பொதி மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 12,948 
 
 

‘கடினமான செயலில் முயற்சியோடு உழைக்கும் எவரும் தன்மானத்தை இழப்பதில்லை..’

& பெர்னாட்ஷா சொன்னதுதான் நளினியின் நினவுகளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. கூடவே கண்ணீரும் தளும்பிக் கொண்டே இருந்தது.

திவாகருடன் இனிமேல் வாழமுடியுமா என்ற கேள்வியின் தாங்கமுடியாத கனம் தன் நெஞ்சில் ஒவ்வொரு கணமும் வலியை ஏற்றிக்கொண்டே போவதை உணர்ந்தாள்.

எதில் குறைந்துவிட்டாள் அவள்?

கல்யாணமான இந்த நான்கு வருடங்களில் தேகம் இன்னும் வெற்றிலைக்கொடி போல தளதளப்பாக வனப்புடன் தான் இருக்கிறது. முகத்தின் ரம்மியமும் குறையவில்லை. அலுவலகத்தில் அடுத்தகட்ட பதவி உயர்வு கிடைத்து முப்பதாயிரத்தைத் தொட்டுவிட்டாள். தேரைச் செலுத்துகிற மாதிரி கார் ஓட்டுவது, மேக்ரோனியும் வத்தக்குழம்பும் வெந்தய தோசையுமாக மல்ட்டி சமையல் செய்வது, பால்கனியில் மஞ்சள் ரோஜா வளர்ப்பது, எப்போதும் புன்னகையுடன் இனிமையாக இருப்பது என்று தன்னைச் சுற்றி சொர்க்கத்தைத் தானே சிருஷ்டித்துக்கொண்டே போகிறாள்.

‘‘பிரச்னை அதுதான்..!’’ என்றபடியே மாலதி இரண்டு தேநீர் கோப்பைகளுடன் வந்தாள். ‘‘ராணி மாதிரி ஒருத்தியை வெச்சு வாழற தகுதி தனக்கு இருக்கானு சந்தேகம்டி திவாகருக்கு. காம்ப்ளெக்ஸ்.. ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை! அதுதான் உன் மேல எரிச்சலாவும் கோபமாவும் வெளிப்படுவது..’’

‘‘இது அநியாமில்லையா மாலு?’’ & நளினி குரல் கரகரத்து மெல்லிய தொனியில் தோழியிடம் படபடத்தாள்.

‘‘மனைவி திறமைசாலியா இருந்தா சந்தோஷப்பட வேண்டாமா? திவா அற்புதமா செஸ் விளையாடுவார், ஸ்விம் பண்ணுவார்.. அதையெல்லாம் நான் பெருமையா பார்க்கலியா? அவரால ஏன் என் திறமைகளை சந்தோஷங்களை அங்கீகரிக்க முடியல, மாலு?’’

‘‘திமிருதான்.. வேற என்ன?’’ என்றாள் மாலதி கோபத்துடன். ‘‘நாலு வருஷமா பொறுமையா இருந்திருக்கே. தூக்கத்துலகூட எழுப்பி உக்கார வெச்சு சண்டை போடுவார்னு இப்பதானேடி சொல்றே? விடுடி.. நிம்மதியா இரு. இங்கே நானும் அம்மாவும்தான். தனி வீடு.. மொதல்ல மனசுல அமைதி வரட்டும். அப்புறமா யோசிக்கலாம்.. டீயைக் குடி..’’

தேநீர் அபாரமாக இருந்தது. இந்த நான்கு வருடங்களில் வீட்டுத் தேநீரே குடித்ததில்லை. காபி தவிர எதையும் தயாரிக்கக் கூடாது.. அவன் கட்டளை! ஏனோ அதை மீறியதில்லை. அப்படி மீறியபோதெல்லாம் அவன் நடவடிக்கைகள் எப்படியெல்லாம் கசப்பாகி இருக்கின்றன என்கிற உண்மை தெரிந்ததால் உணர்வுகள் அமுங்கி விட்டதுதான் உண்மை. நளினி இமைகளில் சரம் சரமாக நீர் தேங்கி வழிவதை உணர்ந்தாள். ‘பட்டதெல்லாம் போதும்’ என்று வைராக்கியமாக நினைத்தது மனது.

திடீரென்று அறையில் குளுமை படர்ந்தது. சிலுசிலுப்பான காற்று முகத்தை ஸ்பரிசித்தது. நளினி கழுத்தைத் திருப்பி ஜன்னல் வழியே வெளியில் பார்த்தாள்.

மாமரம் நல்ல அடர்த்தியில், பச்சையில், குலுங்கும் கிளைகளும் இலைகளும் மொட்டுகளுமாக தளதளவென்று காற்றை அனுப்பிக்கொண்டிருந்தது.

நளினி வியப்புடன் மரத்தையே பார்த்துவிட்டு தோழியை அழைத்தாள். ‘‘போன வருஷம் நான் வந்தபோது மரம் பூரா பூச்சி இருந்ததே மாலு. கிளை, மரம், இலைனு அரிச்சு மரமே ஒருமாதிரி செல்லரிச்சுப் போன மாதிரி இருந்ததே.. நீகூட சொன்னியே.. ‘இது இனிமே வேலைக்கு ஆகாது, வெட்டி எறிய வேண்டியதான்’னு.. இப்போ எப்படி பச்சுனு குளுமையா பூவும் பிஞ்சுமா இருக்கு?’’ என்றாள்.

‘‘அதுவா? அம்மா வெட்ட மனசில்லாம ஹார்ட்டிகல்சர் ஆட்களை வரவழைச்சு காமிச்சாங்க நளினி. வேரும் அடிப்பாகமும் ஸ்ட்ராங்கா இருந்தது. அதுவரைக்கும் பூச்சி போகல. ஸோ, கிளைகளை வெட்டிட்டு, மருந்து போட்டு, உரம் போட்டு வேரை நல்லபடியா பார்த்துக்கிட்டதால மரம் பொழைச்சது நளினி.. சரி நீ வா.. சமையல் ரெடி..’’

என்ன? என்ன?

நளினி மரத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

கெட்டுப்போன மரம் உயிர்த்துவிட்டதா? செத்துப்போய்க் கொண்டிருந்த செல்கள் பிழைத்துவிட்டதா?

சட்டென்று நான்கு வருட வாழ்க்கை திரைப்படம்போல மனதுக்குள் ஓடியது. இதுவும் செல்லரித்துப்போய்க் கொண்டிருக்கும் மாமரம்தான் என்று தோன்றிற்று. திவாகர் அவளுக்காக பத்து நாட்கள் லீவு போட்டுவிட்டு மலேரியா காய்ச்சலை விரட்ட கூடவே உட்கார்ந்திருந்தது, அலகாபாத்தில் இருந்து வாங்கிவந்த காஸ்ட்லியான பனாரஸ் புடவை, கார் டிரைவிங் சொல்லிக் கொடுத்தது.. என்று நினைவுகள் பெருகின. வேர் இன்னும் வலிமைதான் என்று நெஞ்சின் அடிவாரத்து நரம்பு ஒன்று குரல் கொடுத்தது.

‘முயற்சி செய், பூச்சி பிடித்திருக்கும் பகுதியை மட்டும் கவனமாகக் கையாண்டு விடு, எல்லாம் சரியாகிவிடும், சரியாகிவிடும், மரத்தை வெட்டுவது முட்டாள்தனம், முட்டாள்தனம்!’

நளினி நம்பிக்கையுடன் எழுந்தாள்.

– மார்ச் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *