கடந்த ஒரு வருடத்தில், வழக்குமன்ற வளாகத்தின் பிரத்யேக இடமாக, பூவரசம்பூ உதிர்ந்து கிடக்கும்மிந்த மேடை மாறியிருக்கிறது. இனி ஒரு போதும் இந்த ஊருக்கோ இந்த வளாகத்திற்கோ இந்த மரநிழலில் மணிக்கணக்கில் அமர்ந்து புதினம் வாசிப்பதற்கான சூழ்நிலையோ வரப்போவதில்லை. தூரத்திலிருந்து அழைக்கும் ஒவ்வொரு குரலுக்கும் தலையுயர்த்தி திரும்பிப் பார்த்து தனது முறைக்கான அழைப்பிற்குக் காத்திருக்கும் அவஸ்தை இனியில்லை. சரத்துகளும், உடன்படிக்கை அறிக்கைகளும் ஒப்படைக்கப்பட்டு விட்டன. மனமொத்து பிரிந்த மணமுறிவுக்கான ஒப்பந்தத்தை நான்காவது முறையாக மீண்டும் நிதானமாக வாசித்தான். எழுத்துகளால் விளக்கவியலாதொரு கசப்பு வரிகளுக்கிடையில் ஊர்ந்து கொண்டே வந்தது. இறுதியாய் ஒரு முறை இந்தப் பிரதேசத்து தேநீரை சுவைக்க விரும்பியவன் சரத்துகளை மடித்து கைகளில் பிடித்தபடி, எதிர்ப்புறம் இருந்த தேநீர் கடைக்குச் சென்று, கடை வாசலில் எதிர்வெயிலை வெறித்துப் பார்த்தபடி நின்றான்.
மலையடிவாரத்தில் இருக்கும் அந்த ஊருக்கு முதன்முதலில் அவன் வந்த நாளை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாய் இருந்தது. பிறந்து முதலே பெருநகரத்து நெருக்கடியோடும், இடைவிடாத கூச்சலோடும் வாழந்து வந்தவனை, தெற்கத்திப் பகுதியிலிருக்கும் அறிமுகமில்லா அந்த ஊருக்கு அழைத்து வந்ததன் பெயர் தான் விதியோ என்னவோ. முந்திய ஆண்டு புதிதாய் பிறந்த மாவட்டத்தின் தலைநகராக இருந்தாலும் கிராமத்தின் இயல்புகளை தன்னுள்ளே இன்னும் பொதிந்து வைத்திருந்தது அந்த ஊர். நகரத்தின் அடைசல்களில் தனியனாய் சுழன்று திரிந்தவனுக்கு அமைதியான சூழ்நிலையில் மெதுவாய் நெட்டி முறித்து ஊர்ந்து செல்லும் அந்த ஊர் மனதுக்கு இதமாய் தோன்றியது. மூன்று மாதங்கள் அங்கே தங்கியிருக்கப்போகிறோம் என்ற உணர்வே அவனுக்கு உற்சாகத்தையும் மனநிறைவையும் தந்தது. வேலையும் பெரிய அளவில் இல்லை. புதிதாக அமைந்த ஆட்சியர் அலுவகத்தில் கோப்புகளில் ஒழுங்குமுறை பயன்பாடு தொடர்பாக அங்குள்ள அலுவலர்களுக்கு சில பயிற்சிகள் அளிக்கும் குறுகிய கால சிறப்புப் பணிக்காக அங்கே அனுப்பப்பட்ட்டிருந்தான்.
சிறப்புப் பணி முடித்து, ஊருக்குத் திரும்பிய ஒரு வாரத்திற்குள்ளாகவே மீண்டும் அங்கே செல்ல அழைப்பு வந்தது. இம்முறை அழைப்பு வந்தது, அந்த ஊரிலிருந்த ஒரு பெண் வீட்டாரிடமிருந்து. அவன் அங்கு இருந்த சமயத்தில் அவன் அறியாத வண்ணம் அவனது குணம், நடத்தை, பணி பாதுகாப்பு, சம்பளம், சொந்தபந்தம் ஒருவருமின்றி தனியாளாய் இருப்பது அனைத்தும் குறித்து விசாரித்திருப்பார்கள் போல. அலுவலகத்துக்கே ஆள் அனுப்பி விட்டார்கள். அவனும் அந்த ஊர் தந்த இனிய அனுபவத்தில் மனம் ஒத்துப் போய், நண்பர்களுடன் வந்து பெண் பார்த்து, பெண்ணும் பிடித்துப் போய், பெரிய அளவில் சம்பிரதாயங்கள் ஏதுமின்றி எளிமையாய் திருமணமும் செய்து கொண்டான்.
திருமணமாகி வீடு பிடித்து தனிக்குடித்தனம் சென்றவுடனேயே தெரிந்து விட்டது. அவளால் அந்தப் பெருநகரத்து அடுக்கக வாழ்க்கைக்கு தன்னை பொருத்திக் கொள்ள முடியவில்லை என்று. அவனும் எவ்வளவோ இளக்கங்கள் கொடுத்துப் பார்த்தும் அவளால் நிறை சேர்க்க முடியவில்லை. திருமணமான முதல் மாதமே அவள் மசக்கையாகிவிட அவர்களுக்குள்ளான புரிதல், மலர்வதற்கு முன்பாகவே கருகத் துவங்கியது. விளைவு, தன்முனைப்பு போட்டிகளும், எதற்கெடுத்தாலும் எதிர்வாதமும் என வாழ்க்கை போர்க்களமாக மாறியது. தென்றல் வருட வளர்ந்த அவளால் அந்த நகரத்துப் புழுக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. காயப்படுத்தும் சொற்களை சரளாமாக வீசிப்பழகியவன், வார்த்தைகளை எவ்வளவு குறைத்த பொழுதும் அவற்றின் வெம்மையை அவளால் தாங்க முடியவில்லை. எனவே அவனை குற்றவுணர்ச்சியில் தள்ள புதுப்புது காரணங்களை தானாகவே புனையத் துவங்கியவள், அந்தப் பெருநகரிலிருந்து தன்னை விடுவித்து கிராமத்திற்குள் தஞ்சம் புக எத்தனிக்கும் முயற்சியிலேயே இருந்தாள். அவனும் சிறிது நாட்கள் பிறந்தவீட்டில் இருந்தால் சரியாகி விடுவாள் என்று நினைத்து, அவளை கிராமத்தில் கொண்டு விட்டு விட்டு வந்தான். ஆனால் அவள் மீண்டும் ஒரு போதும் நகரத்திற்குள் வர மாட்டேன் என்று உறுதியாய் சொன்ன போது, அது வரை பிரியமாய் இருந்த அந்த ஊரின் மீதே அவனுக்கு வெறுப்பு வரத்துவங்கியது.
வேலை மாற்றலாகி அந்த ஊருக்கே வந்து நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று அவள் சொன்ன யோசனை, அவனது தன்மானத்தை உரசிப்பார்க்க, அதற்கான வாய்ப்பு ஒரு போதும் இல்லை என்று அவனை உறுதியாக சொல்ல வைத்தது. அவளும் தனது பிடியை மேலும் இறுக்க, இருவருக்குமே மூச்சு முட்டத் துவங்கியது. ஒரு கட்டத்தில், தற்பொழுது இருக்கும் நிலையில் அவள் மீண்டும் நகரத்திற்கு வரப்போவதில்லை என்பதை உணர்ந்தவன் தற்காலிக ஏற்பாடாக, குழந்தை பிறக்கும் வரை அவ்வப்போது வந்து அவளைப் பார்த்துக் கொள்வதாகவும், குழந்தை பிறந்தவுடன் அவள் தன்னுடன் கட்டாயம் வந்தாகவேண்டும் என்றும் உறுதி செய்தான். அவளும் பிறகு அந்த சூழ்நிலை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று குடும்பத்தினர் சொன்ன யோசனையின் படி சரியென சம்மதித்தாள். சில காலம், ஒழுங்கு இடைவெளியில் வந்து கொண்டிருந்தவன், வேலைப்பளு காரணமாகவும், அலுப்பின் காரணமாகவும், அவளது பிடிவாதத்தின் எரிச்சல் காரணமாகவும் தனது வருகையை குறைத்துக் கொண்டான். போதாத குறைக்கு, அவளது வீட்டாரின் மரியாதைக்குறைவான நடத்தையும், வீட்டோடு மாப்பிள்ளை என்று மறைவில் பேசும் எக்காளமும் அவனை விரக்தி கொள்ளச்செய்தன.
அவனது வரத்து அநேகமாக அருகிவிட்ட சமயத்தில், அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தத் தகவல அவனைச்சேரவே ஒரு வாரம் ஆகியது. பெண்பிள்ளையின் வரவை கேட்டு, ஆவலுடன் ஓடி வந்தவனுக்கான மரியாதை உவப்பானதாக இல்லை. அந்த ஊரின் பனிக்காற்று அவனை ஊசியால் தொடர்ந்து குத்தத் துவங்கியது அன்றிலிருந்து தான். முள்ளின் மீதான படுக்கையாய் அந்த ஊரின் நினைவு அவனை எப்பொழுதும் உறுத்தத் துவங்கியது. குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் அவனுடன் வர வேண்டுமென்ற அவனது கோரிக்கையும் எந்தவித சமாதானுமின்றி முற்றாக நிராகரிக்கப்பட்டது. குடும்ப வாழ்வில் தனக்காகப் பேச ஒருவரும் இல்லை என்ற நிதர்சனம் அவனை சுட்டது. தனியனாய் தவித்துக் கிடந்தவனுக்கு அதன் பின், பிள்ளைப் பாசத்தையும் மீறி, அவனுக்கு அந்த ஊரின் மீதும் அவளின் மீதும் அமில ஊற்றாய் வெறுப்பு ஊறத்துவங்கியது. அதற்கேற்றாற் போல, அவனது ஊழ்பயனோ என்னவோ, நகரத்தில் அவனுக்கு இன்னொரு தொடுப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் தான் அவன் மனைவியையும் குழந்தையையும் பார்க்க வருவதேயில்லை எனவும் அவளுக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. கணவன் மனைவிக்குள்ளான பேச்சு வார்த்தையோ, தொடர்போ அற்றுவிட்ட நிலையில் அவளும் அதனை நம்பத் துவங்கினாள். நாட்கள் செல்லச்செல்ல அவன் தனக்குத் தேவையில்லை என்ற நிலைக்கு அவள் வந்தாள்
சபிக்கப்பட்ட ஒரு தினத்தில், அவனிடமிருந்து தனது வாழ்வை விடுவித்துக் கொள்வதற்கான விவாகரத்துக்கோரிக்கையை அவளிடமிருந்து தபாலில் பெற்றான். தனக்கும் அவளுக்கும் இடையேயான சேணிலை உணர்வாட்சி ஒரு போதும் நிகழவில்லை என்று நம்பியிருந்த அவன், இனியும் அதற்கான வாய்ப்பு ஏற்படப்போவதில்லை என உணர்ந்து தானும் சம்மதம் தெரிவித்து பதில் அறிவிப்பு வெளியிட்டான். காலம் மிக சிறந்த விளையாட்டை விரும்பாத மைதானத்தில் வைத்தே நிகழ்த்த விரும்பியது. எந்த ஊருக்கு இனி ஒரு போதும் வரக்கூடாது என்று நம்பியிருந்தானோ, அங்கேயே அவர்களுக்கான விவாகரத்து வழக்கு பதியப்பட்டது. விசாரணை வரும் போதெல்லாம், அவன் நேரில் வந்தாக வேண்டிய கட்டாயம். வேண்டா வெறுப்பாக, வழக்காடு மன்றத்தின் வளாகமே கதியென இருந்துவிட்டு திரும்பிச் சென்றுவிடுவான்.
இன்று இந்த ஒரு வருடத்துக் மேலான அலைக்கழிப்பில் இருந்து விடுதலை. இனி ஒரு போதும் இந்த ஊரின் திசை நோக்கித் திரும்ப வேண்டியதில்லை என்று நினைத்தவன், கடைசி முறையாக அந்த பிரதேசத்துத் தேநீரை சுவைக்க விரும்பி அருகிலிருந்த தேநீர்க்கடைக்குச் சென்றான். அந்தி சாயும் வெயிலை வெறித்துக் கொண்டிருந்தவன், தேநீர் வந்ததும் ஆவி பறக்கும் கண்ணாடிக் குவளையில் உதடு பதிக்கையில், தூரத்தில் “அப்பா” என்ற குரல் ஒலிப்பதை உணர்ந்தான். குரல் கேட்ட திசையில் தன்னிச்சையாய் திரும்பிப் பார்த்தவன், அது தனக்கானதில்லை என்று உணர்ந்த நொடி, உயர்ந்த தலையைத் தாழ்த்தி தேநீர் குவளைக்குள் முகத்தை அமிழ்த்துக் கொண்டான். தேநீர் லேசாக உப்புக் கரித்தது.
– மே 2014
superb