மனைவியே தெய்வம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 5,649 
 
 

(இதற்கு முந்தைய ‘பரத்தையர் சகவாசம்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது.)

வெளியில் வந்ததும் பங்கஜம் முன்பு பலி ஆடு மாதிரி நின்றேன். உஷாவை நான் உடனே வீட்டுக்கு அனுப்பி விட்டதாக மகேஷ் அவளிடம் நடந்ததை எடுத்துச் சொன்னான்.

அடுத்த நிமிஷமே பங்கஜத்தின் கண்கள் ரத்தமாகச் சிவந்து விட்டன.

அந்த குண்டர்களிடம் “இவரை வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க…” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

மகேஷ், “போ, போய் நடந்த உண்மைகளைச் சொல்லு… நான் பின்னாலேயே வரேன்…” என்றான். என் மனைவிக்கு திடீரென்று உடம்பு சரியில்லை என்று ஆபீஸில் பொய் சொல்லிவிட்டு, அந்தக் குண்டர்களுக்கு நடுவில் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்துகொண்டேன். “தப்பு பண்ணிட்டே சார்… நீ உஸாவை வீட்டாண்ட விட்டுட்டு அப்பால போயிருக்கணும்” ஒரு குண்டன் சொன்னான்.

ஆட்டோ பங்கஜம் வீட்டின் முன் நின்றது. முன்பெல்லாம் நிமிர் நடை நடந்து அலட்சியமாக நான் நுழைந்த வீட்டில் இன்று ஒரு கைதி மாதிரி நுழைகிறேன். மனைவியே மனிதனின் மாணிக்கம் என்ற ஒப்புதலோடு புலனடக்கத்துடன் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்திருக்க வேண்டும். நான் கட்டுப்பாடு இழந்தேன். அதற்கு அனுபவிக்கிறேன்.

உள்ளே பங்கஜம் ஒரு சினம் கொண்ட சிறுத்தையைப் போல் அமர்ந்திருந்தாள்.

“உஷாவை எங்கு ஒளித்து வைத்திருக்கிறாய்?”

“சத்தியமா மேடம்… அவ ஆட்டோல ஏறி போறதை நான் பார்த்தேன்.” ஈனஸ்வரத்தில் பதில் சொன்னேன்.

“அதை நான் நம்பலை.. நீதான் அவளை எங்கேயோ வீடு பாத்துக் கொடுத்து ரகசியமா வச்சிருக்க… அந்தக் கழுதை உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்டாளா?”

“ஆமா மேடம்… கேட்டா. ஆனா நான் பதிலே சொல்லலை மேடம்.”

“அந்த நாய் இன்னும் நாற்பத்தெட்டு மணி நேரத்துல என் முன்னாடி வரணும். அப்படி இல்ல அவளுக்கு விலையா நீ எனக்கு நான்கு லட்ச ரூபாய் தரணும். இல்லன்னா நடக்குறதே வேற…” பங்கஜம் எழுந்து உள்ளே போய்விட்டாள்.

“அம்மா சொன்னது காதுல விளுந்திச்சா சாரே…? போய் அந்தப் பொண்ணை கூட்டியா, இல்லேன்னா நாலு லட்சத்தோட வா..” ஒரு குண்டன் என்னைப் பயமுறுத்தி வழி அனுப்பினான்.

‘நாலு லட்ச ரூபாய் எப்படிக் கொடுப்பேன்? வெளியே சொல்லக்கூடிய காரியமாக இருந்தாலும் வனஜாவின் நகைகளை அடகு வைத்தாவது கொடுத்துவிடலாம்… இப்ப என்னதான் பண்ணுவேன்?’

ஓடிப்போய் மகேஷின் காலில் விழுந்தேன். நடந்ததைக் கேட்டுக்கொண்டவன், “வேறு வழியே கிடையாது சுந்தர்… காவல்துறை அவளிடம் ஆயிரக் கணக்கில் பணம் வாங்குகிறது. அரசியல்வாதிகள் அனைவரும் அவளது வாடிக்கையாளர்கள்… அவள் கேட்ட பணத்தைக் கொடுக்காவிட்டால் உன் வாழ்க்கையையே நாசம் பண்ணிவிடுவாள்.” என்றான்.

பணம் புரட்ட மகேஷ் என்னை வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் கூட்டிப்போனான். கஷ்டப்பட்டு அதிக வட்டியில் நான்கு லட்சம புரட்டினேன். அடுத்து மகேஷ் என்னை பங்கஜத்திடம் கூட்டிப்போனான். அவள் பணத்தை எண்ணி வாங்கிக்கொண்டு, “ஓடிப்போ… இனிமேல் இந்தப் பக்கம் வரவே வராதே…” என்றாள்.

எவளோ எங்கேயோ ஓடிப்போனதுக்கு நான்கு லட்சரூபாய் நான் தண்டம் அழுதிருக்கிறேன். ச்சே… எவ்வளவு பெரிய அசிங்கம்? தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு… புத்திகெட்டுப் போய் கண்டவளுடன் டெல்லி போய் வந்ததற்கு தண்டனை.

எனக்காக நான்கைந்து இடங்கள் ஏறி இறங்கி கடன் வாங்கித்தந்து என்னைப் பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிய மகேஷுக்கு நன்றி சொல்லிவிட்டு களைப்புடன் வீடு நோக்கி நடந்தேன்.

வீட்டுப்படி ஏறியதுமே வனஜா என்னை முறைத்துப் பார்த்து, “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் டெல்லிக்கு யார் கூடப் போனீங்க?” என்றாள்.

என்ன இது கேள்வியே ஒருமாதிரி இருக்கிறது. எனக்கு உள்ளூர உதறியது.

“என்ன இது திடீர்னு இத்தனை நாள் கழிச்சு….?”

“சில விஷயங்கள் திடீர்னுதானே தெரிந்தது…”

எனக்குத் திக்கென்றது. வனஜாவின் முகத்தைப் பார்த்தேன்., தெரிந்த எதோ ஒன்றை மறைத்துக் கொண்டிருக்கிற சாகசம் அவளுடைய கண்களில் மின்னியது. என்னடா இது? மறுபடியும் ஒரு பூதம் கிளம்புகிறதா?

“அப்படி என்ன விஷயம் உனக்கு இப்ப தெரிஞ்சி போச்சு?” வனஜா வேகமாக உள்ளே போய் ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டுவந்து கோபத்துடன் அதை என் எதிரே நீட்டினாள். வாங்கிப் பார்த்தேன். அது எங்கள் ஜி.எம் க்கு எழுதப்பட்டிருந்த ஒரு மொட்டைக் கடிதத்தின் போட்டோ காப்பி. அவசரமாகக் கடிதத்தைப் படித்தேன்.

மனைவியுடன் டெல்லிக்கு எல்டிஏ சென்றதாக பொய்சொல்லிவிட்டு, ஒரு விலைமகளை கூட்டிச்சென்று கம்பெனியை ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்டதாக இருந்தது.

“இந்த லெட்டரை யார் கொடுத்தா?”

“உங்க ஜெனரல் மேனேஜரும், அக்கவுண்ட்ஸ் கல்யாணியும் வந்திருந்தாங்க… அவங்க குடுத்தாங்க. நான் உங்ககூட டெல்லிக்கு போனேனா இல்லையான்னு கேட்டாங்க…”

“நீ என்ன சொன்னே?”

“நெஜத்தைச் சொன்னேன்.”

“அடிப்பாவி.. கெடுத்திட்டியடி காரியத்தை. என்னைக் கேக்காம எதுக்குடி அப்படிச் சொன்னே? பேப்பர் எதிலாவது கையெழுத்துப் போட்டுக் குடுத்தியா?”

“ஆமா போட்டேன்…”

“போச்சு போ… உன்னையும் என்னையும் இனிமே எவனுமே காப்பாத்த முடியாது. என்வேலை போச்சு. இனிமே பூவாக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்…” சட்டென்று அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டேன். நான் எதோ செய்து கொள்ளப் போகிறேன் என்கிற பயத்தில் வனஜா அழுதுகொண்டே கதவைத் தட்டினாள்.

தட்டட்டும். நான் திறப்பதாக இல்லை. என்வேலை போகுமோ இல்லையோ, மானம் நிச்சயமாகப் போகும். ஆபீசில் அவ்வளவு பயல்களும் என்னை இகழ்ச்சியாகப் பார்ப்பான்கள். இப்போதுதான் ஜெயநகரில் ஒரு கருமம் செய்துவிட்டு வந்திருக்கேன்…. உடனே மறுபடியும் ஒரு கருமம். அது நான்கு லட்ச ரூபாய்க் கருமம், இது வேலையே போகக்கூடிய கருமம். இரண்டு கருமமும் சொல்லி வைத்தாற்போல் சேர்ந்து நடக்கின்றதே?

என்னால் தாங்கவே முடியவில்லை. நிச்சயமாக எனக்கு இனி எதிர்காலம் கிடையாது. என் வாழ்க்கையின் எல்லா சந்தோஷங்களும் முடிவுக்கு வந்துவிட்டன. நான் இனி மனைவி மக்களுடன் தெருவில் பிச்சைதான் எடுக்க வேண்டும். எவனோ ஒருத்தன் மொட்டைக் கடிதம் போட்டு என் குடியைக் கெடுத்து விட்டான். முகம் தெரியாத அந்தப் பகைவனிடம் நான் தோற்றுவிட்டேன்.

போய்க் கதவைத் திறந்தேன். வனஜா அழுதழுது முகம் வீங்கிப் போயிருந்தாள். என்னை ஓடி வந்து கட்டிப் பிடித்து அழுதாள். நானும் ஆறுதலுடன் அவளை அணைத்துக்கொண்டேன். எங்களுக்குள் பேச்சே இல்லை. பாவம் அவள்…. என்னை மணந்துகொண்ட தவறைத் தவிர வேறு என்ன செய்தாள்?

எனக்கு வேலையே போய்விடும் என்பதால் வனஜா அரண்டு விட்டாள். புத்தி இல்லாமல் உண்மையைச் சொல்லி விட்டதற்காக வேதனைப் பட்டாள். அந்த வேதனையில் டெல்லிக்கு நான் யாருடன் போனேன் என்ற கேள்வியை என்னிடம் கேட்கவில்லை.

நடந்தது நடந்துவிட்டது. இதிலிருந்து எப்படி மீள்வது? இரவெல்லாம் தூங்காமல் யோசித்தேன். யூனியன் இருக்கிறது. ஆனால் தேவடியாவுடன் பொய்சொல்லி ஊர்சுத்தினால் யூனியன் உதவிக்கு வராது. வனஜாவேறு உண்மையைச் சொல்லி கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டாள். திடீரென ஒரு நல்ல ஐடியா தோன்றியது… நேர்மையான ஐடியா இல்லாவிடினும் முயற்சி செய்தால் நல்ல பலன் கிட்டலாம்.

மறுநாள் காலையில் என்னுடைய ஜெனரல் மனேஜர் வீட்டுக்கு ஓடினேன்.

பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். உள்ளே அவர் மனைவி சமைத்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்து அதிசயித்தார்.

“முக்கியமான விஷயம் பேச வந்திருக்கேன் சார்…”

“எதுவா இருந்தாலும் ஆபீஸ்ல வந்து பேசுங்க சுந்தர்… இப்படி வீட்டுக்கெல்லாம் வரக்கூடாது…”

“நீங்க மட்டும் கல்யாணியுடன் எங்க வீட்டுக்கு வந்தீங்களே?”

“கம்பெனியை ஏமாத்தினவன் வீட்டுக்கு ஒரு ஜிஎம் லெவல்ல விசாரணை நடத்தறதுக்குதான் வந்தேன்.”

“இப்ப என்ன பண்றதா உத்தேசம் ஜிஎம் சார்…?”

“வேலையிலிருந்து உன்னை டெர்மினேட் பண்ண எம்டிக்கு சிபாரிசு பண்றதா இருக்கேன்.”

“அப்படீல்லாம் சிபாரிசு பண்ணிடாதீங்க…”

“நோ… என் முடிவை நான் மாத்தறதா இல்லை.”

“நீங்க உங்க முடிவை மாத்திக்கலைன்னா நான் என் முடிவை மாத்திக்க வேண்டியிருக்கும். அப்புறம் நீங்கதான் வருத்தப் படுவீங்க.”

“என்ன சுந்தர் காலையிலேயே சரக்கு போட்டுட்டு வந்தியா?”

“நான் ஏன் சரக்கு போடறேன்? இப்பதான் உன்னோட ஆளு கல்யாணியைப் பார்த்துட்டு வரேன்…”

கல்யாணியின் பெயரைச் சொன்னேனோ இல்லியோ ஜிஎம் பதட்டத்துடன் எழுந்து நின்று உள்ளே எட்டிப் பார்த்தார்.

“சத்தமா பேசாதே சுந்தர்… இப்ப எதுக்காக இங்க வந்த?” பயந்த குரலில் மெதுவாகக் கேட்டார்.

“என் மேல் இருக்கிற டெல்லி விசாரணையை உடனே நிறுத்தணும்… என்மேல் எந்த நடவடிக்கையும் இருக்கக்கூடாது.”

“சரி. உடனே எல்லாத்தையும் நிறுத்திடறேன். நடவடிக்கையே இருக்காது.”

“என் மனைவிகிட்ட வாங்கின வாக்குமூலத்தை கிழிச்சு போட்டுட்டு, நான் புதுசா எழுதித் தர்ற வாக்குமூலத்தை எம்டிக்கு அனுப்பிடு…”

“உன் இஷ்டப்படியே அனுப்பிடறேன்…”

“இந்த மொபைல்ல எல்லாம் ரெக்கார்ட் ஆயிருக்கு…பேச்சு மாறினே, உன் கல்யாணி விஷயம் வெளிய தெரிஞ்சு மானம் கப்பலேறும்…”

“தயவுபண்ணி அப்படி எதுவும் பண்ணிடாதே… நான் உன் வழிக்கே இனிமே வரமாட்டேன்.”

“எனக்கு உடனே ஒரு நாலு லட்சம் வட்டி இல்லாக் கடனா வேணும். நான் என் வாயை அடைச்சுக்கிறேன்…”

“சத்தியமா தரேன் சுந்தர்… இப்ப இடத்தைக் காலி பண்ணு.”

வெளியே வந்தேன். நான் சரணாகதி ஆகியிருக்க வேண்டிய விஷயம், என்னுடைய டைம்லி புத்திசாலித்தனத்தால் ஜிஎம் சரண்டராயிட்டான். வல்லவனுக்கும் வல்லவன் வையத்தில் இருப்பான்…

அன்றே ஆபீஸில் என்னிடம் பணம் கொடுத்துவிட்டு, “இத்தோடு நீ என்னை விட்டுடனும் சுந்தர்…, நானும் பிள்ளைக் குட்டிக்காரன்…ப்ளாக் மெயில் பண்ணி என்னிடம் நீ மறுபடியும் பணம் கேட்டால், நான் தற்கொலைதான் பண்ணிக்க வேண்டியிருக்கும்.,.” என்றார்.

“சார்…ப்ளீஸ் பிளாக்மெயில் என்னுடைய தொழில் இல்லை. இனிமேல் நீங்க நிம்மதியா இருங்க…”

என் கடன்களை உடனே அடைத்துவிட்டேன்.

இவ்வளவு எளிதாக என் பிரச்னைகள் தீரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒருசில நிமிடங்களில் அற்புதம் நடந்துவிட்டது. பண நெருக்கடி தீர்ந்தது. எதிர்காலம் பற்றிய பயமும் கலைந்தது.

இனி வாழ்க்கையில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கத் தீர்மானித்தேன். பாலுணர்வு உணர்வுகளால் ஏற்பட்ட இன்னல்கள்தானே அத்தனையும்? இனி அந்த மோகத்தில் மதிகெட்டு மனக்கட்டுப்பாடை இழக்க மாட்டேன். உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

அடுத்த சில வருடங்களில் மகேஷ் எய்ட்ஸ் நோயால் அவதிப்பட்டு, மெலிந்துகொண்டே வந்து சுருங்கிப்போனான். நான் அவனை அந்த எய்ட்ஸ் காப்பகத்தில் சாகும் தருவாயில் போய்ப் பார்த்தபோது, என் கால்களைப் பற்றிக்கொண்டு கதறி அழுதான். “என்னை மன்னிச்சிடு சுந்தர்.. நானும் பங்கஜமும் உன்னை ஏமாற்றி நீ கொடுத்த நான்கு லட்ச ரூயாயை பகிர்ந்து கொண்டோம். அந்த உஷா இப்பவும் பங்கஜத்துகிட்டதான் தொழில் பண்றா…”

எனக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என்னை பரத்தையர்களிடம் அறிமுகப் படுத்திய அவன் மட்டும் எப்படி யோக்கியனாக இருக்க முடியும்? நமக்கு வாய்க்கும் நண்பர்கள் யோக்கியர்களாக இருந்தால்தான் நாமும் வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நேர்மையான எண்ணங்களுடன் வாழமுடியும். ‘உன் நண்பனைக் காமி, நீ யாரென்று சொல்கிறேன்” என்கிற கூற்று எவ்வளவு பெரிய உண்மை என்பதை நன்கு உணர்ந்துகொண்டேன்.

கோபத்தில் அவனுடைய இறப்புக்குகூட நான் செல்லவில்லை.

இனி எஞ்சிய என் வாழ்நாளில் வனஜாதான் என்னுடைய தெய்வம். என் குழந்தைகள்தான் என் செல்வங்கள். என் வேலைதான் என்னுடைய அந்தஸ்து.

நேர்கோட்டில் வாழ்ந்து மடிய வேண்டும் என்று எனக்குள் நான் மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *