மனச் சடக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 10,793 
 
 

பள்ளிவிடுமுறை முடிவதற்கு இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கிறது. எப்பொழுதும் போல் இப்போழுதும் ஒரே ஒப்பாரி.

“மற்றவர்கள் லீவு கிடைத்தால் வெளியூருக்கு போகிறார்கள் நான் மட்டும் ஏன் வீட்டில் அடைந்து கிடக்கவேண்டும்.” என்று முகாரி பாட ஆரம்பித்தாள் என் மனைவி.

“இதோ பக்கத்தல இருக்கிற எங்க வீட்டுக்காவது போகக்கூடாதா?” “உனக்கு லீவு இருக்கு; எனக்கு லீவு இருக்கா?” நானும் விடாப்பிடியாக எதிர்க்கேள்வி கேட்டேன்.வேற எதைச் சொல்வது?

“எப்பப் பார்த்தாலும் கம்பனியக் கட்டிக்கிட்டு அழுங்க. என்னைப்பத்தி நினைக்க உங்களுக்கு எங்க நேரம் இருக்கு?” தன் பிறந்த வீட்டிற்கு போக முடியவில்லை என்றால் ஒரு படி அதிகமாகவே வருகிறது முன் கோவம் மனைவிகளுக்கு. அவளை சொல்லியும் குற்றம் இல்லை. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பள்ளியில் பாடம் சொல்லித் தருவது மன அழுத்தத்தை ஒரு புறம் தந்தாலும், இப்பொழுது, “பேப்பர் வேக்” என்று சொல்லி அலுவல் வேலைகளை ஆசிரியர்களின் தலையில் கட்டிவிடுவது பெரும் துன்பத்தை தருகிறது அவர்களுக்கு, எங்காவது சற்று ஆறுதலை தேடி ஓடுவதில் என்ன தவறு இருக்க போகிறது? முன்பு போல் பள்ளி வாழ்வு எங்கே இருக்கிறது? பேருக்குதான் ஒரு மாத லீவு ஆனால் மூன்று வாரமாவது பள்ளிக்கு போக வர வேண்டியிருக்கிறது. பள்ளி ஆசிரியர்களின் மன அழுத்தத்தை பற்றி யாருக்கு என்ன கவலை?

“நீங்க வரலன விடுங்க உங்கள எதிர்ப்பார்க்கல நான் மட்டும் போய்ட்டு வர்ரேன்”என்றாள்.

சரி போனால் போகிறது என்று மறு நாள் காலையில் கிளம்பி அவளின் அப்பா வீட்டிற்கு அனுப்பி வைத்து, இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது. இதோ அவளிடமிருந்து அழைப்பு மணி வந்து விட்டது அப்பா வீட்டிலிருந்து அவளை மீண்டும் அழைத்துச் செல்லுமாறு, எப்படியோ ஒரு வாரம் என் மனைவி இல்லாமல் வீடே எதையோ இழந்து போன்று இருந்தது. வாழ்வில் எவ்வளவோ இன்பத் துன்பங்களை நாங்கள் இருவரும் கடந்து விட்டோம். சில சமயங்களில் வாக்கு வாதங்கள் பேதங்களாக முற்றி நான் பேச மறுக்கும் போது எல்லாம் தானாக வந்து தன் அன்பை வாரி வழங்குவாள். உண்மை அன்புதானே கணவன் மனைவிக்கிடையே வாழ்வின் பிணைப்பு என்று கூறுவாள், அவளின் ஊடலில் அப்படியே உருகிவிடுவேன்.

நான் வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன் மழை பொழிய ஆரம்பித்துவிட்டது. பேருந்தை பிடித்து “கே எல் செண்டருக்கு” சென்று அங்கிருந்து ரயில் பிடிக்க வேண்டும் என்று நினைத்த நான் போட்ட திட்டங்களை மாற்ற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்; மழையும் என்னோடு வருவதால்..

சில தினங்களுக்கு தேவையான துணிமனிகளை பைக்குள் திணித்துக்கொண்டேன். திடிரென ஆரம்பித்த மழை, சில மணிதுளிகளில் ஓவென பெரும் மழை துகள்களாக மண்ணில் விழத்தொடங்கியது..மணியை பார்த்தேன் பிற்பகல் மூன்று “ கே.எல் செண்டரில்” ரயில் எடுத்து “தாப்பா ரோட்” ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கு என் மனைவி எனக்காக காத்திருப்பாள்.

மழையின் வேகத்தை பார்த்தால் ஒருமணி நேரத்தில் கே.எல் செண்டரை நெருங்க முடியாது. மழைக்காலத்தில் தெரு எங்கும் வாகன நெரிசல் பஸ் பயணத்தில் எங்காவது மாட்டிக்கொள்வோம், என்பதால் என் வாகன இயந்திரத்தை முடுக்கிவிட்டேன்.

அருகாமையில் இருந்த பெட்ரோல் நிலையத்தில் என் வாகனத்திற்கு எரிப்பொருளை நிரப்பிக் கொண்டேன். அதற்குள் என் மனைவியிடமிருந்து அலைபேசி அலறியது, எனக்கான டிக்கட்டை வாங்கிவிட்டதாகவும் கே.எல் செண்டர் டிக்கட் முகப்பிலே நான்கு மணிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினாள்.

எதிர்ப்பார்த்த மாதிரி வழியேங்கும் வாகனங்கள் மழையில் நிரம்பிக்கிடந்தன.பொதுவாகவே மாலை நேரத்தில் வாகன நெரிசலில் சிக்கத்தவிக்கும் “பூச்சோங்” சாலைகள் மழைக்காலத்தில் சொல்லவா வேண்டும்?

மணி நான்கு பதினைந்துக்கு “பட்டர்வேர்த்துக்கு” போகவேண்டிய ரயில் புறப்பட்டுவிடும் என்பதால் விரைந்து செலுத்தினேன் என் வாகனத்தை. வானம் மட்டுமா இன்று சுறுசுறுப்பாக இயங்குகிறது?. மழையும் அல்லவா போட்டிப்போட்டுக் கொண்டு பலமாக பெய்கிறது. காற்றின் வேகத்தில் தெருவெங்கும் வரிசையாக நடப்பட்ட மரங்கள் தன் கச்சேரியை அழகாக அரங்கேற்றிக்கொண்டிருந்தது. மனிதர்கள் மட்டும் என்ன லேசுப்பட்டவர்களா? அவர்களும் ஆளுக்கு ஒருபக்கம் தலைத் தெறிக்க ஓடிக்கொண்டிருந்தனர், மழைத்தூறலின் தாளத்திற்கு ஏற்றார்போல். “இந்த பேய் மழை ஏன் இப்படி பெய்து நம்ப பிழைப்பை கெடுக்குதோ” மனத்துக்குள் கருவிக்கொண்டேன்.

மழையின் வேகத்திற்கு என் வாகனமும் ஈடுக்கொடுக்க தொடங்கிவிட்டது. நெருங்கிவிடுவேனா இல்லை ரயிலை விட்டுவிடுவேனா என்ற மன நிலையில் என் மனமும் வாகனமும் ஒடிக்கொண்டிருந்தது பதட்ட நிலையில், அவ்வப்போது என்னையும் முந்திக்கொண்டோடும் வாகனங்கள் தண்ணீரை வாரியிறைத்து செல்லும் போது சற்றென விழும் மழை நீர் என் வாகன முன் கண்ணாடியில் படர்ந்து மறைத்து செல்லும் போது சாலை என்னை தடுமாறச் செய்தது. மழையினால் நீர் தேங்கி நிற்பதால் வாகனத்தை செலுத்துவதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. வேகமாக ஓடிக்கொண்டிருந்த வாகனங்கள் மெதுவாக நகர ஆரம்பித்தன. மழை நேரத்தில் திடிரென ஏற்படும் விபத்துக்கள் காரணமில்லாமல் இன்னும் கடுமையான நெரிசலை கொடுக்கும். வேறு பாதையை தேர்ந்தெடுத்திருந்தால் சீக்கிரமாக போக வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்திருப்பேன் என்று நினைத்தேன், எதிர் திசையில் ஒரு வாகன விபத்து, அதனை வேடிக்கை பார்த்தே வாகன நெரிசலை எற்படுத்தி விடுகிறார்கள் இந்த முட்டாள் மனிதர்கள், ஆனால் மழைக்காலத்தில் எதுவும் நடக்கலாம். இன்னும் சிறிது தூரம்தான், “பிரிக்பீல்ட்ஸ்சை” பிடித்து விடுவேன் என்ற நம்பிக்கை வந்தது, வாகனம் மறுபடியும் நிதானமாய் ஓட ஆரம்பித்துவிட்டது.

சற்று நேரத்தில் வானம் சீறிப்பாய்வதை நிறுத்தி சன்னமாக நடைப்பயில ஆரம்பித்தது.மணியை பார்த்தேன் சரியாக நான்கை தொட்டது ..ரயிலை பிடித்துவிட முடியுமா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது என் மனைவியை இப்பொழுது கறுவிக்கொண்டேன். இவள் எப்பொழுதும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான் முடிவெடுப்பாள். எனது வாகனத்தை தெரிந்த கடையின் முன் நிறுத்தி விட்டு விறுவிறு வென்று நடக்கலானேன்.

சிறு சிறு மழைத்துளிகள் என்னை நனைக்க முயன்றுக் கொண்டிருந்தது. நிலையத்திற்குள் போவதற்குள் ஒரு வழியாகிவிடுவேன் போல் தெரிகிறது. அங்கங்கு மின்சாரவிளக்குகள் கண்களில் தெரிய ஆரம்பித்துவிட்டன.

சற்றுமுன் பெய்த பெரும் மழையில் நடைப்பாதையெங்கும் நீர் குமிழ்ந்து கிடந்தன. விறுவிறுவென்று நடந்ததில் கால்களின் தொடைப்பாகம் வலிக்க ஆரப்பித்தது. ஈரமான சாலைத் தரையில் கரப்பான் பூச்சிகளுடன் ஊர்ந்துபோவது போன்று இருந்தது. அங்கங்கு தேங்கி நிற்கும் நீரின் தளும்பல்கள் என் கால்களை நனைத்துக்கொண்டிருந்தன. கருத்த மேகங்கள் ஒன்று கூடி, பெரும் மழையை வாரி வழங்கி அந்த மாலை பொழுதை இரவுவாக்கி இருந்தாலும், எப்போதும் போல் தலைநகரம் இந்த மழை நாளிலும் பரபப்பு. காலையும் மாலையும் மக்கள் ஏன் இப்படி ஆளாய் பறக்கின்றனர் ?

பெரும் கட்டிடங்கள் மத்தியில் மிகவும் நவீன மயமான அந்த தொடர் வண்டியில் செல்வதற்கான முகப்பு வாசலை எங்கே தேடுவேன்? அந்த பக்கமா இல்லை இந்த பக்கமா எந்த பக்கம்? பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் வாகனங்கள் செல்லும் பாலத்தில் செல்ல வேண்டுமா இல்லை சற்று தூரத்தில் ஷோப்பிங் காம்ப்ளக்சினுள் இருக்கும் ஒருப்பக்க வழிப்பாதையா என்று தெரியாமல் முழித்தேன். பல வருடத்திற்கு முன்வரை இந்த இடம், தொடர் வண்டி இலாக்காவின் கிடங்காக, அதாவது பொருட்களை சேகரித்து வைக்கும் இடமாக இருந்தது. வழக்கில் கூடாங் என்பார்கள். எதிரிலே தமிழர்களின் கடைகள் இருந்தன. முப்பது வருடங்களுக்கு முன் என் அண்ணனுடன் பார ஊந்திலே வந்து கூடாங்கில் பொருட்களை இறக்கிய ஞாபகம் வந்தது.

எதிரே இருந்த மயிலோன் திரடிங்கில் வாங்கிய தமிழ் இலக்கண புத்தகம் இன்னும் என் கையிருப்பில் உள்ளது. விசாரித்துக் தெரிந்துக்கொள்வோம் என்ற எண்ணத்தில் பக்கத்தில் நின்ற ஒரு மலாய்கார டாக்சி டிரைவரிடம் “அபாங் மச்சமான நக் பெர்கீ தெம்பாட் பெர்லெபசான் கெரெத்தா அப்பி கேஎல் செண்டர்” கேட்டேன். (எங்கே ரயில் நிலைய முகப்பு என்று அவரை கேட்டேன்) அவராலும் சரியாக சொல்ல முடியவில்லை. முகப்பை தேடி அலைந்தேன் . மாபெரும் வளாகம். அறிவிப்பு பலகை அங்கங்கு தொங்கிக்கொண்டிருந்தாலும், எங்கு போக வேண்டும் என்று தெரியாமல் குழப்பினேன்.

திசையெங்கும் மனித தலைகள். ஆளுக்கொரு திசையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு தமிழர் வழிக்காட்டினார். “மேலே சென்று இடது புறம் செல்லுங்கள்” என்றார். சற்று ஒதுக்கு புறமாக இருந்தது முகப்பிடம். ஏற்கனவே உறுதிப்படுத்திக்கொண்டு விட்டாலும் வரிசையாக நிற்க வேண்டும் என்று அடப்பிடித்தார்கள் நானும் அங்கு உள்ள முகப்பில் நிற்கவேண்டியிருந்தது. ஏன் இப்படி எனக்குள் கேள்வி எழுந்தது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒன்றுக்கு மற்றவர்கள் போல் வரிசையாக நிற்க வேண்டும் என்பது அறிவான செயலாக படவில்லை.

வினாடிக்கு வினாடி மனமோ தவித்தது! இன்று ரயிலை விட்டுவிடுவேனோ என்று மனம் படபடத்தது. மணி நான்கு பதினைந்தை நெருங்கிக்கொண்டிருந்தது.

என் மனைவி மறுபடியும் அலைப்பேசி தொடர்பில் வந்தாள். ஏங்க டிக்கட்டை எடுத்திட்டீங்களா என்று எதிர்முனையில் இருந்தபடி படபடத்தாள். மிகவும் அமைதியாக சேவை செய்துக்கொண்டிருந்தனர் ரயில்வே முகப்பு ஊழியர்கள். பூகம்பமே வந்தாலும் பூக்கூட அசையாமல் அமைதியாக சேவை செய்யும் மனிதர்கள் இந்த மலாய்க்காரர்கள். மருந்துக்கும் கூட சுறு சுறுப்பை தேட முடியாது!

என் மனமோ இருப்புக்கொள்ளமுடியாமல் தவித்தது. மணியை பார்த்தேன் மணி சரியாக நான்கு பதினைந்து. நமது வலி அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது? எருமை மாட்டின் மீது மழைப்பெய்தாலும் கொத்தி தின்னும் குருவிகள் போல அவர் அவர் வேலையை அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றனர்.நானோ இங்கு நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றேன். அவர்கள் அமைதியாக சிரித்துக்கொண்டு தனது இயல்பான பாணியிலே பணியை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கின்றனர். என் அவசரம் அவர்களுக்கு எப்படி தெரியும்?

தப்பித்தவறி வண்டியை தவறவிட்டென் என்றால் அவளுக்கு யார் பதில் சொல்வது? அது என்ன ஒரு நாள் முடியும் விசயமா?

அடிக்கொருதரம் செய்யப்படும் ரயில் கிளம்பப்போகிறது என்ற அறிவிப்பு வேறு நெஞ்சு கூட்டின் துடிப்பை அதிகரிக்க செய்துக் கொண்டிருந்தது. ரயிலை தவற விட போகிறாய் என்று மனம் எச்சரிக்கை செய்ய ஆரம்பித்து விட்டது.

ஒரு வழியாக முகப்பிலே நின்றிருந்த தமிழ்ப் பெண்மணியிடம் என் நிலமையை சொல்லி டிக்கட்டை எடுத்துவிட்டேன். ரயில் கிளம்பி இருக்குமே என்று ஒரு குண்டை தூக்கி போட்டார் அவர், இருப்பினும் சட்டென்று பக்கத்தில் இருந்த மலாய்க்காரரிடம் சந்தேகத்துடன் கேட்டார். அவரும் “தெரியவில்லை கிளம்பும் நேரம்” என்றார். என் மனைவி புக் செய்த டிக்கட் இன்று வேஸ்டு என்று நினைத்தேன். விறுவிறு என்று நடையைக்கட்டினேன். ஓட்டமும் நடையுமாக ரயில் ஏறும் இடம் நோக்கி நடந்தேன்.

‘கேஎல் செண்டரில்’ ரயில் ஏறுவது இது முதல் முறை என்பதால் சற்று தடுமாறிதான் போனேன். மகிழுந்தை வாங்கிய பிறகு பொது போக்குவரத்தை பயன்படுத்துவது குறைந்துவிட்டது எனலாம். ஆடிக்கு ஒருதரம் அம்மாவாசைக்கு ஒரு தரம் என்று ஏறினால் இப்படிதான் வழி தெரியாமல் முழிக்கவேண்டும். சற்று முன் நான் கடந்து போன போது நிறைந்திருந்த மனிதர் கூட்டம் திடிரென காணவில்லை.

எங்கு தொலைந்தார்கள் என்று தெரியவில்லை. அட மனிதர்களை கடத்தும் இயந்திரத்தை கண்டுப்பிடித்துவிட்டார்களா என்ன?! மனம் குழம்பித்தான் போயிருந்தது, மழை பொழிவதற்கு முன் இருண்டுகிடக்கும் வானம் மழை பொழிந்தவுடன் வெளிச்சம் கொள்வது போல் எங்கும் நிதர்ச்சமான அமைதி கொண்டது அவ்விடம்!

சற்று தொலைவில் இரு காவல்துறையினர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் என் டிக்கட்டை காட்டி எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டேன். நான் கொடுத்த டிக்கட்டை தடவி பார்த்து அதோ அங்குதான் செல்ல வேண்டும் ஆனால் ரயில் கிளம்பிவிட்டது என்றார்கள்.

அவ்வளவுதானா? “போச்சுடா இப்ப என்ன செய்யறது” என்று குழப்பத்தில் அந்த இடம் நோக்கி நகர்ந்தேன். ஒரு காக்கா குருவி கூட ரயில் ஏறவில்லையோ என்று நினைத்தேன். போகும் வழியில் ஒரு மஞ்சள் கயிற்றால் தடை செய்திருந்தனர் யாரும் போக முடியாத படி! எப்படி போவது என்று தெரியவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த மலாய்க்காரர் அந்த கயிற்றை தூக்கிவிட்டு உள்ளே செல் என்று சாடைக் காட்டினார். ரயில் வண்டி கிழே நிற்கிறது என்றார்.

நானும் தடையைத் தாண்டி மளமள வென்று “எஸ்கவேட்டர்” நோக்கி ஓடினேன். எனது எண்ண ஓட்டத்திற்கு அந்த எஸ்கலேட்டர் சரிப்பட்டு வரவில்லை தட தடவென்று இறங்கி ஓடினேன். எனக்காக காத்திருப்பது போன்று ரயில் நின்றுக்கொண்டிருந்தது. தம் பிடித்து ஓடிச் சென்று எறிக்கொண்டேன் . நான் ஏறுவதற்கும் ரயில் கிளப்புவதற்கும் சரியாக இருந்தது. சொடுக்கு போடும் நேரத்தில் வண்டியை தவறவிட்டிருப்பேன். ஆனால் பிடித்துவிட்டேன். வெற்றி கொண்ட என் மன நிலையை என்னவென்று நான் விவரிப்பது?

ஒரு மணி நேரமாக நான் பட்ட பாடு இதற்காகத்தானே. எந்த மனைவியும் ஏழை புருஷனையும் தாங்கிக் கொள்வாள். ஆனால், தான் சொன்னதை செய்து முடிகத் தெரியாதவனை ஒரு ஈ எறும்பாகக் கூட அவள் மதிப்பதில்லை!. என் கைத்தொலைபேசியும் மறுபடியும் அலற ஆரப்பித்தது.

என் மனைவி கேட்டாள் “ரயிலை பிடித்துவிட்டீகளா?” பெருமிதமாக சொன்னேன்;
“ ட்ரெய்ன்லதான் ஒக்காந்திருக்கேன்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *