பொறுப்பே இல்லம்மா!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 20,463 
 

பொறுப்பே இல்லம்மா!ஈரோடு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வேதியியல் துறையில் பயிலும் சுகந்திக்கு சுதாகரன் மீது காதல் வந்திருக்கக் கூடாதுதான். அதுவும் சுகந்தி ஓய்வூதியம் பெற்று வரும் ஆசிரியரின் ஒரே செல்லப் பெண். சுகந்தியின் அம்மாவும் ஒரு ஆசிரியை என்பதும், அவருக்கு இன்னும் ஐந்து வருடமிருக்கிறது ஓய்வூதியம் பெற என்பதும் உபரித் தகவல்தான்.

காதல் ஒவ்வொரு மனதிற்குள்ளும் சொல்லிக்கொண்டு வருவதில்லையென்றும், திடீரென உதித்தவுடன் நிலைபெற்றுவிடத் தவிக்குமென்றும்தானே சொல்கிறார்கள்? தொண்டைக்குள் கரகரப்பென்றால் ஒரு விக்ஸ் மிட்டாயைப் பயன்படுத்துமாறு சொல்கிறார்கள். காதலைச் சரிப்படுத்திக்கொள்ள எந்த வகை மிட்டாய்களும் இல்லையென்பதால் சுகந்தி, தானே வலையை விரித்து அதில் தன்னையே வீழ்த்திக் கொண்டாள்.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பத்துக்குப் பத்து அளவில் எட்டு அறைகளை வாடகைக்கு விட்டிருப்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜனார்த்தனன். அந்த காம்பெளண்டினுள் நீண்ட காலம் முந்தியே கட்டிய வீட்டில்தான் அவரும் அவர் குடும்பமும் தங்கியிருந்தது. பத்துக்குப் பத்து அளவிலான அறைகளில் ஒன்றில் தங்கியிருந்தவன்தான் சுதாகரன். அவனுக்கு சொந்த ஊர் பொள்ளாச்சி. அவனது தந்தையாருக்கு பொள்ளாச்சியில் பத்து ஏக்கர் அளவிற்கு தென்னந்தோப்பு இருப்பது உபரித்தகவல்தான்.

சுதாகரன் அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக்கில் ஊழியன். எந்த அரசியல் செல்வாக்கும் அவனுக்கு இல்லையாதலால் தன் ஊருக்கே மாற்றல் வாங்கிக்கொள்ள சாமர்த்தியமின்றி இருந்தான்.அவனுக்கு புத்தகங்கள் வாசிப்பதுதான் பொழுதுபோக்கு. அவனது அறையில் நிரம்பிக் கிடப்பதனைத்தும் புத்தகங்கள்தான். துணிமணிப் பெட்டியும், ஒரு குடம் தண்ணீரும், ஒரு டம்ளரும் மட்டுமே அவனது அறையில் உள்ள மற்ற சாமான்கள். மற்றபடி அன்ன ஆகாரமெல்லாம் சுதா மெஸ்சில்தான்.

டாஸ்மாக்கில் பணியில் இருப்போர் அனைவரும் குடிவிரும்பிகளாக இருக்கவேண்டுமென அவசியமேதுமில்லை. சுதாகரன் சுத்தத்திலும் சுத்தம். இப்படி இருப்பவன் மீது ஒரு கல்லூரிப் பெண்ணுக்கு காதல் வரத்தானே செய்யும். அதுவும் தன் காம்பெளண்டுக்குள்ளேயே இருக்கும் புத்தக விரும்பியை விரும்பாமல் இருக்க யாதொரு காரணமும் சுகந்திக்கு இல்லை.

கல்லூரி விடுமுறை நாட்களில் சுகந்தி சுதாகரனிடம் சென்று வாசிக்க புத்தகங்களைக் கேட்டு விரும்பி பெற்றுக் கொள்வாள். அவனிடம் அசோகமித்திரன், பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரது புத்தகங்கள் அழகாய் செல்ஃபில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அவர்களை வாசிக்கத் தொடங்கினாள்.

தந்தையார் ஆசிரியர் என்பதால் அடிக்கடி சுகந்தியை அமரவைத்து, ‘‘பொறுப்புங்கறதே உனக்கு எப்பவும் இல்லை சுகந்தி. இப்படி கதைப் புத்தகங்கள் படிக்கிற நேரத்துல உன் கல்லூரிப் புத்தகங்களை படிச்சா நல்லதுதானே! காலம் எப்படி விரைவா போயிட்டு இருக்கு தெரியுமா? தினமும் பேப்பர்லயும், நியூஸ்லயும் பெண்கள் பாதிக்கப்படுற எவ்ளோ விசயங்கள் வருது.. நீயும் பார்த்துட்டு இருக்கே தானே! பொறுப்பா இனிமேலாச்சும் இருக்கப்பாரு…’’ என்பார்.

பேப்பர் நியூசுக்கும் பொறுப்புக்கும் என்ன சம்பந்தம் என்றுதான் சுகந்திக்குத் தெரியவில்லை. “நீ இன்னும் சின்னக் குழந்தையாடி சுகந்தி? அங்க இங்க ஓடுறதும் ஓடியாறதும்! வயசு ஆக ஆக பொறுப்பு வேண்டாம் வயசுக்கு வந்த பொண்ணுக்கு?” என்று அம்மாவும் ஒரு பக்கம் இவளிடம் ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் சொல்லிக்கொண்டேயிருந்தார்.தன் கல்லூரித் தோழிகளிடம் அலைபேசியில் வைத்திருந்த சுதாகரனின் முகவடிவைக் காட்டி அவர்களை ஆச்சரியப்படுத்தினாள். அவர்களிடமே இந்த அழியாக் காதலுக்கான ஐடியாவையும் கேட்டுப் பெற்றாள் சுகந்தி. அவர்கள் கொடுத்த ஐடியா ஐதர் அலி காலத்துடையது என்றாலும் அதுதான் எளிமையானதும்கூட என இவள் அதற்குத் துணிந்தாள்.

ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்பினுள் இவளது அன்பையும் மற்ற எல்லாவற்றையும் வெளிப்படுத்தி ஒரு கடிதம் எழுதி வைத்தாள்.
அதை கடிதத்தோடு கொண்டு சென்று சுதாகரனிடம் கொடுக்க நாட்கள் தாமதப்பட்டதற்குக் காரணம் இவளின் இதயம் அவ்வப்போது வேகமாய்த் தாளமிட்டதேயன்றி வேறெதுவும் அல்ல.

நல்ல விடுமுறை தினத்தின் காலையில் சுதாகரனின் அறைக்குச் சென்றவளுக்கு இதயமே வெடித்து, இதே இடத்தில் மாண்டு விடுவோமோ என்ற பயம் சூழ்ந்துகொண்டது.இருந்தும் ‘அறம்’ புத்தகத்தை அவனது துணிப்பெட்டியின் மீது வைத்துவிட்டு வேறெதும் அவனிடம் புத்தகம் கேட்டுப் பெறாமல் வந்துவிட்டாள். அன்று காந்தி ஜெயந்தி தினமென்பதால் டாஸ்மாக்குகளுக்கு தமிழகமெங்கும் விடுப்பு.

வீடு வந்தவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அடிக்கடி வெளிவாயிலுக்கு வந்து தன் இருப்பை அவனது அறை நோக்கிக் காட்டிக் கொண்டிருந்தாள் சுகந்தி. அவளது எண்ணமெல்லாம், கடிதத்தை சுதாகரன் வாசித்ததும் உடனே அவனது டூவீலரில் காலைக் காட்சிக்கோ மதியக் காட்சிக்கோ அபிராமி திரையரங்கிற்கு அமர்ந்து போகும் கனவுதான்.

நேரம் ஆக ஆக இவளது ஆசைகளும் கனவுகளும் தவுடுபொடியாகிக் கொண்டிருந்தன. சுதாகரன் பத்துமணியைப் போல பைக்கில் எங்கோ சென்றவன் மதியம் மூன்று மணியைப் போலத்தான் திரும்பினான் தன் அறைக்கு. சோர்ந்து போய் தன் காதலை்க் கசக்கி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு டிவி முன்பாக நான்கு மணிக்கு அமர்ந்தாள் சுகந்தி. அந்த சமயத்தில்தான் சுதாகரன் “சார், மேடம்!” என்று குரலிட்டுக்கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்தான். சுகந்திக்கு மீண்டும் இருதயத் துடிப்பு அதிகப்படவே, ‘‘அப்பா…’’ என்று சப்தமிட்டுக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கதவோரமாய் நின்று கொண்டாள்.

‘‘வாங்க தம்பி, அதுக்குள்ள இந்த மாத வாடகை கொடுக்க வந்துட்டீங்களா?’’ என்றபடி ஜனார்த்தனன், சுதாகரனை வரவேற்று சோபாவில் புதைந்துகொண்டார். சுதாகரன் தன் கையில் வைத்திருந்த கடிதத்தை அவரது கையில் கொடுத்தான். அப்பா அந்தக் கடிதத்தை வாசிக்கத் துவங்கவும் சுகந்திக்கு தலைக்குள் மின்சாரம் பாய்ந்தது போலாயிற்று.“காதலைச் சொல்றதுல சங்க காலக் கவிஞர்கள் எல்லாரும் பிச்சையெடுக்கணும்ப்பா! ஆமா, இதை எதுக்கு என்கிட்ட கொண்டு வந்து குடுத்திருக்கே?” என்றார் ஜனார்த்தனன்.

“சார் தப்பா நினைக்காதீங்க. உங்க பொண்ணு என்கிட்ட இருந்து புத்தகங்கள் வாசிக்க எடுத்துட்டு வர்றது உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். இன்னிக்கு உங்க பொண்ணு என் கிட்ட திருப்பிக் கொடுத்த புத்தகத்துல இந்தக் கடிதம் இருந்துச்சு! எனக்கு இந்த காதல் கத்தரிக்காய் மேலெல்லாம் நம்பிக்கையே கிடையாதுங்க சார். குடும்பம் பார்த்து கட்டி வைக்கிற பொண்ணே போதும்!”

“சரி, இதுல எழுதுனவங்க பேரே இல்லையேப்பா! என் பொண்ணுதான் எழுதியிருக்கும்னு என்ன நம்பிக்கைல இங்க வந்திருக்கே?” என்ற போது சுகந்தியும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தாள். அப்பாவிடமிருந்து கடிதத்தை வாங்கிப் பார்த்தவள் தொண்டையைச் செருமிக்கொண்டு சொன்னாள்.

“என்னோட ஃப்ரண்டு சுதா இந்தப் புத்தகத்தை என்கிட்டயிருந்து எடுத்துட்டுப் போனாள்ப்பா. அவ நேத்து சாயந்திரம்தான் புத்தகத்தை என்கிட்ட குடுத்தா. அதை அப்படியே இவரு ரூம்ல வச்சிட்டு வந்துட்டேன்பா. சாரிங்க சுதாகர்…” என்றதும் அவன் ‘‘பரவாயில்லங்க!” என்று சொல்லிக் கிளம்பினான்.

‘‘கொஞ்சம் கூட பொறுப்பில்லம்மா உனக்கு…” என்று அப்பாவும் அம்மாவும் சொல்வது சரிதான் என்றே தோன்றிற்று சுகந்திக்கு. காதலைச் சொல்வதற்குக் கூட பக்குவம் இல்லாத மடச் சாம்பிராணி என தன்னையே திட்டிக்கொண்டாள்.

– மார்ச் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *