மனமிருந்தால் எல்லாம் சாத்தியமே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 5,407 
 

மலரு என்ற அப்பாவின் குரலை கேட்டவுடன் “ எம்பிராய்டரிங்க் “ வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மலர் தலை நிமிர்ந்து பார்த்தாள் என்னப்பா?

அம்மா உனக்கு ஒரு மாப்பிள்ளை தகைஞ்சு வந்திருக்கும்மா, என்னோட தூரத்து உறவுதான், ஆனா பையன் பிளஸ் டூ வரைக்குந்தான் படிச்சிருக்கான், நீ என்ன சொல்றேன்னு கேட்டுட்டு பதில் சொல்லலாமுன்னு இருக்கேன். மகளின் முகத்தை பார்த்து கேட்ட அப்பாவிடம் என்ன சொல்வது, தன்னையும் மதித்து உனக்கு பிடித்திருக்கிறதா என்று எத்தனை அப்பாமார்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கும் பிடிச்ச மாதிரிதான், சொல்லிவிட்டு புன்னகைத்தாள்.

இல்லேம்மா தயங்கினார், சொல்லுங்கப்பா, மாப்பிள்ளை விவசாயம்தான் பாக்கிறாரு. நீ கல்யாணமாகி போற இடம் நம்ம டவுன்ல இருந்து ரொம்ப தள்ளி இருக்கு. அது போக ஊர் கொஞ்சம் பட்டிக்காடும்மா. நீ டவுனுக்குள்ளேயே வாழ்ந்து பழகிட்டே, இப்ப அங்க போய் உன்னால இருக்கமுடியுமா ?

தன்னுடைய தாய் இறக்கும்போது தனக்கு பத்து வயது. அதற்கு பின் அவளுக்கு எல்லாமே தானாக இருந்து வளர்த்த அப்பா தன்னிடம் பரிதாபமாய் கேட்பது இவளுக்கு சங்கடமாய் இருந்தது. அப்பா அம்மா இல்லாம நீங்க அட்ஜஸ்ட் பண்ணி என்னை வளர்த்தலையா, அது மாதிரி நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். நீங்க இங்க தனியா இருப்பீங்களே அதுதான் எனக்கு கஷ்டமா இருக்கும்.

எனக்கென்னம்மா நான் சமாளிச்சுக்குவேன், முகம் மலர சொன்னவர், சந்தோசமாய் மாப்பிள்ளை வீட்டுக்கு தகவல் தர விரைந்தார்.

மலரின் தோழிகள் பயமுறுத்த ஆரம்பித்தனர், மலரு அந்த பட்டிக்காட்டுல என்னடி பண்ணுவே? அதுவும் மாப்பிள்ளை உன்னைய விட படிப்பு கம்மி, அந்த ஊர்ல விவசாயத்த தவிர ஓண்ணும் கிடையாது,பேசாம கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே கூட்டிட்டு வந்துடு.

மலர் தோழிகளின் பேச்சுக்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

கல்யாணமாகி கணவன் வீட்டுக்கு வந்த மலருக்கு நகர வாழ்க்கைக்கும் கிராமத்து வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசங்கள் பிடிபடவே ஒரு மாதமாகிவிட்டது. கணவனை பொறுத்தவரை நல்லவனாக இருந்தான். அப்பா, அம்மா, இவனோடு, ஒரு தங்கை. ஒரு ஏக்கரா பூமி வைத்திருந்தார்கள். அது போக பக்கத்து தோட்டங்களுக்கு வேலைக்கு போனார்கள்.

அவர்களுக்கும் மலர் டிகிரி வரை படித்திருக்கிறாள், அவளிடம் எப்படி வேலை சொல்வது என்ற தயக்கம் இருந்தது அவர்களின் நடவடிக்கைகளில் தெரிந்தது.

காலை ஒன்பது மணிக்குள் வீட்டில் உள்ள அனைவரும் தோட்டத்துக்கு சென்று விடுவார்கள். கணவனின் தங்கை சில நேரங்களில் வீட்டில் இருப்பாள், அண்ணனுக்கும், அம்மா அப்பாவுக்கும் மதியம் சாப்பாடு செய்து எடுத்து செல்வாள்.மற்ற நேரங்களில் இவள் மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பாள். என்ன செய்வது என்று தெரியாது. அந்த ஊருக்கு பேருந்தே நகரத்திலிருந்து கிளம்பி காலை, மாலை இரண்டு முறைதான் வந்து செல்லும்.அவ்வளவு தொலைவில் இருந்தது அந்த ஊர். மற்றபடி அந்த ஊரில் இரண்டு கடைகள் மட்டுமே இருக்கும். எல்லோரும் விவசாய வேலைக்கு போய் விடுவதால் பகலில் ஆள் நடமாட்டமில்லாமல் காணப்படும்.வயதானவர்கள் மட்டும் அங்கங்கு கோயில் திண்டுக்களிலும், சிலர் வீட்டு திண்ணைகளிலும் உட்கார்ந்திருப்பர். அரை குறையாய் படித்து விட்டு அங்கங்கு மர நிழலில் உட்கார்ந்து பேசி பொழுதை கழித்துக்கொண்டிருப்பார்கள் அங்குள்ள இளைஞர்கள். இளம் பெண்கள் சினிமா கதைகள் பேசிக்கொண்டு, டி.வி.நாடகத்தையும் பார்த்து பகலில் பொழுதை கழித்துக்கொண்டிருந்தார்கள்.

மலருக்கு இரண்டு மாதத்துக்குள் சலித்து விட்டது. சும்மா உட்கார்ந்திருப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பதை புரிந்து கொண்டாள். இன்று மாலை கணவனிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்தாள்.

கணவனிடம் இதைப்பற்றி பேச அவன் உனக்கு தெரிஞ்ச வேலை ஏதாவது செய் என்று சொல்லவும், இவளுக்கு பட்டென்று தான் “ எம்பிராய்டரிங்க் ‘ செய்யலாமே என்று தோன்றியது. தன் கணவனிடம் சொன்னாள். அவனுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும், என்னென்ன தேவை என்று கேட்டான். அவள் உடனே ஒரு பேப்பரில் தேவையான பொருட்களை எழுதிக்கொண்டாள்.

மறு நாள் காலை மலர் தன் கணவனை கூப்பிட்டுக்கொண்டு நகரத்துக்கு சென்றாள்

அவளுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக்கொண்டாள். மாலை வீடு திரும்பியவளின் மனதில் மெல்ல ஒரு நம்பிக்கை பிறந்தது.

மறு நாள் இவளின் வேலைகளை பார்த்த கணவனின் தங்கை மெல்ல அருகில் வந்து வியப்பாய் பார்த்தாள். அண்ணி எனக்கும் கத்துக்கொடுக்கறீங்களா ? தாராளமாய் என்று சொல்லி அவளையும் பக்கத்தில் உட்கார சொல்லி கற்றுக்கொடுக்க ஆரம்பித்தாள்.

நாட்கள் செல்ல செல்ல மலரிடம் அங்குள்ள பெண்கள், இந்த கலையை கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். பெண்கள் அவரவர்களுக்கு வேண்டிய பொருட்களை குழுவாக நகரத்துக்கு சென்று வாங்கி வந்தனர்.

அடுத்து செய்து முடித்த பொருட்களை என்ன செய்யலாம்? என்ற யோசனை வந்தது.

இரண்டு பெண்களுடன் மலரே நகரத்துக்கு வந்து இவர்கள் பொருட்கள் வாங்கிய கடையிலேயே விசாரித்தனர். அவர்களும் செய்த பொருட்களை வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்வதாக சொன்னார்கள்.

இப்பொழுது அந்த பெண்கள் “ எம்பிராய்டரிங்க் “ மட்டுமில்லாமல், வேறு ஏதாவது செய்யவேண்டும் என்று மலரிடம் கேட்டார்கள். மலர் கைவினை பொருட்கள் செய்யலாம் என்று சொன்னாள். உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்கள். எனக்கு ஓரளவுக்கு தெரியும், என்றாலும் என்னுடன் படித்த ஒரு பெண்ணுக்கு இந்த கலை நன்றாக தெரியும், அவளை நான் இங்கு கூட்டி வருகிறேன். அவளை நமக்கு கற்று தர ஏற்பாடு செய்யலாம்.

மலரின் தோழி இங்குள்ள பெண்களின் ஆவல் கண்டு நான்கைந்து நாட்கள் மலருடன் தங்கி அங்குள்ள பெண்களுக்கு நிறைய பொருட்கள் செய்வதற்கு சொல்லி கொடுத்தாள்.

என்னென்ன பொருட்கள் தேவையோ அதை வாரம் ஒரு நாள் வேனில் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவர்கள் செய்து முடித்துள்ள பொருட்களை வாங்கி செல்லவும் ஏற்பாடு செய்து கொடுத்தாள்.

அந்த கிராமத்திலே கொஞ்சம் பெரிய வீடாய் ஒன்றை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொண்டார்கள். அதை இரண்டாக பிரித்து மலரின் தலைமையில், எம்பிராய்டரிங்க் ஒரு இடத்திலும் கைவினை பொருட்கள் தயாரிப்பது இன்னொரு இடத்திலும் செய்ய ஆரம்பித்தனர்.. இப்பொழுது அந்த இடம் ஒரு சிறிய தொழிற்சாலை போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மலரை பார்க்கவேண்டும் என்று வந்த ஒரு இளைஞனை மலரின் கணவன் கூட்டி வந்தான். அவன் அக்கா நீங்க எங்க வயசுல இருக்கற புள்ளைங்களுக்கு ஒரு வேலை செய்ய ஏற்பாடு பண்ண மாதிரி எங்களுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கொடுங்க. நாங்களும் பிளஸ் டூ வரைக்கும் படிச்சுட்டு சும்மாத்தான் இருக்கோம்.

நாளைக்கு எல்லாம் நாங்க வேலை செய்யற இடத்துக்கு வாங்க அங்க பேசலாம் என்று அவனை அனுப்பி வைத்தாள்.

மறு நாள் அந்த இடத்துக்கு பத்து பன்னிரெண்டு வாலிபர்கள் வந்தனர். முதலில் அவர்களுக்கு என்ன தொழில் தெரியும் என்று கேட்டாள். நிறைய இளைஞர்களுக்கு எந்த தொழிலும் தெரியாமல் இருந்தார்கள். மலர் அவர்களிடம் இதற்குத்தான் நாம் படிக்கும்போதே ஏதாவது ஒரு கைத்தொழிலை கத்துக்கணும்னு சொல்றது, பரவாயில்லை, நான் இதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணறேன்.

தன் கணவனிடம் நாளை அப்பாவை போய் பாக்கலாமா என்று கேட்டாள்.தான் கூட்டி வந்த இளைஞன் விசயமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்ட அவள் கணவன்

நாளைக்கு போகலாம் என்று சொன்னான்.

திடீரென்று மாப்பிள்ளையும், பொண்ணும் வந்து நினறவுடன் மலர் அப்பாவிற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. மலரே அவரை சாந்தப்படுத்தி எங்கள் ஊரில் பத்து பதினைந்து பசங்களுக்கு ஏதாவது தொழில் கல்வி கொடுக்கணும், அதுக்கு நீங்க உதவணும், கேட்ட மகளை மகிழ்ச்சியுடன் பார்த்த தந்தை அதுக்கென்ன, முதல்ல இரண்டு பசங்களை அனுப்பி வை, அவங்களை எனக்கு தெரிஞ்ச வொர்க்ஷாபில சேர்த்துடறேன், அப்புறம், எங்க கம்பெனிக்கு மர சாமான்கள் சப்ளை பண்ணற கம்பெனியில் இரண்டு பசங்களை சேர்த்து விடலாம். சொல்லிக்கொண்டே போனார்.

ஒரு வாரம் ஓடியிருந்தது, அந்த ஊரில் இருந்து தொழில் கற்க நான்கு இளைஞர்கள் நகரத்துக்கு சென்றார்கள். இப்பொழுது நடுத்தர வயதுடைய ஆண்கள் மலரிடம் வந்து ஏம்மா நாங்க மாட்டுல பால் கறந்து, கொடுத்துகிட்டு இருக்கோம்.வந்து வாங்கிக்கறவன் அவன் சொல்ற விலைக்குத்தான் கொடுக்கறோம். சில நேரங்கள்ள அவன் வரலையின்னா பால் வீணா போகுது, இதுக்கு ஒரு வழி பண்ணும்மா என்று கேட்டுக்கொண்டனர்.

அவர்கள் சொன்னதில் இருந்த நியாயம், மலருக்கு ஏன் நம்ம ஊர்லயே ஒரு பால் பண்ணைய தொடங்க கூடாது ! என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.

தன் மகளை பார்க்க நகரத்திலிருந்து பஸ் ஏறிய மலரின் அப்பாவிடம், எங்க மலரக்கா வீட்டுங்குங்களா ? கேட்டு விட்டு கண்டக்டர் டிக்கட் கொடுக்கவும், அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *