(இதற்கு முந்தைய ‘டெய்லர் சிவன்பிள்ளை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).
முதன் முதலாக புது மனைவியை என் படுக்கையின் கொசு வலைக்குள் சந்தித்த போது ஒரு சின்ன மாயாபுரியின் நீரின் அடியில் இருந்தாற்போல இருந்தது.
அந்தரங்கமான பாலுறவு வைத்துக் கொள்வதற்காகவே தயாரிக்கப்பட்ட கவர்ச்சியான ஒரு பலூன்போல் தெரிந்தது கொசு வலை. அது மாத்திரமில்லை. கொசு வலைக்குள் எனக்குப் பாலுறவில் என் உச்சந்தலையில் ஒரு போதைப் பாம்பு போல் சுழன்று சுழன்று ஏறியது. அப்போது எனக்கு ஒரு உண்மை புரிந்தது. கொசு வலையும் எனக்குப் பெண்ணின் அருகாமையாகவும் ஸ்பரிசமாகவும் மாற்றம் கண்டிருந்தது.
எத்தனையோ வருடங்கள் கழிந்துவிட்டன. எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. எனக்கு கொசு வலைக்குள் தூங்குகிற பழக்கம் மட்டும் மாறாமல் இருந்தது. சில வருடங்களுக்கு ஒருமுறை அவ்வப்போது பழையதாகிவிட்ட கொசு வலையை தூக்கிப் போட்டுவிட்டு புதியதை வாங்கிக்கொண்டேன்.
கொசுத் தொல்லையும் வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டிருந்தது. கொசுத் தொல்லையை எந்த அரசு அமைப்புகளாலும் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. எல்லா ஊரிலுமே ஜனங்கள் கொசுக்கடி பற்றி பேசிப் பேசி மாய்ந்து கொண்டிருந்தார்கள். கொசுக்கடிக்கு எதிராக ரசாயன வில்லைகளும் சுருள்களும் புதிது புதிதாக சந்தையில் வந்தவண்ணம் இருந்தன. பல வீடுகளிலும் இவற்றை வாங்கி ஜனங்கள் உபயோகித்துக் கொண்டிருந்தார்கள்.
சிலருக்கு இந்த மாதிரியான ரசாயன வில்லைகளின் நெடிகள் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் அவற்றை அவர்கள் நிராகரிக்க வேண்டியிருந்தது. அந்த நிலைமையிலும் கூட அவர்கள் கொசு வலையை உபயோகிக்க முன்வரவில்லை. கொசு வலை கட்டிக்கொண்டு அதில் தூங்குவது என்பது நிறைய பேருக்கு ஒரு அசெளகரியமாகத் தோன்றியது. அதை உபயோகிப்பதற்கான இடவசதி பல வீடுகளில் இல்லை என்ற முக்கிய அபிப்பிராயமும் அவர்களிடம் இருந்தது. தவிர, அவற்றை உபயோகிக்காத பகல் நேரங்களில் கொசு வலையை மடித்து வைப்பதற்கும் வீட்டில் இடம் தேவைப்பட்டது.
என் வாழ்க்கையில்தான் கொசு வலை ஒரு விலகாத மெல்லிய மந்தஹாஸத் திரையாகச் சூழ்ந்திருந்தது. வெறுமே பார்க்கிறவர்களுக்கு மட்டும்தான் அது கொசுவிற்காகக் கட்டப்பட்டது. ஆனால் எனக்குக் கொசு வலை அதற்கும் மேல். வருடங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. வாழ்க்கையில் புதிய புதிய மாற்றங்களும் இயல்பாக ஏற்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் தினமும் கொசு வலைக்குள் தூங்கும் வழக்கம் மட்டும் என்னிடம் மாறாமல் இருந்தது.
விருப்பத்திற்கு ஏற்றமாதிரி அவ்வப்போது இளம் நீல நிறம்; சுத்த வெள்ளை; இளம் ரோஜா வர்ணம் என கொசு வலைகளை வாங்கி மாற்றி மாற்றி உபயோகித்துக் கொண்டிருந்தேன். நேர்த்தியான, அழகான, சுத்தமான படுக்கை வசதிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதில் என்னுடைய கொசு வலையும் அடங்கும்.
சில வாரங்களுக்கு முன்பு, கொசு வலை விஷயத்தில் எதிர்பாராத மாற்றம் ஒன்று நிகழ்ந்துவிட்டது. தினசரி வாழ்க்கையில் புதிய வசதிகளுக்கும் புதிய உபயோகங்களுக்கும் புதுப்புது தேவைகளும் அதற்கான பொருட்களும் வீட்டில் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
எங்கள் படுக்கை அறையில் ‘ஏர் கண்டிஷனர்’ ஒன்றைப் பொருத்திக் கொண்டால் என்னவென்று தோன்றியது. மனைவியின் அழுத்தத்தால் என் கவனம் உடனே அதன் பக்கம் திரும்பியது. ஏற்கனவே ஏர்கண்டிஷனர் உபயோகித்துக் கொண்டிருக்கும் நண்பரை சந்தித்து எந்தக் கம்பெனியின் தயாரிப்பை வாங்கலாம்; என்ன மாதிரி மாடல் எவ்வளவு விலையில் வாங்கலாம்; அதனால் வீட்டில் கூடுதலாக மின்சார உபயோகம் எத்தனை யூனிட் அதிகம் ஆகும் என்பனவற்றை எல்லாம் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு தயாரிப்பை வாங்கலாம் என்றும் தீர்மானம் செய்துகொண்டேன். ஒருநாள் என் மனைவியும் நானும் போய் ஏர் கண்டிஷனர் வாங்கி வந்தோம். அடுத்த நாளே என் படுக்கை அறையின் ஜன்னலில் அதைப் பொருத்துவதற்கான பணியாட்கள் வந்து விட்டார்கள். முதலில் ஜன்னலில் அதற்கான மாற்றங்கள் செய்தனர். இதற்கு அதிக நேரம் பிடித்தது. அதன் பின்பு ஏர் கண்டிஷனர் பொருத்தப் பட்டது. ஜன்னலின் மீதப் பகுதியை பணியாட்கள் திறக்க முடியாதபடி முற்றிலும் அடைத்து விட்டார்கள். படுக்கை அறையின் கதவையும் சாத்திவிட்டு மின் இணைப்புக் கொடுத்து ஏர் கண்டிஷனரை இயங்க வைத்தார்கள்.
மிகச் சன்னமான ஒலியுடன் ஏர் கண்டிஷனர் இயங்கத் தொடங்கியது. சில நிமிடங்களில் ஒரு மென்மையான குளிர் மாய வெளியாக அறையில் நிரம்பிப் பரவியது. அடுத்த சில நிமிடங்களில் பணியாட்கள் என் படுக்கையை விட்டு வெளியேறியபோது, என் கட்டிலைச் சுற்றிச் சூழ்ந்திருந்த என் கொசு வலையைப் பார்த்து “இனிமே இது உங்களுக்குத் தேவைப் படாது” என்று சொல்லிச் சிரித்தவாறே நகர்ந்தார்கள்.
இந்த வார்த்தைகளை அவர்களிடமிருந்து நான் எதிர் பார்க்கவில்லை. மெளனமாக இருந்தேன். அவர்கள் சொன்னது உண்மை. நன்கு ஏர் கண்டிஷன் பண்ணப் பட்டுவிட்ட அறைக்குள் கொசுக்கள் வருவதில்லை. அதனால் இனி என் படுக்கை அறைக்குள்ளும் கொசுவின் தொந்திரவு இராது. எனக்கு இது கொஞ்சம் வேடிக்கையான உண்மையாக இருந்தது.
கொசுத் தொந்தரவிற்காக கொசு வலையை உபயோகிப்பது எனக்கு இனி அவசியமற்றதுதான். ஆனால் அதற்காக உடனேயே கொசு வலையை அகற்றுவதற்கு எனக்கு மிகவும் யோசனையாக இருந்தது. அதே நேரம் ஏர் கண்டிஷன் பண்ணிக்கொண்ட அறைக்குள் கொசு வலையை உபயோகிப்பதும் ஒரு முரண்பாடு போலிருந்தது.
என் மனைவியும் இனி கொசு வலை வேண்டாம் அதை நாம் எடுத்து விடுவோம் என்றாள். மனைவியின் வார்த்தையை நான் மறுக்கவில்லை. ஆனால் அதை உடனே செய்வதற்கு எனக்கு மனம் ஒப்பவில்லை. இத்தனை வருடங்களாக என் படுக்கையின் மேல் மெலிதாகக் கவிந்திருக்கும் கொசு வலையை அப்புறப்படுத்த எனக்கு கை எழும்பவில்லை. ஆனால் அதை எடுத்து விடுவதுதான் இயல்பான செயல் என்று புரிந்தது.
ஒருநாள் ராத்திரி படுத்துக் கொள்ளப்போகும் நேரத்தில் கொசு வலையை அதன் பிணைப்புகளில் இருந்து நீக்கினேன். மிகவும் அந்தரங்கமான என் உடை ஒன்றைக் களைவதுபோல் இருந்தது. மிருதுவாக இருந்த கொசு வலையைக் கழற்றிவிட்டு கைகளால் மடித்துக் கொண்டபோது அதன் ஸ்பரிசம் என் மனைவியின் புடவையாய் தெரிந்தது. அவிழ்த்த கொசு வலையை அப்போதைக்குக் கட்டிலின் கீழே திணித்தேன். சட்டென என் படுக்கை அறை விசாலமடைந்து விட்டிருந்தது.
அப்போது மணி இரவு பதினொன்று. ஆனால் அறைக்குள் பொழுது விடியப் போகிற மாதிரியான பிரமை. படுக்கையில் உட்கார்ந்தேன். ஜன்னல் கதவுகள் அடைபட்டிருந்தன. அறைக் கதவும் சாத்தி இருந்தது. குளிர் ஜில்லென்று சூழ்ந்திருந்தது.
மிகவும் மங்கலான நீல நிற பல்பின் சன்னமான ஒளி மெளனமாகப் பரவி இருந்தது. எப்போதும்போல வடக்குத் திசையில் கால்களை நீட்டியவாறு படுத்தேன். கொசு வலை இல்லை. அறையின் உயரம் மிகவும் எட்டாததாகத் தெரிந்தது. வெட்ட வெளியில் படுத்துக்கொண்டு ஆகாயத்தைப் பார்க்கிற மாதிரி இருந்தது.
மனைவியுடன் மிகவும் நெருங்கிப் படுத்து என் கையால் அவளின் புடவை நுனியை நன்றாகப் பற்றிக்கொண்டேன்.