மனதோடுதான் நான் பேசுவேன்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 3,207 
 

இருவருக்கும் இடையில் பேச ஒன்றுமே இல்லையா?

மௌனமே பேசிக்கொண்டிருக்கிறது.

இருவருக்கும் அதன் மொழி நன்றாகப் புரிந்துவிட்டது போல ஒரு அன்னியோன்யம்..

காலையிலிருந்து இரவு படுக்கும் வரை இது தொடர்கிறது….!

ஒருவருடத்துக்கும் மேலாகிவிட்டது..

வார்த்தைகளே இல்லாமல்..எப்படி முடிகிறது…?

சபரிக்கு இது பழகிப்போன ஒன்று…! ஆனால் பத்மினிக்கோ?

***

நான்கு படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடு..

நந்தினிக்கு ஒன்று…

ஒன்று நகுலுக்கு…

பத்மினிக்கும், சபரிக்கும் மாஸ்டர் பெட்ரூம்…

விருந்தினருக்காக சிறப்பு அறைகள் இரண்டு…

இப்போது இருவர் மட்டுமே..அவர்களுடைய செல்ல நாய் பப்புவும் குரைப்பதை மறந்து போய்விட்டதோ அல்லது அதற்கும் அவர்களின் மௌனம் புரிந்து கொள்ள முடிகிறதோ என்னவோ ?

நினைத்தபடி ஒன்றுமே நடக்கவில்லை!

***

பத்மினி வாயைத் திறந்தால் மூடமாட்டாள்.சபரி அதற்கு நேர் எதிர்..மூடின வாயைத் திறக்கமாட்டான்.

ஒருவர் பேசுவதை மற்றொருவர் கேட்டுக்கொண்டிருப்பதும் ஒரு சுகானுபவம்தானே!

***

பத்மினி ஒரு ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்…நிறைய பத்திரிகைகள்.. ஊடகங்கள் …. எல்லாம் பத்மினிக்கு சீக்கிரமே அலுத்து விடும்… அவள் மனோ வேகத்துக்கு அவைகளால் ஈடு கொடுக்க முடியவில்லை..

“வணக்கம்..! இன்று நீங்கள் தான் எங்கள் சிறப்பு விருந்தினர்…”

“எந்த வயதில் முதலில் பாட ஆரம்பித்தீர்கள்..?”

“உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன ?”

“உங்களில் யார் முதலில் ப்ரபோஸ் பண்ணினீர்கள்?”

“உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்/ நடிகை..“

“இப்போது ஐந்து கேள்விகள்..ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் சொல்ல வேண்டும்…”

இதுபோன்ற நேர்காணலில் அவளுக்கு சற்றும் ஈடுபாடு இல்லை.

அவளால் ஒரு குறிப்பிட்ட வடிவத்துக்குள் தன்னை பொருத்திக்கொள்ள முடியவில்லை….

‘மனதோடு தான் நான் பேசுவேன்….’

அவளுடைய சொந்த தயாரிப்பு..ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையம் அவளுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கியது….

முதல் நேர்காணல் சபரியுடன்..

“பப்பி.. முதல் முயற்சி வெற்றிபெறணும்னு உனக்கு ஆசை இல்லையா.? சபரி வாயில இருந்து ஒரு வார்த்தை வெளிய வர ஒரு மணிநேரம் ஆகுமே! பேசாம வேற யாரையாவது செலக்ட் பண்ணு..!”

எல்லோருடைய ஏகோபித்த கருத்து…

ஆனால் பப்பி நினைத்ததை முடிப்பவள்.

நினைத்ததை நடத்தி விட்டாள்..அதுவும் வெற்றிகரமாக…..

***

அதற்கு முன்னும் பின்னும் இப்படி ஒரு நேர்காணல் வந்ததேயில்லையெனும்படி சபரி தனது உள்ளத்தில் வைத்திருந்த அத்தனை உணர்வுகளையும் கொட்டித் தீர்த்துவிட்டான்…

“மிஸ்டர் சபரி. என் பெயர் பத்மினி. அதைத்தவிர எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை..உங்களைப்பற்றி நீங்கள் அதிகம் பேசாவிட்டாலும் உங்களுடைய புகைப்படங்கள் நிறையவே பேசுகின்றன.

உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டுமே கேட்க விரும்புகிறேன். நீங்கள் கேமரா கண்கள் மூலம் பார்க்கும் உலகுக்கு எங்களையும் அழைத்துச் செல்ல முடியுமா…?

சில வினாடிகள் மௌனத்திற்குப்பின் சபரி பேசத் தொடங்கினான்.

அவன் கண்முன் அவனுடைய கேமரா கண்கள் விரிந்தன..

ஒரு மணிநேரம் அவனுடன் பயணித்த அனுபவம் மெய்சிலிர்க்க வைத்தது.

சபரி சில திரைப்படங்களுக்கு புகைப்பட கலைஞராக பணியாற்றியிருந்தாலும் அவனுக்கு பிடித்தது ஸ்டில் ஃபோட்டோகிராபி தான்.

ஆரம்பத்தில் மனித முகங்கள் அவனது கேமராவில் பதிவாகி விந்தைகள் புரிந்தாலும் அவன் கவனம் இயற்கையின் அழகைப் பருகுவதில் முழுவதுமாய் திரும்பிவிட்டது.

சபரியிடமிருந்து அப்படி ஒரு தொலைபேசி அழைப்பை பத்மினி எதிர்பார்க்கவில்லை..

“பத்மினி….?”

“யெஸ் ?”

“நான் சபரி..அடுத்த வாரம் சிக்கிம் போகலாமென்று ஒரு ஐடியா.ஒரு மாதம் பள்ளத்தாக்குகளில் பயணிக்க விருப்பம்….

இந்த முறை என் கேமராவுடன் உன்னையும் கூட்டிப் போக வேண்டுமென்று தோன்றுகிறது….வருவாயா..?”

“இதற்கு நான் என்ன பதில் சொல்வது ? ஐயம் சோ லக்கி..!”

பத்மினியின் பெற்றோருக்கு இதில் சிறிதும் விருப்பமில்லை.. ஒரு புகழ்பெற்ற புகைப்பட கலைஞனுடன் ஒரு மாதம் வெளியூரில்….?

ஊடகங்களுக்கு மெல்லுவதற்கு இந்த ஒரு மாதத்திற்கு போதுமான அவல் கிடைத்து விடாதா..?

ஆனால் பப்பியின் வாழ்வை அவளே அல்லவா தீர்மானிக்கிறாள்….!

அந்த ஒரு மாதம்…பப்பியின் வாழ்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்த நாட்கள்..

சபரியின் கேமராவைப்போல அவளும் அவனுடன் பிரிக்க முடியாத ஒன்றாகிப் போனாள்.

***

பத்மினி ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.

“அம்மா.. நான் இப்போ என் வாழ்க்கையில ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டத்துக்கு வந்திட்டேன்.சபரி எனக்கு நல்ல துணையாயிருப்பான்னு உறுதியா நம்பறேன்….

ஆனாலும் திருமணங்கிற சம்பிரதாயத்தில இப்போதைக்கு எங்க இரண்டு பேருக்குமே நம்பிக்கை இல்ல…

அதுனால ஒரு வருஷமோ ,அல்லது இரண்டு வருஷமோ சேர்ந்து வாழ்ந்து பாக்கலாம்னு தீர்மானம் பண்ணியிருக்கோம்.

நாளைக்கு அவனோட அபார்ட்மென்டுக்கு ஷிஃப்ட் பண்றேன்.விஷ் மீ குட் லக்..!

அப்பாகிட்ட நேத்தே இதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டேன்..”

தங்களது முடிவில் பெற்றோர்கள் தலையிட அவசியமே இல்லை என்ற தலைமுறையின் பிரதிநிதி இதோ இவர்கள் வீட்டிலும்..

***

கணவன் மனைவி எனும் பந்தம் ஒரு ஒப்பந்தமாக மாறும்போது தான் , தான் எனும் அகந்தையும் அதிகார மனப்பான்மையும் தலை தூக்குமோ..?

இருவரின் உள்ளத்துடன் உடலும் சங்கமித்தபோதும் யாரும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாதவரை வாழ்க்கையின் இனிய பக்கங்களைத் தான் புரட்டிக் கொண்டிருந்தனர்.

இருவருக்குமே ஒரு புது வரவின் எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக தலைதூக்கத் தொடங்கியது..

பத்மினி ஒரு புதிய உறவின் சப்தத்தை , மணத்தை , ஸ்பரிசத்தை தன் வயிற்றில் உணர்ந்த தருணம் ….

அவர்கள் திருமணம் நடக்க காரணமானவன் நகுலன்…

அவர்கள் முதலில் எதிராபார்த்தது நந்தினியைத்தான்…

நகுலன் அப்படியே சபரியின் மறுவார்ப்பாயிருந்தான்..

சபரி பேச ஆரம்பித்ததே நகுலன் பிறந்த பின்தான்.

இருவருக்கும் இடையே ஒரு தனி மொழி.கைகளும் கண்களுமே அதிகம் பேசும்.

ஆனாலும் இருவரும் அதிகநேரம் சேர்ந்து இருக்கும் தருணங்கள் கூடிக்கொண்டே போனது.

பப்பி தான் ஒதுக்கப்படுவதாக உணர்ந்த தருணங்கள் அவை.

ஒருவேளை தான் இதுவரை பேசிக்கொண்டே இருந்தது சபரிக்கு அலுப்புதட்டியிருக்குமோ?

இப்போது சபரிக்கு புரிந்த மொழியில் பேசும் ஒரு துணை கிடைத்து விட்டதோ?

பத்மினிக்கு இந்த இடைவெளி மனச்சோர்வை கொடுத்தது.ஒருவித மன அழுத்தத்தையும் கூட..

***

பத்மினி எதிர்பார்க்கவேயில்லை.

மீண்டும் ஒரு புதிய உயிரின் துடிப்பு.வயிற்றுக்குள் ஒரு புதிய உறவின் வரவு.

இந்த முறை அவளுக்கு ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு.

ஒருவேளை நந்தினியோ ?

அவளுக்கு துணையாக இருப்பாளா….? இல்லை அவளும் மௌன மொழியுடன் ஒன்றறக் கலந்து விடுவாளோ ?

நந்தினி அச்சு அசல் சபரியை உரித்து வைத்திருந்தாள்….

பப்பிக்கு நினைத்து பார்க்கவே அச்சமாயிருந்தது.

ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லை. நந்தினி பேசுவதை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

நகுலனும் நந்தினியும் இரு துருவங்களாயிருந்தாலும் அவர்களுக்குள் ஒருவித புரிதல், சபரிக்கும் பப்பிக்குமிடையே இருந்த அதே எண்ணங்களின் பரிமாற்றம்..

நகுலனக்கு பள்ளியில் நண்பர்கள் என்று குறிப்பிட்டு சொல்வதற்கு யாருமில்லை….

சொல்லப்போனால் அவனுக்கு சபரியைத் தவிர யாருடனும் ஆழ்ந்த நட்போ, பாசமோ ஏற்படவில்லை..

அவன் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிப்பது ஆழ்கடலில் முத்தெடுப்பது போலத்தான்.

சிறிது நாளாக பள்ளிக்கு செல்வதில் ஆர்வம் குறைய ஆரம்பித்தது…

சபரி அவனைத் தன்னுடன் போகுமிடமெல்லாம் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்.

அவருடைய புகைப்படங்கள் தந்தையை மிஞ்சும் வகையில் அற்புதமாக இருக்கிறது என்று ஒருமித்த பாராட்டு சபரிக்கு போதையேற்றியது..

அன்றைக்கு ஏன் விடிந்தது ? சூரியன் தோன்றாமலே போயிருக்கக் கூடாதா?

***

“பப்பி ! நானும் நகுலனும் ஒரு வாரம் தரம்சாலா டூர் போறோம்.

என் வாழ்க்கையில மறக்க முடியாத பயணமாய் இருக்கணும்னு விஷ் பண்ணி அனுப்புவியா…?

நந்தினிக்கு செமஸ்டர் தேர்வு இருக்குன்னு சொன்னா..இல்லைனா நாலு பேருமே சேர்ந்து போலாம்னுதான் பிளான்”

“தாட்ஸ் ஓக்கே டியர்..! நகுலனுக்கும் இந்த பிரேக் அவசியம்னு தோணுது…!”

அது வெறும் ப்ரேக் இல்லை… அவனது பயணத்தின் முடிவு…!

சபரி ஏன் அப்படி கூற வேண்டும்?

அவனுடைய வாழ்க்கையின் மறக்க முடியாத பயணமாய் அது அமைந்துவிடுமென்பதை அவன் முன்கூட்டியே அறிந்து கொண்டு விட்டானா..?

திரும்பி வரும் போது நகுலன் இல்லை… அவன் கேமரா அவன் எடுக்க விரும்பிய கடைசி காட்சியைப் பதிவு செய்து தன் கடமையை முடிந்துவிட்டது.

நகுலன் கீழே ,கீழே , ஆழப் புதைந்திருந்த அதிசயங்களைத் தேடி , மீள முடியாத பள்ள்த்தில் , பயணத்தில்….

***

சபரியின் பேச்சு முற்றிலுமாக நின்றுவிட்டது…

பத்மினி நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தாள்.

நந்தினிக்கு அந்த வீடு ஒரு மனநலமருத்துவ மனையாகவே காட்சி அளித்தது…

அவளால் சபரிக்கும், பத்மினிக்கும் ஆறுதல் கூற முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மன உளைச்சலைக் கொடுத்தது…

அவளுக்கு எல்லாமுமாய் இருக்கும் நண்பன் கபிலனுடன் போய் சிறிது நாட்கள் தங்குவது தான் தன்னை மீட்டெடுக்க ஒரே வழி என்று தீர்மானித்து விட்டாள்…

பப்பியும் சபரியும் மீண்டும் தனியே..

ஆனால் இப்போது இருவருக்கும் இடையே நிஜமான இடைவெளி..

பப்பி பேசுவதை புரிந்து கொள்ள முடியாத சபரி…

“சபரி..வாயத் தொறந்து ஏதாவது சொல்லித் தொலையேன்…..! என்ன நடந்தது? எப்படி நடந்தது? எனக்கு தெரிஞ்சுக்க உரிமையில்லையா..?

நந்தினி நம்மள விட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிப்போறா…! அதையாவது புரிஞ்சுக்க முடியுதா ?

அவளோட பேசி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு..!

சபரி என்ன அந்த இடத்துக்காவது கூட்டிட்டு போ!

அங்க போனா நானே என்ன நடந்திருக்கும்னு கண்டு பிடிச்சுக்கிறேன்..

ப்ளீஸ்… மௌனத்தால என்னக் கொல்லாதே…”

சபரியின் மூளைக்குள் அவள் கெஞ்சலும் கதறலும் பதிவாக ஒரு மாதம் பிடித்தது..

***

ஒரிரு வார்த்தைகளைத் தவிர பயணம் மௌனமாகவே துவங்கியது..

நகுலனின் கால் பதிந்த இடங்கள் எல்லாம் பத்மினிக்கு கதைகதையாய் கூறியது.

நகுலன் கடைசியாப் பார்த்த , படம் பிடித்த காட்சி…

நகுல்….!

அந்தப் பள்ளத்தாக்கே கிடுகிடுக்கும்படி பப்பியின் குரல் எட்டுத்திக்கும் எதிரொலித்தது..

சபரி மீண்டும் அந்த நாளை வாழ்ந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம்..!

திரும்ப வரும்போது பத்மினி முற்றிலுமாக மாறியிருந்தாள்..

நகுலன் பெயரைக் கடைசியாக உச்சரித்த வாய் அதற்கப்புறம் பேச மறந்தது…

அவளும் சபரியைப் போல மௌனம் காத்தாள்…

இப்போது வீடே அமைதியாய் , பறவைகள் ஒலியும், செடிகளின் சலசலப்பும் , சமையலறையின் பாத்திரங்கள் , குளியலறையின் தண்ணீர் எழுப்பும் ஓசையும் மட்டுமே அந்த வீட்டில் மனிதர்கள் வாழும் சாட்சியாக…

பப்பு மட்டுமே அந்த மௌனத்தை விரும்பாதவனாய், குரைத்துப் பார்த்து அலுத்து விட்டான்.

சபரிக்கும் பத்மினிக்கும் இந்த வாழ்க்கை பழகிப்போனது…

ஆனால் அவர்கள் மௌனமும் ஒரு நாள் மௌனமானது….!

***

அவர்கள் வீட்டில் ஒரு தொலைபேசி இருப்பதை இருவரும் மறந்து ரொம்ப காலம் ஆகியிருந்தது….

அதற்குமே, கேட்க, பேச, நிச்சயம் மறந்து போயிருக்க வேண்டும்.

ஒரு அதிகாலை வேளை..

தீடீரென கோமாவிலிருந்து மீண்டு வந்த நோயாளிபோல கிணுங்கியது தொலைபேசி..

மூன்றாவது அழைப்பின் போதுதான் பத்மினிக்கு அது தங்கள் வீட்டு தொலைபேசி என்பதே புரிந்தது…

அதை எடுத்து பேசக்கூட மறந்தவளாய் திகைத்து நின்றாள்.

மீண்டும் அது ஒலித்த போது சுயநினைவு பெற்றவளாய் அதை தயங்கித் தயங்கி கையில் எடுத்தாள்..

என்ன பேசுவது….? எப்படி பேசுவது? எதற்கு பேசுவது?

அப்படியே பிரமை பிடித்தவள் போல நின்றாள்..

“ஹலோ..! ஹலோ..!”

மறுமுனை பொறுமை இழந்தது…

“ஹலோ..அம்மா..! ஆர் யூ தேர்? இட் இஸ் நந்தினி…!”

“நந்தினி ?!?”

“அம்மா.. நான் உங்க நந்தினி…! மறந்து போச்சா…?”

சேயின் குரலை மறந்த தாயுமுண்டா…?

“நந்தினி…? என்னம்மா..? எங்க போன? அம்மாவ எப்படி மறந்த…?”

பப்பியால் அதற்குமேல் பேச முடியவில்லை… தெரியவில்லை..!

ஒளிந்து கொண்ட வார்த்தைகளைத் தேடினாள்….

“அம்மா…. நான் ஸ்வீடன்ல இருக்கேன்.. கபிலன் கூடத்தான்..அப்பா..?”

“நந்தினி..! உன் குரல் மட்டும் போதாது…! நீ வேணும் நந்தினி..! எனக்கும் அப்பாவுக்கும் நீ வேணும்…!

“அம்மா… நானும் கபிலனும் உங்களுக்குக் குடுக்க ஒரு அற்புதமான பரிசுக்காக இத்தனை வருஷம் காத்திருந்தோம்…! பெரிய தண்டனைய உங்களுக்கு கொடுத்துட்டோம்..

ஆனா.. அம்மா..! இரண்டு நாள்ல அங்க இருப்போம்….உங்க நகுலனோட…!”

“நந்தினி நிஜமாவா சொல்ற..? நம்ப நகுலனா?”

ஒவ்வொன்றாய் வார்த்தைகள் ஒன்றின் மேல் ஒன்றாக வந்து விழுந்தது…

நகுலன்…! நகுலன்….!

சபரி…!

வெகுநாட்களுக்கப்புறம் அந்த வீட்டில் ஓங்கி ஒலித்தது அவள் குரல்…..பப்பு குரைக்க ஆரம்பித்தது..

சபரி….! நகுலன் வரப்போறான்!”

“என்ன? நகுலனா…?”

மௌனம் கலைந்தது….!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *