மனைவியே குடும்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 7,155 
 
 

முதலிரவு அறை.

கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் அமுதா.

கதவு திறக்கப்பட சட்டென்று கண்களை துடைத்துக் கொண்டாள். அவளுடைய கணவன் பெருமாள் அருகில் வந்து அமர்ந்தான்.

“இன்னும் அழுதுகிட்டுதான் இருக்கியா அமுதா? என் மேல உனக்கு இன்னமும் நம்பிக்கை வரல… அப்படித்தானே?”

“அப்படீல்லாம் இல்லீங்க மாமா…”

பெருமாள் அவள் கண்ணீரைத் துடைத்தான். பின்பு ஆதரவாய் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

“இங்க இருக்கிற யாருக்குமே என்னைய பிடிக்கலையே மாமா… அப்புறம் எதுக்காக எல்லாரையும் எதுத்துக்கிட்டு எனக்கு தாலியை கட்டினீங்க?” அவள் குரல் உடைந்தது.

“எல்லாத்தையும் மறந்துட்டு இனிமே நாம சந்தோஷமா வாழலாம் அமுதா ப்ளீஸ்…”

நடந்தது இதுதான்…

பெரிய பணக்கார வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டவள் அமுதா. அவள் பெருமாளின் மிக தூரத்து உறவான மாமாவின் மகள். சிறு வயதிலேயே தாயை இழந்தவள். அதனால் அவள் தந்தையால் பாசமாக வளர்க்கப் பட்டவள். சிறந்த குணவதி. பார்ப்பதற்கு மிகவும் அழகாக, லட்சணமாக பலாச்சுளை நிறத்தில் இருந்தாள்.

பெருமாளின் குடும்பம் கூட்டுக் குடும்பம். குடும்பத் தரகர் மூலம் வந்த வரன் அவள். அமுதா தனக்கு தூரத்து உறவினள்… ஒரு வகையில் தன்னுடைய மாமாவின் மகள் என்று தெரிந்தவுடன்; அவளை நேரில் போய்ப் பார்த்த பெருமாள், அவள் அழகில் சொக்கிப்போனான் உடனே அவளை மணந்துகொள்ள சம்மதித்தான். கல்யாண வேலைகள் துரிதமாக நடந்தது.

சுப முகூர்த்தம் குறிக்கப்பட்டு, கல்யாண பத்திரிகைகள் அச்சிடப்பட்டன.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது. அமுதாவிற்கு அடுத்து வந்த நாட்கள் அனைத்தும் சோதனையான நிகழ்வுகள்….

திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பு அமுதாவின் அப்பா நெஞ்சு வலியால் இறந்துபோனார். இது உறவினர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. அமுதா ஆதரவில்லாமல் தவித்தாள். அப்பா இறந்த பிறகுதான் தெரிய வந்தது, அவர் ஏகப்பட்ட கடன் சுமைகளை வைத்துவிட்டு இறந்துவிட்டார் என்பது. சொந்த வீடுகூட அடமானத்தில் இருந்தது.

அமுதாவின் சொத்துக்களை பங்குபோட வந்த உறவுகள் யாரும் அவள் கஷ்டத்தை பங்குபோடத் தயாரில்லை.

பெருமாளின் வீட்டிலும் அமுதாவைப் பற்றிய எண்ணங்களும், பார்வைகளும் மாற ஆரம்பித்தன. அமிலமான வார்த்தைகளால் அவளை அர்ச்சித்தனர்.

“நான் அப்பவே சொன்னேன்ல, இந்த மாதிரியெல்லாம் நடக்கும், அது எனக்கு முன்கூட்டியே தெரியும்….”

“சின்ன வயசுலேயே அம்மாவை முழுங்கிணவ, இப்ப கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பனையும் முழுங்கிட்டா…. தரகர் சொல்லும்போதே எனக்குச் சந்தேகம்தான்….”

“எனக்கென்னவோ அவ ராசி இல்லாதவளா இருப்பான்னு தோணுது….

எழுத முடியாத இன்னும் பல அமில வார்த்தைகள்…

அந்த நொடியிலிருந்து பெருமாளுக்கு, உறவுகள் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து போயின. நினைக்க நினைக்க மனம் வெறுத்துப் போனது.

இறுதியில் பெரியவர்கள் அனைவரும் கலந்துபேசி அவர்களின் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.

பெருமாளால் இதை சற்றும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. அமுதாவின் கண்ணீர் அவன் உயிரை அரித்துக் கொண்டிருந்தது.

முகூர்த்தத்திற்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கின்றன. அன்று இரவு மிகத் தீவிரமாக யோசித்தான்….

‘இவ்வுலகிற்கு இயற்கை அளித்த மிகச் சிறந்த சீதனம் பெண்கள். எத்தகைய எதிர்ப்பு வந்தாலும், அமுதாதான் நிச்சயமாக என் மனைவி. என்னில் பாதி அவள். ஒரு ஆணின் வாழ்க்கையில் முக்கியமான பெண்கள் நான்கு பேர். பெற்ற தாய்; உடன் பிறந்த சகோதரி; மனைவி; மகள். ஒரு ஆண், அம்மாவிடம் மகனாக இருக்கலாம்; அக்காவிடம் தம்பியாக இருக்கலாம்; தங்கையிடம் அண்ணனாக இருக்கலாம்… ஆனால் மனைவியிடம் மட்டுமே எல்லாமுமாக இருக்க முடியும்… மனைவி என்பவள் மனையை ஆள்பவள் மட்டும் அல்ல; குடும்பத்தினர் அனைவரின் மனதையும் ஆள்பவள். வருடங்கள் தேயும்போது, அதே பெண் அம்மாவாக, அத்தையாக, பாட்டியாக என்று வயதாலும், அனுபவத்தாலும், பண்பாலும், பாசத்தாலும் பரிணமித்து ஜொலிக்கிறாள். குடும்பத்தின் அச்சாணியே மனைவிகள்தான். ஆண் குடும்பத்தின் உயிரெழுத்து. பெண் என்பவள் குடும்பத்தின் தலை எழுத்து.’

பெருமாள் இறுதி முடிவு எடுத்தவனாய் அம்மாவின் முன்னால் போய் நின்றான். அவன் கண்ட முதல் தெய்வம் அம்மாதான்…

அம்மா அவன் நெற்றியில் விபூதி பூசி, “உன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாம, உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை தைரியமாகச் செய். என் மகனைப்பற்றி எனக்குத் தெரியும். யார் என்ன சொன்னாலும் அம்மா நான் உன் கூடவே இருப்பேன்… சரியா?” என்றாள்.

அம்மாவைத் தவிர யாருக்குமே அமுதாவைப் பிடிக்கவில்லை.

அனைவரின் எதிர்ப்பையும் மீறி, குறிக்கப்பட்ட அதே முகூர்த்தத்தில், ஒரு சின்ன கோவிலில், அம்மா தாலியை எடுத்துக் கொடுக்க, அமுதாவின் கழுத்தில் மூன்று முடிச்சுகள் போட்டு, அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான் பெருமாள்.

தன் கெளரவம் பறிபோய் விட்டதாக அப்பாவும்; தன் எதிர்காலமே நாசமானதாக தங்கையும்; கூடப் பிறந்தவன் செத்து விட்டான் என்று அண்ணணும் கரித்துக்கொட்ட; இன்னும் எண்ணற்ற உறவினர்களின் சாபங்களோடு பெருமாளின் புதிய திருமண வாழ்க்கை தொடங்கியது…

அம்மாவின் விடாத அடம் பிடிப்பால் அவர்களின் சாந்தி முகூர்த்தம் இன்று குறிக்கப்பட்டது.

தற்சமயம்…

அமுதாவின் கண்ணீர் பெருமாளின் நெஞ்சைச் சுட்டது.

“அமுதா… டேய், என்னை நிமிர்ந்து பார்.”

மிக மெதுவாக நமிர்ந்து பார்த்தாள்.

“உன் கண்ணுல கண்ணீர் பாக்கவால இப்படி எல்லாரையும் பகைச்சிகிட்டு உன் கழுத்துல தாலி கட்டினேன்? போராட்டம்தாம்ல வாழ்க்கை. நாம ஜெயிச்சுக் காட்டனும்ல…”

அவளை சமாதானம் செய்யும் பொருட்டு, பெருமாள் அவளைத் தன் மடியில் கிடத்திக் கொண்டான். அன்று அவள் அவன் மடியிலேயே தூங்கிப்போனாள்.

அடுத்து வந்த நாட்களில் அந்தக் குடும்பத்தினரின் ஜாடை மாடையான குத்தல் பேச்சக்களையும்; ஏச்சுக்களையும் அமுதா வலியுடன் தாங்கிக்கொண்டாள். ஒரு கட்டத்தில் பெருமாளின் அடக்கி வைத்திருந்த பொறுமை எல்லை கடந்தது. அவனுக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரங்கள் அனைத்தும் வெளியே வரும் தருணமும் வந்தது…

அன்று ஒருநாள் எதேச்சையாக பெருமாள் சீக்கிரம் வீடு திரும்ப, அவனுடைய அண்ணியும், தங்கையும் அமுதாவை வார்த்தைகளால் வசை பாடிக் கொண்டிருக்க, அமுதாவோ கண்களில் கண்ணீருடன் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள்.

எதையுமே கண்டுக்காதது போல் அவனுடைய அப்பா ஊஞ்சலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

இதுவரை வராத கோபங்கள் அனைத்தும் ஒன்றுசேர, பெருமாள் அவன் தங்கையை அருகே அழைத்து, பளார்னு ஓங்கி அறைந்தான். அவள் பொறி கலங்கி நின்றாள். இத்தனை வருடங்களில் அவளிடம் பெருமாள் கண்டிப்புடன் கூடப் பேசியதில்லை. அவனிடம் செல்லமாய் வளர்ந்த தங்கை வாங்கிய முதல் அரை.

அப்பா ஊஞ்சலில் இருந்து இறங்கி பதறியபடி ஓடிவர, அண்ணி பயத்தில் நடுங்க, அமுதா அவனின் ஆத்திரத்தை தடுப்பதற்காக குறுக்கே வந்து நின்றாள். அம்மா வீட்டில் இல்லை.

“ச்சீ நீங்கல்லாம் பொம்பளைங்களா? அவளும் இந்த வீட்டில் குடிபுகுந்த ஒரு சராசரி பொண்ணுதானே? இதுவே உங்ககூடப் பொறந்த பொறப்பா இருந்தா இப்படியெல்லாம் பேச வருமா? ஏற்கனவே காயப்பட்டு வந்து நிக்கறவள எல்லோருமா சேர்ந்து அவ மனச ரணமாக்கி குத்திக் கிழிக்கிறீங்க… உங்க எல்லோருக்கும் இவ்ளோதான் மரியாதை, இதுதான் லிமிட்… இனிமேல் அமுதா கண்லர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும், எல்லோரையும் தூக்கித் தொங்க விட்டுடுவேன், ஜாக்கிரதை.”

“நான் உன் தங்கச்சிடா… நேத்து வந்தவளுக்காக என்னையே கை நீட்டி அடிச்சிட்டீல்ல?”

“நான் உன்மேல எவ்வளவு பாசம் வைச்சிருந்தேன்னு தெரியுமாடி உனக்கு? அமுதாவை உன் அண்ணியா நினைக்கலேன்னாக்கூட பரவாயில்லை…. அவள ஒரு மனுஷியாகக்கூட நினைக்காத உன்னை உன்னை என் தங்கச்சின்னு சொல்றயா?”

“………………………………….”

“இத பாரு நீ என் தங்கச்சி, அவ்ளோதான். அவ என்னோட உசிரு. அவ மனச கஷ்டப் படுத்தறது யாராக இருந்தாலும் அவங்கள என்னால இனி மன்னிக்க முடியாது.”

அப்பா கோபத்துடன், “நீங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டுப் போயிடுங்க…ப்ளீஸ்.” என்றார்.

பெருமாள் சற்றும் தாமதிக்காமல் மொபைலில் ஓலா கார் புக் செய்தான்.

இறுதியாக அம்மா அங்கு வந்து சேர்ந்தாள். வீட்டில் நடந்த களேபரங்களை அனைவரின் முகங்களை வைத்தே யூகித்து விட்டாள். கண்ணீருடன் என் முன்னால் வந்து நின்றாள். அம்மாவின் பார்வையிலிருந்து ஆயிரம் அர்த்தங்கள் புரிந்துகொண்டேன்.

ஓலா கார் வந்து நின்றது.

பெருமாள் கண்களில் நீர்திரள, “அம்மா, இவ எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவ இல்ல… எல்லாத்தையும் இழந்துட்டு வந்தவ. எல்லாமே நாந்தான்னு என்னை மட்டுமே நம்பி வந்திருக்கா… நீதானே அடிக்கடி சொல்லுவ, உன்னை நம்பி வந்தவங்களுக்காக உயிரையே கொடுக்கலாம்னு… உயிராவே வந்தவள மட்டும் எப்படிம்மா விட்டுக் கொடுக்கிறது? நான் உன் பையன்மா. எந்தச் சந்தர்ப்பத்திலும் நேர் தடம் மாற மாட்டேன்.”

பெருமாளையும், மருமகளையும் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தாள் அம்மா.

அதன்பிறகு தனிக் குடித்தனத்தில் இருவரும் போராடி வெற்றி பெற்றனர்.

ஆணின் தன்னம்பிக்கையே அவன் மனைவிதான் என்பதை அமுதா ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு நன்கு உணர்த்தினாள்.

பெருமாளும் மனைவியை எந்தச் சந்தர்ப்பத்திலும், சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் குடித்தனம் நடத்தினான்.

அழகான ஆண் குழந்தை பிறந்தது. அமுதா தற்போது ஒரு மரியாதைக்குரிய தாய்.

தற்சமயம் அவர்களின் அழகான குடும்பம்தான் அமுதா காணும் அழகான உலகம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *