மஞ்சனாத்தி மலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,223 
 
 

எங்களுக்கு கேரளாவில் மஞ்சனாத்தி மலை என்ற இடத்தில் மிளகுக் காடு இருந்தது.

அமராவதி பாலத்தில் இருந்து மஞ்சனாத்தி மலைக்கு கால் வலிக்க அம்மா பின்னால் நடந்து போன காலங்களில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். இந்த வழிப் பயணத்தில் மூன்று மைல் தூரம் காட்டுக்குள்ளே நடந்து போக வேண்டும். அரிசி, பருப்பு, வீட்டுச் சாமான்கள் என்று அதிக சுமை எடுத்துச் செல்ல வேண்டியிருந்ததால், நடக்கச் சிரமமாக இருக்கும் என்று குமுளி போய், அங்கே இருந்து வேறு பஸ் மாறி மஞ்சனாத்தி மலைக்குப் போவோம். அன்றும் அப்படி அதிக சுமை இருந்ததால்… நானும், அம்மாவும், அப்பாவும், பஸ்ஸில் பயணம் செய்தோம்.

அமராவதி பாலத்தைத் தாண்டியவுடன் குமுளியை நோக்கிச் செல்லும் சாலையில் வளைவுகள் தொடங்கிவிடும். அடுக்கடுக்கான வளைவுகள் நிறைந்த அந்த சாலையை மலையில் தூரமாக நின்று வேடிக்கை பார்க்க அழகாக இருக்கும். மலைப் பாதைகளில் பயணம் செய்யும்போது, நெஞ்சடைத்து உடல் விறைத்துக்கொள்ளும். வளைவின் விளிம்புகளைக் கடக்கும்போது, உயிர் மேலே ஏறிக் கீழே இறங்குவதைப்போல உடல் நடுங்கும். ஒவ்வொரு முறை வளைவைக் கடக்கும்போதும், கீழே இறங்கும் வளைவைப் பார்க்கக் கூடாது என்று சத்தியமாக மனதில் நினைத்தாலும், கலக்கத்துடன் ஏதோ ஓர் ஆர்வம் தொற்றிக்கொள்ள… வளைவைப் பார்த்துவிடுவேன். அவ்வளவுதான்… பூமியே இருண்டுவிடும் அளவில் கண்ணைக் கிறக்கிக்கொண்டு வரும். கண்ணை இறுக்க மூடிக்கொண்டு, வாயில் ஒரு கையும் வயிற்றில் ஒரு கையுமாகவைத்து தலையைக் குனிந்துகொள்வேன். வாந்தி எடுப்பதற்கு வசதியாக எப்போதும் ஜன்னலோர இருக்கையை அப்பா பிடித்துவிடுவார்.

வயிற்றைக் குமட்டிக்கொண்டு அடிவயிற்றில் இருந்து ஒரு வேகம் தொண்டையைக் கிளப்பி வெளிக் கொண்டுவரும் உணர்வு, என் வாழ்வில் இருந்து மறைந்துபோனால் எவ்வளவு நன்றாக இருக்கும். தலை கிண்ணென்று, வாய் புளித்து, வயிறு கலங்கி இப்படி ஒரு பயணத்தை எவரும் வெறுக்கத்தானே செய்வார்கள். பெரும்பாலும் அந்தப் பயணங்களில் என் வாயில் இருந்து வெளிவரும் புளிப்பான வாந்தியும், காற்றின் வேகத்தோடு எங்களுக்கு எதிர் திசையில் பயணம் செய்யும். மயில் இறகைப்போன்ற சிறு தீண்டலிலேயே புத்துணர்ச்சியைக் கொடுத்து விடும் வலிமை மலைக் காற்றுக்கு எப்படி வந்ததோ தெரியவில்லை. வாந்தி எடுத்த அடுத்த விநாடியே, குளிர்க் காற்று முகத்தில் அடித்ததும் தலைசுற்றல் நின்றுவிடும். வயிறு பாரம் நீங்கி, இயல்பு நிலையில் மனம் குதூகலிக்கும். குமுளி யில் பஸ் நின்றதும் அப்பா வாங்கிக் கொடுக்கும் பால் போண்டா, இனிப்பு சேகுவை நினைத்தால் வாயில் எச்சில் ஊறும்.

குமுளியை அடைந்ததும் மஞ்சனாத்தி மலைக்குச் செல்லும் பஸ் அன்று உடனே வந்துவிட்டதால், அப்பா எனக்கு எதுவும் வாங்கிக்கொடுக்காமல் அவசரமாக பஸ்ஸில் ஏறிவிட்டார். அம்மா, அப்பா இருவரிடமும் பேசாமல் பூனையைப்போல் ஒடுங்கி முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டேன். மஞ்சனாத்தி மலை நிறுத்தம் வந்ததும், இறங்கி எங்கள் காட்டுக்கு நடந்து போகும் வழியில் இருவரிடமும் பேசாமல், நான் மட்டும் இடைவெளிவிட்டுத் தனியே நடந்து போனேன். “சீக்கிரம் வா” என்று சொல்லிக்கொண்டே அம்மா, அப்பாவின் பின்னால் நடந்தார். தலையில் சுமை இருந்ததால், அம்மாவால் திரும்பிப் பார்க்க முடியவில்லை. வேண்டும் என்றே, மிக மெதுவாக நடந்து போனேன். அவர்களின் தலை மறைந்ததும், ஆள் இல்லாத காட்டில் நான் மட்டும் தனியே நடந்து வருவதைப்போன்று பிரமை ஏற்பட்டது. உடனே பயம் வந்து ஒட்டிக்கொள்ள… வேகமாக அப்பாவை நோக்கி முன்னே ஓடினேன்.

ஜேம்ஸ் வீட்டைக் கடந்துதான் எங்கள் மிளகுக் காட்டுக்குப் போக வேண்டும். அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் ஊற்றுக் குழியில் இருந்து, அவனும் அவன் அம்மாவும் குடி தண்ணீர் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் வரும் அரவம் கேட்டதும், ஊற்றுக்குள் இருந்து ஜேம்ஸின் அம்மா எழுந்து பார்த்தார். என்னையே அறியாமல் என் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டு இருந்தது. ‘ஏன் பிள்ள அழுகுது?’ என்று அம்மாவைப் பார்த்து ஜேம்ஸ் அம்மா கேட்க, ‘அவளுக்குக் கால் வலிக்குதாம்’ என்று சொன்னது. ஜேம்ஸ் நான் அழுவதைப் பார்த்துச் சிரித்தான். அது இன்னும் எனக்கு அழுகையைக் கூட்டியது. ஜேம்ஸ் அம்மா என்னை சாப்பிடவெச்சு அனுப்புவதாகச் சொல்லி, என்னை அவர்கள் வீட்டுக்குக் கூட்டிப் போனார்கள். ஒன்றிரண்டு ஓட்டு வீடுகளும், தகர வீடுகளும் தவிர, போதைப் புல்லும், வைக்கோலும் வேய்ந்த கூரை வீடுதான் பெரும்பாலும் அங்கே இருக்கும். நீல வர்ணம் பூசிய ஜேம்ஸின் வீடு, ஓடுகள் வேய்ந்து இரண்டு பக்கமும் அழகாகச் சரிந்து இருக்கும்.

ஊற்றின் மேல் நின்றதால் சகதியாகிப்போன என் செருப்பை, கல் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்துக் கழுவினேன். என் காலில் இருந்து வழிந்த தண்ணீர் அவர்கள் வீட்டு வாசலில் மேட்டோரமாக இருந்த சிவப்பு கலர் தண்டங் கீரைச் செடியை நோக்கிப் பாய்ந்து ஓடியது. என்னை ஜேம்ஸ் அம்மா வீட்டுக்குள் கூட்டிப் போனார். அவனைப் பார்க்க எனக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால், அவர் அம்மாவின் அன்பில் அவன் மீதான எரிச்சல் அடங்கியது. அவன் அம்மா எனக்கு ஒரு பீங்கான் தட்டில் வைத்து இடியாப்பத்தைக் கொடுத்தார். அவர்கள் வீட்டு கட்டங் காப்பிக்கு மட்டும் எப்படித்தான் அவ்வளவு ருசி இருக்கிறதோ? ரோஸ் கலர் பூ போட்ட பீங்கான் கப்பில் சாப்பிடுவதுதான் ருசிக்குக் காரணமோ என்னவோ?

சாப்பிட்டு முடித்ததும் கொல்லைப்புறத்தில் போய் பீங்கான் கப்பையும் தட்டையும் வைக்கப்போனேன். அங்கே ஜேம்ஸ் உட்கார்ந்து சாம்பல்வைத்துத் தேய்த்து மீனை உரசிக் கழுவிக்கொண்டு இருந்தான். அதைப் பார்த்ததும் அவனுக்கு மட்டும் எப்படித்தான் எல்லா வேலையும் தெரிகிறதோ என்று கோபமாக வந்தது. அவன் வீட்டில் சாப்பிட்டது எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. பாத்திரம் கழுவும் இடத்தில் கிடந்த பாத்திரங்களுக்கு நடுவே தட்டையும் கப்பையும் போட்டுவிட்டு, பின் பக்க வாசல் வழியாகக் கிளம்பினேன். ‘இதெல்லாம் யார் கழுவுவாங்க?’ என்று அவன் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, அவன் முகத்தைக்கூடப் பார்க்காமல் பாதை இறக்கத்தின் வழியே சறுக்கு விளையாடுவதைப் போல காலைத் தேய்த்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு ஓடினேன்.

அன்று முழுவதும் மேக மூட்டமாக இருந்தது. மாலையானதும் தூற ஆரம்பித்திருந்த மழை, பெரு மழையாகப் பெய்ய ஆரம்பித்தது. வானம் எங்கும் இடைவெளி இல்லாமல் மழை. ஆளரவமற்ற அந்த மலையில் பேய் இரைச்சலாக மழையின் சத்தம் மட்டும் விடாது ஒலித்துக்கொண்டு இருந்தது. எனக்குத் தெரிந்த தெய்வத்தின் பெயரெல்லாம் மனசுக்குள் சொல்லி மழையை நிறுத்தும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டேன். எந்தத் தெய்வமும் என் பேச்சைக் கேட்பதாக இல்லை. ஒருவேளை மழைச் சத்தத்தில் கேட்கவில்லையோ? கோடிக் கோடி வண்டுகள் ஒருசேர என் காதில் ரீங்காரமிடுவதைப்போன்ற ஓர் அசுர சத்தம்.

மின்னல் ஒன்று கண்ணைப் பறித்துவிடும் ஒளியில், ஜன்னல் வழியாக மின்னிச் சென்றது. அம்மாவே பயந்துபோய் ‘அர்ச்சுனன் பேர் பத்து’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது. அப்படிச் சொன்னால், மழையின் உக்கிரம் தணிந்துவிடும் என்று அம்மா சொன்னதுதான் தாமதம் என் வாய் அதைத் தவிர வேறு எதையும் முனங்கவில்லை.

யாரோ கதவைத் தட்டுவதுபோன்று ஓசை கேட்டது. “இந்நேரத்துக்கு யாரு கதவத் தட்றது?” என்று சொல்லி, அப்பா அரிக்கேன் விளக்கை ஏற்றிவிட்டு கதவைத் திறக்கப்போனார். பிளாஸ்டிக் கோணிப் பையைத் தலையில் போட்டபடி கதவுக்கு வெளியே ஜேம்ஸ் நின்று இருந்தான். அவன் கால்கள் மண்ணும் ஈரமுமாக சொதசொதப்பாக இருந்தன. ஈரம் நிறைந்த அவனது கைகளில் கயிறு கட்டிய ஒரு பாட்டில் இருந்தது. அப்பா அவனை உள்ளே இழுத்தார். அம்மா மண்ணெண்ணெய் வாங்கி வரச் சொன்னதாகச் சொன்னான். அம்மா சமையல்கட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து அவன் கொண்டுவந்த பாட்டிலில் மண்ணெண்ணையை ஊற்றி, ஜேம்ஸிடம் நீட்டியது. அவன் பாட்டிலைப் பிடித்தபடி வாசல் படியில் இறங்கினான். படியில் காலைவைத்த அடுத்த கணமே ஈரம் வழுக்கிவிட, அப்படியே சத்தத்துடன் கீழே விழுந்தான். அவனையே பார்த்துக்கொண்டு இருந்த நான், அவன் விழுந்ததைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்துவிட்டேன். அவன் கையில் இருந்த பாட்டில் உடைந்து சிதறியது. அவன் அழுதபடி எழுந்து அங்கே இருந்து ஓடினான். அவன் காலையில் என்னைப் பார்த்துச் சிரித்ததற்கு நான் அவனைப் பார்த்துச் சிரித்ததும்தான் மனம் லேசாகியது. அம்மா என்னைத் திட்டிவிட்டு அவனைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டது. அவன் மழையில் இறங்கி, திரும்பிப் பார்க்காமல் ஓடினான்.

அடுத்த நாள் பள்ளிக்கூடம்விட்டு வரும் வழியில் அவனைப் பார்த்ததும் எனக்கு அவன் விழுந்ததை நினைத்து சிரிப்பு வந்தது. கடுங்கோபமானவன் என் அருகில் வந்து தலையில் பலமாகக் கொட்டிவிட்டு ஓடினான். நான் அழுதபடி அவன் வீட்டுக் குச் சென்று அம்மாவிடம் சொன்னதும், அவனை என் கண் முன்னே முதுகில் அடித்தது. அவன் அழாமல் அடியை வாங்கியபடி என்னைப் பயமுறுத்துவதைப் போல் முறைத்தான்.

ஜேம்ஸிடம் செவலை நிறத்தில் காட்டு ராஜா என்ற நாய் இருந்தது. காட்டு ராஜா புதருக்குள் நகரும் அசைவைக்கண்டு எப்போதும் குரைத்துக்கொண்டே இருக்கும். சமயத்தில் முயலைக்கூட அந்த நாய் கவ்விவிடும். அதனாலேயே, அவனைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். அன்று விடுமுறை நாள். அவன் ரீஜா மேரி, கள்ளி சுப்பு, சிவா, வசந்தி இன்னும் நிறையப் பேருடன் வேட்டைக்குக் கிளம்புவதைப்போல் காட்டு ராஜாவுடன் காட்டுக்குள் செல்லத் தயாராக இருந்தான். நானும் அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டேன். என்னைப் பார்த்ததும் கோபமாகி, “அவ வந்தால், நான் வரவில்லை” என்று கோபித்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானான். உடனே மற்ற பிள்ளைகள் எல்லாம், என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் மரத்தின் அடியில் இருந்த பகவதி அம்மன் கோயிலில் தனியாக அமர்ந்து சொட்டாங்கல் விளையாடிக்கொண்டு இருந்தேன். அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என்று பார்த்துக்கொண்டே இருந்தேன்.

அவர்கள் காட்டில் கிடைத்த நிறையப் பொருள்களுடன் திரும்பி வந்தார்கள். மாம்பழம், அன்னாசிப் பழம், கொய்யாப் பழம்போன்ற பழ வகைகளையும், பறவையின் சிறகுகள், காக்காச் சிப்பிபோன்ற விளையாட் டுப் பொருள்களையும் கொண்டுவந்தார்கள். பங்கு போட்டுக்கொள்ள எல்லாவற்றையும் தனித் தனியாக கூறுகட்டி வைத்து இருந் தார்கள். நான் மட்டும் அவர்களிடம் இருந்து தனித்து விடப்பட்டு இருந்தேன். எனக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. நொடிப் பொழுதில் மனதில் ஏதோ ஒரு வேகம் வந்தது. அவர்கள் கூறுகட்டி வைத்திருந்த பொருள்களின் மேல் மிகப் பெரிய சத்தத்தை எழுப்பியபடி விழுந்து புரண்டு நசுக்கினேன். அதை எதிர்பார்க்காத அவர்கள் திகைத்துப் போய் நின்றார்கள். எல்லாப் பொருள்களையும் நாசம் செய்துவிட்டு, அங்கே இருந்து எழுந்து ஓடினேன். ஜேம்ஸ், காட்டு ராஜாவை என்னை நோக்கி ஏவிவிட்டான். நான் புயல் வேகத்தில் வீட்டை நோக்கி ஓடி ஒளிந்துகொண்டேன்.

கொஞ்ச நாள் யாரும் என்னுடன் பேசவில்லை. நான் அவர்களைப் பழிவாங்கும்விதமாக என் அப்பாவிடம் அழுது புரண்டு, ஒரு குட்டி நாயை வாங்கி ஜிம்மி என்று பெயர் வைத்தேன். அடுத்து, என்னுடைய நோக்கம் எல்லாம் என் நாயை வளர்த்து, காட்டு ராஜாவையும் ஜேம்ஸையும் கடிக்கவைக்க வேண்டும் என்பதாக இருந்தது. காட்டு ராஜாவைக் கண்டு ஜிம்மி பயப்பட்டாலும், குரைக்கவே செய்தது. ஆனால், ஜேம்ஸை விடாமல் விரட்டி விரட்டிக் குரைத்தது.

நான் பள்ளிக்கூடம் போகும்போது ஜிம்மியை அழைத்துக்கொண்டு போவேன். ஜேம்ஸும் காட்டு ராஜாவை அழைத்து வருவான். வழிஎங்கும் காட்டு ராஜாவும் ஜிம்மியும் ஒன்றைப் பார்த்து ஒன்று குரைத்துக்கொண்டே வரும். காட்டு ராஜா எங்கே ஜிம்மியைக் கடித்துவிடுமோ என்ற பயத்தில் நான் எப்போதும் ஜிம்மியை என் கையைவிட்டு விலக்குவதே இல்லை.

துறுதுறுவென்று இருந்த என் ஜிம்மிக்கு ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அப்பாவிடம் சொன்னேன். அப்பா வேலை மும்முரத்தில் அதைக் கவனிக்காமல் விட்டு விட்டார். ஜிம்மிக்கு இன்னும் மோசமானது. என்னால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில், பகவதி அம்மனிடம் ஜிம்மி குணமாக வேண்டும் என்று அழுதபடி வேண்டிக்கொண்டேன். அங்கு வந்த ஜேம்ஸ் என்னைக் கடிக்குமாறு காட்டு ராஜாவை ஏவிவிட்டான். நான் பயப்படாமல் அமைதியாக அவனையும் காட்டு ராஜாவையும் பார்த்தேன். நான் பயப்படாததைக் கண்டதும், காட்டு ராஜாவைத் திசை திருப்பி, ஜிம்மி மீது ஏவிவிட்டான். ஜிம்மி திரும்பக் குரைக்காமல் இருந்ததும் என்னைப் பார்த்தான். நான் சத்தமின்றி அழுதுகொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு, காட்டு ராஜாவை அடக்கினான். என் அருகில் வந்து பயத்தோடு என்னவென்று கேட்டான். ஜிம்மிக்கு உடம்பு சரியில்லை என்றேன். உடனே, ‘கவலைப்படாதே, மஞ்சனாத்தி மெயின் ரோட்ல ஒரு டாக்டர் இருக்கார். அங்கே ஜிம்மியைக் கூட்டிப் போகலாம்’ என்று சொல்லி, என்னையும் ஜிம்மியையும் அழைத்துப் போனான். என்னால் அவனை நம்பவே முடியவில்லை. இருந்தாலும், ஜிம்மியின் பொருட்டு அவன் பின்னால் போனேன்.

டாக்டர் ஜிம்மிக்கு மருந்து கொடுத்ததும் அது சரியாகிவிட்டது. அதன் பின் நான் ஜேம்ஸிடம் முகத்தைக் காட்டவில்லை. அவனைப் பார்த்ததும் சிரித்தபடி முகத்தை வைத்துக்கொண்டேன். அவனும் என்னைப் பார்த்துச் சிரித்தான். ஆனால், ஜிம்மியும் காட்டு ராஜாவும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தன.

அதன் பின், ஜேம்ஸ் எல்லா விளையாட்டிலும் என்னைச் சேர்த்துக்கொண்டான். சர்ச்சுக்கு அழைத்துப் போனான். சர்ச்சின் மணியோசை எனக்கு விருப்பமானதாக இருந் தது. ஜேம்ஸின் அம்மாவைப்போல் நானும் என் கர்ச்சீப்பால் தலையில் முக்காடு போட்ட படி சர்ச்சுக்கு அவர்களுடன் சென்றேன். பள்ளிக்கூடம் போகும்போது இருவரும் சேர்ந்தே போனோம். வழியெங்கும் சிரித்தபடி பல கதைகள் பேசிக்கொண்டே போவோம்.

என் வாழ்வில் அவனிடம் இருந்ததைப்போல யாரிடமும் அதற்கு முன் அவ்வளவு சிநேகிதமாக இருந்தது இல்லை. என் மனதில் இருந்த எல்லாக் கடுமைகளும் வெளியேறி, சந்தோஷமாக அவனோடு விளையாடித் திரிந்தேன். அவன் சேகரித்துவைத்து இருந்த எல்லா விளையாட்டுப் பொருள்களையும் எனக்குத் தந்தான்.

நானும் ஜேம்ஸும் சிநேகிதமானது, கள்ளி சுப்பு, சிவா, வசந்திக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் நானும் ஜேம்ஸும் விளையாடிக்கொண்டு இருந்தபோது, சுப்பும் சிவாவும் அவனைத் தனியாக விளையாட அழைத்தார்கள். அவன் வர மறுத்து என்னுடனே விளையாடினான். உடனே அவர்கள் கோபமாகி, ‘நீ எப்பஇருந்து பொட்டப்பிள்ளையா மாறிட்டே?’ என்று சொன்னதும், ஜேம்ஸுக்கு வெட்கமாகிவிட்டது. அவன் மருகிப்போனான். நான் அவர்களை அந்த இடத்தைவிட்டுப் போகச் சொல்லித் திட்டினேன். ‘இப்ப நீ எங்ககூட வரப்போறியா? இல்ல, பொட்டப் பிள்ளையாவே மாறப்போறீயா?’ என்று அவர்கள் கேட்டதும் ஜேம்ஸ் என்னைவிட்டு எழுந்து அவர்களோடு போகத் தயாரானான்.

நான் அவன் கையைப் பிடித்து இழுத்தேன். அவன் என் கையை உதற, நான் மேலும் இறுக்கிப் பிடித்தேன். அவன் கோபமாகி கையை வேகமாக இழுத்தான். நான் விட மறுத்து இழுக்க, அவன் மேலும் கையை உதற, நான் கீழே விழுந்தேன். அப்போதும் நான் அவன் கையை விடாமல் இருக்க, அவன் கையை இழுத்துக்கொண்டு நடந்ததால்… நானும் அவனோடு தரையில் உராசியபடி போனேன். கொஞ்ச தூரம் என்னை இழுத்துக்கொண்டு போனான். என் கையெல்லாம் உராய்ந்து காயமாகியது. வலி பொறுக்காமல் நான் கையை விட்டேன். அவன் என்னைத் திரும்பிப் பார்த்தான். நான் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினேன். சுப்புவும் சிவாவும் அவனை இழுத்துக்கொண்டு போனார்கள். அவனால் எனக்குக் கிடைத்த அத்தனை சந்தோஷத்தையும் அந்த நொடிப் பொழுதில் சுக்குநூறாக்கி அழித்துவிட்டு, அவர்களோடு போனான். நான் வெகுநேரம் அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டு இருந்தேன். அவன் என்னை விட்டுப் போனது ஏதோ இனம் புரியாத பயத்தைத் தந்தது. ஏன் அவன் அப்படிச் செய்தான் என்று எனக்கு விளங்கவே இல்லை. அவன் என்னோடு சிநேகிதம் ஆகாமல் எப்போதும்போல் சண்டைக் காரனாக இருந்து இருந்தால், அந்த வலி இருந்திருக்காது.

அதற்குப் பின் வந்த நாளில் நான் வலிந்து அவனிடம் போய்ப் பேசியும், அவன் என்னிடம் பேச மறுத்து ஓடினான். ஜிம்மியும் காட்டு ராஜாவும் வன்மத்துடன் குரைத்துக்கொள்ளாமல் சிநேகபாவத்துடனேயே பார்த்துக்கொண்டன. அதன் பின் நான் சர்ச்சுக்குப் போகவே இல்லை. அது வேறு எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது.

படிப்பு, மேலும் எங்களைப் பிரித்தது. நான் ஆறாம் வகுப்பு போகத் தயாரானதும், என்னை அப்பா வேறு ஊரில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்க அனுப்பிவிட்டார். ஜேம்ஸ் மஞ்சனாத்தி மலையிலேயே படித்தான். நான் விடுமுறைக்கு மஞ்சனாத்தி மலைக்குத் திரும்பி வரும்போது அவனைப் பார்த்துச் சிரித்தாலும், அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனான்.

அவன் மேல் எனக்கு இருந்த அன்பு அப்படியேதான் இருந்தது. ஆனால்… அவனோ என்னில் இருந்து தூரமாகி ஓடி ஒளிந்துகொண்டான்!

– நவம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *