என்னால் நம்பவே முடியவில்லை.எப்படி இது சாத்தியம்.நேற்று கூட மாமியார் வீட்டிற்கு சென்றபோது லட்சுமியம்மாவை பார்த்தேனே.நன்றாகதானே இருந்தார்.அதற்குள் என்னாகி இருக்கும்.நினைத்துப்பார்க்கயில் அதிர்ச்சியாக இருந்தது.என்ன ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை.அடுத்த நொடி நடக்க போகும் அதிசயங்கள் சொல்லி மாளாது.விணு அதற்குள் மறுபடி என்னை செல்லில் அழைத்தான்.
“யமுனா,கிளம்பிட்டியா,சீக்கிரம் போ..நான் ஆபிஸ்ல இருந்து கிளம்பிட்டேன்.பத்து நிமிஷத்துல வந்துடுவேன்”.அவன் குரலில் பதட்டம் இருந்தது.
“ஏன் விணு என்ன ஆச்சு நேத்து நல்லாதான இருந்தாங்க..எனக்கு ஒன்னுமே புரியலயே”.
“நெஞ்சு வலியாம்.திடீர்னு தான்,ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்றதுக்குள்ளயே உயிர் போய்டுச்சு.சரி நீ முதல்ல கிளம்பு.”அவசரமாக போனை அணைத்தான்.
வீட்டை பூட்டிவிட்டு வெளியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.பத்து நிமிட நடயில் மாமியார் வீட்டை அடைந்து விடலாம்.லட்சுமியம்மா வினோத்தின் அத்தை அதாவது என் மாமனாரின் அக்கா.மாமனாருக்கு ஒரு அக்கா,ஒரு தம்பி.விணுவின் வீட்டில் யாரும் படிக்காதவர்கள்.இந்த தலைமுறை தான் முதல் முறையாக கல்லூரி வாசலை எட்டியுள்ளது.அதுவும் லட்சுமியம்மாவின் புண்ணியத்தால்.
பதினைந்து வயதில் திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே கணவனை இழந்தவள் தன் தம்பிகள் இருவரையும் வளர்த்து ஆளாக்கியது மட்டும் அல்லாமல் அவர்கள் பசங்களையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறாள்.இத்தனைக்கும் ஒன்றும் படிக்காதவள் தன் உழைப்பு ஒன்றே மூலதனமாய் கொண்டவள்.ஆரம்பித்தில் ஏதேதோ வேலை செய்தவள் வெங்காய வியாபாரம் ஆரம்பித்து,வியாபாரத்தின் நெளிவு சுழிவு கற்றாள்.அன்றிலிருந்து ஏறுமுகம் தான்.சொந்தமாக வீடு கட்டும் அளவுக்கு.இப்போது என் மாமியார் இருக்கும் வீடு அவர் கட்டியதுதான்.அதே வீட்டில் பின் கட்டில் தனியே வசித்து வந்தார்.
இளவயது தனிமையோ,தனக்கு யாரும் இல்லையென்ற உணர்வு எது என்று தெரியவில்லை,அவருக்குள்ளே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு வாழ்ந்தார்.யாருடனும் அன்பாக பேசுவது இல்லை.எப்போதும் ஒரு சிடு சிடுப்பு.பத்தாதற்கு அவருடய வெங்காய வியாபாரம் கற்று கொடுத்த கெட்ட வார்த்தைகள் வேறு.இவை போதாதா நம் மக்களுக்கு.பத்தரமாற்று தங்கமாக இருந்தாலே உரசுவார்கள்.அதில் சில குறைகள் கண்ணுக்கு தென்பட்டாள் கேட்கவே வேணாம்.அந்த குடும்பத்திலும் சரி,அந்த தெருவிலும் சரி லட்சுமியம்மவிற்கு நல்ல பெயர் இல்லை.நேரில் பல் இளிப்பவர்கள் முகத்திற்கு பின்னால் முகம் சுளித்தார்கள்.
கல்யாணம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் வினோத் என்னிடம் சொன்ன முதல் வார்த்தைகள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
“யமுனா,என் அத்தை தான் இந்த குடும்பத்தின் ஆணி வேர்.அவர் இல்லாவிட்டால் நாங்கள் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது.உன் மாமனார்,மாமியாருக்கு இருந்த சுதாரிப்புக்கு நாங்கள் நடுத்தெருவில் தான் இருந்திருக்கணும்.ஆனால் பாத்தீனா,அத்தய பத்தி எக்கு தப்பா பேசுவாங்க நீ எதும் காதுல வாங்கிக்காத.அதுக்காக அத்தகிட்ட நல்லா ஒட்டிக்கோணு சொல்லல ஏனா அவங்களுக்கு அதெல்லாம் பிடிக்காது.சோ,நீ உண்டு உன் வேலை உண்டுனு இரு..”
அடுத்த நாள் என் மாமியார் சொன்னார்,”யமுனா,விணுவோட அத்த ஒரு மாதிரி அதனால பார்த்து நடந்துக்கோ.சரியான பஜாரி அது.அதனால அதுகிட்டலாம் ஒண்ணும் வச்சுக்காத..”
ரெண்டு பேரும் ஒரே விஷயம் தான் சொன்னார்கள்.ஆனால் இருவர் சொன்ன விதமும் வித்தியாசமாக இருந்தது.ஆனால் வந்த ஒரே மாதத்தில் அவரை நான் நன்றாக புரிந்து கொண்டேன்.நேர்மயான மனுஷி,முதுகிற்கு பின்னால் பேச தெரியாது.எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் கேட்டு விடுவார்.அதுதான் அவருக்கு அரக்கி பட்டத்தை வாங்கி கொடுத்துள்ளது.
இதை எல்லாம் எண்ணிக்கொண்டு வந்தவள் வீட்டை அடைந்ததும் வேக வேகமாக அவர் அறைக்கு சென்று பார்த்தேன்.மாமியாரும்,சின்ன மாமியாரும் நின்றிருந்தார்கள் கதை பேசிக்கொண்டு.லட்சுமியம்மா கட்டிலில் தூங்குவது போல் இருந்தது.நான் சென்றதும் மாமியார் அருகில் வந்து என்னிடம் ஒரு அட்டையை கொடுத்தார்.
“யமுனா,இது என்னானு கொஞ்சம் பாரு,நெஞ்சு வலினு மார புடிச்சுட்டு உக்காந்துருச்சு,நாங்க போன் பண்ணலானு போரோம் அதுக்குள்ள பீரோ திறக்க சொல்லி இத எடுக்க சொல்லிட்டு அப்ப்டியே படுத்திருச்சு…அவ்ளோ தான் உயிர் போய்டுச்சு.இது என்ன அட்டை.”மாமியார் ஆர்வமாக என்னிடம் கேட்டார் எதாவது பண விஷயமாக இருக்கும் என்று.
அட்டையை வாங்கிப் பார்த்தவள் அதிர்ந்து போய்விட்டேன்.என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.என்ன மாதிரியான மனுஷி இவள்.என் இதயத்தை யாரோ அழுத்தி பிடிப்பது போல் இருந்தது.
“என்ன யமுனா,அட என்ன இது சொல்லு…”சின்ன மாமியாரின் அவசரம்..
“கண் தானம் செய்வதற்கான அடையாள அட்டை இது..”மிக சிரமப்பட்டு பேசினேன்.
“கண் தானமா,இது இந்த வேலையெல்லாம் செஞ்சு வச்சுருக்கா..வேற வேலை இல்ல,ஆஸ்பத்திரிக்கெல்லாம் தூக்கிட்டு போய்ட்டு,முகம்லாம் விகாரம் ஆய்டும்,அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..”என் மாமியார் ஆறாவது அறிவை கடன் கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார்.என்ன ஜென்மங்கள் இவை.எனக்கு கோவம் தலைக்கு ஏறியது.
“நாம ஆஸ்பிட்டல் எல்லாம் போக வேணாம்,போன் பண்ணுனா அவங்களே வருவாங்க,ஒரு இருபது நிமிஷம் தான் ஆகும் இந்த ஆபிரேஷன்.கரு விழி மட்டும் தான் எடுப்பாங்க அதனால முகம்லாம் விகாரம் ஆகாது.எப்போதும் போலத்தான் இருக்கும்.அந்த வலில கூட நினைவா இத எடுத்து குடுத்திருக்காங்க,அவங்க கண்ண தானம் செய்யாட்டா அவங்க ஆத்மா சாந்தி அடயாது.நீங்க கொஞ்சம் பேசாம இருங்க.”கோபத்தினூடே பேசினேன்.
கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே அந்த தேவதையை பார்த்தேன்.இறக்கும் வரையும்,இறந்த பின்பும் கூட மற்றவர்களுக்காகவே வாழ்ந்த நல்ல ஆத்மா.படித்தவர்கள் சாதிக்காததை சாதித்த மேதை….மனதார வணங்கி நின்றேன்.
– அக்டோபர் 2010