இவ்வுலகை வண்ணமயமாக்குபவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 6,777 
 

அம்மா இறந்து மூன்று மாதங்களாகின்றன. அந்த சோகத்தில் இருந்து அப்பாவால் இன்னமும் விடுபட முடியவில்லை. எங்களுடன் வந்துவிடும்படி நானும் என் மனைவியும் எவ்வளவு வருந்தியழைத்தும் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அவர் அம்மாவின் நினைவுகளை தன் மனதில் சுமந்துகொண்டு அவரது அந்த வீட்டிலேயே தனது செல்லப் பிராணியான பிங்கி என்ற அந்த நாயுடனும் தனது மனதுக்குப் பிடித்த விசுவாசமான பணியாளர் வேதாசலத்துடனும் வாழ்ந்து வந்தார்.

அம்மா இறந்ததுமே அநேகமான தனது எல்லா சொத்துக்களையும், அப்பா சமமாகப் பங்கிட்டு எல்லா பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார்.

இப்போதுதான் அவர் தனது அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைத்திருந்தார்.

நாங்களும் அவரை அதிகம் தொந்தரவு செய்யவில்லை. அவர் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அவருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருமானால் அவர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டோம். அவ்வப்போது பேரப்பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவர் வீட்டுக்குச்சென்று சில நாட்கள் தங்கி பாடிக்களித்து கூடிக் கும்மாளமிட்டு விட்டு வருவோம்.

அந்த நேரங்களில் அவரும் கூட தன் வயதையும் முதுமையையும் மறந்து கொஞ்சிக்குழாவி சிரித்து மகிழ்ந்திருப்பார். அப்படிப்பட்ட காலங்களில்தான் நான் தனியாக ஒரு நாள் அவரைத் தேடிச்சென்றபோது அவர் வீட்டில் இல்லாததை அவதானித்தேன். அவர் எங்கே என்று வேதாசலத்திடம் கேட்டபோது அவர் நாயுடன் பக்கத்தில் இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்றிருக்கிறார் என்று அவர் கூறினார். சரி அங்கே போய் அவரைச் சந்திக்கலாம் என்று கருதி நானும் அந்த காடு படர்ந்திருந்த பகுதிக்குச் சென்றேன்.
அவரை கண்டுபிடிப்பது அவ்வளவு சிரமமாக இருக்கவில்லை. அது ஒரு அடர்ந்த பெரும்காடு அல்ல. வரண்டுபோன பற்றைக்காடுதான். குள்ளமான சிறு மரங்களும் செடிகொடிகளும் ஆங்காங்கே படர்ந்து காணப்பட்டன. மனதுக்குப் பிடித்ததாகவும் காணப்படவில்லை. விரைவிலேயே அந்த இடத்தில் இருந்து விலகிப் போய்விட வேண்டும் என்ற மன உணர்வையே அந்தப் பிரதேசம் தந்தது. அது முற்றிலும் கைவிடப்பட்ட பிரதேசமாகவே காணப்பட்டது.

நான் என் தந்தையைத் தேடி கைகளால் கண்ணைக்கூசும் வெயிலை மறைத்துக்கொண்டு தூர எட்டிப் பார்த்தபோது, பிங்கி என்ற எனது அப்பாவின் நாய் என்னை அடையாளம் கண்டுபிடித்து ஓடோடி வந்து நன்றி உணர்வுடன் என் கரங்களை நக்கியது. அது என்னை என் அப்பா இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றது.

அங்கே என் அப்பாவை நான் சந்தித்தபோது என் கண்களாலே அதனை நம்ப முடியவில்லை. அவர் ஒரு கடுமையான உழைப்பாளியாக மாறியிருந்தார். மாநிற டீசேர்ட்டும், அதற்கேற்ப காற்சட்டையும் அணிந்திருந்தார். தலையில் ஒரு வெள்ளைத் தொப்பி, கால்களில் ஸ்போட்ஸ் சப்பாத்துக்கள், இவற்றுக்கு மேலதிகமாக தோளில் ஒரு சாக்குப்பை தொங்கிக்கொண்டிருந்தது. வலதுகையில் கூர் நுனியுடனான ஒரு இரும்பு ஈட்டி காணப்பட்டது.

அவர் என்னைப் பார்த்ததும், “வா தம்பி எப்படி இருக்கிறாய்” என சுக துக்கம் விசாரித்தார். நான் அவருக்கு எனது வழக்கமான பதிலையே சொன்னேன். பின்னர் அவரிருந்த கோலத்தைக்கண்டு “இதென்னப்பா செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டேன்.

“நான் வீட்டில் சும்மாதானே இருக்கிறேன். மனிதனென்றிருந்தால் ஏதாவது பிரயோசனமான வேலை ஒன்றையும் செய்ய வேண்டாமா?” என்று கூறிய அவர், தனது தோளில் இருந்த சாக்குப்பையை கீழே இறக்கி வைத்தார். அதில் கையைவிட்டு கை நிறைய ஏதோ ஒரு மரத்தின் விதைகளை எடுத்தார்.

“இதோ பார் தம்பி, இவை கொன்றை மரத்தின் விதைகள். கொன்றைப் பூக்கள் பொன்னிறமானவைகள். தெய்வீகத்தன்மை வாய்ந்தவை. சிவபெருமானுக்கு மிகப்பிடித்த மலர். இதை ஏன் தெய்வீகம் நிறைந்தது என்கிறார்கள் என்றால், நாம் உயிர் வாழ்வதற்கு மிகப் பிரதானமான பிராணவாயுவை இவை அதிகமாக வழங்குகின்றன. இம் மரங்களின் இலைகள், சுற்றாடலில் இருக்கும் கரியமில வாயுவை அதிகம் உரிஞ்சிக் கொண்டு, ஜீவராசிகளுக்குத் தேவைப்படும் ஒட்சிசன் எனப்படும் பிராணவாயுவை சூழலுக்குள் விடுகின்றன.”
“அதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?” நான் வியப்புடன் கேள்வியெழுப்பினேன்.

“இங்கே தெரியும் இந்த விரிந்து பரந்த காட்டைப் பார். எவ்வளவு நிலம் வீணாகிக் கிடக்கின்றது. ஒரு நாளைக்கு மனிதர்கள் எவ்வளவு மரங்களை வெட்டி சாய்க்கிறார்கள். பதிலுக்கு ஒரு மரத்தையாவது நடுகிறார்களா? நான் இந்தப் பற்றைக்காட்டில் ஒரு லட்சம் கொன்றை மரங்களை நடப் போகிறேன்” அவர் அவ்வாறு கூறிவிட்டு தான் இதுவரை கொன்றை விதைகளை விதைத்திருந்த நிலப்பரப்பைக் காட்டினார்.

அங்கே கண்ணுக்கெட்டிய தூரம்வரை அண்ணளவாக இருபதடி தூர இடைவெளியில் ஈட்டியால் குத்தி துளையிடப்பட்டு விதைகள் விதைக்கப்பட்டிருப்பது புலப்பட்டது. அதைப்பார்த்த உடன் அப்பா இந்த நாட்களில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. அவர் தன் வாழ்நாளின் இறுதி வருடங்களை வெறுமனே வீட்டில் இருந்து வெட்டியாகப் பொழுதைக் கழிக்காமல் ஊருக்கும் உலகத்துக்கும் இந்த சமூகத்துக்கும் பிரயோசனமான ஒரு காரியத்தை செய்யத் தீர்மானித்திருக்கிறார்.

அதன் பின்னர் எனது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானபோது எங்கள் வேலைகளையும் அவர்களது வேலைகளையும் கவனிக்கவே நேரம் போதாதிருந்ததால் அப்பாவை சென்று பார்த்துவரும் தடவைகள் குறைய ஆரம்பித்தன. முன்பு வார இறுதிநாள் வந்ததும் குதூகலித்துக் கொண்டு தாத்தாவைப் பார்க்க ஓடும் பிள்ளைகள் கூட வீட்டுப்பாடங்கள் மேலதிக வகுப்புக்கள் என்று விளையாடக்கூட நேரம் கிடைக்காமல் படிப்பு, படிப்பு என முடங்கிக் கிடந்தனர். நமக்கு நேரம் கிடைக்கிறதோ என்னவோ காலம் என்பது யாரிடமும் சொல்லாமல் உருண்டோடிக் கொண்டுதான் இருக்கும். அப்பா அவர் வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஒரு நாள் மீளாத்துயிலில் ஆழ்ந்தார்.

அப்பாவின் மரணச்சடங்குக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அப்பாவின் சிந்தனைகள் அந்த “கொன்றை மரக்காடு” என்ற அளவில் மட்டும் மட்டுபடுத்தப்பட்டிருக்கவில்லை. அவர் தன் வாழ்நாளில் ஆரம்ப முதலேயே இச்சமூகத்துக்கும் மக்களுக்கும் ஏதோ தன்னால் முயன்ற உதவிகளையும் சேவைகளையும் செய்து வந்திருக்கிறார் என்பது அந்த மரணச்சடங்குக்கு வந்திருந்தோர் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டதில் இருந்துதான் தெரியவந்தது.

அப்பா தன் தேகத்தை அந்தக் கொன்றைமரக் காட்டின் கிழக்குத் திசையில் அமைந்திருந்த அருவியின் மருங்கில் அடக்கம் செய்ய வேண்டுமென தனது இறுதி விருப்பாவணத்தில் கோரியிருந்தார். அதற்கமைய அவ்விடத்திலேயே அவரது தேகம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அப்பாவின் மரணச்சடங்குக்கு வந்திருந்த அனைவருமே அந்த கொன்றை மரக்காட்டைப் பார்த்து வியந்தனர். அப்படி ஒரு அற்புதமான காடு அந்த நகரத்தின் புறநகர் பகுதியில் இருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. அது அவ்வருடத்தின் வசந்த காலத்தின் ஆரம்பம். அந்த கொன்றை வனம் எங்கும் பொன்னிறப்பூக்கள் பூத்து அந்த வனம் மஞ்சலாடையைப் போர்த்திக் கொண்டிருக்கிறதோ என்ற தோற்றத்தைத் தந்தது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவன் பார்த்த அந்த வரண்டுபோன அவலட்சணமான விரும்பத்தகாத வீணான பற்றைக்காடா இப்படி மாறிப் போய்விட்டது என்று பிரமிப்பூட்டியது.

அங்கே பறவைகள் கூட்டத்துக்குப் பஞ்சமிருக்கவில்லை. கிளிகளும், மைனாக்களும், மரங்கொத்திப் பறவைகளும் கொஞ்சி விளையாடின. முயல், முள்ளம்பன்றி, கீரிப்பிள்ளை, அணில், அழுங்கு என சிறு மிருகங்கள் துள்ளித்திரிந்தன. காட்டுப்பூக்கள் பூத்து அந்த பிரதேசத்தையே வாச மூட்டிக் கொண்டிருந்தன. என் அப்பாவை நினைக்க எனக்குப் பெருமையாக இருந்தது. இத்தகையவர்களால் தான் இவ்வுலகை வண்ணமும் வாசமும் கொண்டதாக மாற்ற முடியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *