கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 11,804 
 

மலைப்பாம்பு தெரியும்; அதென்ன மனைப்பாம்பு என்று, உங்களில் சிலர் வினவக் கூடும். குறிப்பாக நகரவாசிகள். பாம்பு பார்க்க ஆசைப்படும் குழந்தைகளைப் பாம்புப் பூங்கா கூட்டிப் போனால், விதவிதமான பாம்புகளைப் பார்க்கலாம். எல்லாமே கம்பித் தடுப்புக்குள் வாழ்கின்ற பரிதாப ஜீவன்கள். கண்ணாடிப் பெட்டிகளுக்குள் கருநாகங்கள். கட்டு விரியன்கள். மலைப்பாம்பு குட்டிகள். ராஜநாகங்கள். சுதந்திரம் இல்லாது போனால் பாம்பென்ன, மனிதன் என்ன எல்லாம் ஒன்றுதான். அடுக்கு மாடிகளிலும், புறாக் கூண்டு வீடுகளிலும் சிறைப்பட்டிருக்கும் நகரவாசிகளுக்கும் நகர முடியாமல் படுத்துக் கிடக்கும் இந்தப் பாம்புகளுக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிட முடியும்? இவையும் இனவிருத்தி செய்கின்றன. குச்சியால் குத்துகிறவன் அவற்றின் ரோஷமான சீறலைக் காண்பித்து அவை கொடிய விஷ ஜந்துக்கள் என்று குழந்தைகளுக்கும் புரிய வைக்கிறான்.

மனைப் பாம்புஇத்தனைக்கும் பாம்பைத் தெய்வமாக வழிபடும் பரம்பரையாக்கும் நாங்கள் என்ற மார்தட்டலுக்கு குறைச்சல் இல்லை. தப்பித் தவறி பாத்ரூமுக்குள் ஒரு தண்ணீர்ப் பாம்பு நுழைந்துவிட்டால் ஒரேயடியாகக் கத்தி ஊரைக் கூட்டி அந்தப் பாம்பை மேல் உலகம் அனுப்பிவிட்டுத்தான் மறு வேலை பார்க்கிறோம்.

கடவுளை பாம்பணை மேல் படுக்க வைத்து கன்னத்தில் போட்டுக் கொள்கிறவர்கள், பாம்புப் புற்றுக்கு மஞ்சள் குங்குமம் பூசி பால் வார்க்கிறவர்களும் நாம்தான். இதைத்தான் சிந்தனைக்கும் செய்கைக்கும் உள்ள தூரம் என்பது.

கிராமங்களில் பெரும்பாலும் பாம்புகளைத் துன்புறுத்துவதில்லை. பாம்பு உழவனின் தோழன். வயல் எலிகளைப் பிடித்துச் சாப்பிட்டு பயிரைக் காப்பாற்றும் பாம்பை அடிக்க அவனுக்கு மனது வருமா? இதனால் பாம்புக்கு கிராமத்து மனிதர்களிடம் அறவே பயம் விட்டுப் போய்விட்டது. மாட்டுக் கொட்டகையில், வைக்கோல் படப்பில், வேலி நுகம் என்று அவை சர்வ சுதந்திரமாகத் திரிவதைப் பார்க்கலாம். பெரும்பாலான வீடுகளின் மோட்டு வளையில் அவை மனைப் பாம்பாக வசிப்பது சர்வசாதாரணம். வீட்டுக்குள் நடமாடுபவர்கள் மீது சில சமயம் மேலிருந்து பொத்தென்று வீழ்ந்து கழுத்திலோ தோளிலோ மாலையாகிவிடுவதும் உண்டு. இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அந்த வீட்டு மனிதர்கள் அசையாமல் நின்று அவை இறங்கிப் போக உதவுவதும் உண்டு.

கிராமத்திலிருந்து பாட்டி வீட்டில் ஒரு விபரீதம் நடந்தது. என் தாயார் ஆறு மாதக் குழந்தை. தொட்டிலை தற்செயலாக வந்து பார்த்த பாட்டி விக்கித்து நின்றுவிட்டாள். தொட்டிக்குள்ளிருந்து கயிறு வழியே மேலேறிப் போய்க் கொண்டிருக்கிறது அந்தக் கோதுமை நாகம். தொட்டிலுக்குள் எட்டிப் பார்த்தால் குழந்தை சிரிக்கிறது. ஆகவே அம்மாவின் நாகலட்சுமி என்ற பெயர் காரணப் பெயர் ஆயிற்று.

கஷ்டம் வரும்போதெல்லாம் பாட்டி மோட்டு வளையைப் பார்த்து, “”நாகம்மா நீ தான் வழி காட்டணும்” என்று கன்னத்தில் போட்டுக் கொள்வது வழக்கம். பகலிலும் ராத்திரியிலும் சில சமயம் மேலிருந்து உஸ்ஸ்ஸ்சென்று சீறுகிற சப்தம் கேட்கும். மோட்டுவளைக் கூரையில் அது சரசரவென்று நகர்கிற சப்தம் கேட்கும்.

“”நாகம்மா குழந்தைங்க பயப்படுதுங்க பாரு” என்று பாட்டி ஓர் அதட்டல் போடும். அவ்வளவுதான். சத்தம் அடங்கிவிடும்.

சில சமயம் பாட்டி மூச்சை இழுத்து வாசனை பிடித்து, “”நாகம்மா முட்டை போட்டிருக்கா… உளுந்து வாசனை வீசுது” என்பாள்.

எங்கள் கண்ணில் அந்தப் பாம்பு ஒரு தடவை கூட தட்டுப்பட்டதில்லை.

“”சத்தியம் வாங்கி இருக்கேன். பிள்ளைங்க கண்ணில் படக் கூடாதுன்னு” என்று பாட்டி சொல்லும்.

பாட்டிக்கு வைராக்யம் அதிகம். இல்லாவிட்டால் மாரியம்மன் கோயில் எழுத்துக்காரத் தெரு வீட்டில் தனியாக அந்தத் தள்ளாத வயதில் வெள்ளை முறுக்கு சுட்டு கோவிலுக்கு வெளியே கூடையில் வைத்து விற்று ஜீவனம் செய்ய முடியுமா? ஆனால் பாட்டிக்குக் கண்பார்வை குறைந்து கொண்டே வந்தது. மாரியம்மன் கோவில் வீட்டை விற்றுவிடுவது என்று முடிவாயிற்று.

“”தாத்தாவோடு ரங்கூன்ல வேலை பார்த்த பாய் வீட்ல அந்த வீட்டை வாங்கிக்கிறாங்க” என்று சொன்னபோது பாட்டி மறுப்பேதும் தெரிவிக்காவிட்டாலும் ஏதோ தயங்குவதுபோல் தெரிந்தது.

“”நம்ம வீட்டு மோட்டு வளைல நாகம்மா, தாத்தா காலத்துல இருந்து இருக்கா. அவளை ஒண்ணும் செஞ்சிரப்படாது ஆமா சொல்லிட்டேன்” என்றது பாட்டி.

வீட்டை விற்று சில மாதங்கள் சென்ற பிறகு அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“”மாரியம்மன் கோவில் இடிச்சுட்டு புது மோஸ்தர்ல பாய் அந்த எடத்துல வீடு கட்ட ஆரம்பிச்சுட்டார் தெரியுமோ?”

அம்மா பதறினாள்.

“”ஐயையோ, அந்த நாகம்மா பாம்பு?”

அப்பா சொன்னார்.

“”வீட்டை இடிக்கும்போது நாகம்மாவை பாத்தாங்களாம். அவ்வளவு பெரிய நாகத்தை என் ஆயுசுக்கும் பார்த்தது கிடையாது அப்படீன்னார் பாய். அப்புறம் ஒரு பாம்பாட்டியைக் கூட்டிட்டு வந்து அந்தப் பாம்பை உயிரோடு பிடிக்க ஏற்பாடு செஞ்சாராம். பாட்டிக்குக் குடுத்த வாக்கை மீறலை. ரொம்ப நல்ல மனுஷன்”

பாட்டி திண்ணையில் உட்கார்ந்து பாக்கு உரலை இடித்துக் கொண்டிருந்தது. அப்பா சொன்னது எதுவும் பாட்டியின் காதில் விழவில்லை.

நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டும் கெட்டான் ஊரில்தான் வசித்தோம். அந்த வருஷம்தான் தெருவிளக்குப் போட்டார்கள். ஒவ்வொரு விளக்குக் கம்பத்தின் கீழும் குழந்தைகளும் பெரியவர்களும் விளக்கு எரியப் போவதைப் பார்க்கக் கூடிவிட்டார்கள். “வாழைத்தண்டு விளக்கு’ என்று அதற்குப் பெயரும் சூட்டிவிட்டார்கள். சற்றே இருட்டியது. விளக்குகள் பளீரென்று எரிந்தன. எங்கும் கூச்சல். கும்மாளம். அடங்க பல மாதங்கள் ஆயின.

எங்கள் வீட்டெதிரே போட்ட விளக்கு வெளிச்சம் வாசல் முற்றத்தில் பெரிய ஜமுக்காளம் விரிந்தது போல் விழுந்தது. அங்கே பாட்டி வந்து உட்கார்ந்து கொள்ளும். இப்போதுபோல் டி.வி., எல்லாம் கிடையாது. ரேடியோ கூட இல்லை. நாங்கள் ஐந்தாறு பேர் பாட்டியைச் சுற்றி உட்கார்ந்து கொள்வோம்.

“”பாட்டி… பாட்டி… பாம்பு கதை சொல்லு பாட்டி” என்று கெஞ்சுவோம்.

பாட்டி கதை சொல்ல ஆரம்பிக்கும்.

“”என் வீட்ல நாகம்மா இருந்த மாதிரி எங்க அப்பா வீட்ல நாகராஜன் இருந்தான். ரொம்ப வயசான பாம்பு. எங்க தாத்தா காலத்துல இருந்து வம்சாவளியோட குடியிருந்தது மோட்டு வளையில. பூஜை ரூம்ல உறி விளக்கு மாதிரி தலை கீழா தொங்கும். நாங்க கைதட்டிட்டுத்தான் உள்ளே போகணும். ஒருநாள் என்ன ஆச்சு… எங்க அம்மாவுக்குச் சமையல் உள்ளுல அரை இருட்டா இருந்துதா… கண் சரியா தெரியலே. கொதிக்க கொதிக்க குழம்புப் பாத்திரத்தை எறக்கி பிரிமணைன்னு நினைச்சுக்கிட்டு அடுப்பு பக்கத்துல சுருண்டு படுத்திருந்த நாகராஜன் மேல எறக்கி வச்சுட்டுது… அப்படியே வெந்து சுருண்டு நாகராஜன் செத்துப் போனதை தாத்தாதான் கண்டுபிடிச்சார். வீடே ஒப்பாரி சத்தம்…

கொல்லைப் பக்கம் பூஜை எல்லாம் பண்ணி நாகராஜனை புதைச்சோம். ஆனால் அந்த வருஷம் பயிரெல்லாம் பாழாப் போச்சு. கன்னுகாலியெல்லாம் செத்துப் போச்சு. மனைப் பாம்பை கொன்ன பாவம் எங்க குடும்பத்தை ஆட்டி வச்சுது”

“”பாட்டி உன் வீட்ல இருந்த நாகம்மா என்ன ஆச்சு?”

“”அவளுக்கு என்ன? எங்க இருந்தாலும் பத்திரமா இருப்பா. அம்பது வருஷம் புருஷன் இல்லாம வாழ்ந்த என்னைக் காப்பாத்துனவள் ஆச்சே ”

“”நாகம்மா உன்னைப் பார்க்க வருவாளா பாட்டி?”

பாக்கு உரல் சத்தம் சட்டென்று நின்றது.

“”வருவா… எனக்கு ஆபத்துன்னா எங்க இருந்தாலும் வருவா”

அப்பா அவர் பங்குக்கு ஒரு பாம்புக் கதை சொன்னார்:

“”குழந்தைகளே… உங்களுக்கு வினோபாஜியை தெரியுமா?”

நாங்கள் விழித்தோம்.

“”வினோபாஜி பூதான இயக்கத்தின் தலைவர். அதாவது பணக்காரர்களிடம் நிலங்களைத் தானமாக வாங்கி நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்தவர். அவர் வாரம் ஒருநாள் மெüனவிரதம் இருந்த அன்று அவர் வசித்த அறைக்குள் ஒரு பாம்பு நுழைந்துவிட்டது. மெல்ல அவரை நோக்கி நகர்ந்தது. இப்போது “பாம்பு… பாம்பு’ என்று கத்தினால் மெüனவிரதம் கலைந்துவிடுமே! வினோபாஜிக்கு ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாமல் மெüன விரதத்தைக் கலைக்காமல் தியானத்தில் அமர்ந்துவிட்டார். பாம்பு அவரைச் சுற்றிக் கொண்டு போய் விட்டது. அமைதியாக தியானம் செய்தால் எவ்வளவு பெரிய ஆபத்தும் நம்மை நெருங்காது” அப்பா எப்போதும் ஒரு நீதியைச் சொல்லித்தான் கதையை முடிப்பார்.

“”பாம்புக் கதைகளா சொல்லி குழந்தைகளை பயமுறுத்தி வைக்காதீங்க” அம்மா எங்களை அங்கிருந்து இழுத்துக் கொண்டு போய் விபூதி பூசி படுக்க வைப்பாள்.

பாட்டிக்கு நடமாட்டம் அறவே அற்றுப் போய்விட்டது. உட்கார்ந்த இடத்தில்தான் எல்லாம். உடம்பில் துணி இல்லாத ஸ்மரணையும் இருக்காது. அப்பா திண்ணையில் சாக்குப் படுதாவைக் கட்டிவிட்டார்.

ஒரு நாள் தெருவில் என்னவோ களேபரம்.

ஒரு பாம்புப் பிடாரன். கையில் மகுடியுடன் எங்கள் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து மகுடியை ஊதலானான்.

மகுடிச் சத்தம் கேட்டதும் சாக்குப் படுதா அசைந்தது.

“”பிடாரா இப்படி வா” என்று படுதா உள்ளிருந்து பாட்டியின் குரல் கேட்டது.

“”எந்த ஊருடாப்பா நீ?”

“”நான் பொறந்தது வளந்தது எல்லாம் இந்த ஊருதான்” என்று ஆரம்பித்தான் பிடாரன்.

அறைக்குள் அம்மா வேகமாக வந்து சத்தம் போட்டாள்.

“”இத பாருப்பா. இது கொழந்தைங்க நடமாடற இடம். இங்கே பாம்பெல்லாம் வச்சு வேடிக்கை காட்ட வேணாம். போ… போ…”என்று அவன் நீட்டிய தட்டில் சில்லறை போட்டாள்.

அதற்குள், “”நாகம்” என்று அப்பாவின் குரல் கேட்டது. அப்பா அப்படித்தான் நாகலட்சுமி என்ற பெயரைச் சுருக்கி கூப்பிடுகிற வழக்கம்.

பிடாரன் அண்ணாந்து சிரித்தான்.

ஏ, அப்பா அவன் கண்களில் என்ன ஒரு மினுமினுப்பு! பாம்பின் கண்கள் போல!

“”எங்க ஊட்லயும் ஒரு நாகம் இருக்காப்ல இருக்கே” – மறுபடி சிரித்தான்.

பாட்டியின் குரல் உஷ்ஷ் என்று வந்தது.

“”இவங்கள்ளாம் பாம்புக்கு பயப்படறாங்கப்பா… நாங்க பாம்போட வாழ்ந்தவங்க. கொண்டாந்திருக்க பாம்புங்கள பாக்க எனக்குத்தான் பார்வை இல்லை. அது சரி என்னென்ன ஜாதி பாம்பெல்லாம் வச்சிருக்க?” பாட்டியின் குரல் விடாது கேட்டது.

“”நாகப் பாம்பு, சாரைப் பாம்பு, பச்சைப் பாம்பு, சுருட்டப் பாம்பு, மண்ணுள்ளி பாம்பு எல்லா பாம்பும் இருக்கு பாட்டி… ராஜநாகம் கூட இருக்கு. ஆனா அது ஊட்ல இருக்கு ”

இந்த சமயத்தில் அப்பாவும் வந்து சேர்ந்தார்.

“”இதெல்லாம் எங்கே புடிச்சே?”

“”கொல்லிமலை சாமி”

“”ஏம்ப்பா பாம்புக்கு ஆயுசுக்காலம் எவ்வளவு இருக்கும்?”

பிடாரன் மீசையை நீவிக் கொண்டு சொன்னான்:

“”அன்னம் ஆகாரமில்லாம ஆறுமாசம் உயிரோட இருக்கும் சாமி. எங்கிட்ட இருக்கர பாம்புகள்லயே வயசான பாம்பு இதோ இந்த கோதுமை நாகம்தான்”

பெட்டியைத் திறந்து காட்டினான்.

“”எங்கிட்ட அப்பா குடுத்து 5 வருஷமாச்சு. அவர் குடுக்குறப்ப சொன்னார்… எழுபது வயசுடா இதுக்கு. தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்குப் போன சமயம் அங்க ஒரு தெருவுல ஒரு முஸ்லீம் வீட்ல புடிச்சதுன்னு சொன்னார்”

அப்பாவின் முகம் மாறிவிட்டது. படுதாவில் அசைவில்லை.

நாங்கள் எட்டிப் பார்த்தோம். பிரம்புப் பெட்டிக்குள் சைக்கிள் டயரின் பாதி கனத்தில் கோதுமை நிறத்தில் ஒரு பாம்பு சுருண்டு கிடந்தது. உயிரோடு இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருந்தது.

“”பார்வை கிடையாது இதுக்கு” என்றான் பிடாரன்.

“”இவ்வளவு வயசான பாம்பை ஏன் வச்சுக்கிட்டிருக்கே?”

“”இதை வச்சு வித்தை காட்றதில்லை சாமி. அப்பா குடுத்த பாம்பு. அதிருஷ்டம் சாமி. விட்ர முடியாது. போற இடமெல்லாம் இதையும் தூக்கிக்கிட்டுப் போறேன்” பிடாரன் சொன்னான் பெருமூச்சுடன்.

அப்பா பார்வை சாக்குப் படுதாவில் படிந்தது. படுதா அசையவில்லை.

அன்று முழுவதும் அசையவில்லை. அதற்கு அடுத்த நாளும் அசையவில்லை.

– அக்டோபர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *