மனித இயந்திரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 14, 2022
பார்வையிட்டோர்: 3,192 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா, அப்பா, ராமு, சிவரஞ்சனி எல்லாரும் வாங்க… சாப்பிடலாம்” நாச்சியப்பன் சத்தமாக அழைப்பு விடுத்தான்.

லட்சுமி ஆச்சியும், நாகப்ப செட்டி யாரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்,

“ஆமா, இன்றைக்கு எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடப் போறோம். இனி தினமும் அப்படித் தான்” என்று சொல்லிவிட்டு மனைவி சிவரஞ்சனியைப் பார்த்தான் நாச்சியப்பன்.

அவள் ‘என்ன வந்தது இன்று இவருக்கு’ என்பது போல் விழித்தாள்.

நாச்சியப்பன் தன் பெற்றோர் முகங்களில் மகிழ்ச்சி பொங்கியதை கவனிக்கத் தவறவில்லை. சாப்பாட்டுக் கடை முடிந்தது. அனைவரும் படுக்கச் சென்றனர். “ராமு, தாத்தா, பாட்டிக்கு ‘குட்நைட்’ சொல்லு” என்றான் நாச்சியப்பன்,

சிவரஞ்சனி ‘இன்னிக்கு இவரு நல்ல மூட்ல இருக்காரே’ என்று நினைத்துக் கொண்டே படுக்கைக்குச் சென்றாள்.

“அம்மா… தலைவலி எப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே பெற்றோரின் படுக்கை அறைக்குள் சென்ற நாச்சியப்பன். “கொண்டா… தலைவலித் தைலத்தை… நானே தேய்த்து விடறேன்” என்று சொல்லி, லெட்சுமி ஆச்சியின் நெற்றிப் பொட்டில் நன்கு தேய்த்து விட்டான்.

“போதும் வுடுடா..” என்றாள் லெட்சுமி ஆச்சி.

“அம்மா இன்னக்கி உன் மடில படுத்துத் தூங்கப் போறேன்” என்று சொல்லிக் கொண்டே தாயின் மடியில் படுத்துக் கொண்டான் நாச்சியப்பன்,

“என் மகனைப் பாருடா ராமு… என் செல்ல மகன்…” என்று பேரனைக் கூப்பிட்டுக் காட்டின லெட்சுமி ஆச்சி, மகனின் தாடையை உருவி முத்தமிட்டாள்.

“அப்பா உங்களுக்கு கால் வலியெல்லாம் எப்படி இருக்கு… கொஞ்ச நேரம் கால் அமுக்கிவிட்டுப் போறேனே” என்று சொல்லி கால் அமுக்கிவிட ஆரம்பித்தான் நாச்சி.

“வேண்டாம், நீ போய் படுத்துக்க” என்றார் கிழவர். லெட்சுமி ஆச்சியும், நாகப்ப செட்டியாரும் தங்கள் மகனைப் பற்றி என்னவெல்லாம் பேசிக் கொண்டோமே என்று நினைத்துக் கொண்டனர். அவர்களின் கண்கள் கலங்கின. அன்று இரவு நிம்மதியாய் உறங்கிப் போயினர் இருவரும்.

நாச்சியப்பன் தன் பெட்ரூமுக்குத் திருப்தியுடன் திரும்பினான். தான் மாறிப் போனதை நினைத்துப் பார்த்து மகிழ்ந்தான்.

உலகம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தது. வானம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளுத்துக் கொண்டிருந்தது. சிங்கப்பூர்த் தெருக்களில் விதவிதமான விலை உயர்ந்த கார்கள் வழுக்கிக் கொண்டிருந்தன. மோட்டார் சைக்கிள் கள் சர் சர்ரென்று சீறிக் கொண்டிருந்தன. உயரமான கட்டடங்கள் விண்ணைத் தொட முயன்று தோற்றுக் கொண்டிருந்தன. உடற்பயிற்சி விரும்பிகள் ஓடிக் கொண் டிருந்தனர். மனித இயந்திரங்கள் இங்குமங்கும் இயங்கிக் கொண்டிருந்தன. நாச்சியப்பனும்தான்.

நாச்சியப்பனுடையது அழகான சிறு குடும்பம், மனைவி சிவரஞ்சனி, மகன் ராமு, வயதான பெற்றோர் லெட்சுமி ஆச்சி, நாகப்ப செட்டியார், 80 வயதுக் கிழவர். இவர் களுடன் ஈசூன் 743வது பிளாக்கிலே வசித்து வந்தான் நாச்சியப்பன்.

நாச்சியப்பனுக்கு உட்லன்ட்ஸ்சிலே தனியார் கம்பெனி ஒன்றில் உற்பத்தி அதிகாரி வேலை, கை நிறையச் சம்பளம். கார் வைத்திருக்கிறான். சிவரஞ்சனியும் வீட்டில் இருந்தால் பொழுது போகவில்லை என்று வேலைக்குச் செல்கிறாள். குட்டிப் பையன் ராமு ஈசூன் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படிக்கிறான். மூவரும் தினமும் 7 மணிக்கெல்லாம் கிளம்பி விடுவார்கள். போகிற வழியில்தான் ராமுவின் பள்ளியும், சிவரஞ்சனி வேலைபார்க்கிற நிறுவனமும்.

நாச்சியப்பன் போகிற வழியில் இறக்கி விட்டு செல் வான். அன்றும் அப்படித்தான் போய்க் கொண்டிருக்கையில்..

“என்னங்க உங்க அப்பா அம்மாவுக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது. நாம அவசர அவசரமா புறப்படும் போதுதான் அவங்களும் எழுந்து பாத்ரூம், டாய்லெட்டுன்னு போய்க் கிட்டு.. எந்த ஆபீசுக்குப் போக இப்படி அவசரப்படறாங் களோ தெரியலை…” என்று அங்கலாய்த்தாள் சிவரஞ்சனி.

நாச்சியப்பன் ஒன்றும் பதில் பேசாமலேயே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

“என்னங்க… நான் சொல்றது காதுல விழுதில்ல…” மறுபடியும் நச்சரித்தாள் சிவரஞ்சனி.

“சரி… நான் சொல்லிடறேன். இனிமே நாம் ஆபீஸ்போன பிறகு எழுந்து வந்தாபோதும். அதுவரை அவங்க ரூம்ல இருக்கிற டாய்லெட்டையே உபயோகிச்சுக்கச் சொல்லிட றேன். போதுமா…” நாச்சியப்பனின் இந்த பதில் அவளுக்கு போதுமானதாக இருந்தாலும், எங்கே தன் மீது உள்ள கோபத்தில்தான் அப்படிச் சொல்லுகிறானோ என்று நினைத்த சிவரஞ்சனி “இல்ல… என்னத்துக்கு.. இந்த வயசான காலத்துல, குறுக்க நெடுக்க நடந்து கீழே விழுந்துட்டா என்ன பண்றது? நாம போனப்புறம் சாவகாசமா எல்லாம் பண்ணலாமேன்னுதான்” என்று இழுத்து முடித்தாள்.

நாச்சியப்பன் பேசாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

“ஏங்க…”

“ம்… சொல்லு…”

“இல்ல, உங்க அப்பா, அம்மா வாக்கிங் போறாங்களாம், இந்த தள்ளாத வயசுல அதெல்லாம் தேவையா? லிஃப்ட்டுதான்னாலும் 11வது மாடிலேர்ந்து இறங்கணுமா? வீட்டுக்குள்ளேயே நடக்கச் சொல்லுங்க..”

“ம்… சரி…”

பேசிக் கொண்டே வந்ததில் ராமுவின் பள்ளி வந்ததும் “டாடி என் ஸ்கூல்…” என்று கத்தினான் ராமு. ராமுவை இறக்கி விட்டு ‘பை’ சொல்லிவிட்டு. தொடர்ந்தனர்.

நாச்சியப்பன் கேட்டான் “அவங்களுக்கு என்ன வச்சிருக்கே சாப்பிட?”

“பிரட் இருக்கு… ஜாம் எடுத்து வச்சிருக்கேன், காபி. போட்டு ஃபிளாஸ்க்குலே வச்சிருக்கேன்.”

“மதியத்துக்கு…?”

“சோறு குக்கர்ல வச்சிருக்கேன், சாம்பார் இருக்கு உருளைக் கிழங்கு சிப்ஸ் இருக்கு. தயிர் இருக்கு.”

“சரி…”

சிவரஞ்சனியின் கம்பனி வந்ததும் இறக்கி விட்டுக் கார் பறந்தது. அன்று மாலை சீக்கிரமே வேலைகளை முடித்துக் கொண்டு புறப்பட்டான் நாச்சியப்பன். நண்பன் சுப்பிரமணி விருந்துக்கு அழைத்திருந்தான். சுப்பிரமணி நாச்சியப்பனின் நெடுநாளைய நண்பன். வீட்டு விஷயங்களில் உரிமையோடு தலையிட்டுப் பேசுவான். தொலைபேசியில் சுப்பிரமணியைத் தொடர்பு கொண்டான் நாச்சியப்பன் “ஹலோ… நான்தான் நாச்சி…நான் உங்க வீட்டுக்குத்தான் வந்துக்கிட்டிருக்கேன்…”

“சரி… சரி…” ஒற்றை வரியில் முடித்தான் சுப்பிரமணி. பின்பு மனைவியைத் தொடர்பு கொண்டான் நாச்சியப்பன்.

“நான் சுப்பிரமணி வீட்டுக்குப் போய்க்கிட்டிருக்கேன். நீ வீட்டுக்கு ராமுவை அழைச்சிக்கிட்டுப் போயிடு”

“சரி… நீங்க உங்க ஃபிரண்டோட ஒரேயடியா கதை அளக்காம சீக்கிரமா வீட்டுக்கு வாங்க.”

“ம்”

“சரி நீங்க வந்திடுங்க ராமுவை டியூஷன்லேர்ந்து நான் அழைச்சிக்கிட்டுப் போறேன்.” பேசி முடித்தாள் சிவரஞ்சனி. சுப்பிரமணி ஜுரோங்கில் வசித்து வருகிறான், அவன் மனைவி வள்ளியம்மை, மகள் கவி சின்னப் பொண்ணு. நர்சரி படிக்கிறாள், அனைவரும் அன்பாய்ப் பழகுவார்கள். இருவர் குடும்பங்களும் அவர்கள் பாட்டன் காலத்திலேயே சிங்கப்பூரில் குடியேறிய இந்தியக் குடும்பங்கள். இதுவரையில் உறவில் எந்த விரிசலும் இல்லாமல் வளர்ந்துதான் வந்திருக்கிறது, அவர்கள் நட்பு.

பலவற்றையும் நினைத்தவாறே கதவைத் தட்டினான் நாச்சியப்பன்.

கதவைத் திறந்த வள்ளியம்மை “வாங்க” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு கேட்டுவிட்டு சென்று விட்டாள்.

ஏதோ கணவன் மனைவிக்குள் பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டான் நாச்சியப்பன்.

“சுப்பிரமணி… கவிதா… யாரு வந்திருக்கா பாரு?” என்று அழைத்து கொண்டே உள்ளே சென்ற நாச்சியப்பன் சோபாவில் அமர்ந்தான்.

உள்ளே இருந்து சுப்பிரமணி வெளியே வந்தான்.

“வா…” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டான். நாச்சியப்பனுக்குத் தான் சந்தேகப்பட்டது சரிதான் ஏதோ பிரச்சனைதான் என்று நினைத்துக் கொண்டு “கவிக்குட்டி இங்கே வா. உனக்கு அங்கிள் சாக்லேட் வாங்கி வந்திருக்கேன் பாரு” என்று அன்போடு சாக்லேட் டப்பாவை எடுத்து நீட்டினான்.

“வேண்டாம்” என்று குழந்தை தாயிடம் போய் ஒட்டிக் கொண்டது. எல்லாம் வித்தியாசமாக இருந்தது, நாச்சியப்ப னுக்கு. வள்ளியம்மை வெளியே வந்து, ‘சாப்பிடுங்க’ என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்.

டைனிங் டேபிள் வகை வகையான அயிட்டங்களோடு நிரம்பி வழிந்தது. யாரும் வெளியில் வந்து அவனுடன் பேசாததால் ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தான் நாச்சியப்பன்.

உள்ளே வள்ளியம்மையும், சுப்பிரமணியும் பேசிக் கொண்டது நாச்சியப்பனுக்கு மேலும் குழப்பத்தை விளைவித்தது.

“என்னங்க நீங்களும் அவரோட சாப்பிடுங்க உங்களுக்குப் பிடித்த வத்தக் குழம்பு, பால் பாயாசம் வச்சிருக்கேன்.”

“உன்னைய விடவா எனக்கு வத்தக் குழம்பும் பாயாசமும் பிடிக்கும்” என்றான் சுப்பிரமணி.

“ரொம்ப கிண்டல் செய்யாதீர்கள்” செல்லமாக கோபித்துக் கொண்டாள் வள்ளியம்மை.

கணவன், மனைவி நன்றாகத்தான் பேசிக் கொள் கிறார்கள். பிறகு ஏன் நம்மிடம் முகம் கொடுத்து யாரும் பேசவில்லை? வேறு ஏதாவது ஆபீஸ் பிரச்னையாக இருக்கும் என்று நினைத்த நாச்சியப்பன் தானாக பேச்சை ஆரம்பித்தான்.

“டேய் நீ எனக்கு ஆபீஸுக்கு போன் பண்ணியிருந்தியா?”

கொஞ்ச நேரத்துக்கு சுப்பிரமணியிடம் இருந்து பதில் இல்லை.

“உன்னைத்தான்…” என்றான் நாச்சியப்பன்.

“ம்… இல்லை…” என்று நாச்சியின் முகத்தைப் பார்க்காமலே பதில் சொன்னான் சுப்பிரமணி.

இருவரும் சாப்பிட உட்கார்ந்தனர். வள்ளியம்மை பரிமாறினாள். நாச்சியப்பனுக்கு எல்லாமே வழக்கத்துக்கு மாறாக இருந்தது. இவர்கள் தன்னைத் தவிர்க்கிறார்கள், ஒதுக்குகிறார்கள் என்பது புரிந்தது. அடக்க முடியாமல் கேட்டே விட்டான்.

“என்ன இன்னிக்கு யாருமே சரியா பேச் மாட்டேங்கறீங்க?”

“ஒன்னுமில்லை”

வள்ளியம்மையின் ஒற்றை பதில். சுப்பிரமணி முகத்தை திருப்பிக் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தான். நாச்சியப்பன் முதல் வாய் சோற்றைப் பிசைந்து வாயில் வைத்தான். இறங்கவில்லை. சிக்கியது. சாப்பாட்டில் கையை உதறிவிட்டு எழுந்தான். கோபத்தில் கத்தினான்.

“என்னடா… என்ன ஆச்சு உனக்கு…? நான் என்ன தப்பு பண்ணேன்…. ஏன் யாரும் சரியா பேச மாட்டேங்கறீங்க? நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா ஏண்டா இப்படி பண்ணினேன்னு கேளு. ஆனா பேசாம மட்டும் இருக்காத. அந்த தண்டனையை என்னால தாங்க முடியலையடா” நாச்சியப்பன் கண்கள் கலங்கிப் போய் இருந்தன.

சுப்பிரமணி பதில் பேசவில்லை. வள்ளியம்மையைப் பார்க்க இருவரும் ஏதோ எதிர்பார்த்தது நடந்து விட்டது போல உள்ளுக்குள் சிரித்துக் கொண்டதுபோல பட்டது நாச்சியப்பனுக்கு.

“ம்… அப்படி வா… இப்ப நீ சொன்னதையெல்லாம் நினைவுல வச்சுக்க கூல் டவுன். இங்க வா…” என்று தோளைப்பிடித்து அணைத்துக் கொண்டான் சுப்பிரமணி.

“ஆமா… நாங்க இதுவரை நடத்தியது சின்ன நாடகம். தப்பா நினைக்காதீங்க… சாரி…” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் வள்ளியம்மை, சுப்பிரமணி பேச்சை ஆரம்பித்தான்.

“கொஞ்ச நேரம் நாங்க பேசாமல் இருந்ததையே உன்னால் தாங்கிக்க முடியலையே, நாள் முழுக்க, வாரம் பூரா, மாதம் பூரா உன்னைப் பெத்து, வளர்த்து ஆளாக்கின பெத்தவங்ககிட்ட நீங்க யாரும் பேசாமலேயே குடும்பம் நடத்தறீங்களே, அது அவங்களை எப்படி பாதிச்சுருக்கும்னு நினைச்சுப் பாத்தியா…?”

“டேய் அவங்ககிட்டே பேசக்கூடாதுன்னு எதுவும் இல்லைடா, ஆனா அதுக்கெல்லாம் எங்கடா நேரம் இருக்கு….”

“உன் மனைவி கூட பேச நேரம் இருக்கு, உன் மகன் கூட பேச நேரம் இருக்கு, என் கூட பேச நேரம் இருக்கு, ஆனா அவங்க கூட பேச மட்டும் நேரம் இல்லைய…?”

“உனக்கே நல்லாத் தெரியும் நான் அதிகமா பேசுற ஆள் இல்ல. தேவையில்லாமல் பேச மாட்டேன், அவங்க பேர்ல பேங்கில் பணம் போட்டு வச்சிருக்கேன். அவங்களுக்கு டாக்டர்கிட்ட பீரியாடிக் செக்கப்புக்கு ஏற்பாடு பண்ணி யிருக்கேன், அவங்களை முதியோர் இல்லத்துல விடாம என் கூடவே வச்சிருக்கேன். அவங்களுக்கு எந்த வேலையும் கொடுக்கறதில்லை. சாப்பாடு ரெடி பண்ணி வச்சிட்டுத்தான் வேலைக்குப் போறோம். அவங்களை கடைசி வரை நல்லா பாத்துக்கணும்ன்னு நெனைக்கிறேன். இன்னும் என்னடா, உனக்கு எல்லாம் தெரியும்டா…”

“ஆமா… உனக்கு அவங்க மேல அன்பு இல்லைன்னு சொல்லலை. ஆனா அன்பை மனசுக்குள்ளேயே வச்சிருந்தா போதாதுடா. வாயைத் தொறந்து பேசு. அவங்களை உன் வீட்டுக்குள்ளேயே சிறை வச்சிருக்கிறமாதிரி இல்லையா? அம்மா, அப்பான்னு வாயைத்திறந்து கூப்பிடு, அவங்க மனசுக்குள்ளேயே அழறது உனக்கு தெரியாதுடா, அவுங்க மன உளைச்சல் தாங்காம உள்ளுக்குள்ளேயே புழுங் கறாங்கன்னு தெரியுமா உனக்கு? இன்னைக்கு உன்னோட பேசலாம்னு வீட்டுக்குப் போன் பண்ணினேன். அப்பா போனை சரியா கட்பண்ணலை அப்ப, அம்மாவும் அப்பாவும் நீ பேசலைன்னு கவலைப்பட்டது, ஒருவரை ஒருவர் தேற்றிக் கொண்டது எதேச்சையா என் காதுகளில் விழுந்தது. அதனாலதான் உனக்கு இப்படி ஒரு ஷாக். என்னை மன்னிச்சிடு.”

“அப்ப என்னை நடிக்கச் சொல்…”

“அது நடிப்பு இல்லைடா. மத்தவங்களை சந்தோஷமாக்க, அன்பை வெளிக்காட்டறது, பேசறது, ஹாய் சொல்றதும், தேங்ஸ் சொல்றதும் இல்லையா… அதுமாதிரி, அது நடிப்புன்னா அதை நீ மொதல்ல கத்துக்க, தப்பில்லை. மனசுல ஒரு அக்கவுண்ட் புக் ஓப்பன் பண்ணு. அதுல ஒரு நாள்ல எத்தனை பேருக்கு சந்தோஷம் கொடுத்தியோ அதை வரவுல வைய்யி. எத்தனை பேருக்குத் துன்பம் கொடுத்தியோ அதை செலவுல வைய்யி. உன் நோட்ல வரவு அதிகமா இருக்கனும்னா அன்பா பேச கத்துக்க… நடிக்க கத்துக்க… செலவு அதிகமாகனும்னா நீ ஒன்னும் செய்ய வேணாம். பேசாம இருந்தாலே போதும். சற்று முன் நீ அனுபவிச்சுச் சொன்னியே ‘அதைவிடக் கொடுமையான தண்டனை இல்லைன்னு’ அவ்வளவுதான். நாம் மனித இயந்திரங்கள் அல்ல. மனம் உள்ள மனிதர்கள்…” உணர்ச்சி வசப்பட்டான் சுப்பிரமணி.

“போதும்டா..எனக்கு நல்லாப் புரியுதுடா. என் நெஞ்சில் ஆழமா பதியறமாதிரி சொல்லிட்டேடா. திருத்திக்கிறேன்.” கண்கள் கலங்கின நாச்சியப்பனுக்கு. தொடர்ந்தான்.

“உன்னைப் போல நண்பன் கிடைச்சதுக்குப் பெருமைப் படறேன்டா… சரி நான் புறப்படறேன். அம்மா, அப்பா, மனைவி, குழந்தையோட ஒன்னா உட்கார்ந்து சாப்பிடப் போறேன்.”

(சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் சிங்கப்பூர் வானொலியின் ஒலி 96.8 உடன் இணைந்து ஜி.ஜி.எஸ். புத்தகக் கடை நிதியாதரவுடன் 1998ல் நடத்திய சிறுகதைப் போட்டியில் பொதுப் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற கதை)

– புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *