மனசு ஒரு கதையாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 15, 2013
பார்வையிட்டோர்: 10,293 
 
 

மாமியார் மருமகளை மாவடுக்கிற சட்டுவத்தை எங்கவச்சே மாமயிலே எனக் கேட்க மருமகள் அல்லையிலே வைச்சிட்டனா, அலுங்கி நடந்துட்டனா, கொண்டையிலே வெச்சிட்டனா, குலுங்கி நடந்துட்டனா, தூரத்து பெண்களுக்கு தூக்கி குடுத்தனா, இல்லாப் பொறப்புக்கு எடுத்து குடுத்துட்டனா, கட்டடா பல்லாக்க, காலமே போய் சேர்வோம் பூட்டடா பல்லாக்க புறந்திடம் போய்ச் சேர்வேன் என்று சொல்லி புறப்பட கணவன் வருகிறான். அவனிடம் துப்பிட்டுச் சொங்கழகா, துவண்டோ நடையழகா, உன்னப்பெத்த தாயாரு, ஊரறிய பேசறாங்க என்று சொல்கிறாள் மனைவி. மகன் தாயிடம், கடுகு சிறுத்தவரே, காராமே மேனிவரே, இடசிறுத்த புஸ்தகத்த என்ன சொன்ன எந்தாயே’ என்கிறான். தாய் மகனிடம், நூறுசட்ட ஆறுவண்டி யாருக்கடா கொண்டுவந்தே என்கிறாள். மகன், ஏந்தி எடுத்த எம் பொறப்புக்கும் கொண்டு வல்லே. தாலி எடுத்த தம் பொறப்புக்கும் கொண்டு வல்லே. ஊரறிய கை கொடுத்த உத்தமிக்கு கொண்டு வந்தேன் என்றான். இக்கதையில் வருகிற மருமகளைப் போல நானும் என் மாமியாரிடம் அடிக்கடி கோபப்பட்டேன். இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது. புலி பதுங்கும் குகை போல மனசுக்குள் கோபம் புதைந்து கிடக்கிறது. அது எப்போது எப்படி யாரிடம் வெளிப்படும் என்று சொல்லமுடியாது. இப்படி எல்லா உணர்வுகளையும் உச்சகட்டத்தில் உணார்ந்து கதாநாயகனே கடைசியில் ஜெயிப்பதை ரசித்து வெளிவரும் மனசுபோல அமைதியடையும் தருணங்கள் ஏராளம் என்றாலும். எதிலும் பிடிபடாத நிலை அல்லது உணர்வுகளற்ற ஓர் சிலைபோல அவ்வப்போது இப்போது நிகழ்கிறது. எப்படித்தான் மனசு எதிலும் லயிக்காமல் இருக்கிறது என்று அடிக்கடி தோன்றினாலும் வெறுமனே தனியாக இருப்பது தூங்காமல் படுத்தபடி கிடப்பது நிறைய நேர்கிறது. ஏன் நிறைய நேரத்தை வீணாக்குகிறாய் என்று அவர் கேட்பதுண்டு. என்ன செய்வது என்று நிறைய குழப்பம் மேலிட எப்போதும் அறைக்கதவை தாளிட்டு அமர்ந்தபடி அல்லது படுத்தபடி குறைந்தது பத்து மணிநேரமாவது கழிக்கிறேன். அடிக்கடி குழந்தைகளும் அவரும் பசியுடன் தூங்குவதும் இரவில் பசியால் பாதித் தூக்கத்தில் எழுந்து எழுதுவதும் அவருக்கு வழக்கமாகி விட்டது. ஒருவேளை தினமும் ருசியாக நேரத்தோடு சமைக்கிற மனைவி அவருக்கு கிடைத்திருக்கலாம். அப்போது அவர் சந்தோஷமாக நிறைய செயல்படுவார் என்றும் அடிக்கடி தோன்றும் என்றாலும் செயலில் எதுவும் அவருக்கு உதவி புரிய முடிந்ததில்லை. எதுவும் வெறுப்பு கூட கிடையாது. வேறு காரணங்களும் இல்லை. நிறைய யோசித்த்தில் சமையல் செய்யலே. எனக்கு வெறுப்பாக இருப்பதை நான் உணர முடிந்தது. வீட்டிற்கு வருபவர்களும் கூட மெளனமாக சாப்பிட்டுச் செல்வதை சங்கடத்துடன் கவனிக்கையில் என்ன செய்யலாம் என்று தோன்றும். மிச்சமிருக்கிற பொழுதுகளையும் உருப்படியாக்க் கழிப்பதில்லை. நல்லவேளை எனக்கு பசியும் தூக்கமும் இல்லாமல் போய்விட்டது. இல்லையென்றால் நான் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் நாம் அதிகம் குதறிக்கொள்வதில்லை(வார்த்தைகளால்) என்று பாராட்டிக் கொள்கையில் எங்களுக்குள் சலிப்பும் அதிகம் இருக்கும்.

அந்த சிநேகமான நாட்கள், அன்பான வார்த்தைகள், உடல்களின் உணர்வுகள், குழந்தைகளின் கலகலப்பு எல்லாம் கவலையாய் உச்சகட்ட சந்தோஷமாய் இருந்தாலும் வேறு வழியில்லாமல் தான் எதிர்பார்த்ததை விட இப்படித்தான் நேர்கிறது என அவர் என்னை ஏற்றுக்கொண்ட விதம் எனக்கு மனதுக்குள் சம்மட்டி அடியாய் பதிந்து அவ்வப்போது செயலற்று போகச் செய்கிறது. கிராமத்தில் திருமணம் என்பதுதான் உச்சகட்ட சுதந்திரம் என்பதுபோல் அடிக்கடி பாட்டியின் பயமுறுத்தலில் கொஞ்சம் கனவுகளோடு இவருடன் வாழ தொடங்குகையில் இவரின் கணங்கள் என்னை அடிக்கடி அதிரவைக்கும். இத்தனை நாள் நான் சினிமாத்தனமான கனவில் வாழ்ந்திருக்கிறேன் என்றாலும் நிஜமான வாழ்க்கை அப்படியொன்றும் மோசமில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு மெளனம் அதிர்கிறது எங்களுக்குள். வேறுவேறு திசைகளில் வளர்ந்து தனித்தனியாய் கனவு கண்டு கனவு கலைந்து மிரளும் குழந்தையாய் தொடங்கிய வாழ்க்கை தொடர்ந்த சிக்கலோடு இன்னும் தொடர்வது எங்கள் இருவருக்கும் ஆச்சர்யமான விஷயமாகவே படுகின்றது. நிச்சயம் இருவரும் இருவரின் மீதும் அன்பாக இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லை. கடமைக்காகவும் இல்லை. பின் ஏன் சேர்ந்து வாழ்தல் தொடர்கிறது. தனியான வாழ்க்கை குறித்து இருவருக்கும் யோசனை உண்டு என்றாலும் அது பற்றி அக்கறை இல்லாமலேயே முரண்பாடுகளோடும் அவரவர் தனிமையில் வாழ்க்கை தொடருகிறது. ஏன் நீ காதலிக்கவில்லை வேறு ஏதேனும் வாழ்க்கை அமைந்திருந்தால் நன்றாயிருந்திருப்பாய் என பரஸ்பரம் கேட்டபடியும் உணவருந்த நேர்கிறது. என்றாலும் தன்மேலேயே தனக்கு காதல் இல்லாதபோது உடல் என்ற ஒரு உணர்வே இல்லாமல் மெளனமாகும் போது சமூகத்தின் புத்திமதிகள் குறித்து வேதனையே மிஞ்சுகிறது இருவருக்கும். கல்யாணப் பத்திரிக்கையில் அவரின் எம்.எஸ்.ஸி குறித்து என்னை ஆச்சர்யமாய் கேள்வி கேட்ட டீச்சரை அடிக்கடி நினைக்கிறேன். எப்படி அன்பேயில்லாமல் உன் தோழிகளிடம் கூட பேசிப் பழக முடியாத நீ இவரைக் கல்யாணம் செய்து கொள்வாய் என்று. ஆனாலும் அது சாத்யமாகியிருக்கிறது. வெறுப்பும், கோபமும், காமமும் எல்லாம் அடங்கியபின் அமைதியாய் நேரத்தை தனியாய் கழிக்க தோன்ற வைத்திருக்கிறது. இது இப்படியே நீள்வதில் உனக்கெதும் தடையுளதோ என்று அடிக்கடி அவரைக் கேட்க நீதிபதியாய் சிரிக்கிறார். நீதிபதிகள் சிரிக்கக் கூடாதா என்ன. எங்கோ நிலைத்த பார்வை, எதிலும் லியிக்காத மனம் என்று இருந்தாலும் என்னவோ எல்லோருக்கும் ஏதாவது பதில் சொல்ல நேர்வது என்னவோ போல் இருக்கிறது. குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருப்பது மனசைத் தொலைத்து காசைப் பத்திரப்படுத்துவது காசு சம்மந்தப்பட்ட விஷயங்களில் குரூரமாக இருப்பது எல்லாவித தேவைகளையும் இயந்திரத்தனமாய் காப்பி அடிப்பது எல்லாமே ஏன் நிகழ்கிறது, என்று தோன்றும். நாம் நமக்குத் தோன்றினால் போலத்தான் இருக்க முடியும். பொம்மைக்கு நாம் உடுத்தினாலும் அது உடுத்தாது. அதுபோல்தான் மனசும். எல்லாவற்றையும் மீறி எனக்கான அறையும் எங்களுக்கான வீடு என்ற ஒன்றும் இனிமேல் ஏதோ ஒன்றைக் காட்டி அதோ பாரு பூச்சாண்டி நீ சாப்புடுலே அது கிட்ட விட்டிருவேன் என்று அடி வைக்கும் பெண்ணாய் பயமுறுத்துவதாய் தோன்றுகிறது. இன்னும் எத்தனை விஷயங்கள் இந்த வீடு முரண்பட வைக்கும் அல்லது ஒற்றுமையாய் வளர வைக்கும் என்று யோசனையில் தொடர்கிறது காலையும், மாலையும். மீண்டும் மீண்டும் தொடரும் மாணவ, மாணவிகள் பள்ளிகள் சினிமா, அரசியல், பத்திரிக்கைகள், சமையல், பணம் எதிலும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதால் எனக்கு சமீபத்தில் ஒரு அலார்ட் நெற்றியில் ஒட்டிக் கொண்டது. கவலை கொள்ளாமல் மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிற நிம்மதியில் இயல்பாய் இருக்க முடிகிறது. கவிதை எழுதுகிறாளாம் ஏண்டி எவ்வளவு சம்பாரிச்சே உறவினரின் கிண்டல்கள். பூங்காற்று திரும்புமா எனக்காக கேட்கத் தோன்றுகிறது. இது என்ன அசட்டுத்தனம். எதையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றது மனசு. விநோதமாகவும், கிண்டலாகவும் மறைமுகமாக சிரித்தபடியும் எல்லோரும் கேட்டார்கள். என்ன நீ இரவுகளில் உறங்குவதில்லையாமே என்று கேள்விகளின் குரூரங்கள் புரிந்துகொண்டு நிதானமாக சொல்கிறேன் ஆமாம் என்று. இயல்பாய் வருகிற தூக்கம் இல்லாமலே ஆகிவிட்டபிறகு இதை வெளியில் கொச்சைப் படுத்துகிறார்கள் என்று மனசுக்குள் அழ நேர்ந்திருக்கிறது. தூக்கம் என்ற சொல்லின் அர்த்தத்தை கொச்சைப்படுத்தி என்னையும் கேவலப்படுத்தி நானும் மெளனமாய் இறுக்கி உறவினர் வீடுகளில் தங்குவதை பெரும்பாலும் தவிர்க்கிறேன். கவிதை எழுதி அவமானப்பட்ட சூழ்நிலைகளும் நிறைய. அதில் ஒன்று ‘எனக்கு எதிரே நீ போனாலும்’ கவிதை எழுதி மாமாவிடம் காட்ட அவர் கொச்சைப்படுத்தியதும் எனக்குள் நான் குன்றிப்போனதும் கவிதையின் தவறான புரிதல் குறித்து எனக்கு எச்சரிக்கையூட்டியது. அப்படியானால் அது என்ன எழுதித் தொலைக்க என்று மனசைக் கேட்க உனக்கு தெரிந்ததை நீ எழுதியபடியிரு என்று சொன்னது. இன்னொரு விஷயம் எனது தினசரி வேலைகளின் ஒழுங்கின்மை. எப்போது எதைச் செய்வது என்றில்லாமல் இருப்பது அடிக்கடி நான் கேலிக்குரியவளாக உறவினர் மற்றும் தெரிந்தவர் மத்தியில் பரவிய விஷயம். என்னை ஏன் என் இயல்பில் இருக்க விடமாட்டேன் என்கிறார்கள். எனக்கு எரிச்சல் தோன்றி சிரிப்போடு அவமானம் தாங்க கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பெண்களைப் பற்றி எழுதும் பெண் எழுத்தாளிகளின் என்னைப்பற்றிய வதந்திதான் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது. வீடு என்ற விஷயம் பத்து வருடங்களுடைய கனவை விழுங்கி என்னை பத்திரப்படுத்துகிறது. இதுவும் ஒரு எதிர்பார்ப்பின் தொனியில் தானோ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *