மனித தெய்வம் !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 5,664 
 
 

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில்…. ஏதோ ஒரு முகம், தலை, பெண்ணுருவம் தன்னைக் கண்டு இன்னொருவர் முதுகில் ஒளிவதைக் கண்ட மலர்மாறன்… துணுக்குற்றான்.

‘யார் அது..?’- உற்று நோக்கினான்.

அதே சமயம்…..

பதுங்கிய அவளும். அந்த முதுகின் பின்னிருந்து இவனை மிரட்சியுடன் பார்த்தாள்.

இவனுக்கு ஆள் அடையாளம் தெரிந்தது.

‘லட்சுமி !’

இவள் ஏன் தன்னைப் பார்த்துப் பயப்படவேண்டும்..? ஆளைக் கண்ட மாத்திரம் ஆத்திரத்தில் வெட்டி விடுவேன், குத்திவிடுவேன் பயமா..? ! – நினைக்க அவள் மீது இவனுக்குப் பரிவு, பச்சாதாபம் வந்தது.

அவளிடம் பேச… இதயமும் மனசும் அவனையும் அறியாமல் துடித்தது.’பேசலாமா..?! ‘மனம் தயங்கவும் செய்தது .

பேசலாம் ! தன்னைப் பார்க்கவே பயப்படும் அவள் நிச்சயம் பேசமாட்டாள். தான் அவளை நோக்கி நகரத்தொடங்கினால் அவளும் நகருவாள், விரைவாகச் செல்வாள் அல்லது ஓடுவாள்.

என்ன செய்ய..?

பெண்ணே ! நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். என்று எப்படி தெரிவிக்க…?’ என்று நினைக்கும்போதுதான் அவள் நெற்றியைக் கவனித்த இவனுக்குப் பகீரென்றது.

ஓஓ… ! மனம் மரண ஓலத்தில் துடித்தது.

‘எப்படி..? எப்போது..?’ இதயம் கசங்கி வலித்தது.

அந்த வலியின் தாக்கம்….

எது நடந்தாலும் சரி. அவள் எப்படி நடந்து கொண்டாலும் சரி, ஓடினாலும் ஆளை விடாமல் விரட்டிப் பிடித்து… இதற்கான காரண காரியத்தைத் தெரிந்து கொள்ளாமல் விடக்கூடாது. விட்டால் நம்மால் நிச்சயமாகத் தூங்க முடியாது. ! என்று அவனுக்குள் தெளிவாகத் தெரிய…

மலர்மாறன்.அவளை நோக்கி நகர்ந்தான்.

அவன், தன்னை குறி வைத்து வருவதைக் கண்ட லட்சுமி அதற்கு மேல் ஒதுங்க இடமின்றி நகர முடியாமல் உடலும், உள்ளமும் துடிக்க நின்றாள். முகம் வேர்த்தது. கை கால்கள் லேசாக நடுங்கியது.

நெருங்கிய மலர்மாறன்…

“ல…லட்சுமி…!” அழைத்தான்.

அவள் மிரள மிரள விழித்தாள்.

“சுமி…! உன்னைத்தான்…!” மீண்டும் அழைத்தான்.

அருகில் நிற்பவர்கள் இவர்களைப் பார்க்க…..கவனிக்க…

‘இனியும் இப்படி இருப்பது சரி இல்லை..!’ என்கிற முடிவிற்கு வந்த லட்சுமி…

“என்ன..?” கேட்டு அவள் பதுங்களிலிருந்து மெல்ல வெளி வந்தாள்.

‘மக்களுக்கு மத்தியில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது !’ என்கிற நினைப்பில்…கொஞ்சம் ஆளில்லா இடம் பார்த்து நடந்தாள்., நின்றாள்.

அவளை விடாமல் தொடர்ந்த மலர்மாறன்

“என்னைத் தெரியுதா..?” என்றான்

இந்தக் கேள்விக்கு அவளிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக கண்களிருந்து குபுக்கென்று கண்ணீர் வந்து கட்டியது.

சட்டென்று தலையைத் தாழ்த்தி மறைத்துத் துடைத்துக் கொண்டாள் ‘மௌனம்… உள்ளுக்குள் விசும்பல்.!’ – உணர்ந்த மலர்மாறன்……

‘இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாது !’என்று தன்னையே நொந்து கொண்டான்.

“சுமி. ! எனக்கு உன்னைப் பத்தி கொஞ்சம் விபரம் வேணும். கொஞ்ச நேரம் நாம தனியே பேசலாமா..?” தயவாய்க் கேட்டான்.

அவள் துணுக்குற்று தலைதூக்கி இவனைக் கலவரமாகப் பார்த்தாள்

உடல் லேசாக நடுங்கியது.

“பயப்படாதே. ! பழசைப் பத்தி நான் எதுவும் கேட்க மாட்டேன். அதெல்லாம் நான் அப்பவே மன்னிச்சு மறந்தாச்சு. இப்போதைக்கு உனக்கு ஏன் இப்படி ஆச்சு, உன் கணவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியனும் அவ்வளவுதான். !” என்றான்.

லட்சுமி மனதில் கலவரம் மறைந்து திருப்தி, துணிவு வந்தது.

ஆனாலும் கொஞ்சம் தயக்கம். நகராமல் நின்றாள்..

“சுமி ! சத்தியமா என்னால உனக்குத் தப்பு, தவறு நடக்காது என்னை நம்பு. எந்தவித உள்நோக்கத்துடனும் உன்னை அழைக்கலை.

நீ எனக்குத் துரோகம் செய்துவிட்டு ஓடிப்போனதா நான் நினைக்கலே. என்னைப் பொறுத்தவரையில் நான் உனக்கு நல்ல கணவனாய் நடந்து வந்திருக்கேன். ஆனால் உனக்கு…? நீ நினைச்சு எதிர் பார்த்து வந்த மாதிரி நான் நடக்கலை. அந்த குறையில் நீ உனக்குப் பிடிச்சவனோடு வாழப் போயிட் டேன்னு நினைச்சு உன்னை மன்னிச்சி அந்த நிமிசமே நடந்ததெல்லாம் மறந்துட்டேன். அதனால் உன் துளி பேர்ல கோபம் வருத்தம் கிடையாது.” என்று தன் மனதில் உள்ளதைச் சொல்லி தன்னிலை விளக்கம் கொடுத்தான் மலர்மாறன்.

லட்சுமிக்கு மனம் குழைந்தது., கனத்தது.

தலை குனிந்தபடி அருகிலிருக்கும் பூங்கா நோக்கி நடந்தாள்.

இருவரும் போய் தனியே அமர்ந்தனர்.

சிறிது நேரம்… பொறுமையாய் இருந்த மலமாறன்….

“உன் கணவருக்கு என்னாச்சு..?” நேரடியாகவே விசயத்திற்கு வந்தான்.

லட்சுமி கண்களில் நீர் கோர்த்து, உள்ளம், உதடுகள் துடிக்க…

“கலியாணம் ஆன இரண்டாவது வருசமே ஒரு பேருந்து விபத்தில்….”அதற்கு மேல் சொல்ல முடியாமல் விசும்பினாள்.

இவனுக்கும் கனத்தது.

“அப்பறம்..?”

“பிறந்த வீட்டு வெறுப்பு, புகுந்த வீட்டு வெறுப்பைகளைச் சம்பாதிச்சு அவரே கதின்னு ஆனதால அவர் மறைவுக்குப் பிறகு என்னால் எங்கும் ஓட்ட முடியல. பொழைக்க இந்த கோவை வந்தேன். படிச்ச படிப்பு சோறு போடுது.”சுருக்கமாகச் சொன்னாள்.

“தனியாவா இருக்கே..?”

“ம்ம்….”

“குழந்தைங்க…?”

“இல்லே..”

‘எவ்வளவு மங்களகரமாய் சீரும் சிறப்புமாக வாழ்ந்தவள்..? ! ‘நினைத்த மலர்மாறன்

“என்னைப் பார்த்ததும் ஏன் பயந்து ஒளிந்தே..?”

“சொ… சொல்லாம கொள்ளாம துரோகம் செய்துட்டு ஓடிய எனக்கு உங்களைப் பார்க்க மனசுல தெம்பு தைரியம் இல்லே.”

” அப்படியா..?”

“ஆமா… நீங்க… காரைக்காலை விட்டு இங்கே எப்படி..?”

“உண்மையைச் சொல்லப் போனால் மான அவமானம் உனக்குப் பிறகு அங்கே என்னால் தலை நிமிர்ந்து நடக்க முடியல. கிளம்பி வந்துட்டேன்.”

“என் மேல் சுத்தமா கோபம், வருத்தம் இல்லையா..?”

“இல்லே..”

இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“சுமி ! அன்னையை விட இன்னைக்கு, இப்ப, இந்த உன் கோலம்தான் என்னை ரொம்ப படுத்துது..”

“………………………………………..’’

“சுமி ! நீ விட்டு விட்டு போன இடம் அஞ்சு வருசமா இன்னும் வெற்றிடமாத்தான் இருக்கு.”

“அப்படியா..?”

“ஆமாம்”

“ஏன் திருமணம் முடிக்கலையா..?”

“விருப்பமில்லே..!”

“ஏன்..??…”

“மறுபடியும் ஒரு பெண்ணோட.. சம்சார வாழ்க்கைப் பிடிக்கலை….”

“மறுபடியும் என்னை மாதிரி நடந்துடும் என்கிற பயமா..?”

“இல்ல..”

“பின்னே..?”

“வெறுத்துப் போச்சு”

அதற்கு மேல் பேசவில்லை. மெளனமாக இருந்தாள்.

“இ… இப்ப ஆசைப் படுறேன்…”

“புரியல..?! ..”ஏறிட்டாள்

“நீ விருப்பப்பட்டா நாம மறுபடியும் கணவன் மனைவியாய் வாழலாம்… !”

“அத்தான்…!!”

“சுமி ! அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, கணவன் , மனைவி எந்த உறவாய் இருந்தாலும் யார் வாழ்க்கையிலும் யாரும் குறுக்கிடக் கூடாது.. உறவின் பேரில் தங்கள் விருப்பத்தைச் சொல்லலாமேத் தவிர திணிக்கிறதோ கட்டாயப்படுத்துறதோ தப்பு , தவறு.

நீ என்னிடம் உன் விருப்பத்தைச் சொல்லி இருந்தால் நானே நீ ஓடிப்போனவனோடு உன்னைச் சேர்த்து வைச்சுருப்பேன். நீ சொல்லாமல் ஓடிப் போனதுதான் எனக்குத் தலை குனிவு. நீ செய்த அந்த தவறுக்குத் தண்டனைதான் அந்த கணவன் பறிப்பு என்பது என் கருத்து. உன் தண்டனைக் காலம் முடிவடைஞ்சு போச்சு. உனக்கு விருப்பமிருந்தால் நாம மறுபடியும் வாழலாம். !” சொல்லி நிறுத்தினான்..

மனைவி அடுத்தவனோடு ஓடிப்போய்விட்டால் கொலை, குத்து வெட்டு என்று அலையும் சமுதாயத்திற்கு மத்தியில் இதோ மனித தெய்வம் ! என்று நெகிழ்ந்த லட்சுமி..

“அத்தான்…!” என்று கதறி மலர்மாறன் மார்பில் சாய்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *