கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 3,058 
 

தங்கை கீதா குழந்தைகளோடு வீட்டுக்கு வருகிறேன் என்று போன் பண்ணி சொன்னதும், அகிலன் மிகவும் சந்தோசமாகி விட்டான். அதை உடனே மனைவி ஜானுவிடம் வந்து சொன்னான்.

அதுவரை திரைப்பட பாடலை முணுமுணுத்துக் கொண்டே , துவைத்து காய வைத்த துணிகளை மடித்துக்கொண்டிருந்த ஜானு, அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன … கீதா குழந்தைகளோடு வருகிறாளா ?!..” என்றவளின் முகம் போன போக்கை பார்த்ததும் அகிலனுக்கு முகம் சுருங்கி போனது .

“ஏன் ஜானு … என்ன ஷாக் ஆகற .. அவ எப்பவும் குழந்தைகளின் பள்ளிக்கூட விடுமுறைக்கு வர்றது வழக்கம்தானே..” என்றான்.

“ம்ம் … அதுக்கில்லே ..அவ பையன் திலீப் சரியான வாலு …வீட்டில இருக்கிற பொம்மைகளை எடுத்து விளையாடுறேன்னு உடைச்சிடுவான். அதுவும் அந்த பொண்ணு ரஞ்சனி சரியான பிடிவாதம். அவ அழுக ஆரம்பித்தா.. சைரன் மாதிரி கேக்கும் .அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க என்ன ஏதோன்னு வந்து விசாரிப்பாங்க .”

“சரி ஜானு ..போன வருடம் வந்தப்போ ஏதோ கொஞ்சம் குறும்புத்தனம் பண்ணிட்டாங்க … வருடம் முழுதும் அவர்களை வைத்து கீதா சமாளிக்கிறாள் . நாம் ஒரு வாரம் சமாளிக்க முடியாதா …”

“அதெல்லாம் இல்லைங்க .. நமக்கு பிறக்க போகும் குழந்தைகள் விளையாட வேணுமுன்னு ஆசை ஆசையாய் நான் வாங்கிட்டு வந்த பொம்மையை, திலீப் உடைச்சது மனசுக்கு சங்கடமாயிடுச்சு .. கீதா புள்ளங்க சரியான குறும்புங்க .. ஒரு இடத்தில இல்லாம.. இங்கே அங்கேன்னு தாவி குதிக்கிறது , சத்தம் போடறது எல்லாம் எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு அதான் “

அவளுடைய கவலை அகிலனுக்கு புரிந்தது. அகிலனுக்கு ஜானுவுடன் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தைகள் இல்லை. தங்கை கீதாவுக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு மகனும், மூன்று வயதில் பெண்ணும் இருக்கு. ஜானுவும் மிகவும் சாதுவான நல்ல பெண் தான் . குழந்தைகள் என்றால் அவளுக்கும் பிடிக்கும். ஆனால் அதிக சத்தம் கேட்டால் டென்ஷன் ஆகிவிடுவாள். ஏனென்றால் அவளுக்கு சிறு வயதில் இருந்தே தனிமையாக இருந்து பழகி விட்டாள். அதுவுமில்லாம தனக்கு பிறக்க போகும் குழந்தைகளுக்கென்று இந்த பொம்மை பிடிக்கும் . இந்த டிரஸ் போட்டா நல்லாயிருக்கும் என்று அவள் பாத்து பாத்து நிறைய வாங்கி வைத்திருக்கிறாள். கீதாவின் குழந்தைகள் அந்த பொம்மைகளை சேதபடுத்திவிட்டால் என்ன பண்ணுவது என்ற கவலை .. பயம் அவளுக்கு வந்து விட்டது.

அப்பா அம்மாவை சிறுவயதிலேயே இழந்து விட்ட கீதாவுக்கு , அண்ணன் அகிலன்தான் எல்லாம். அகிலனுக்கும் தங்கை மீது மிகவும் பிரியம். ஆனால் அவளுடைய பிள்ளைகள் வந்தால் செய்ய போகிற சேட்டைகளை நினைத்தால் … அகிலனுக்கும் கலக்கமாக இருந்தது.

“சரி சரி விடு .. கவலை படாதே . இந்த முறை எனக்கும் ஆபிசில் லீவு கிடைச்சிருக்கு .. அதனால் நானும் கூடவே இருந்து பாத்துக்கிறேன்”என்றான்.

ஆனால் ஜானு.. ஒரு எச்சரிக்கை உணர்வோடு , அவள் வாங்கி வைத்திருந்த பொம்மைகளை எல்லாம் எடுத்து ஒரு பெரிய அட்டை பெட்டியில் போட்டு பெட்ரூம் லாப்டில் மறைத்து வைத்தாள்.

மறுநாள் ..அகிலன் ..ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் , கீதாவையும் குழந்தைகளையும் அழைத்து வந்தான். கீதா கொண்டு வந்த பைகளை காரிலிருந்து எடுத்துக்கொண்டு உள்ளே வந்தான்.

ஜானு புன்னகையோடு அவர்களை வரவேற்றாள் .

“கீதா …வாம்மா .. டேய் திலீப் ..ரஞ்சனி ..வாங்க வாங்க …எல்லாம் எப்படி இருக்கீங்க.. ரயில் பயணமெல்லாம் ஜாலியா இருந்ததா …”

“ம்ம் நல்லா இருக்கோம் அண்ணி .. நீங்க எப்படி இருக்கீங்க..” என்ற படியே வீட்டிற்குள் வந்தாள் கீதா.

கீதா போன தடவை.. ஒரு ஆறு மாதத்திற்க்கு முன்பு உறவினர் திருமணத்தில் பார்த்தது. அப்போது இருந்தத விட இப்போது கொஞ்சம் உடம்பு பூசினாற்போல இருந்தாள். ஆனால் முகம் மிகவும் வாடிப்போய் இருந்தது. பிரயாண களைப்பாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு ,

ஜானு சமையலறைக்கு போய்.. குடிக்க தண்ணீரும் .. குழந்தைகளுக்கு பிஸ்கட்டும் எடுத்துக்கொண்டு வந்தாள்.

அப்போது தான் குழந்தைகள் இருவரையும் ஜானு கவனித்தாள்.

கீதாவை விட்டு விலகி வராமல் ஒட்டிக்கொண்டு, பாப்பா ரஞ்சனி அமைதியாக இருந்தாள். திலீப்பும் அங்கிருந்த சோபாவில் நல்ல பிள்ளையாக சோகமாக உட்கார்ந்து கொண்டான்.

“ஏன் என்ன ஆச்சு ..ரெண்டு வாலுகளுக்கும் ..டேய் திலீப்..ரஞ்சனி .. உங்க இரண்டு பேருக்கும் இந்த மாதிரி இருக்கிறது செட்டாகவே இல்லைடா …” என்று ஜானு பேச … இருவரும் பதில் சொல்லாமல் அம்மா கீதாவின் முகத்தை திரும்பி பார்த்தார்கள். ஜானு குழந்தைகளின் முகத்தில் இருந்த குழப்பத்தையும் அமைதியும் பார்த்து கலவரமானாள்.

அவள் குழந்தைகளை பற்றி பேசியதையெல்லாம் … அகிலன் அவர்களிடம் சொல்லி கூட்டிகிட்டு வந்திருப்பாரோ ..?!..அதனால் தான் இப்படி இருக்கிறார்களோ ..?!

அவள் அகிலனை பார்த்து ‘என்ன ஆச்சு ..ஏதாவது சொன்னீங்களா ?!’ கண்ணால் ஜாடை செய்து கேள்வி கேட்டாள். அவனும் உதட்டை பிதுக்கி , தோளை குலுக்கி ‘எனக்கு எதுவும் தெரியாது .. நான் ஒண்ணும் சொல்லலை ‘ என்பது போல தலையை ஆட்டினான்.

போன தடவை திலீப் அவளுடைய பொம்மையை உடைத்த போது கூட அவள், அகிலனிடம் தான் புலம்பினாளே தவிர ..குழந்தைகளை எதுவும் சொல்ல வில்லை. ‘கீதா ஏதாவது குழந்தைகளை மிரட்டி இருப்பாளோ …’

ஒரு பெரும் ஆரவாரத்தை…ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்த்த ஜானுவுக்கு … அந்த அமைதி கஷ்டமாக இருந்தது.

குழந்தைகள் இயல்பாக இருந்தால் தானே அழகு .

அவள் மனதில் பல யோசனைகள் ஓட …அவள் திலீப் அருகில் போனாள் .

“ஏன்டா ..அத்தை மேல கோபமா ..?! ஏன் இப்படி இருக்கே …?!” என்றபடி அவனை தொட.. அவன் வேகமாக நகர்ந்து போய் அவன் அம்மா கீதாவை கட்டி பிடித்து கொண்டான்.

“ஏன் கீதா .. என்ன ஆச்சு ..என்கிட்ட குழந்தைகள் இப்படி இருக்கமாட்டாங்களே ?!” குழப்பத்துடன் கேட்டாள் .

“அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணி. இரண்டும் திருட்டு பசங்க ..சும்மா நடிக்கிறாங்க” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு..

“டேய் .. நடித்தது போதும் ..அத்தை கேட்கிறாங்க இல்ல பேசு …” என்று திலீப்பை அதட்டினாள்.

அதற்கு அவன் வாயை திறக்காமல் “ம்கூம் ..” என்று தலையை ஆட்டினான்.

“என்னது ..நடிக்கிறானா .. என்னடா ..எனக்கு புரியலை ” என்றாள் ஜானு .

“அத்தை ..நான் சொல்றேன் ..” என்று கீச்சு குரலில் மெல்ல வாய் திறந்து ரஞ்சனி பேசினாள்.

ஜானுவுக்கு ரஞ்சனி பேசியதை .. வியப்பாக பார்த்தாள் .ரஞ்சனி குறும்பு என்றாலும் அவ்வளவு அழகு ..அவள் பேசுவது பார்பி டால் பேசுகிற மாதிரி இருந்தது.

“அண்ணாவுக்கு நேத்து ஒரு பல்லு விழுந்துருச்சு.. அப்பா கூட அம்மா கிட்ட கேட்டாரு இவனுக்கு இன்னும் அஞ்சு வயசு கூட ஆகல இப்பவே பல்லு விழுந்திருச்சின்னு .. அதுக்கு அம்மா சொன்னாங்க, இவன் அத்தை வீட்டுக்கு போய் பொம்மையெல்லாம் உடைச்சதுனால தான் இப்படி ஆயிடுச்சுனு ..அதான் இனிமே அப்படி பண்ண மாட்டேன்னு அண்ணா சொல்லிட்டான்.” என்றால்..

ரஞ்சனி ..கொஞ்சும் குரலில் .. திக்கி திக்கி திலீப்பின் அமைதிக்கான காரணத்தை கையை ஆட்டி பேசியது ஜானுவுக்கு மிகவும் ரசிக்கும்படி இருந்தது .

ரஞ்சனி சொன்ன காரணம் ஜானுவிற்கு சிரிப்பை வரவழைத்து விட்டது . மனம் விட்டு சத்தமாக சிரித்தாள். அதே நேரம் அவள் பயந்த மாதிரி அவனுடைய அமைதிக்கு அவள் காரணமில்லை என்ற நிம்மதியும் சேர்ந்து கொண்டது.

முதலில் குழப்பத்தில் இருந்த அகிலனும் …ரஞ்சனியின் பேச்சை கேட்டு சிரித்து விட்டான்.

ஜானு ஓடிப்போய் ..ரஞ்சனியை அள்ளி தூக்கிக்கொண்டாள். அப்படியே திலீப்பையும் இழுத்து கட்டிக்கொண்டாள். அப்போது அவளுக்கு மேலும் ஒரு சந்தேகம் வந்தது. அதையும் ரஞ்சனிகிட்டேயே கேட்டாள்.

“ஆமா ..அண்ணன் செஞ்ச தப்புக்கு பல்லு விழுந்துடுச்சு .அதான் அமைதியாக இருக்கான். உனக்கு என்ன ஆச்சு .. நீ ஏன் அமைதியாக இருக்கே என்றாள். அதுக்கு ரஞ்சனி …

“எனக்கும் பல்லு விழுந்துடுச்சுனா ..என்னா பண்றது ..?” என்று கையை ஆட்டி கேள்வி கேட்க…

அனைவரும் சிரித்து விட்டார்கள். அகிலனுக்கு ஜானுவின் மகிழ்ச்சியை பார்த்து மனசுக்கு நிறைவாக இருந்தது. கீதாவும் சந்தோஷப்பட்டாள்.

குழந்தைகள் விஷயத்தில் நாம் சுயநலம் பார்க்க கூடாது. பொம்மைகள் உடைந்தால் வேறு வாங்கி விடலாம். குழந்தைகள் இந்த வயதில் அனுபவிக்க வேண்டிய சந்தோசத்தை இழக்க கூடாது. அதனால் அந்த பொம்மைகளை எடுத்து இவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஜானு முடிவு செய்தாள்.

– மே 2023, My Vikatan

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *