அவளுடைய பெயர் எனக்குத் தெரியாது. அவளுடைய மேனி புடம் போட்ட தங்கம் போல இருந்ததினாலும், சௌகரியத்திற்காகவும் நான் அவளைத் தங்கம் என்றே அழைக்கிறேன். தங்கம் அவனை இராசா என்றழைத்த காரணத்தினால் நானும் அவனை இராசா என்றே எழுதுகிறேன்.
இராசாவுக்கு எங்கே என்ன வேலை என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் வாழ்க்கையை உற்றுக் கவனித்ததில் அவன் எங்கோ ஓர் தொழிற்சாலையில் நெஞ்சு முறிய, வியர்வை சொட்ட, வேலை செய்கிறான்; வாழ்க்கைக்குப் போதாத வருமானம் என்பது தெரிந்தது.
அன்றும், என்றும் போல அவன் நன்றாக இருட்டிய பிறகு தன் வீட்டிற்கு வருகிறான்.
ஆனால் அவனிடம் வேலை செய்த அலுப்போ, களை ப்போ காணப்படவில்லை. தலை மயிர் எல்லாம் தொழிற்சாலைத் தூசு படிந்து திக்குக்கொரு புறமாய் முறைத் துக்கொண்டு நிற்கின்றன. கண்கள் கொவ்வைப்பழம் போற் சிவந்திருக்கின்றன. எங்கள் கிராமத்துக் கிரவல் ரோட்டில் ஊர்ந்து வரும் கோயிற் தேர் போலத் தள்ளாடிக் கொண்டே வரும் அவன் நடையும், அழுக்குப் படிந்து சடையடித்துப்போய்க் கிழிந்து கிடக்கும் அவன் உடையும் எவருக்கும் ஓர் பயங்கலந்த அனுதாபத்தைக் கொடுக்கும் என்பதை அவன் உணர்ந்தானோ என்னவோ, அவன் வந்தவண்ணமேயிருந்தான்.
வாசற்படியிற் கால்வைத்து ஏறுகிறான்.
உச்சந்தலையிற் கதவு நிலை ‘நக்’ கென்று அடித்து விடுகிறது. நொந்ததோ என்னவோ உள்ளே போகிறான்.
போதையின் மயக்கத்திலே தீப்பந்தமாயுருளும் தன் கண்களைச் சுழற்றி வீட்டங்கலும் ஒரு முறை பார்க்கிறான். ஏமாற்றத்தின் பிரதிபலிப்பாய் உடல் முழுவதும் துடிக்கிறது. மீசை மயிர்கள் கூடக் குத்திட்டு நிற் கின்றன.
‘தங்கம்…….! தங்கம்…….!
அந்த அசுரத் தொனியை எதிரொலித்து அந்தச் சூழலிலுள்ள எல்லாமே அலறுகின்றன.
தங்க ம்…….. தங்க ம்………
மறுபடியும் கத்துகிறான்.
தங்கம் முகத்தை விகாரமாக வைத்துக்கொண்டு பின்புறத்துக் கதவால் பயந்து பயந்து உள்ளே வருகிறாள்.
“எங்க போனாவோ மகாராணி?”
அவன் வாயிலிருந்து வந்த புளித்த கள்ளின் கோரமான நெடியில் அவளுக்குக் குமட்டல் எடுத்தது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு “ஐயோ; இன்றைக்குமா குடிச்சீங்க?” என்கிறாள். அச்சத்தால் மிரளும் அவள் விழிகளின் கடையிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர்கள் உதிர்ந்தன.
“ஏனாம் உன் அப்பன் வீட்டுக்காசோ?”
“அப்பன் வீட்டுக் காசானால் இப்படிப் பார்த்துக் கொண்டிருப்பேனாக்கும்?” புருஷன்தானே என்ற உரிமை அவளுக்குத் தைரியத்தைக் கொடுத்ததோ என்னவோ அவள் இப்படிச் சொல்லியே விட்டாள்.
“அட; வாயைப்பார்” இந்தச் சொற்கள் வாயிலிருந்து விழுமுன்னமே உதையும், சரியாக அந்த மிருகத்தின் வாரிசைச் சுமந்து கொண்டிருக்கும் அவள் வயிற்றில் விழுகிறது.
தங்கம் அடியற்ற மரம்போலக் கீழே சரிந்து வீழ்கிறாள். வலியும் வேதனையும் அவளால் தாங்க முடியவில்லை. அவள் கண்ணிலே உலகம் உருண்டு கொண்டிருப்பது பிரத்தியட்சமாகத் தெரிந்தது.
அவன் பேய்ச் சிரிப்பொன்றைச் சிரித்துவிட்டு அப்படியே நிற்கிறான்.
சந்தேகமேயில்லை; மிருகந்தான்!
வரண்ட மூளைக்குள்ளே சிக்கிக்கொண்டு, முன்னே ஓடத்தெரியாத கற்பனை போலக் காலம் ஊர்ந்து செல்லுகின்றது.
தங்கம் தரையிலேயே கிடக்கிறாள். முக்கலும் முன கலும் உயிர் போய்விடவில்லை என்பதை உணர்த்துகின்றன.
அவனும் அவள் அருகிற் குந்துகிறான். அவள் முகத்தைத் தன் முரட்டுக் கைகளாற் தடவிக்கொண்டே “என்னம்மா செய்யுது?”
“ம்…”
தங்கம் அசைந்து கொடுக்கிறாள். மலடடித்துப் போய்க்கிடந்த தரையிலே தோன்றிய பசும்புற் குருத்துப் போன்ற விழிக்கோணத்தினால் அவனை இலேசாகப் பார்க்கிறாள்.
“நோகுதா தங்கம்?”
மனிதன் பேசினான்!
தங்கம் எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
– ஈழகேசரி-1951 – தோணி சிறுகதை தொகுப்பு – அரசு வெளியீடு, முதற் பதிப்பு: ஜூலை 1962