ப்ரியாவின் விபத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 5,887 
 
 

அது ஒரு ஆவணி மாதத்து வெள்ளிக்கிழமை. வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த ப்ரியா, அவசர அவசரமாக சமையல் வேலைகளை முடித்துவிட்டு, வெளியில் புறப்படத் தயாரானாள். நானும் வருகின்றேன் என்று அடம்பிடித்தான் ஏழு வயதான மகன். இதோ அரை மணித்த்கியாலத்தில் வந்து விடுகின்றேன் என்று சொல்லி அவனை சமாதானப் படுத்திவிட்டு, வாசலில் நின்ற சுசுக்கி இக்னிஷ்( Suzuki ignis) மகிழூந்தை (CAR) எடுத்துக்கொண்டு பக்கத்து தெருவிலிருந்த கடைமாளிகை( shopping mall ) நோக்கி விரைந்தாள், ப்ரியா.

நாளைக்கு சனிக்கிழமை. நீண்ட நாட்கள் பழகிய குடும்ப நண்பர் ஒருவருடைய மகளுக்கு பதினெட்டாவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அழைப்பு விடுத்திருந்தார்கள். வேலை, வீடு, பிள்ளைகள், இவற்றோடு கணவரின் நிறுவனக்கணக்குகளைப் பார்ப்பதில் ஒத்தாசை என்று என்னேரமும் பறந்து கொண்டே இருப்பவள் பிரியா. கொண்டாட்டங்களுக்கு புறப்படும் சமயங்களில்தான் தன்னை சற்று திரும்பிப் பார்ப்பதுண்டு. இன்றும் அப்படித்தான், தன் புருவங்களை நேர்த்தி செய்வதற்காக கடைமாளிகையில் இருக்கும் அழகு மாடம் ஒன்றில் நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்திருந்தாள். அதற்காகவே இந்த அவசரம்.

போன அலுவலை சட்டென்று முடித்துவிட்டு, வெளியில் வந்தவள் மகிழூந்தில் ஏறி இருந்தபோது பக்கத்து இருக்கையில் தொலைபேசியை அசட்டையாக வைத்துவிட்டு; மகிழூந்தை வீடு நோக்கிச் செலுத்தத் தொடங்கினாள். ஒரு நூறு மீற்றர் கடந்ததும் தொலைபேசி அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருப்பதைக் கண்டு, ஒருவேளை விழுந்துவிடக்கூடும் என எண்ணினாள்.

ஒரு கையில் மகிழூந்தின் திசைமாற்றியை (steering) பிடித்துக்கொண்டு மறுகையால் தொலைபேசியை எடுக்க முயற்சித்தாள். அந்த ஒரு வினாடி அவள் பார்வை கீழ் நோக்கிப் பார்த்ததுதான் நினைவிருகின்றது. அடுத்த நொடி என்ன நடந்ததென்று நினைவில்லை.

தலையை முன்புறமாக இழுத்து அடித்து ஓர் அதிர்வை ஏற்படுத்தி; சட்டென்று மகிழுந்து நின்றபோது தலையை மெல்லத்தூக்கிப் பார்க்கிறாள், ப்ரியா. எதிர்த்திசையிலிருந்து வந்த லாண் ரோவர் ( Land Rover) என்ற மகிழூந்தோடு மோதியதில் அதன் ஓட்டுனர் சத்தமிட்டு “கீழே இறங்காதே அப்படியே இரு” என்று ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டு தனது மகிழூந்தைவிட்டு இறங்கி தனது தொலைபேசியில் சம்பவ இடத்தைச் சுற்றிச் சுற்றி காணொளி எடுத்துக்கொண்டிருந்தான். அங்கு என்ன நடக்கின்றது என்பதை சுதாகரிப்பதற்கு சற்று நேரம் தேவைப்பட்டது அவளுக்கு.

அந்த வீதியில் முன்னும் பின்னும் வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துகள் சாரதிகளிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்து கொண்டிருந்தான்,அந்த ஓட்டுனர். ஒரு சில நிமிடங்கள் கழித்து ப்ரியாவிடம் வந்தவன் “உன்னிடம் காப்புறுதி இருக்கின்றதா?” என்றான். “ஆம்” என்று சொல்லிவிட்டு “கணவருக்கு தொலைபேசி எடுக்கின்றேன் சற்று பொறுத்திரு” என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு, கணவரிடம் தொலைபேசியில் நடந்தவற்றை நாசூக்காக எடுத்தியம்பிவிட்டு, அவன் வருகைக்காக காத்திருந்தாள். அதற்குள் உந்துகளை நகர்த்தி வழிவிடுமாறு கார்ண்( horn) அடித்துக்கொண்டிருந்தார்கள் முன்னும் பின்னும் வந்து நிறுத்திவைத்துக்கொண்டிருந்த உந்துகள் ஓட்டுனர்கள்.

“தவறு உன்னுடையது என்று ஒத்துக்கொள்கிறாயா? என்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றது என்றான்” அவளுடைய மகிழூந்து இப்பொழுது தனது பாதையை விட்டு விலகி எதிர்த்திசையிலிருந்து வரும் பாதைக்குள் நிற்கிறது. இதில் மறுப்பு தெரிவிப்பதற்கு என்ன இருக்கின்றது. தவறு தன்னுடையது என்பதை ஒத்துக்கொண்டாள்.

இருவரும் மகிழூந்தை பக்கத்திலிருந்த மகிழுந்து தரிப்பிடம் நோக்கிச் செலுத்தவும் பிரியாவின் கணவர் அவ்விடத்திற்கு வரவும் நேரம் சரியாக இருந்தது. கணவனின் கண்களில் கோபம் இருப்பதைக் கண்டவள் எங்கே அவனுடன் எதிர்வாதம் செய்யப்போகிறாரோ எனப் பயந்து. “தவறு என்னுடையது என்று ஒப்புக்கொண்டுவிட்டேன், காப்புறுதி பற்றிக் கேட்டதால் உங்கள் பெயரில் காப்புறுதி இருப்பதால் உங்கள் சம்மதத்திற்காக அழைத்தேன் என்றாள்” அவன் கோபம் இப்பொழுது இன்னும் அதிகமாகியது. வேறு வழியின்றி தணித்துக்கொண்டான். இத்தனை வருடம் சேகரித்து வந்த காப்புறுதி புள்ளிகள் குறைந்துவிடுமே என்பது அவனது ஆதங்கம். அந்த வழியால் சென்றுகொண்டிருந்த, பிரியா குடும்பத்திற்கு நன்கு பழக்கமுடைய நோர்வேஜிய பெண்மணி ஒருவர், இவர்களுக்குத்துணையாக இணைந்து கொண்டாள் என்பதில் சற்று ஆறுதலாக இருந்தது.

நல்ல வேளை, அந்த வீதியின் வேகக்கட்டுப்பாடு மணிக்கு 40 கிலோமீற்றர் என்பதால், இரண்டு உந்துகளுக்கும் பெரிதாக சேதமில்லை. ஆனாலும் அவன் ஒரு ஆங்கிலேயன் அல்லவா! ஊதி ஊதி பெரிதாக்கி தன் காரை இயக்க முடியாத அளவுக்கு சேதம் என்றபடி இருந்தது அவன் வாதம்.

ஒருவாறு கணவனை சமாதானப்படுத்தி, இருவரும் இணைந்து காப்புறுதி நிறுவனத்திற்கு தொலைபேசி எடுத்து நடந்ததைக் கூறினார்கள். அவனுடைய காப்புறுதி நிறுவனமும் அதே நிறுவனம்தான் என்பதால் பிரச்சனையை இலகுவாக முடிக்க முடிந்தது. காப்புறுதிக்கான விண்ணப்பப் படிவத்தை இரு பகுதியினரும் பூர்த்திசெய்த பின்னர், பிரியா தனக்கான மூலப்பிரதியை எடுத்துக்கொண்டாள். விண்ணப்பப்படிவத்தை காப்புறுதி நிறுவனத்திற்கு தான் அனுப்புவதாக ஏற்றுக்கொண்டான் அந்த லாண்ரோவருக்கு( Land Rover) சொந்தக்காரன். கை குலுக்கி அவனோடு சமரசம் செய்துவிட்டு, வீடு திரும்பினர் கணவனும் ப்ரியாவும்.

வரும் வழியிலும் சரி, வீட்டுக்கு வந்தும் எதுவும் பேசாமல் இருப்பதைப்பார்த்து “ என்ன எதுவும் பேசாமல் இருக்கின்றீர்கள்? “ என்று ப்ரியாதான் தொடங்கினாள். “ உமக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதே என் மன நிறைவு, அதனால் விட்டுவைத்தேன்” என்ற கணவனின் பதிலை சற்றும் எதிர்பாராதவளாய், ப்ரியா கணவனை முத்தமிட்டு மகிழ்ச்சியை தெரிவித்தாள்.

அவர்களோடு ஒத்தாசையாக அன்றைய சம்பவத்தில் துணை நின்ற அந்த நோர்வேஜிய பெண்மணியின் ஆலோசனையின்படி, அன்று மாலை அவசர சிகிச்சைப்பிரிவுக்கு தொலைபேசி எடுத்து நடந்தவற்றைக் கூறினாள் ப்ரியா. விபத்து ஏற்படும்போது வெளி உடலில் காயங்கள் இல்லாவிடினும் உடல் பலமான அதிர்வுக்கு உள்ளாகியிருப்பதால் உடல் உள்ளுறுப்புகள் பாதிப்பிற்குள்ளாக வாய்ப்பு இருக்கின்றது என்று கூறியதுடன். உடனடியாக தங்களிடம் வரும்படி கூறினார்கள்.

கணவருடன் அவசர சிகிச்சைப்பிரிவிற்கு சென்று அழைப்பிற்காக காத்திருந்தாள். ஒரு இளம் வயதான மருத்துவர் ப்ரியாவிடம் வந்து கை குலுக்கி தன் பெயரைச் சொல்லி வரவேற்கவே, ப்ரியாவும் பதிலுக்கு தன் பெயரைக்கூறினாள். பின்பு ப்ரியாவை தனது அறைக்கு அழைத்துச் சென்ற மருத்துவர் அங்கு நின்ற தாதியிடம் சிறு நீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதா என்பதை பரிசோதிப்பதற்காக சலப்பரிசோதனையும் இரத்தப் பரிசோதனையும் செய்யுமாறு பணித்தார். அதன்பின்பு முழங்கால் மூட்டு, கைமூட்டு, தோழ்மூட்டு, முதுகு என எல்லாப் பகுதிகளையும் ஒர் சிறிய சுட்டியல் கொண்டு தட்டித் தட்டி பார்த்து அந்த இடங்களில் நோ இருக்கின்றதா என்று கேட்டு பரிசோதித்துப்பார்த்தார். சற்று தலைவலி தவிர வேறு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என்றதும், தலைவலிக்கு பனடோல்( paracetamol) எடித்துக்கொள்ளுங்கள், தேவைப்பட்டால் ஐபுபுறுவேன்(ibuprofens) எடுத்துக்கொள்ளலாம் என்றார். வேறு ஏதாவது அறிகுறி தென்பட்டால் எங்களை மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார் மருத்துவர்.

மறுநாள் காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பொழுது போனதே தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லோரும் கூடியிருந்து கதைத்துக்கொண்டிருந்தபோது

மகனை நோக்கி “நல்ல வேளை நான் உங்களை கூட்டிச்செல்லவில்லை, என்னோடு வந்திருந்தால் உங்களுக்கு எவ்வளவு ஆபத்து ஏற்பட்டிருக்கும்“ என்றாள் ப்ரியா. அதற்கு மகன் சிரித்துக்கொண்டே

“ நீங்கள் என்னை கூட்டிச் சென்றிருந்தால் நானும் அந்த விபத்தை அனுபவித்திருப்பேன். எனக்கும் அந்த அனுபவம் கிடைத்திருக்கும். ஒரு விபத்தை அனுபவித்து அதிலிருந்து தப்பி வருவது எவ்வளவு சுவாரிசியம் தெரியுமா” என்று நோர்வேஜிய மொழியில் கூறி மகிழ்ந்தான்.

இந்தப் பதிலை சற்றும் எதிர்பாராதவளாய் வாயடைத்துப்போய் நின்றாள் ப்ரியா!

அடுத்த நாள் திங்கட்கிழமை அன்று அவளுக்கு விடுமுறை நாள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தொலைபேசியை எடுத்து இணையத்தளத்தை திறந்து அன்றைய புதினம் பற்றி அறிய ஆவலாக இருந்தவளுக்கு, கண்கள் கலங்குவதும், உடலெல்லாம் அமைதியின்றி ஏதோ ஒருமாதிரியாக இருப்பதுபோல் உணர்ந்தாள். தொலைபேசியை மூடி வைத்து விட்டு. மடிக்கணனியை திறந்து பார்த்தாள், அப்பொழுதும் அதேமாதிரியான அறிகுறியையே உணர்ந்தாள். எந்த ஒரு கதிர்வீச்சுத் திரையையும் (screen) பார்க்க முடியாத அளவிற்கு தனக்கு ஏதோ நடந்திருப்பதாக உணர்ந்தாள் ப்ரியா. உடனே குடும்ப வைத்தியரிடம் தொலைபேசி எடுத்து விபரத்தைக் கூறினாள். அவர் ஒரு பெண் வைத்க்தியர். ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். மிகவும் திறைமைசாலி என்பதாலேயே அவரை தன் குடும்ப வைத்தியராக தேர்ந்தெடுத்திருந்தாள் ப்ரியா.

ஒரு வருடத்தில் மூன்று தடவை தமது குடும்ப வைத்தியரை மாற்றும் உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது இந்த நோர்வே நாட்டில் என்பது எவ்வளவு சிறப்பு என்று அவ்வப்போது பெருமை கொள்வாள் ப்ரியா. குடும்ப வைத்தியர் ஷ்கொர்பியோஷ் ப்ரியாவை பரிசோதித்துவிட்டு “ உனக்கு மூளையில் அதிர்வு ஏற்பட்டு இருக்கின்றது. விபத்து ஏற்படும்போது இவ்வாறான அதிர்வு(Concussion (Traumatic Brain Injury)) ஏற்படுவது சாதாரணம்தான் என்றார். இரண்டு மூன்று நாட்களுக்கு எந்த ஒரு கதிர்வீச்சு திரையையும்( screen) பார்க்கக் கூடாது என்றும் புத்தகங்களையோ பத்திரிக்கைகளையோ வாசிப்பதை இந்த நாட்களில் தவிர்க்க வேண்டும் என்று கூறியதுடன், தண்டெலும்பு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவரிடம்(chiropractor) உடனடியாக ப்ரியாவை அனுப்பி வைத்தார்.

ஊர் மொழியில் சொல்லப்போனால் சுளுக்கு எடுப்பவர் என்றே கூறலாம். அந்த நிபுணர் செய்தது ப்ரியாவைப் பொறுத்தவரை சுளுக்கு எடுத்தல்தான். ஆனால் என்ன,எந்த தண்டெலும்பு எந்த இடத்தில் இருக்கின்றது என்பதுதான் அவருக்கு தெரிந்திருக்கும் நிபுணத்துவம். கழுத்தைப் பிடித்து இரண்டு பக்கமும் வெடக் வெடக் என்று திருப்ப படக் படக் என்று கேட்டது ஒவ்வொரு பக்கத்திற்கும் எடுக்கும்போதும் ஒவ்வொரு முறிவு. அவ்வளவுதான் ஒரு நாள் சிகிச்சையிலேயே 70% குணமடைந்து விட்டாள் ப்ரியா,என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு மூன்று நாட்கள் மூன்று முறை செய்ததும் முற்றாக குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பினாள் ப்ரியா!

சரியான நேரத்தில் சரியான சிகிச்சை கிடைத்துவிட்டால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் நோய் நொடியிலிருந்து.

தேவையான நேரத்தில் முறையான மனிதர்களை சந்திக்கக் கிடைக்கும் வாய்ப்புக்கூட ஒரு அதிஷ்டம்தான்!

– 30.ஆவணி 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *