதில் மிச்சமிருக்கும் வயதைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். இதுநாள்வரையிலான வாழ்க்கை அவருக்குத் தூக்கிப்போட்டுவிட்டுப் போகும் காகிதக் குப்பைகளாகத் தெரிந்தது. ஏறக்குறைய அவரின் பெரும்பாலான வாழ்க்கையின் பக்கங்கள் எழுதப்பட்டு இறுதி அத்தியாயத்துக்காக மட்டும் காத்திருப்பதாக அவருக்குத் தெரிந்தது. மனம் வெறும் வெறுமைகளை மட்டுமே தாங்கிக்கொண்டு இருப்பதாகத் தோன்றியது.

மற்றவர்களைப் போலத்தான் அவரின் வாழ்க்கையும். ஓர் அலுவலகத்தின் சாதாரண அலுவலராக அதற்கான வழக்கமான தகுதிகளுடன் ஒரு வேலையோடு ஆரம்பமானது. கடின உழைப்பு அதே அலுவலகத்தில் ஒரு கணக்காளராகவும் பின் நிதித்துறை அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்று அவரை உயரத்தில் கொண்டுவந்து அமர வைத்தது. பணம் உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்து மனித வாழ்க்கையையே திருப்பிப் போட்டு வைத்திருக்கிறது. மனித வாழ்வின் உயர்வுக்கும் வீழ்ச்சிக்கும் பணமே பிராதானமாகப் போய்விட்டது. பணம் உள்ளவனை, அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் இவ்வுலகம் ஏற்றுக்கொண்டு புகழ்பாடும் அளவுக்குப் பக்குவப்பட்டுவிட்டது. அப்பேர்ப்பட்ட பணம் தொடர்கான உயரிய உத்தியோகம் அவருக்கு வாழ்க்கையில் பல சிக்கல்களையும் சிரமங்களையும் தொல்லைகளையும் கூடவே கூட்டிக்கொண்டு வந்தது.

குளிர்ச்சாதன வசதியுடன் கூடிய அந்த அறையில் கட்டுக்கட்டான பணநோட்டுகளுக்கு நடுவே அவரின் அன்றாட வேலை. ஆரம்பத்தில் ஒரு சுமையாகவும் பயம் கலந்ததாகவும் இருந்தது. இவ்வளவு பணம் அவரைச்சுற்றி இருக்கும்போது பல சமயங்களில் இப்பணத்தைக் கொண்டு என்னென்ன பொருட்கள் எல்லாம் வாங்கலாம் என மனம் சஞ்சலப்படும். அவருக்குப் பிடித்த ஒரு பி.எம்.டபுள்யூ வாங்கலாம். பெரிய பங்களா வீடு வாங்கலாம். வீட்டில் மனைவி கேட்பதையெல்லாம் அவள் முன்னே விட்டெறியலாம். இன்னும் இன்னும் என்னென்னவோ எண்ணங்கள் அவரைத் தீண்டிச் செல்லும். ஆனால் தனக்கிருக்கும் இந்த வாழ்க்கை போதுமானதாகவே அவருக்குப் பட்டது. வேலையில் நேர்மையுடனும் இருப்பதற்கு அது உதவியாகவும் இருந்தது. அப்பேற்பட்ட அந்த வேலை இன்றோடு நிறைவடைகிறது. மற்ற ஊழியர்களைப் போல பணி ஓய்வு எடுக்கும் வயது அவருக்கு. வேலையில் சேர்ந்த நாளிலிருந்து பகலைத் தொலைத்திருந்தவர், இரவை மட்டுமே அதிகம் பார்த்துப் பழகிப்போனார். வேலை….வேலை….வேலை…. வேலை செய்தால்தான் குடும்பத்தைக் கரைச்சேர்க்க முடியும். அப்படி ஓடி ஓடி ஓடி, நின்று பார்க்கும்போது வாழ்க்கையில் தனக்காக எதுவும் செய்துகொள்ள முடியாத நிலைதான் மீதமிருக்கிறது. வாழ்க்கை அது வாழ்க்கையாக இல்லை. போராட்டமாகத்தான் இருந்திருக்கிறது. போராடி போராடி போராட்டமே வாழ்க்கையாகியிருக்கிறது. இனிமேலாவது, அமைதியாக மிச்சமுள்ள காலத்தைக் வீட்டில் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என கழிக்கவேண்டியதுதான் என நினைவுகளில் பலவற்றையும் சுமந்துகொண்டு நடந்தார். ஆனால் அவர் விரும்பும் அந்த அமைதியான வாழ்க்கை அவருக்குக் கிடைக்குமா என்ற கேள்வியும் அவரின் நெஞ்சைக் கீறிக்கொண்டேயிருந்தது. இதுநாள் வரையிலான அவரின் குடும்ப வாழ்க்கையில் அவர் விரும்பிய அந்த அமைதி, மகிழ்ச்சி என்பதெல்லாம் வெறும் கனவாக மட்டுமே இருந்திருந்தன. பல சூழல்களில் இந்த வாழ்க்கையே வேண்டாம் என வெறுத்து ஒதுங்கிய போதும், பிள்ளைகளுக்காகத் தன்னையே இழந்து குடும்ப வாழ்க்கையில் தொடரவேண்டிய நிர்ப்பந்தம். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அவரைப்பொறுத்தவரையில் நிதர்சனமாகிப்போனது.

வீட்டில் நுழைந்தவுடனேயே,

‘என்ன வந்திட்டீங்களா……கவலையா இருக்குறமாறி இருக்கு. ஏன் இனிமேல் உங்கள் செக்ரட்டரிகூடயும் சின்ன சின்ன குட்டிகளோடும் இனியும் கொஞ்சிப்பேசி கூத்தடிக்க முடியாதுன்னு கவலையா?’

எனக்கேட்டுவிட்டு, முறைத்துப் பார்த்தாள் அவர் மனைவி மீனாம்பாள்.

பணி ஓய்வு பெற்ற பிறகாவது இந்தப் பிரச்சினை ஓயும் என்று நினைத்திருந்தார். ஆனால் மனைவியின் வாய்ச்சாடல், இது அணையா அழல் என்று அவருக்கு உணர்த்தியது. பெண்ணின் மனம் அதுவும் அவர் மனைவி போன்ற பெண்களின் இதுபோன்ற மன வியாதிகளுக்கு எவ்வித மருந்தையும் யாராலும் கண்டுபிடிக்க இயலாது என்பதை உணர்வுப்பூர்வமாக அவர் உணர்ந்திருந்தார்.

‘அதான் இன்னையோட எல்லாம் முடிஞ்சிருச்சே, இனியும் அதையே ஏன் பேசிக்கிட்டு’

இந்தக் கேள்வி அவள் பேச்சைக் குறைத்திடும் என்றிருந்தார்.

‘ஆம்பளைங்களுக்கு வயசு ஆவ ஆவத்தான் இளமைத் துள்ளுதுனு சும்மாவா சொல்றாங்க’

அவளின் இந்தப் பதிலடி, அவர் மனத்தை இன்னும் விரக்திக்கு அழைத்துச் சென்றது.

உலகின் பிரசித்துப் பெற்ற மனோவியல் தத்துவ ஞானிகளால்கூட பெண்களின் மன ஆழத்தையும் அவர்களுக்குள் உறைந்து கிடப்பவைகளையும் கண்டுபிடித்துச் சொல்லிவிட முடியாது. அது ஒரு பாழ்கிணறு. தேவையற்றவைகளே அங்கு அதிகமாகக் குடிகொண்டு அவர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. படித்த பெண், படிக்காதவள் என்றெல்லாம் இங்கு வித்தியாசங்கள் கிடையாது. எல்லாருக்குமே இதுபோன்ற விஷயங்களில் எல்லாமே ஒன்றாகவே படுகிறது ஒன்றாகவே தெரிகிறது. இன்னும் இருக்கும் சொச்ச காலமும் அவளின் வசைகளாலேயே வாழ்க்கையை ஓட்டவேண்டியுள்ளதை நினைக்கையில் மனத்துக்குள் என்னவோ செய்தது. தன் வாழ்க்கை இத்தனை துர்பாக்கியமானதாகி விட்டதே எனக் கலங்கி நின்றார்.

மீனாம்பாளைத் திருமணம் செய்து கொண்டபோது அவருக்கு வயது இருபத்திரண்டு. காதலித்துத்தான் கல்யாணம் செய்து கொண்டார்கள். நவநாகரிக நங்கையான அவளிடம் கண்ட பல நல்ல குணங்கள் அவரை அவள்பால் ஈர்த்தது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகத்தான் அவர்களின் குடும்ப வாழ்க்கை இருந்தது. காதல் மனைவி மிகவும் அன்பானவளாகவும் பண்பானவளாகவும் இருந்தாள். அவரின் நண்பர்களுடனும் மிகவும் சகஜமாகப் பழகும் குணம் கொண்டவளாக இருந்தாள். வீட்டிற்கு வரும் அவரின் நண்பர்களை அவளின் விருந்தோம்பல் மெய்சிலிர்க்க வைக்கும். அப்படித்தான் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வாள். அவளா இன்று இப்படி மாறி நிற்கிறாள்? என்று பல தடவை அவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்வார். அப்படியென்றால் அவள் காட்டிய அன்பு, பாசம், அக்கறை எல்லாம் உண்மையானதில்லையா? எல்லாம் ஒரு மாயைதானா? என்ற கேள்விகள் அவருக்குள் வேரிட்டுப் படர்ந்துகொண்டிருந்தன.

மீனாம்பாள் அவர்மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்ததுதான் இங்கு அனைத்துக்குமே காரணமாகி நின்று அவரின் குடும்பம் மற்றும் தாம்பத்திய வாழ்க்கையையே கலைத்துப் போட்டுவிட்டது. படித்த பெண்கள்கூட இப்படி மற்றவர் சொல்கேட்டு இப்படியெல்லாம் ஆகிவிடுவார்களா என அவருக்கு வியப்பாக இருக்கும். பின் அதுவே அவருக்குச் வேதனையாகவும் இருக்கும். எப்படியெல்லாம் அன்பைப் பொழிந்தவள் இன்று கொட்டும் தேளாகக் கொட்டிக்கொண்டிருக்கிறாளே என மனம் ஏக்கத்தோடு பழையவைகளை அசைபோட்டுப் பார்க்கும்.

ஒவ்வொரு நாளும் சம்பளக் கணக்கைக் கேட்டு நச்சரித்துக்கொண்டேயிருப்பாள். அவருக்குத் தெரியாமல் அவரின் பணப் பையைத் திறந்து பார்ப்பாள்.

‘வீட்டுக்குப் பாதி சம்பளப் பணம்தான் கொடுக்குறீங்க, மத்தப் பணமெல்லாம் அவகிட்ட கொட்டுறீங்களா? மத்தவங்க சொல்றதெல்லா உண்மைதான் போலருக்கு’ என முதல் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப்பின் அவள் கேட்க ஆரம்பித்தாள். அன்று ஆரம்பித்த அவளுடனான வாழ்க்கைப் போராட்டம் இன்றும் ஓய்ந்த பாடில்லை.

‘கண்டவங்க சொல்றதெல்லாம் கேட்டுக்கிட்டு பேசாத மீனா, உனக்கே நல்லா தெரியும் நாம வாங்க போற அந்த வீட்டுக்கான முன் பணத்துக்காகத்தானே அந்த மீத சம்பளப் பணத்த சேத்துக்கிட்டு வரேன்.’

‘நம்ம கிட்ட இப்ப இருக்குற காசு பத்தாதா?’

‘பத்தாது மீனா.’

‘எப்படி பத்தும், எல்லாத்தையும் அவளுக்குச் செலவழிச்சா எப்படி பத்தும்’

‘திரும்பத் திரும்ப நீ சம்பந்தமே இல்லாம தப்புத் தப்பா பேசிக்கிட்டே இருக்க. இப்படியெல்லாம் பேசுறீயே, அதுல ஏதாவது உண்மை இருக்கானு என்னைக்காவது யோசிச்சிப் பார்த்திருக்கிறீயா?’

‘நெருப்பில்லாமலா பொகையிது? இல்ல காத்து இல்லாமத்தான் மரக்கிளைகள் ஆடுமா?’

இதுபோன்ற அவளின் அடிப்படையற்ற சந்தேகங்களால் அவர்களின் இல்லற வாழ்க்கையில் நீண்டதொரு விரிசல் விழுந்து அவர்களின் வாழ்க்கைப் பயணத்தையே திசை திருப்பிப் போட்டுவிட்டது.

அவருக்குக் கீழ் அடுத்த நிலையில் இருக்கும் ஜானகிராமன் எப்போதுமே அவர்மேல் பொறாமை கொண்டவனாக இருந்தான். வேலைக்குச் சேர்ந்த புதிதில் அண்ணா அண்ணா என்று அடக்க ஒடுக்கமாக இருந்து அவரிடமிருந்து வேலை தொடர்பான பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, இன்று அவருக்கே ஒரு மாபெரும் தலைவலியாக உருவெடுத்தான். அலுவலகத்தில் அவருக்குத் துணை அதிகாரியாக இருக்கும் ஜெஸ்மின் என்ற பெண்ணுக்கும் அவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக ஒரு புரளியை அலுவலகம் முழுவதும் பரப்பிவிட்டான். அதோடு மட்டுமல்லாமல் மீனாம்பாள்வரை அந்த விஷயத்தைக் கொண்டு சென்றுவிட்டான். ஆனால் ஜெஸ்மினுக்கும் அவருக்கும் இருக்கும் உறவு, ஒரே அலுவலகத்தில் அதிகநாள் வேலை செய்யும் இருவருக்கும் இருக்கும் மிகச் சாதரண நட்பாகவே இருந்தது. அலுவலக நிதித்துறை சார்ந்த பல வேலைகளை இருவருமே இணைந்து செய்யவேண்டிய சூழல் அந்த அலுவலகத்தில் இருந்ததால் அவர்களின் வேலை தொடர்பான நெருக்கம் மற்றவரின் பார்வைக்கு வேறுவிதமாகப் பட்டது.

அன்றொருநாள் வழக்கம்போல் அவர்கள் இருவர் மட்டும் அலுவலகத்தில் இருந்த சமயத்தில், அவர் எதிரே அமர்ந்திருந்த ஜெஸ்மின் அவர் கண்களுக்கு வேறுவிதமாகக் காட்சியளித்தாள். உடலை ஒட்டிய இறுக்கமான ஆடையும் மினி ஸ்கேர்ட்டும் அவளின் உடல் வாகை மிகவும் லாவகமாகக் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தது. அவளின் வட்ட முகமும் சுருள் சுருளான கூந்தலும் சிவந்த மேனியும் அவருக்குள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. எந்த உறவும் இல்லாத ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனிமையில் யாருமற்ற சூழலில் தனித்திருக்கும்போது அங்கு மனத்திற்குள் அடக்கிவைக்கப்பட்டிருக்கும் சாத்தான்களின் வேதங்கள் ஓதப்பட்டு அவர்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும் தீய எண்ணங்களின் தீண்டலால் ஏற்படும் சபலம் என்பது அன்று அந்தக் கணத்தில் அவருக்குள்ளும் எட்டிப் பார்த்தது. கையில் வைத்திருந்த கணக்கறிக்கையை எடுத்துக்கொண்டு அவள் அருகில் சென்றவர், மேசையில் இருந்த அவளின் மென்மையான விரல்களின் மேல் தன் விரல்களை வைத்தார். அந்தச் சமயத்தில் எதிர்பாரத விதமாக அந்த அறைக்குள் நுழைந்த ஜானகிராமன் அதைப் பார்த்துவிட்டு, சமாளித்துக் கொண்டவன்,

‘கார் சாவியை இங்கேயே விட்டு விட்டுப் போயிட்டேன்.’

எனக் கூறிக்கொண்டே தன் மேசைக்குச் சென்று சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

பதட்டத்துடன் கையை விடுவித்துக்கொண்டவரிடம்,

‘ஏதோ தெரியாமல் விரல்தானே பட்டது. அதற்காக ஏன் இவ்வளவு பதற்றப்படுறீங்க சார்?’

என மிகவும் சாதரணமாகச் சொல்லிவிட்டு எதுவும் நடக்காததுபோல அவள் வேலையைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டாள்.

அன்றிலிருந்துதான் அவருக்கு இப்பிரச்சினை பெரும் தலைவலி கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அவர்கள் இருவரைப் பற்றியும் பேசுவதற்கு அன்றைய சம்பவம் ஜானகிராமனுக்கு அவலாய் அமைந்துபோனது. இந்த விஷயமும் அரசல் புரசலாக மீனாம்பாள் காதுக்கும் எட்டிவிட்டது.

‘மீனா தயவு செய்து சொல்றத கேளு, நீ நெனைக்குற மாதிரி எந்தத் தப்புமே அங்க நடக்கல.’

‘அங்க நடக்கலனா, வேற எடத்துல நடக்குதா?’

‘மீனா…’

‘இப்பத் தெரிஞ்சுப்போச்சுல நீங்க ஏன் ஒவ்வொரு நாளும் லேட்டா வீட்டுக்கு வறீங்கனு, இதா…நீங்க செய்ற ஓவர் டைமு எப்போதும் அவளோட’

‘மீனா…’

அவர் குரலின் கடுமை வீடு முழுக்க எதிரொலித்தது.

அதன்பிறகு அலுவலகத்தில் மீண்டும் அப்படியொரு அசம்பாவிதம் நிகழாமல் அவர் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டுவந்தபோதும், வீட்டில் அந்தச் சம்பவத்தின் அனல் ஓய்ந்தபாடில்லை. மாதத்தில் எப்போதாவது ஏற்படும் வாய்ச்சண்டை, வார அடிப்படையில் வந்து இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் பற்றிக்கொண்டுவிட்டது. பெரும்பாலும் இவரே எதுவும் பேசாமால் அடங்கிப்போய்விடுவார். என்றாவது ஒரு நாள் கோபத்தின் உச்சிக்கு அவர் ஏறும்போது வீடே அல்லோலப்பட்டுவிடும். பிள்ளைகள் பயந்து கதறுவார்கள். மீனாம்பாளின் உறவுகள் பஞ்சாயத்துப் பண்ண வந்துவிடுவதுமுண்டு.

மீனாம்பாளின் அளவுக்கதிகமாகக் கொழுப்பேறிப்போன உடம்பு எதிர்படும்போதெல்லாம், அன்றைய அவளின் பழைய தோற்றமே அவர் முன்னே நிழலாடும். ஆனாலும், தன் நான்கு குழந்தைகளையும் சுமந்த உடல் என்பதால் அந்த உடல்மேல் அவருக்கு வெறுப்பே ஏற்படுவதில்லை. இருப்பினும், சில சமயங்களில் அந்த உடம்பை ஜெஸ்மின் உடம்போடும் பார்க்கும் மற்ற பெண்களின் உடம்போடும் ஒப்பிட்டுப் பார்ப்பதும் உண்டு. ஜெஸ்மினின் கொஞ்சலான இனிய குரலும் அவர்மேல் அவள் காட்டும் தனி அன்பான உபசரிப்பும் ஆரம்ப காலத்தில் மீனாம்பாளிடம் இருந்திருந்தாலும், ஒவ்வொரு பிள்ளைகளாக வரவர, அவளின் ஒட்டுமொத்த கவனிப்பும் குழந்தைகள்மேல் விழுந்து, அவரைப் பற்றி எதுவும் அக்கறை கொள்ளாதவளாக மாற்றியிருந்தது. கணவன் மனைவி உறவுக்குள் இடைவெளி விழுந்துவிட்டால், அந்த இடைவெளியை நிரப்பும் வண்ணம் இன்னொரு சூழல் ஏற்படும்போது மனம் அதைத்தேடி ஓடுவதைத் தடுத்து நிறுத்துவது சிரமம்தான். அப்படிப்பட்ட ஒரு நிலைதான் அன்று அவருக்கும். ஆனால், நல்லவேளையாகத் தப்பாக எதுவும் நடந்துவிடவில்லையே என அவர் மனம் ஆறுதல் பெற்றது.

ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்த மூத்த மகனிடம்,

‘உங்க அம்மாவ எப்படி சமாதனப்படுத்துறதுன்னு தெரில. நா ரிடையராகி வந்த பின்னும்கூட உங்க அம்மா மாறல்ல. ஒவ்வொரு நாளும் அவ பேசுற பேச்ச காது கொடுத்துக் கேக்கவே முடியல.’

‘நீங்க ஒரு ரெண்டு வாரத்துக்கு எங்காவது வெளியே போயிட்டு வாங்கப்பா. அப்புறமா அம்மாகிட்ட ஏதாவது மாற்றம் ஏற்படுதான்னு பாப்போம்.’

மகன் குமரேசன் சொல்வதும் அவருக்குச் சரியாகப் பட்டது. அவரின் பல நண்பர்கள் பத்தாம் தீவில் இருப்பதால், அவர்களைப் பார்த்து வரலாம் எனக் கிளம்பிவிட்டார். உலக வர்த்தக மையத்தில் ஃபெர்ரி எடுத்து, பத்தாம் தீவைச் சென்றடைந்தவரை அங்கிருந்த பசுமையும் அமைதியுமான சூழலும் பழைய நண்பர்களின் உபசரிப்பும் அவரைக் குதூகளிக்கச் செய்தது. இதுநாள்வரையிலும் மனத்தில் பாரமாக அமுத்திக் கொண்டிருந்தவைகளெல்லாம் எங்கே போனதென்றே தெரியவில்லை. மனம் இலகுவாகி விட்டிருந்தது.

ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு வந்தவுடன், மீனாம்பாள் அவருக்குள் அணைந்திருந்த அனைத்தையும் மீண்டும் தன் பேச்சுகளால் பற்றவைத்தாள். அவர் இதயம் மீண்டும் கொதிக்க ஆரம்பித்தது.

‘மீனா, நாம அமைதியா வாழனும், இருக்குற கொஞ்ச காலத்திலும் மகிழ்ச்சியா இருக்கனும், நானும் ரிடையர் ஆகிட்டேன். பிள்ளைகளெல்லாம் பெருசா ஆயிட்டாங்க, பேரப்பிள்ளைகளெல்லாம் இருக்காங்க. இனியும் நாம இப்படியே சண்ட போட்டுக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்? மருமகள்களும் மருமகன்களும் நம்ப பிள்ளைகளை எப்படி மதிப்பாங்க?’

‘வயசானவங்க வயசானவங்க மாறி நடந்துக்கனும். இன்னமும் வாலிப வயசு மாறி ஆடிக்கிட்டு இருந்தா நா என்ன செய்யறது?’

‘இப்ப நீ என்ன சொல்ல வர்ற?’

‘நீங்க எதுக்கு பத்தாமுக்கு போனீங்கன்னு எனக்குத் தெரியாதா?’

‘நாந்தான் ஏற்கனவே சென்னேனே, என்னோட பழைய கூட்டாளிகளைப் பாக்கப்போறேன்னு.’

‘பழைய கூட்டாளிகள பாக்க போனீங்களா இல்ல புதுசா ஒரு குட்டிய புடிக்க போனீங்களா?’

‘மீனா…’

அவரின் அதிர்வுக் குரலால் மீண்டும் அந்த வீடு அதிர்ந்தது.

புதிய பறவை சிவாஜியைப்போல்,

‘எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்’

எனக் கத்தவேண்டும் போலிருந்தது. இந்தப் பெண்களே இப்படித்தானோ? வயதானாலும்கூட அவர்களின் குணம் மாறுவதேயில்லையே. அவர்களாகவே எதையாவது நினைத்துக்கொண்டு அதற்கு கண், காது, மூக்கு வைத்து இப்படி எப்போதுமே ஆண்களைப் பைத்தியக்காரர்களாக அலைய விடுகிறார்களே. மனம் எதை எதையோ நினைத்துக் கனன்று கொண்டிருந்தபோது அவருக்குள் ஓர் ஆணவக் கீற்றுத் தெறித்தது.

‘நான் ஓர் ஆண்மகன், நான் ஏன் இவளிடம் இப்படிக் கூனிக்குருகி தாழ்ந்து போகவேண்டும்? நான் ஆண், ஆணிண் உண்மை சொருபத்தை இவளுக்குக் காட்டினால்தான் இவள் அடங்குவாள் என்றால், அதற்கும் தயாராகிவிட வேண்டியதுதான்.’ என்ற எண்ணம் அடர்ந்த காட்டில் அனைத்து மரங்களைவிடவும் நீண்டு நிற்கும் ஒரு மரத்தின் உச்சியாக உயர்ந்து நிற்கத் தொடங்கியது.

‘நம் பிள்ளைகளையும் மருமகன் மகள்களையும் வீட்டிற்கு அழைக்கப்போறேன்.’

‘ஏன், இப்ப எதுக்கு அவங்களை வீட்டுக்குக் கூப்பிடனும்?’ ‘

‘நான் ரிடையர் ஆகிவிட்டதற்காக ஒரு சின்ன குடும்ப விருந்துக்கு ஏற்பாடு செய்யப்போகிறேன்.’

‘நீங்கதானே ரிடையர் ஆனிங்க, நீங்களே செய்துக்குங்க.’

சே! என்ன மனம் இவளுக்கு? ஏன் இப்படி இருக்கிறாள். இத்தனை நாளாக நான் உழைச்ச காசு மட்டும் தேவைபடுது, ஆனா நா தேவைப்படல. என் தேவைகள் இவளுக்கு முக்கியமாகப் படல……

‘சரி சரி நானே பார்த்துக்கொள்கிறேன்.’

என்றவுடன் முகத்தைச் சுளித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

மீதமிருக்கும் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டியாக வேண்டும். பல தடைகளையும் முட்டுகளையும் கடந்து கடலைச் சென்றடையும் நதி நீர்போல தானும் இந்த வாழ்க்கை நதியில் முற்றிலும் மூழ்கிடாமல் நீந்தி கரை சேர்ந்திடவேண்டும் என்ற வேட்கை இப்போது கொஞ்சம் அதிகமாகவே அவருக்குள் தனல் விட்டு எரிய ஆரம்பித்திருந்தது. அறுபது எழுபதுகளில் குப்பைக் கூளங்கள் நிரம்பி வழிந்த சிங்கப்பூர் ஆறாக இல்லாமல் தனது வாழ்க்கை இன்றைய சிங்கப்பூர் ஆறுபோல தெளிந்திருக்கவேண்டும் என அவர் மனம் இப்போது ஆசைப்படுகிறது. காலம் கடந்துவிட்டதுபோல இருந்தாலும் மிச்சமிருக்கும் வாழ்க்கையையாவது வாழ்ந்திடவேண்டும் என உள்ளூர அவருக்குப் புதிதாக ஆசையும் துளிர்த்துள்ளது. அவர் மனைவியின் மேல் இருந்த வெறுப்புக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து அவருக்குள் பலவாறான எண்ண வெள்ளநீரை அணையிலிருந்து கொட்டும் அருவிபோல கொட்டிக்கொண்டிருந்நது.

மறுவார சனிக்கிழமை மாலை அவர் இல்லம் மகன், மகள், மருமகன், மருமகள், பேரப்பிள்ளைகள் என நிறைந்திருந்தது. இதைவிட வேறு மகிழ்ச்சி எதில் இருக்கிறது? ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி இருக்கும்போது அந்தத் தருணம் வாழ்க்கையின் தத்துவத்தையே உணர்த்திச் செல்வதாக இருக்கிறது. வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வதாகவே இருக்கவேண்டும். அதில் நாம் அனைவரும் ஒத்த கருத்துடையவர்களாகவே இருக்கிறோம். இதில் வேறு எந்த மாறுபட்ட எதிர்கருத்தும் நமக்கு இருக்கப்போவதில்லை. மதம், இனம், மொழி, நம்பிக்கைகள் என வேறுபட்டு இருந்தாலும் மனிதனின் அடிப்படை வாழ்க்கை, மகிழ்ச்சி ஒன்றை மட்டுமே எதிர்நோக்கி காத்திருக்கிறது என்பதுதான் அடிப்படையான விஷயமும்கூட. அப்படி பட்ட மகிழ்ச்சி கிடைக்காதபோது அந்த வாழ்க்கையை வாழ்ந்து என்ன இருக்கப் போகிறது? எதைச் சாதிக்கப் போகிறோம்?

இரவு உணவு முடிந்த பிறகு, அனைவரும் வீட்டு வரவேற்பறையில் ஒன்றுகூடியிருந்தனர். சிறு பிள்ளைகள் ஆளுக்கொரு மூலையில் தூங்க ஆரம்பித்திருந்தனர்.

‘நீங்கள் எல்லாரும் நினைச்சிக்கிட்டு இருக்குற மாதிரி நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதற்காக மட்டும் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யல. உங்களுக்கே நல்லா தெரியும். உங்க அம்மாவோட நா வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டதுன்னு. வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட எனக்கு நிம்மதியான வாழ்க்கை அமையல. வேலை ஓய்வு பெற்ற ஒருவனுக்கு வாழ்க்கையில என்ன வேணும் என்பதைப் புரிஞ்சிக்கிற நிலையிலயும் உங்க அம்மா இல்ல. இனி மிச்சமிருக்கிற காலத்திலாவது நான் அமைதியா எனக்குப் பிடிச்ச மாதிரி வாழலாம்னு நினைக்கிறேன். நீங்கள் எல்லாரும் கல்யாணம் ஆகி அவுங்க அவுங்க குடும்பத்தோட மகிழ்ச்சியா இருக்குறீங்க. அதனால நல்லா யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். நா உங்க அம்மாவை விவாகரத்துச் செய்ய முடிவெடுத்திருக்கிறேன். இதன்மூலமா எனக்கு நான் விரும்பும் அமைதியான வாழ்க்கை கிடைக்குமுன்னு எதிர்பார்க்கிறேன்.’

‘என்னங்க…….’

அதிர்ச்சியின் தடுமாற்றத்துடன் உடைந்து விழுந்தது மீனாம்பாளின் குரல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *