கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 4,120 
 

1983

“மனோ… இந்தக் கணக்கு பேப்பரை திருத்தி வைச்சிடு. அம்பது பேப்பர்தான் இருக்கு.” பத்தாம் வகுப்பு காலாண்டு பரிட்சை பேப்பர் கட்டை வைத்துவிட்டு சென்றான் குமரன்.

“மனோகரு… கொஞ்சம் எஸ்.டி.டி. பூத்திலே இரு. நான் சாப்பிட்டு வந்துடறேன். ஆத்துல ஒங்க மாமி காத்துண்டிருப்பா.” இவனது பதிலுக்காய் காத்திராது நகர்ந்தார் மணி ஐயர். விரத நாட்களில் மாலை வேளையிலேயே சாப்பிட்டு விடுவது அவரது வழக்கம்.

அம்மா வந்தாள். காப்பி டபராவை வைத்துவிட்டுச் சென்றாள். சூடான காபியிலிருந்து ஆவி பறந்தது. சென்ற வேகத்தில் திரும்பி வந்தாள். கையிலே வெங்காயம் வைத்திருந்தாள்.

“மனோ கொஞ்சம் கடை வரைக்கும் போயிட்டு வரேன். இந்த வெங்காயத்தை உறிச்சு வெச்சுடு. நான் வந்து நறுக்கிக்கிறேன்.”

வெளியே வந்தாள் பையோடு. எதிரே சங்கரன் புத்தகப்பையோடு வந்து கொண்டிருந்தான். மனோகரனிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுள் அவனும் ஒருவன்.

“என்னடா ஸ்கூல் விட்டதும் நேரா வீட்டுக்குப் போயிட்டு விளையாடிட்டு வர்றியா? காலெல்லாம் சகதியா இருக்கு…? முதல்ல காலைக் கழுவிவிட்டு படிக்க உக்காரு” சங்கரனிடம் கூறிவிட்டு நடையை கட்டினாள் அம்மா.

டிரிங்… டிரிங்… டெலிபோன் மணியடித்தது.

“ஹலோ… ஆமாம்… சோலை எஸ்.டி.டி. பூத்தான். எங்கேர்ந்து? ஜம்முவா? பொன்னரசனைக் கூப்பிடனுமா… சரி ஒரு அரை மணி நேரம் கழிச்சு போன் பண்ணுங்க. கூப்பிட்டு அனுப்பறேன்.

போனை வைத்துவிட்டு “டேய் சங்கரா… போயி பொன்னரசன் மாமாவை கூட்டிக்கினு வா. ஜம்முலேர்ந்து போன் வந்திருக்குதுன்னு சொல்லு.”

அவனை அனுப்பிவிட்டு தோல் நீக்கி வைத்திருந்த வெங்காயத்தை, கத்தியால் நறுக்க ஆரம்பித்தான் மனோகரன்.

அம்மா மட்டும் பாவம் என்னென்னத்தை செய்வாள்? தம்பி குமரன் கணக்கு வாத்தியாராக வேலைக்கு சேர்ந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது.

எஸ்.டி.டி. பூத்தின் கதவை திறக்கும் சத்தம் கேட்டது. பொன்னரசன்தான் வந்தார். நறுக்கிக் கொண்டிருந்த வெங்காயத்தை ஓரமாக வைத்துவிட்டு “வாங்க வாங்க. ஜம்முலேர்ந்து தமிழரசன்தான் பேசினான். கொஞ்ச நேரங்கழிச்சு போன் பண்ணச் சொன்னேன். இதோ இப்ப வந்திரும். ஒக்காருங்க” என்றான்.

நாற்காலியில் அமர்ந்து கொண்டவர். “மனோ… அம்மா எங்கே? ஆளே காணோம். வெளில போயிருக்காங்களா?” என்று கேட்டார்.

“ஆமா… கடைக்குப் போயிருக்காங்க. ஐயரும் வீட்டுக்கு போயிருக்காரு. மாமா… தமிழரசன் எப்போ லீவுல வர்றதா இருக்கானாம்?” மனோகரனின் கேள்விக்கு அவர் பதில் கூறும் முன்பே மணி ஐயர் உள்ளே வந்தார்.

“மனோகரு… போப்பா. ஆமா எதாவது கால் போச்சா?”

“இல்லை. ஒரேயொரு இன்கமிங்தான். அதான் மாமா காத்துக்கினு இருக்கார்.”

சொல்லிவிட்டு தன்னிடம் டியூஷன் படிக்க வந்திருந்த மாணவர்கள் பக்கம் திரும்பின மனோகரனுக்கு வயது முப்பது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்திருந்தான். படிக்கும் காலத்திலே முதல் ரேங்க் எடுத்த மாணவன். கணக்கிலும், அறிவியலிலும் புலி. பொதுத் தேர்விலிலேயே நூறு சதவிகிதம் பெற்றவன். பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட, எதற்கு மேற்கொண்டு படிப்பு என்று இவனே ஒரு முடிவுக்கு வர மேற்படிப்புக்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இவனது அறிவுத்திறன் அறிந்து அக்கம் பக்கத்தவர்கள் தம் பிள்ளைகளை டியூஷன் படிக்க இவனிடம் அனுப்பி வைத்தனர். படிப்படியாக ரிஸல்ட்டுகள் நன்றாக வர, மாணவர்களின் எண்ணிக்கையும் கூடியது. அப்பா தவறிய போது அம்மாவுக்கு ஆறுதலாய் இருந்து, தம்பி குமரனைப் படிக்க வைத்து, அவனும் இப்போது ஒரு ஆசிரியனாக ஆகிவிட்டான்.

மணி ஐயர், சோலை எஸ்.டி.டி. பூத்தை ஆரம்பித்த போது, கூடமாட உதவியாய் இருக்க பூத்துக்கு பக்கத்திலேயே இருந்த இவனை துணைக்கு வைத்துக் கொண்டார். நாளடைவில் ஷிப்ட் முறையில் இருவரும் கடையைப் பார்த்துக் கொண்டனர். மாதம் ஐந்நூறு ரூபாயை மனோகரனுக்குக் கொடுத்துவிடுவார்.

வீட்டிலே டியூஷனுக்கு வந்திருந்த மாணவர்கள் நிறைந்திருந்தனர்.

“டேய்… எல்லோரும் நான் குறிச்சு குடுத்த பாடத்தை படிச்சிக்கிட்டு இருங்க. ஒரு மணி நேரம் பொறுத்து டெஸ்ட் வைக்கப்போறேன்.” கூறிவிட்டு நறுக்கி முடித்திருந்த வெங்காயத்தை ஓரமாக வைத்துவிட்டு தம்பி குமரன் கொடுத்துவிட்டுச் சென்ற கணக்குப்பரீட்சை பேப்பர் கட்டை எடுத்துத் திருத்த ஆரம்பித்தான்.

டியூஷன் மாணவர்களின் படிக்கும் சத்தம் அதிகமானது. “டேய்… கொஞ்சம் மெதுவா படிங்கடா. இங்க டிஸ்டர்ப் ஆகிறது” குரல் கொடுத்தார் மணி ஐயர். சத்தம் அடங்கியது.

மனோகரன் திருத்திய பேப்பர்களை பார்த்தான். என்ன எழுதியிருக்கிறார்கள்? ஜம்பது மதிப்பெண்களை கூட ஒருவரும் தாண்டவில்லை. கணக்கிலேயே இந்த லட்சணமென்றால் மற்ற பாடங்களில் எப்படியிருப்பார்களோ… ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்! யோசித்தவன் திருத்தின பேப்பர் கட்டை எடுத்து வைத்துவிட்டு ஒவ்வொரு வகுப்பாய் வகுப்புவாரியாக டெஸ்ட்டுக்கான கேள்விகளை கொடுத்துவிட்டு அக்கடாவென்று கைகளை உதறிக் கொண்டான்.

அம்மா பைகளை சுமந்து கொண்டு உள்ளே வந்தாள். நேரே அடுக்களைக்குச் சென்றவள், நறுக்கி வைத்திருந்த வெங்காயத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தாள்.

“ஏண்டா மனோ… நான் வெங்காயத்தை உறிக்க மட்டும்தானே சொன்னேன்?” கண்களின் ஓரத்தில் துளி நீர். வெறுமனே பேச்சுக்குக் கூறவில்லை அவள் அந்த வார்த்தைகளை. மனபாரத்தின் வெளிப்பாடு தெரிந்தது அவளது வார்த்தைகளில். என்ன செய்ய? இவனுக்கு ஒரு கல்யாணம் ஆகியிருந்தால்…. மனது ஆசைப்பட்டது. செயல்பாடு இயலுகிற காரியமா என்றது.

மெதுவாக உள்ளே சென்றாள். அடுக்களையில் அடுத்த வேளைக்கு அரிசி களைய ஆரம்பித்தாள்.

குமரன் வந்தான். மணி சரியாக எட்டரை ஆகியிருக்கும். கடியாரத்தைப் பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது.

“மனோ, பேப்பர்ஸ் எல்லாம் கரெக்‌ஷன் பண்ணியாச்சா? ரிஸல்ட் எப்படியிருக்கு?”

பேப்பர் கட்டு மேசை மீது இருந்தது. அதை எடுத்தான். புரட்டிப்புரட்டிப் பார்த்தான்.

“என்ன அம்பது பர்ஸென்ட்தானா? நல்லா செக் பண்ணியா?”

எரிச்சலாய் இருந்தது மனோகரனுக்கு

“டேய்… டெஸ்ட் எழுதி முடிச்சாச்சா? எல்லோரும் பேப்பரை குடுத்துட்டு வீட்டுக்குப் போங்க இருட்டிடிச்சு. காலைல அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுங்கடா….” அனைவரையும் விரட்டினான். லேசாய் தலை வலிப்பது போலிருந்தது. டியூஷன் மாணவர்கள் சென்றுவிட்டிருந்தனர்.

அம்மா அடுக்களையிலிருந்து வந்தாள். கையிலே ஆவி பறக்கும் காபி, அவளுக்கு எப்படித்தான் தெரியுமோ தெரியாது. ஆனால் அவனுக்குத் தலைவலி ஏற்படும்போது கேட்காமலேயே காபி ஆஜராகிவிடும். பல தடவைகள் ஆச்சரியப்பட்டுப் போவான் மனோகரன்.

“இப்ப எதுக்கும்மா காபி… சாப்பிடற நேரத்துல?” என்றான் குமரன்.

இந்த நேரத்தில் ஏன் சிரமப்படுகிறாய் என்ற வாஞ்சையில் கேட்கப்பட்ட கேள்வியாகத் தெரியவில்லை அவன் குரலில் இருந்த தொனி. இருபத்து நான்கு வயது வாலிபம் பேசுகிறது.

இருந்தாலும் அரை கிளாஸ் காப்பியை அவனது மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு பக்கவாத தாக்குதலுக்கு ஆளான அம்மா. பிசியோதெரபி, சித்த வைத்தியம், எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை. மன திடத்தோடு போராடி அதிலிருந்து மீண்டிருந்தாள். பக்கவாதத்தால் தாக்குண்டவளா இவள் என்பதைப்போல, ஆச்சரியப்படும் வகையில் சுதாரித்துக் கொண்டு இப்போது புது மிடுக்கோடு பவனி வந்தாள்.

காபியைக் குடித்துவிட்டு டபராவை கீழே வைத்தான் மனோகரன்.

கதவருகே நிழலாடியது. மணி ஐயர் நின்றிருந்தார். “மனோகரு… நான் போறேன். பூத்தை பாத்துக்கோ. காலைல சீக்கிரமே வந்துடறேன்” சாவிக்கொத்தைக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்.

“அம்மா நான் பூத்துக்கு போறேன். அப்புறமா வந்து சாப்பிடறேன்” கிளம்பினான் மனோகரன்.

கூடவே வந்தான் குமரன். டெலிபோன் பூத்தின் கதவை சாவிகொண்டு திறந்து விட்டான்.

நாற்காலியில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட மனோகரன் கீழே குனிந்து சூம்பிப்போன தனது கால்களை சொறிந்து கொண்டான். மேசைக்கடியிலிருந்து கொசுக்கள் ரீங்காரமிட்டுப் பறந்தன.

குமரன் வீல்சேரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *