கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2014
பார்வையிட்டோர்: 16,602 
 
 

மூச்சு வாங்க வாங்க சைக்கிள் பெடலை மிதித்தார். விரைவாக வீட்டுக்குப் போகவேண்டும். வயதான மனைவியின் நினைவுகள் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. நோய் நிலைமை எப்படியோ…. ஏதாவது சாப்பிட்டிருப்பாளோ!

மருமகள் ஏதோ ஒரு வழி பார்த்து சாப்பாடு கொடுத்திருப்பாள் எனச் சமாதானமடைய முயன்றார். அடுத்த கணமே துணுக்குறும் மனசு. பாவம்.. அவள்தான் என்ன செய்வாள்? தன் மூன்று குஞ்சுகளின் வயிற்றுப் பாட்டையும் பார்க்கமுடியாமல்.. தானும் மெலிந்து எலும்பும் தோலுமாகப் போனாள். பிள்ளைகளின் பட்டினியைத் தாங்காமால் அவள் அடிக்கடி சொல்வதும் நினைவில் வந்தது.

‘நாங்கள்தான் பெரியாக்கள் எப்படியாவது கிடக்கலாம்! சின்னஞ்சிறுசுகள் என்ன செய்யும்?”

எவ்வளவு இலகுவாகச் சொல்லியாயிற்று. பெரிய ஆட்கள் எப்படியாவது கிடக்கலாம் என்று! எப்படிக் கிடப்பது? சைக்கிள் பெடலை மிதிக்க மிதிக்க இழைக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி வரை போய்த் திரும்புவதற்குள் பதினைந்து.. இருபது மைல் வரை அலைந்திருக்கிறார்.

அப்புவுக்கு எழுபத்திரண்டு வயதானாலும் தளராதிருந்த மேனி. வேலை செய்து இறுகிய உடம்பு. இப்போது ஆட்டம் காண்கிறது. ஊட்டச்சத்து இல்லை. அன்றாடம் ஒருவேளை சாப்பிடக் கிடைப்பதே பெரிய புண்ணியம். பசி மயக்கம் கால்களுக்கு நடுக்கத்தைக் கொடுக்கிறது. தலை சுற்றுகிறது. எதிலாவது சற்றுப் பிடித்துக்கொண்டு நிற்கவேண்டும். இளைப்பாற வேண்டும்.

‘ஏதாவது பாத்துக்கொண்டு வாறன்!” எனக் காலையில் புறப்பட்டு வந்தவருக்கு ஒரு இடத்திலும் பணம் புரளவில்லை.

மனைவியின் நோய் பரிகாரம் செய்யப்படாமல் நாளுக்கு ஒரு வியாதியாகப் பரிமாணம் எடுக்கிறது. மூ;செடுக்கக் க~;டப்படுகிறாள். நெஞ்சுவலி.. இருக்க, எழும்ப யாராவது பிடித்துவிட வேண்டியுள்ளது. மிக முயன்று ஒவ்வொரு அடியாக அளந்து வைப்பதுபோலத்தான் நடக்க முடிகிறது.

இப்படியே விட்டால் என்ன செய்யுமோ என அவருக்குப் பயமாக இருக்கிறது. ஒருவேளை தன்னைவிட்டு அவள் போயே போய்விடுவாளோ?

நல்ல ஸ்பெ~லிஸ்ட் டாக்டரிடம் அவளைக் காட்டவேண்டும். மருந்து எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும்  பணம் வேண்டும்!

பல இடங்களிலும் அலைந்து.. இறுதி முயற்சியாகத் தான் வேலை செய்யும் தோட்டக்காரரிடம் போனார்.

‘என்ன அப்பு.. இந்த நேரம்?”

விஷயத்தைச் சொன்னார்.

‘ஒரு நூறு ரூபாய் தந்தியளெண்டால் பிறகு வேலை செய்யிறதிலை கழிச்சுவிடலாம்!”

அப்படி ஒரு கதைக்குச் சொன்னாரே ஒழிய சம்பளம் எடுக்கக்கூடிய அளவுக்கு அங்கே அவருக்கு வேலை கிடைப்பதை மிக அருமை.

‘நாங்கள் என்ன செய்யிறது? நாங்களும் உன்னைப் போலத்தான்…. ஒண்டுக்கும் வழியில்லாமல் இருக்கிறம்….. ரெண்டு மரவள்ளிக்கட்டையை இழுத்துக் கொண்டு போவன்!”

யாரையும் நோக முடியாது. தோட்டக்காரர் கதியும் அதேதான்! செடிகளுக்கு உரமில்லை. அடிக்க மருந்துமில்லை. நீர் பாய்ச்ச எண்ணெய் இல்லை. யுத்தம் எல்லோரையும் உலுக்கிக் கொண்டுதான் இருக்கிறது.

சாப்பாட்டுப் பிரச்சினையாவது இப்போதைக்குத் தீரட்டும் என மரவள்ளியை இழுத்து கரியரில் கட்டினார். சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஏறி பெடலை மிதித்தார்.

வீட்டின் கேற்றைத் திறப்பதற்கு முன்னரே அழைப்புக் குரல் வந்தது.

‘அம்ம்…..ம்மா!”

இந்த மாடு எப்படி மோப்பம் பிடிக்கிறதோ!

மாட்டுக்கு வயிறாரத் தீனி போட்ட நாட்களலெ;லாம் போய்விட்டன. ஒரு வாயில்லாச் சீவனைக் கட்டி வைத்து.. ஒழுங்காகத் தீனி போடவும் முடிவில்லையே என்ற குற்றமனப்பான்மை ஒரு பக்கம் அப்புவின் மனதை வாட்டுகிறது.

கேற்றைத் திறந்தார். ‘அப்பு…. அப்பு…” ஓடிவந்த பேரப்பிள்ளைகளைக் கையில் பிடித்தவாறே முற்றத்துக்கு சைக்கிளை உருட்டினார். கரியரில் இருந்த பார்சலைப் பிள்ளைகள் சோதனை போட்டன.

‘பொறுங்கோ! பொறுங்கோ! எடுத்துத் தாறன்!”

மரவள்ளிக் கிழங்கைப் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டுத் திண்ணையில் கண் சிமிட்டிக் கொண்டிருந்த கைவிளக்கை எடுத்துக்கொண்டு மாட்டுக்கொட்டிற் பக்கம் நடந்தார்.

‘மாடும் பாவம்! மனிசரும் பாவம்!”

அவர் மனநிலை உணர்ந்தவள் போல.. மனைவி சொன்ன வார்த்தை நெஞ்சுச் சூட்டைத் தணிவிக்காமல் இன்னும் குமுற வைத்தது.

அவள் ஷமனிசர்| என்று பொதுப்படையாகவே சனங்களின் கஷட நிலையைக் குறிப்பிடுகிறாளா? வீட்டில் அரை வயிறு கால் வயிறுடன் போராடிக் கொண்டு நாட்களைக் கடத்தும் மனித ஜீவன்களைச் சொல்கிறாளா? அவற்றின் வயற்றை நிரப்புவதற்காக அல்லல்படும் தன் கணவனின் நிலையை எண்ணிப் பரிதாப்படுகிறாளா…. அல்லது நோயின் கடுமை தாங்காது தனக்காகவே வருந்துகிறாளா?

அப்புவைக் கண்டதும் மாடு எழுந்து நிற்பதற்கு முயன்றது. அதன் கால்கள் உடலைத் தாங்கிக்கொள்ளமுடியாதவை போல நடுங்கின. தென்னோலையை வெட்டிப் போட்டுவிட்டது போல விலா எலும்புகள் கீலம் கீலமாகத் தெரிந்தன. கால்கள்.. உடல்.. தலை எல்லாம் தனித்தனியாகப் பொருத்தப்பட்டவை போல… கேலிக்காகக் கீறிய சித்திரம் போல மாடு தோற்றமளித்தது.

அது அவரையே ஏக்கக் கண்களால் பார்த்துக்கொண்டு நின்றது. முறையிடுகிறது. அதற்கும் பசி. அல்லது ஏதாவது சுகவீனமாக இருக்குமோ? அதன் கண்களிலிருந்து வழிந்த நீர் தாடை வரை கோடிட்டிருந்தது. மாடு நாள் முழுதும் அழுதிருக்கிறது.

அப்புவின் நெஞ்சு பற்றியெரிவதுபோலிருந்தது. இது மாடல்ல.. பசு! வீட்டுக்கு லட்சுமி! பதினேழு வருடங்களுக்கு முன்பாக இது ஒரு கன்றுக்குட்டியாக.. வெள்ளை வெளேரென்று செல்லப்பிள்ளையாக வீட்டுக்கு வந்து சேர்ந்தது.

ஆரம்பத்திலிருந்தே மனைவிதான் ஆசைப்பட்டாள். ‘ஒரு மாடு வேண்டுங்கோ…. வீட்டிலை பசு வளர்க்கிறது லட்சுமிகரம்! பாலும் எடுக்கலாம்!”

அன்றாடம் வேலைக்குப் போய்வந்து.. வீட்டில் ஒரு மாட்டையும் வைத்துப் பராமரிப்பது கஷடம் எனப் பேசாமல் விட்டிருந்தார். ஐம்பத்தைந்து வயதில் உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்றதும் அந்த யோசனை மீண்டும் தலை தூக்கியது. அப்போது மகனுக்குக் கல்யாணமாகி மருமகளும் வீட்டோடு இருந்தமையால் பிள்ளைகளுக்குப் பால் தேவைப்பட்டது. ஒரு பசுவை வைத்துப் பராமரிப்பது தனக்கும் நல்ல பொழுதுபோக்காகவும் புண்ணியமாகவும் இருக்கும் என்று கருதினார்.

தனது பிள்ளையைப்போல அதைக் கவனிப்பார். அன்றாடம் குளிப்பாட்டுவார். மாட்டுக் கொட்டிலைத் தினசரி துப்புரவு செய்து சாம்பிராணிப் புகை காட்டுவார். அதற்கு வயிறார உணவூட்டுவார். தடவிக் கொடுப்பார். ‘அது மாடு இல்லை. என்ரை மகள்!” என்பார்.

மனைவி கேலியாக அவ்வப்போது சொல்வதுகூட அவருக்குப் பெருமையாக இருக்கும்! ‘மனிசரைவிட மாட்டிலைத்தான் அவருக்குக் கவனம் கூட”

அந்த நாட்கள் நினைவில் வந்ததும் விம்மி அழவேண்டும் போலிருந்தது. வீட்டுக்கு வந்ததிலிருந்து பன்னிரண்டு ஈற்றுவரை ஈன்று இந்தக் குடும்பத்துக்குப் பால் கொடுத்த வளர்த்த தாய் அது! அதன் கழுத்தை அணைத்துக்கொண்டு தடவினார்.

‘இதென்ன.. வந்த நேரம் முதல் மாட்டோடை பேசிக் கொண்டு நிக்கிறியள்?”

மனைவி பொறுமை இழந்துவிட்டாள் என்பது தெரிந்தது. தோட்டத்திலிருந்து கொண்டுவந்த மரவள்ளிப் பழுத்தல்இலைகளை மாட்டுக்குப் போட்டுவிட்டு வீட்டுத் திண்ணையை நோக்கி நடந்தார்.

‘மாட்டுக்கு ஏதோ வருத்தம் போல இருக்கு! காசு கிடைச்சுதெண்டால் மிருக வைத்தியரைக் கூட்டி வந்து காட்டலாம்!”

அப்படிச் சொன்னதிலிருந்து பணம் இன்னும் புரளவில்லை என்பதை மனைவிக்கும் உணர்த்திய மாதிரியிருந்தது.

மனைவி எவ்வித அபிப்பிராயமும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தாள். திரும்பிப் பார்க்க.. அவளிடமிருந்து பதிலாக – தொடர்ச்சியாக இருமலும் ஒரு பெருமூச்சும் வெளிப்பட்டன.

‘விடியட்டும்…. எப்படியாவது காசு பிரட்டிக்கொண்டு வாறன். டொக்டரிட்டைக் காட்டலாம்!”

காலை மலர்வது சற்று உற்சாகத்தைத் தருவதுபோலிருந்தது. இரவு முழுவதும் உறங்காமலிருந்த அசதி கலைவதுபோல் இருந்தது.

தொலைவில் ஒரு குயிலின் குரல் கேட்டது. பிறகு அண்மையாக வந்திருந்து கூவியது. குயில்கள் தூரத்திற் கூவினாலும் கேட்க இன்பமாயிருக்கும். முன்னரென்றால் குயிலுடன் போட்டிபோட்டுக் கொண்டு பேரனைக் கூவச் சொல்வார். காலையில் அந்த விளையாட்டு நல்ல குதூகலமாக இருக்கும். இப்போது அப்படிக் குதூகலம் இல்லை. மனசு சோகத்தில் மூழ்கியிருக்கும்போது குயில்களின் கீதம்கூடச் சோகமாகத்தான் கேட்கிறது.

மரத்தில்.. அண்மையில் பாடிக்கொண்டிருந்த குயில் அவலக் குரலெழுப்பியவாறு வெருட்சியடைந்து பறந்தது. பெரிதாக இரைந்து வரும் ஓசை.. முற்றத்தில் இறங்கி அண்ணாந்து பார்த்தார். பொம்பர்!

அவரைக் கண்டதும் மாடு குரல் கொடுத்தது.

‘அம்ம்…..ம்மா…!”

மாட்டுக் கொட்டிலடிக்குப் போய்ச் சாணத்தை ஒதுக்கித் துப்புரவு செய்தார். மாடு எழுந்து நின்றது. தென்னம்பிள்ளையில் ஒரு ஓலையை வெட்டிப்போட்டார். ஆவலுடன் ஓலையைக் கடித்துச் சாப்பிடும் மாட்டை நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டு நின்றார். பிறகு கிணற்றடிக்குப் போய் செடிகளுக்கு நீர் பாய்ச்சினார்.

மனது எங்கெல்லாமோ ஓடியது. தனக்குத் தெரிந்த ஒவ்வொரு நண்பராக.. நபராக நினைவுகூர்ந்தார். ஒரு நூறு ரூபா யாரிடமாவது மாற முடியுமானால் போதும். பெரிய காரியம்! ஸ்பெஷலிஸ்ட் டொக்டருக்கு ஐம்பது ரூபா தேவைப்படும். பயப்படுவதுக்கு ஒன்றுமில்லை என்று டொக்டர் சொன்னால் ஆறுதலாயிருக்கும். பாக்கிப் பணத்தில் மாட்டு வைத்தியருக்கு இருபது கொடுக்கலாம். முப்பது ரூபாவுக்கு அரிசி வேண்டலாம்.|

அவரது சிந்தனையைக் குலைப்பதுபோல வீட்டுக்குள்ளிருந்து அழுகுரல்;…. ஓ வென கேட்டது. வாளித் தண்ணீரை அப்படியே போட்டுவிட்;டு ஓடினார்.

பேரப்பிள்ளை குளறக் குளற முதுகில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தாள் தாய்.

‘என்ன பிள்ளை! விடு விடு! பிள்ளையளை இப்பிடியா போட்டு அடிக்கிறது?”

மருமகளின் ஆற்றாமை வெளிப்பட்டது.

‘மனிசர் படுகிற கஷடத்திலை….. நினைச்ச சாப்பாடு வேணுமெண்டு நின்றால் நான் ன்ன செய்யிறது? விடிய எழும்பின நேரம் முதல்…. ஷபுட்டு அவியுங்கோ…. புட்டு அவியுங்கோ! எண்டு நாண்டுகொண்டு நிக்கிறான். சொன்னாற் கேட்டாத்தானே?”

‘அதுக்கு என்னம்மா செய்யிறது? பிள்ளையளுக்கு எங்கட கஷ்டம் தெரியுமா?”

‘நான் என்ன கொடுமை செய்தன்? நான் என்ன கொடுமை செய்தன்?” அவள் குசினிப் பக்கம் திரும்பி.. தலை தலையென அடித்துக் குமுறிக் குமுறி அழுதாள்.

அப்புவுக்கு அவளது நிலையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

அவளது  கணவன் – அவரது மகன் இறந்துபோன அன்றும் இவ்வாறுதான் கதறினாள். நாட்டு நிலமைகளால் வேலையற்றுப்போயிருந்தவன்.. தோட்டங்களில் சென்று காய்கறி கொள்வனவு செய்து காலையில் சந்தையிற் கொண்டுபோய் விற்பதைத் தொழிலாக மேற்கொண்டு குடும்பத்தை நடத்திவந்தான். இப்படி ஒருநாள் அதிகாலையில் எழுந்து.. பிள்ளைகளின் முகத்தைக்கூடப் பார்க்காமல் போனவன்.. போனவன்தான். சந்தைக்கு அருகில் பொம்பர் குண்டு வீசிய செய்தியறிந்து ஓடியவளுக்கு…. அவனது சிதறிப்போன உடல்தான் கிடைத்தது.

‘நான் என்ன கொடுமை செய்தன்? நான் என்ன கொடுமை செய்தன்?”

அவளுக்கு யார் என்ன பதிலைச் சொல்லமுடியும்?

‘சரியம்மா! அழாதை…. இது உனக்கு மட்டுமா? ஊரோடை ஒத்ததுதானே!”

நூறு ரூபா கிடைத்தாலே போதும் எனக் காலையில் எண்ணியிருந்தவருக்கு.. இருநூறு ரூபாயாவது பிரட்ட வேண்டும் என்று இப்போது தோன்றியது. மாவு வேண்டி வந்து பிள்ளைகளின் விருப்பப்படி சாப்பாடு செய்து கொடுக்கலாம். அதுகளும் எத்தனை நாட்களுக்குத்தான் பச்சரிசிக் கஞ்சியையும் மரவள்ளிக் கிழங்கையும் தின்று கொண்டிருப்பது?

இருநூறு ரூபாய்! எந்தப் புண்ணியவான் தருவான்? யாரிடம் போகலாம்.

சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

‘அம்ம்….ம்மா…!”

மூச்சு வாங்க பெடலை மிதித்தார். எந்தப் பக்கம் போவது எனத் திசை தெரியாமல் ஓட்டினார்.

மாலைநேரமாக அப்பு வீட்டுக்கு வந்தார். எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அப்பு…! அவருடன் இன்னுமொருவர். அவரை அழைத்துக் கொண்டு அப்பு மாட்டுக் கொட்டிற் பக்கம் போனார். திண்ணையில் நின்ற மனைவியைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அப்பு நடந்தார்.

‘கண்டியே பிள்ளை! இவருக்கு மனிசரைவிட மாட்டிலைதான் கவனம் எண்டு சொல்லுவன்! அது பொய்யே? காசு எங்கையோ பிரண்டிட்டுது போல… இவ்வளவு பிரச்சனையளும் இருக்க… மாட்டுக்கு வைத்தியரைக் கொண்டு வந்திட்டார்….”

வந்தவர்.. மாடு எழுந்து நிற்பதற்கு உதவி செய்து அதன் விலா எலும்புகளையும்.. கழுத்தையும் வயிற்றையும் பிடித்துப் பரிசோதித்தார். அதன் இடுப்பில் ஒருமுறை தட்டினார். அப்போது மாடு மேனியைச் சிலிர்த்தது. பின்னர் அப்புவுடன் கதைத்துக்கொண்டே போனார். ‘பிறகு வாறன்!”

அவரை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த அப்புவிடம் மனைவி கேட்டாள்:

‘ஆராள்…. வந்திட்டுப் போறது?”

‘யோசேப்பு”

‘மாட்டு வைத்தியம் பாக்கிற ஆளோ?”

‘இல்லை மார்க்கட்டிலை இறைச்சிக்கடை வைச்சிருக்கிற யோசேப்பு.”

ஓர் அசாதாரண நிலைமை ஏற்படுவதை உணர்ந்தவர் போல.. மனைவியின் முகத்தை உன்னித்து நோக்கினார். அந்த முகத்தில் ஓர் எரிமலை பொங்குவது தெரிந்தது.

‘அது கிழண்டிப்போச்சு! இனி வைச்சிருந்து ஒரு பிரயோசனமும் இல்லை!” – அப்பு சமாளிப்பாகக் கூறினார்.

‘நானும் கிழண்டித்தானே போனன். என்னையும் வித்துவிடுங்கோவன்..!”

எரிமலை வெடித்தது..!

அப்பு நடுங்கிப்போனார். அக்கிரமங்களை அழித்தொழிக்கும் துர்க்கா தெய்வமே தன்முன் தோன்றியதைப் போலப் பக்தி பெருகியது. கைகளை உயர்த்திக் கூப்பினார்.

‘அம்ம்….ம்மா!”

– ஆனந்தவிகடன் 1993 – தெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: பிப்ரவரி 1997, மல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம்

விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *