இயற்கை தன்கோட்டில் சுயமாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் குறியீட்டுச் சொல்லினூடாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பாஸ்வேட்தான் இன்றைய உலகம். உலகில் இயற்கையாக மலரும் செடிகொடிகளும் பறவைகளும் தத்தமது பயணத்தில் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு அச்சம் இல்லை. தயக்கம் என்பதே இல்லை. ஆனால் மனிதன்தான் மனிதனுக்குப் பயப்படுகிறான். அச்சத்தில் கதவை மூடிக் கொள்கின்றான். மனிதர்களை மனிதர்கள் பார்த்தவுடன் கற்பனையில்கூடக் காட்சிப் படுத்த முடியாத கதவை மூடிக்கொள்ளும் காலமா இது.? மனித வாழ்க்கை ஒரு புதிராகத் தென்படுகிறது இவளுக்கு. இது ஒரு கொரோனாக் காலம். இவளுள்ளும் விரிகிறது இனம் தெரியாத அச்சம்.
அத்தோடு தொடர்ந்து உக்ரைன் ரஷ்யப் போர் தொடர்ந்து அர்த்தமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறதே! வல்லரசுகளோடு பிரதேச வல்லரசுகளை பகைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் போலல்லவோ தெரிகின்றது என்று அஞ்சுகின்றாள் இவள். அதுக்குள்ள நசிபடுகின்ற சனங்கள் என்ன பாவம் செய்ததுகளோ! தலைமைகளின்ர பலவீனத்தால அதுகள்தான் இரையாகுதுகள். ஏதோ சொல்லினம் செய்தியில். செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கொரோனாவைவிட இவங்களெல்லோ அபாயகரமான நச்சுக்கிருமிகளை உருவாக்கி எல்லாப்பக்கமும் மறைச்சு வைச்சிருக்கிறாங்களாம். அவற்றை ஏவிவிட்டுக்கொண்டு சனங்களையும், கட்டிடங்களையும் அழிக்கிறாங்கள். சமூகத்தை நேசிக்கின்ற இவள் இவைகளை அறிஞ்சு நெஞ்சுள் வெடிக்கின்றாள். என்ன கொடுமையான செயல்கள் இவை? இயற்கை நமக்கு நிறையவே கற்றுத் தருகிறது.
கொரோனா காலத்தில் இப்போ நிறையவே புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கையின் இனிமையைக் கற்றுத்தருவது போல் சில நூல்கள் இவளுக்கு இருந்தது.
‘தன் சிறுநீரகமும், கண்களும் பழுதுபட்ட நிலையிலும் தன் மரணம்வரை உருப்பெருக்கிக் கண்ணாடித் துணையோடு புத்தகங்கள் படித்து வந்தவர்தான் தந்தை பெரியார், பெண் விடுதலைக்கு வழி என்ன என்று கேட்டபோது, அவர்கள் கைகளிலுள்ள கரண்டிகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு புத்தகங்களைக் கொடுங்கள்’ என்றாராம். ஆனால் தொழில் நுட்பங்களெல்லோ இன்று எக்கச்சக்கமாகப் பெருகி ஷ_ம் தளங்கள், அது இது என்று விரிந்து விட்டன. பல்வேறுபட்ட நண்பர்களையும் கொரோனா காலத்தில் அதனூடாகக் காணமுடிகிறது. மறதி என்பது மனிதர்களின் இயல்பாகிவிடுகிற ஒன்றுதானே! ஆனால் அவற்றையெல்லாம் நினைவுபடுத்தி எழுதுவதுதான் எழுத்தாளனின் செயலா? என்று இவளை எண்ண வைக்கிறது. காலம் விசித்திரமானது. கற்பனை உலகில் சஞ்சரிக்கின்றவள் இவள். இலக்கியங்களை இவள் தொழுது கொண்டிருக்கிறாள் இப்போ.
ஒரு நாள் என்பது வாழ்க்கையில் கிடைக்கமுடியாதது ஒன்று என்று இவள் இப்போ உணருகின்றாள். நன்மைகள் செய்தால் நிட்சயம் வெல்லும் எனத் தன் மனக்குரலால் ஒலிக்கிறாள். ஆனால் தீமைகள்தானே உலகத்தால்;;;;; வசீகரிக்கப்படுகின்றது. இந்த உலகத்தில் தீயதிற்கும் தேவை இருக்கிறதா? உணர்வு ரீதியாக அந்தக் குரோமோசோன்களால் ஆக்கப்பட்டதுகள்தானே இந்த ஜென்மங்கள். ஒருபோதுமே இதுகள் திருந்தாதுகளா?… என்று தனக்குள் மின்னலாகித் தெறிக்கும்; குரலுக்குள் ஒரு வெளிச்சத்தைத் தேடுகின்றாள்.
தற்போது கொரோனா கொஞ்சம் வெளிச்சம் காட்டிக்கொள்ளத் தொடங்கியுள்ளது. லண்டனில் சட்டதிட்டங்கள் தளர்த்தப்பட்டுக்கொண்டு வருகின்றன. சட்டத்தைக் கொண்டுவந்தவர்களே ஒழுங்காகக் கடைப்பிடிச்சவையா? தனக்குள்ளேயே அவற்றை நினைத்து ஒரு வரட்டுச் சிரிப்பு இவளுக்கு. ஆனால் இப்போ திருமண விழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கலைவிழாக்கள், அரங்கேற்றங்கள், மகளிர்தினங்கள் என்று லண்டனில் சிறு சிறு பரபரப்புகள் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டன. நண்பியின் மகளின் பதினெட்டாவது பிறந்தநாள் கொண்டாட்ட அழைப்பு இவளுக்கு. நெருங்கிய நண்பியின் மகள். தொற்றுநோய் என்ற இந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலையின் பின்னர் பலரையும் சந்திக்கப் போகும் ஒரு அரிய சந்தர்ப்பம்.
நெருங்கிப் பழகும் நண்பிகளுக்கும் உறவினர்;களுக்கும் மட்டும்தான் அழைப்பு விடுவதாக நண்பி கூறினாள். எனது நெருங்கிய நண்பியும் உனக்கு விருப்பமான நண்பி ‘சப்னா’வையும்; குடும்பத்துடன் அழைத்துள்ளேன் என்றாள் நண்பி.
அப்படியா உனது மகளின் கொண்டாட்டத்தோடு மீண்டும் தொடரப்போகும் கொண்டாட்ட நாட்கள்… மகிழ்ந்து கொண்டாள் இவள்;.
சப்னா பாரிய இனந்தெரியாத மூட்டுக்கள் சார்ந்த தசைகளின் வருத்தத்தினால் பாதிக்கப்பட்டவள். லண்டனில் பல்வேறு வைத்தியங்களை மேற்கொண்டும் அந்த நோய்க்கான மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை என்று மருத்துவர்கள் கூறியதால் பலனளிக்காமல் துன்பப்பட்டவள். பலரின் ஆலோசனைகளைக் கேட்டு இந்தியாவிற்குச் சென்று வைத்தியங்களை செய்து பார்த்தவள். விடாமுயற்சியுடனும் இறுதியாக புதிய உற்சாகத்தோடு யோகாப் பயிற்சியை மேற்கொண்டவள். ஆனால் அந்த யோகாப்பயிற்சியின் பின்னர்தான் அத்தகைய ஒரு நோயிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டவள். இனந்தெரியாத அந்த நோயிலிருந்து குணமாகி இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மறுபிறப்பானவள் என்றேதான் சப்னாவைக் கூறவேண்டு;ம்.
பழகுவதற்கு இனிமையானவள். வைத்திய முயற்சிகளினால் பலனளிக்காத தனது நோய் யோகாப்பயிற்சியினால் மீண்டும் குணம்பெற்ற தைரியத்தில் அந்த யோகப் பயிற்சிக் கலையையை முறைப்படி கற்றுக்கொண்டவள். அந்த யோகாக் கலையை தனது சமூகத்தினருக்கும் பயனளிக்கச் செய்ய வேண்டும் என்ற மிகுந்த விருப்புடையவள். சப்னா நினைத்தது போன்றே லண்டனில் பல சமூக செயற்பாட்டு நிலையங்களில்; தனது கற்பித்தல் யோகாப்பணியை மேற்கொண்டு வந்தவள் தான்.
ஆனால் இந்தக் கொரானாக் காலத்தினால் எல்லாமே முடங்கிய ஒரு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதாக சப்னா கூறுவாள். எனக்கு என் பக்கத் துணையாக இருந்து எனக்கு நம்பிக்கை தந்தவர் என் துணைவர்தான் என்று எப்போதுமே சப்னா கூறுவாள். அவர் ஒரு தெய்வம் மாதிரி. எனது இரு குழந்தைகளையும் வளர்த்தெடுப்பதில்; மிகவும் துணை புரிவார் என்றும் சப்னா ஓயாமல் கூறுவாள். என்ன கொடுத்தவைத்தவள். சப்னாவுக்கு இப்படி ஒருவர் துணைவராகக் கிடைத்திருக்pறதே! பல குடும்பங்களில் துணைவர்கள்தான் எதிரிகள்போல் செயற்படுவதையும் இவள் பார்த்திருக்கிறாள். இன்றைய காலகட்டத்தில் அதுவும் லண்டன் நகரில் வாழ்பவர் இவ்வளவு நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் எழுந்தவளோடு அன்பாக இருப்பது குறித்து இவளின் ஆழ்மனது மகிழ்ந்தது. சந்தோஷமான சப்னாவின் வாழ்வு நீடூழி வாழவேண்டும் என இவள் மனதில் அடிக்கடி மீட்டுவாள்.
இதே போன்று இவளின் இன்னொரு நண்பி புவனா பெரிய நோயினால் பாதிக்கப்பட்டபோது அந்த நோய் குறித்து எதுவுமே இவள் அறியாதிருந்தாள். ஆனால் புவனா தன் இதயத்தின்; வேதனைகளை லண்டனில்
இடம்பெற்ற கலை விழா நிகழ்ச்சியில் இவளைக் கண்டுவிட்டு தானாகவே கொட்டித்தீர்த்தாள். இவளைக் கண்டதும் ஓடிவந்து ஆரத்தழுவியபடி தனக்கு கொடிய நோயான புற்றுநோய் என்று இவளுக்கு கூறியதை எண்ணும்போது இதயம் பனித்துக்கொண்டது. மனதில் இருப்பதை ஒரு சிலரிடம்தான் வெளிப்படுத்த முடியுமோ என இவள் எண்ணினாள். அந்த வகையில்தான் புவனா ஓடிவந்து வெளிப்படுத்தியிருக்கிறாள்போல்.
‘சீ என்னது? வலுவிழந்த பெண்குரலாகி மௌனத்தில் துடிக்கிறாளே! இந்த நோயால் வேதனைப்படும் இவளுக்கு இப்படிப் போலியாக நடிக்கும் துணைவரும் – பிரபலம் தேடும் பிள்ளைகளுமா?’ என்று இவளின் மனம் கலங்கியதுண்டு. அவள் ஒரு பெண். அவள் ஒரு தாய். ‘விரைவில் இந்த உலகுகிற்கு விடை கொடுக்கப்போகின்றேன்’ என்பதை அவள் அறிந்திருந்தாள். புவனாவின் நிலையைக்; கேட்டு அதிர்ந்துவிட்டாள் இவள். புவனாவின்; நச்சுப்பிடித்த வார்த்தையில் இதயத்தின் கனம் அடர்த்தியாகி ஒலித்ததை இவள் அவதானிக்காமலில்லை. அதிர்வோடு நண்பியின்; உணர்வுகளைப் இவள் புரிந்து கொண்டாள்;. கையை இறுக்கியபடி ஆறுதல் சொன்னாள். பரபரப்பான உலகத்தில் புவனாவின்; வார்த்தையின் கனத்தை இன்று நினைத்தாலும் கண்கள் துளிர்க்கின்றன… இப்போ இந்த உலகில் அவள் இல்லை. எம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டாள்தான். ஆனால் இந்த வசந்த காலத்தின் மலர்களும் இலைகளும் துளிர்த்து அழகிய சூரியஒளியில் ஜொலிப்பதுபோல்;;; புவனா இன்றும் ஜொலித்துக் கொண்டேதான் இவளுள் இருக்கின்றாள்.
அந்த வகையில் சப்னா மிகவும் அதிஷ்டசாலி என எண்ணிக்கொண்டவள் இவள்.
பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்துகொண்டிருந்தன. அழகிய வண்ண வண்ண வழமையான உடையலங்காரங்களும் ஆடல்பாடல் இசையும் கூடியிருந்தன. மேசைகளில் குளிர்பானங்களும் ஏற்ற சிற்றூண்டிகளும் கலைநயத்தோடு குலைந்து கிடந்தன. நண்பர்கள்;, குழந்தைகள், இளையவர்கள்;, உறவினர்கள், குடும்பங்கள் என்று கொரோனாகாலத்தின் பின்னரான ஒரு முதற் சந்திப்பின் வாழ்வின் பல்வேறு விசித்திரங்களாகித் திளைத்தன. சப்னாவும் தனது இரு பிள்ளைகளோடும் வருகை தந்துகொண்டிருந்தாள். இவளுக்குப் பக்கத்தில் இருந்த ஆசனங்களில் ஆனந்த அக்களிப்பில் அமர்ந்துகொண்டாள்.
மகளின் உருவத்தில் அம்மா எப்படிப்பட்டவள் என்று அழகு காட்டுகிறது என்று ஆரவாரித்து சப்னாவோடு இவள் சல்லாபிக்கத் தொடங்கினாள். சப்னாவின் இரு பிள்ளைகளும் வளர்ந்து அழகிய மாற்றங்கள் வெளிப்பட்டுக் காட்சி தந்தன. வாழ்க்கை மகத்தானது என்று இவள் எண்ணினாள். ‘இந்தப் பெருந் தொற்றுதலின் பின்னர் ஆறு ஓடிக்கொண்டிருப்பதுபோல் அழகாக ஓடிக்கொண்டிருக்கிறதே வாழ்க்கை’ என்று நன்றியோடு இவள் தன்னுள் ஒரு தன்னம்பிகையால் மஞ்சள் வர்ணம் தீட்டும்போது… சப்னா இவளின் காதினுள் ரகசியமாகச சொன்னாள்; உன்னோடு ஒரு முக்கிய விடயம் பேசவேண்டும்.
என்ன முக்கிய விடயம் சப்னா?
சப்னாவின் முகத்தில் ஒரு வித சோக நிழல் படிந்ததை அவதானிக்காமல் இல்லை இவள்.
வானவில் போன்றது எம் வாழ்க்கை சப்னா. அதில் பல வர்ண நிறங்கள் இருப்பது போன்று இன்ப துன்பங்கள் பிணைந்திருக்கும். கவலைப் படாதே! கோடிக்கணக்கானோர் வாழ்ந்துவிட்டுப் போன பூமி இது. மனதை வாட்டும் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக எடுத்துக்கொண்டு போ சப்னா. உனக்கு நான் புத்தி சொல்லத் தேவையில்லை. காரணம் எத்தனையோ உடல், மன அழுத்தத்திலிருந்து மீண்டு வந்தவள்தானே நீ.
‘எனது கணவரும் நானும் விவாகரத்துக்கான ஆயத்தங்கள் மேற்கொண்டுவிட்டோம்…’ என்றாள் சப்னா.
என்ன சப்னா கூறுகின்றாய்? நம்பவே முடியவில்லையே!
வியப்பில் விழித்துக்கொண்டாள் இவள். உங்கள் இளமையான இரு பிள்ளைகளின் நிலைமைகள். அவர்கள் இன்னும் உயர்கல்வி நிiயைக் கூட முடிக்கவில்லையே! சப்னா உன் உடல்நிலை… ஏன் இந்த முடிவை எடுத்து வீட்டைத் தண்டனைக் கூடமாக மாற்றினீர்கள் சப்னா?
நாம் இருவரும் எதுவித வாக்குவாதமோ சண்டையோ பிடிக்கவில்லை. ஆனால் அவரின் செயற்பாட்டால் நான் அதிர்ந்துவிட்டேன். நான் அவரை முற்றுமுழுதாக நம்பிவிட்டேன். எதையும் நான் சந்தேகத்துடன் அணுகியதேயில்லை. ஆனால் வாழ்வை நடித்துக் இப்படிக் கடத்திக்கொண்டிருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. வாழ்க்கைத் துணைவன் என்று எல்லாவற்றையும் அதீதமாக நம்பி ஏமாந்துவிட்டேன். அரசாங்காத்தால் பிள்ளைகளுக்கு வரும் சலுகைப்பணத்தையும் தனது தனிப்பட்ட வங்கிக்கே மாற்றி எடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்.
நீங்கள் இருவரும் சேர்ந்த இணைப்பு வங்கிக் கணக்கு இல்லையா சப்னா?
இல்லை.
அந்தப் பணத்தில் வீட்டுச் செலவுக்கு தருவார் தானே சப்னா?
இல்லை. நான் எனது சேமிப்பில் உள்ள பணத்தில்தான் செலவு செய்து கொள்வேன். ஆனால் வீட்டுக்கான தொகைப்பணத்தை மட்டும் செலுத்திக் கொண்டிருப்பார்.
பொதுவாக இவளின் கேள்விகள் சாதாரணமாக எல்லோருமே எழுப்பும் கேள்விகள் தான். ஆனால் அவர்களுக்கிடையில் என்னென்ன புதிர்களோ… உறவின் விஸ்த்தாரங்கள் சித்திரங்களாகின.
சப்னா மௌனமாகிவிட்டு கூறினாள்: விவகாரத்து கேட்பதோடு மட்டுமல்ல நாம் இருக்கும் வீட்டின் உரிமையைத்தான் முக்கியமாக்கிக் கோருகின்றார். இதைப்பற்றி இப்போதைக்கு யாரிடமாவது மூச்சு விட்டிடாதே என்றாள் சப்னா! அதுதான் பெரிய தலையிடியாய் இருக்கு.
அது சரி இந்த வீடு இருவருக்குமானதுதானே சப்னா! இருவரின் பெயரில் தானே வீடு இருக்கிறது?
இல்லை. அவரின் பெயரில் மட்டும் தான் வீடு இருக்கிறது.
மூளை கெட்டவளே! என்ன சப்பனா கூறுகின்றாய்? நீயும் அவருடன் குடும்பமாகத் தானே இந்த வீட்டில் இருக்கிறீர்கள்?
ஓம். இரண்டு பிள்ளைகளும் தான்.
அத்துடன் நீ உடல் நலம் குன்றியவள். சட்டப்படி திருமணம் செய்தீருக்கிறீர்கள்தானே! சட்டத்துடன் வாதாடி ஒரு வெற்றி காணலாம். இந்தத் தொற்றுக்காலத்தில் எத்தனையோபேர் இப்படி ஆசைப்பட்டு என்னத்தைக் கண்டார்கள்? இருக்கிற நிமிடத்தை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் சப்னா. உக்ரைன் நாட்டுக் கட்டிடங்களைப் தொலைக்காட்சியில் நீ பார்க்க இல்லையா? உலகப் பைத்தியத்தனம் என்றல்லவா சப்னா உன் துணைவரை எனக்கு எண்ணத் தோன்றுகின்றது சப்னா, மறைந்துபோன தன் மனைவிக்காக ஷாஜகான் நினைவு மண்டபத்தைக் கட்டினான். தாஜ்மகாலைப்போல் ஒரு இனிய கல்லறையைத்தவிர இன்றைவரை வேறொன்றையும் நாம் கேள்விட்பட்டதில்லை. ஆனால் இருக்கிற வீட்டில பங்கு கேட்டுக்கொண்டு இருக்கிற ஆம்பிளையா இந்தப்பிறவி …
சப்னா தலையைக் கவிழ்ந்தபடி மௌனமாகி இருந்தாள்.
யாராவது அவருக்கு குடும்ப நிலைமைகள் உனது நிலைகள் பற்றி எடுத்துக் கூறமாட்டார்களா? வாழ்நாள் முழுவதும் மனித மனச்சாட்சியைத் தொட்டுக்கொண்டே இருக்கும் விடயங்களை படிக்கமாட்டாரா? உலகம் நிறைந்த வகுப்பறைகளால் ஆனது. எதற்காக இப்படி ஒரு முடிவுகளை எடுத்தார்கள்? மனிதர்கள்; மட்டுமல்ல, வீடுகளுக்கும்
மாற்றங்கள் ஏற்படும் என்பதை எல்லோருமே உணரவேண்டும். வீடுகளும், கட்டிடங்களும்; சிலகாலம் வாழ்ந்து மனிதர்கள்போல் மறைந்து போகின்றன என்பதுதான் உண்மை சப்னா.
நீ கூறுவது உண்மைதான்… மீண்டும் மௌனத்தில் சப்னா.
விம்மிக்கொண்டு அவளில் புறப்பட்டவை வெடித்துக்கொண்டு வந்த குரலில்…
‘நீ ஏதோ புத்தகம்;, தத்துவம் என்று பேசிக்கொண்டிருக்கிறாய். ஆனால் அவர் இந்தக் கொரோனாத்தொற்றுக் காலத்தில் என் உடல் நோயிலிருந்து தப்பமாட்டேன். கொரோனாத் தொற்று என்னையும் இந்த உலகிலிருந்து மாய்த்துவிடும்’ என்றுதான் அவர் கருதினார். ஆனால் நான் என் மனத்தின்; நம்பிக்கையாலும், என் யோகாப் பயிற்சியாலும், என் பிள்ளைகளின் ஆறுதலாலும் இன்றும் நான் உயிர் வாழ்கின்றேன் என்றாள்.
சப்னா இதனை கூறும்போது கொரோனாவை விட பயங்கரமான கிருமியாகக் கிடக்கிறதே இந்த ஆள்;? என்று இவள் உடல் அதிர்ந்துகொண்டது.
பிள்ளைகளே! எல்லோரும் மேடைக்கு வாருங்கோ. பிள்ளைக்கான பிறந்தநாள் ‘கேக்’ வெட்டுவதற்கு. சப்னாவின் இரண்டு பிள்ளைகளும் அலங்காரத்தோடு பவனியாகிச் சென்றுகொண்டிருந்தார்கள். மகிழ்வான பிறந்தநாள் இசையோடு பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டிக் கொண்டிருந்தது….
– 21.4.2022.