மனதோடு பேசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2016
பார்வையிட்டோர்: 7,849 
 
 

“இந்த விசயத்தை என்கிட்ட ஏன் மறச்சிங்க? என்னை நீங்க நம்பியிருந்தா கண்டிப்பா என்கிட்ட சொல்லியிருப்பிங்க. உங்க மனசுல நான் இல்ல. அதான் என்கிட்ட மறச்சிருக்கிங்க” தன் கணவன் ராஜாவிடம் கோபத்தில் வார்த்தைகளை கொட்டினாள் கோமதி.

இவர்களுக்கு திருமணம் நடந்து இரண்டு வருடம் ஆயிற்று. கணவனிடம் எந்த ஒளிவு மறைவுமின்றி இருந்தாள் கோமதி. இருவரும் தனியார் துறையில் வேலைக்கு செல்பவர்கள். ஒருநாள் அலமாரியை சுத்தம் செய்யும்போது வேறொரு பெண், ராஜாவிற்கு எழுதிய காதல் கடிதம் கிடைத்தது. அதுவே இந்த சண்டைக்கு காரணமாயிற்று.

“உன்கிட்ட சொல்லாதது தப்புத்தான். என்ன மன்னிச்சிரு”

“இதே நான் செய்திருந்தா…. நீங்க சும்மா விட்டுடுவிங்களா?

“நான் கமலாவை லவ் பண்ணியது உண்மைதான். ஆனா அது நம்ம கல்யாணத்துக்கு நாலு வருஷத்திற்கு முன்னாடி”

“கல்யாணத்திற்கு அப்புறம் சொல்லிருக்கலாமே! உங்க மனசுல அவதான் இருக்கா. நான் இல்ல. அதான் இந்த லெட்டரை பத்திரமா வைச்சுருக்கிங்க”

“பைத்தியம் மாதிரி பேசாதே கோமதி”

“ஆமாம் நான் பைத்தியம் தான். இப்போ உங்களுக்கு நான் பைத்தியமா

தான் தெரிவேன்”

“நான் சொல்வதை புரிஞ்சிக்கோ”

“இனியும் நான் என்ன புரிச்சிக்கணும். நீங்க என்னை ஏமாத்திட்டிங்க. நான் இப்போவே எங்கம்மா வீட்டிற்கு போறேன்.”

“போ.. நல்லா போ… எனக்கென்ன.. ஆனால் திரும்பி மட்டும் வராதே… அப்படியே செத்து போ…..” வார்தைகள் கூர்மையான கத்தியை போல் இருபுறமும் பாய்ந்தது. கோமதி வீட்டை விட்டு வெளியேறினாள். அவளின் கழுத்தில் வேலைபார்க்கும் நிறுவனத்தின் அடையாள அட்டை தொங்கி கொண்டியிருந்தது. கையில் எந்த மாற்று துணியும் எடுத்து செல்லவில்லை, என்பதையும் கவனித்த ராஜா, சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தான். பின்னர் வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பிட்டான்.

ராஜா காதலித்த கமலா, வாகன விபத்தில் இறந்து விட்டாள். சில காலம் மனமுடைந்த அவனுக்கு, மருந்தாய் அமைந்தது கோமதியுடனான திருமண வாழ்க்கை. காதலித்த விவரம் தெரிந்தாள், எங்கு இவளின் அன்பு குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் காதலித்ததை அவளிடம் மறைத்து விட்டான். கமலாவின் ஞாபகத்திற்காக வைத்திருந்த கடிதமே, இருவரின் இன்றைய பிரிவிற்கு காரணம்.

அன்பு என்பது கூட ஒரு வகையில், ஒருவர் மீது நாம் ஆழமாக வைத்திருக்கும் நம்பிக்கை. அந்நம்பிக்கை குறையும் பட்சத்தில் நம்முடைய உணர்வுகளை கோபமாகவோ அல்லது வேறு வழியிலோ வெளிபடுத்துகிறோம். அது நாம் யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்? அவர்களுக்கும், நமக்கும் உள்ள உறவு என்ன? என்ற முறைகளின் அடிப்படையில், நமது வெளிப்பாடுகள் மாறுபடும். இது கணவன் மனைவி உறவு என்பதால், தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய அன்பையும், பாசத்தையும், ஏற்கனவே வேறொரு பெண் பகிர்ந்து கொண்டாளே!! என்பதே கோமதியின் இந்த வெளிப்பாடு.

ராஜா மோட்டார் சைக்கிளில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். சாலையோரத்தில் கூட்டம். அங்கு ஏதோ பரபரப்பாக நடந்திருக்கிறது! என்பதை புரிந்து கொண்டான். வண்டியை கூட்டத்தின் அருகில் நிறுத்தினான். என்ன நடந்திருக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் முன் நோக்கி நடந்தான். கூடியிருந்தவர்களை விலக்கி பார்த்தான். இரத்தம் தரையில் சிந்த பட்டு இருந்தது. பெண்ணின் செருப்பு ஒன்று மட்டும் அருகில் கிடந்தது. மற்றொன்றை காணவில்லை. இருபது அடி தூரத்தில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அருகிலிருந்தவரிடம் விசாரித்தான்.

“இங்க என்ன நடந்தச்சு. ஏன் ஒரே பரபரப்பா இருக்கு”

“ஆக்சிடென்ட்! குடிச்சிட்டு கார் ஓட்டி, ஓரமா போன ஒரு பொண்ணை நேர… முட்டிட்டான். நல்ல அடி…. ஆம்புலன்சில கொண்டு போயிருக்காங்க”

“அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா?”

“எனக்கு அதெல்லாம் தெரியாது. அந்த பொண்ணு வேலை செய்யுற கம்பனியோட ஐடி கார்டு கழுத்தில இருந்துச்சு. அதை பார்த்து இங்க இருக்கிறவங்க, யாருக்கோ போன் பண்ணினாங்க. பொண்ணு பேரு கோமதின்னு சொல்லிக்கிட்டாங்க” பெயரை கேட்டவுடன் அதிர்ந்தான் ராஜா.

“அவங்க யாருக்கு போன் பண்ணினாங்க? உங்களுக்கு தெரியுமா? அவர் யாருன்னு தெரியுமா?”

“அதே ஆம்புலன்சில அவரும் போயிட்டாரு”

“எந்த ஹோஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருக்காங்க தெரியுமா?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது…” சலித்து கொண்டார் அந்த நபர்.

“ராஜா பதட்டத்துடன் கோமதியின் கைபேசிக்கு அழைத்தான். கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனே அவள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அழைத்தான். இன்று அவள் இன்னும் வேலைக்கு வரவில்லை என்ற பதில் மட்டும் அவனுக்கு கிடைத்தது. அடி பட்டிருப்பது தன் மனைவியோ!! என்ற பயம் அதிகமானது. செய்வதறியாமல் திகைத்தான்.

“ஆம்புலன்ஸ் கண்டிப்பா பக்கத்தில இருக்கற கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு தான் போயிருக்கும்” என யோசித்து, வேகமாக மோட்டார் சைக்கிளை கிளப்பினான். அரசு மருத்துவமனையில் இருபுறமும் நோயாளிகள். ஒரு ஓரத்தில் பிரேதம் ஏற்றி செல்லும் வண்டியின் முன் சிலரின் அழுகுரல் காதை பிளக்க, ராஜாவின் நெஞ்சம் கணகணத்தது. முன்னோக்கி சென்றான். யாரிடம் விசாரிப்பது? பக்கத்திலிருந்த செவிலியரிடம் கேட்டான். “கோமதி என்கிற பெண்ணுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு. இங்க கொண்டு வந்தாங்களா?”

“ஆக்சிடென்ட் கேஷ் எல்லாம் எமர்சென்சி வார்டுல போய் பாருங்க”

“எமர்சென்சி வார்டு எந்த பக்கம்?”

“ அதோ அந்த பக்கம்” கையை நீட்டி காண்பித்தார், அங்கு பணிபுரியும் செவிலியர்.

அவசர சிகிச்சை பிரிவை நோக்கி ஓடினான். அங்கு வேலை செய்யும் பலரிடம் விசாரித்தான். சரியான பதில் கிடைக்கவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் மனம் துடித்தது. கமலாவை இழந்தது போல, என் கோமதியை இழந்து விடுவேனோ என்று நினைக்கும் போதே இதயத்தில் இடி இறங்கியது போலிருந்தது ராஜாவிற்கு.

எதிரில் வந்த ஒரு மருத்துவரை பார்த்து, நடந்ததை விவரித்தான். அதற்கு அவர் “நேர போய் வலது பக்கம் திரும்பினா, ஆபிஸ் ரூம் வரும். அங்க எல்லா பேசன்ட் பெயரும் இருக்கும். அவங்ககிட்ட கேட்டுப்பாருங்க”

மருத்துவர் கூறிய இடத்திற்கு கண்களை துடைத்து கொண்டு ஓட்டினான். கோமதி என்ற பெயரில் யாரையும் அனுமதிக்கவில்லை என்று தெரியவந்தது.

“ஒரு வேளை அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பார்களோ?” விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்தான். போகும் வழியிலெல்லாம் அவளின் ஞாபகமே. திருமணமாகி வாழ்ந்த இனிமையான நினைவுகள் மனத்திரையில் ஓடியது அவனின் உடம்பு மட்டும் வண்டியை இயக்கி கொண்டியிருந்தது. மனம் முழுக்க கோமதியின் நினைவே.

ஏன் அந்த லெட்டர் கோமதியன் கையில் கிடைத்தது இந்த சண்டை நடக்காமல் இருந்திருக்கலாமே, அப்படியே நடந்தாலும் “நீ செத்து போ என்ற கடுமையான வார்த்தைகள் என் வாயில் வராமல் இருந்திருக்கலாமே” நடந்த எல்லாத்திற்கும் என் சொல் தான் காரணமா? பார்த்தவுடன் அவளிடம் நடந்த எல்லாத்திற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மருத்துவமனையின் முன் வண்டியை நிறுத்தினான். ‘மே ஐ ஹெல்ப் யு” என்று எழுதப்பட்ட பலகையின் கீழ் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.

“மேடம் இங்க கோமதின்னு ஒரு பொண்ண கொண்டு வந்தாங்களா?”

“ஆமாம் சார் ஆக்சிடென்ட் கேஷ்”

“ஆமாம் மேடம்…. இப்போ எங்க இருக்காங்க? அவங்களுக்கு எப்படி இருக்கு?”

“நீங்க அவங்களுக்கு என்ன உறவு வேணும்?”

“ஹஸ்பெண்ட்”

“அவங்களுக்கு கொஞ்சம் சீரியஸா தான் இருக்கு. இங்க பெரிய டாக்டர் லீவு. அதான் ஜி ஹெச்க்கு எடுத்துட்டு போயிருக்காங்க. சீக்கிரம் போங்க… அங்க போய் பாருங்க சார்….”

அவன் தன் வாழ்க்கையின் கடைசி நிமிடத்தில் இருப்பதை போல் உணர்ந்தான். தன்னை அறியாமலே கண்கள் கண்ணீரை அருவியாய் கொட்டியது. அரசு மருத்துவமனைக்கு விரைந்தான். அங்கு விசாரிப்பதற்கு கூட அவனிடம் தெம்பில்லை. அவசர சிகிச்சை பிரிவில் விசாரித்தான்.

“இங்க கோமதிங்கிற பொண்ணு”

“ஓ… அந்த ஆக்சிடென்ட் கேசா…. அதோ பாருங்க”

அவர் காட்டிய இடத்தை நோக்கினான். ஒரு மூலையில், கதவின் அருகில் ஸ்டெச்சரில் வெள்ளை துணியால், முழுமையாக மூடப்பட்ட நிலையில், உடல் வைக்கப்பட்டிருந்தது. அதை கண்ட ராஜாவின் இதய துடிப்பு இரு மடங்காகியது. உன்னிடம் ஒரு முறையாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வாய்ப்பை கூட தராமல் போய் விட்டாயே!! மனம் அசந்து, துக்கம் தொண்டையை அடைக்க, இவ்வளவு நேரம் அடக்கிய கண்ணீர் ஆறாக பெருக, தன்னுள் குமறினான். இருதயத்தை இருக்க பிடித்துக் கொண்டு, கால்கள் நடுங்க, முகம் வியர்த்த நிலையில் மெல்ல உடலை நோக்கி நகர்ந்தான். அப்போது அவனின் கைபேசி அழைப்பு மணியை ஒலித்தது. அதை எடுக்க மனமில்லை. இருந்தும் எடுத்து பார்த்து, அவசரமாக காதில் ஒத்தினான்

“என்னங்க… எங்க இருக்கிங்க? இன்னும் வீட்டிற்கு வரலையா?” அழைப்பின் மறுமுனையில் மனைவி கோமதியின் குரல் கேட்டதும், வாய் விட்டு அழுதான் ராஜா.

“ஏன் அழுறிங்க? என்னாச்சு?”

“என்ன மன்னிச்சிரு. நான் உன்கிட்ட என் பழைய காதலை பற்றி சொல்லாதது தப்புத்தான்”

“அதை விடுங்க. இப்போ எனக்கு உங்க மேல கோபமில்ல”

“ஏன் உன் மொபைல் ஃபோன ஆப் பண்ணிருக்க? ஏன் இன்னைக்கு வேலைக்கு போகல?” அழுகையை நிறுத்திவிட்டு, கண்களை துடைத்து கொண்டே கேட்டான் ராஜா.

“காலையில நமக்குள்ள நடந்த சண்டையில மனசு கஷ்டமா இருந்துச்சு. அதான் என் ஃப்ரண்ட் வீட்டுக்கு போயிட்டேன். நீங்க எப்படியும் கூப்பிடுவிங்கன்னு தெரியும். திருப்பியும் போன்ல சண்டை போடுவோம். அதான் மொபைல ஆப் பண்ணி வச்சுட்டேன். என் ஃப்ரண்டு தான் சொன்னா… ‘உனக்கு தெரியாமலேயே அவர் மேல நீ ரொம்ப பாசம் வைச்சிருக்க. அது அவருக்கு நல்ல புரிஞ்சியிருக்கும். அதான் உன் அன்பு குறையக்கூடாதுன்னு நினைச்சு, பழைய காதலை மறச்சிருப்பாரு.. ரெண்டு பேரும் மனம் விட்டு பேசினாலே எல்லாம் சரியாயிடும்’ன்னு சொன்னா. நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வாங்க. ப்ளீஸ் என்னையும் மன்னிச்சிருங்க”

“வரேன்…. வரேன்ம்மா’

பெரு மூச்சுவிட்டு கைபேசியில் அழைப்பை துண்டித்து திரும்பினான். அங்கு ஒருவர் தன் மனைவி கோமதி அடிபட்டு, இங்க கொண்டு வந்திருக்காங்களா? அவா எங்க இருக்கா? அவளுக்கு இப்போ எப்படி இருக்கு? என பதட்டத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். இப்போது அங்கு இறந்து இருக்கும் பெண் யார்? என்று ராஜாவிற்கு புரிந்துவிட்டது. அந்த நபரின் மன வேதனை எப்படி இருக்கும் என்று ராஜாவிற்கு தெரியும். அவருக்கு தன்னால் முடிந்த உதவியோ இல்லை.. ஆறுதலோ சொல்ல அவரை நோக்கி நகர்ந்தான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *