பொங்கல் வாழ்த்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2024
பார்வையிட்டோர்: 3,353 
 
 

காலையிலிருந்து இடுப்பொடிய வேலை..அது என்னவோ இப்பொதெல்லாம் பண்டிகை என்று வந்துவிட்டால் முந்தின நாள் ராத்திரியே வாசலில் கோலத்தை போட்டுவிட்டு தூங்கிப் போய்டுறாங்க..அது எனக்கு எப்பவும் சரியா பட்டதில்லை.

இன்னிக்கு பொங்கல்னா இன்னிக்கு விடிய எழுந்து கோலம் போட்டாதானெ நல்லாயிருக்கும்?. இப்போலாம் சுதந்தர தினத்தை ஸ்கூலில் லீவு நாளா ஆக்கிட்டு கடைசி வேலை நாளிலேயே கொண்டாடிறாங்க…அப்புறம் கவர்மெண்ட் தலையிட்டு உத்தரவு போட்டும், சும்மா பேருக்கு அன்னிக்கு கெடியேததுற வைபவம் நடக்குது..வர்ற விருப்பம் இருக்கிறவங்க வரலாம்னு சொல்லிடுறாங்களா…பசங்க எங்க கிளம்புதுங்க? ..

நான் படிக்கும்போதெல்லாம் இந்த நாளில் கண்டிப்பா எல்லோரும் கொடியேத்திறதுக்கு சுதந்திர தினம, குடியரசு தினம்ன்னு ஸ்கூலுக்கு போகணும். இல்லைனாலும் போய்டுவோம். பின்னே இனிப்புலாம் குடுப்பாங்களே.

அதுவும் அந்த “மார்ச் பாஸ்ட்”லே கலந்துக்க எவ்ளோ போட்டி இருக்கும்? ஹ்ம்ம்..எல்லாம் மாறி போச்சு.

முன்னேலாம் இந்த பொங்கல் வருதுனாலே ரொம்ப குதூகலமா இருக்கும்..

சின்ன வயசில் பொங்கல் பண்டிகை அன்னிக்கு ரொம்ப குஷியா. கரும்பை வாங்க அப்பா கையை பிடிச்சுக்கிட்டு போனது..வீட்டுக்கு வறதுக்குள்ளே அவர வாங்கி தந்த துண்டு கரும்பைக் கடிச்சுகிட்டே வர்றது, பொங்கல் பொங்கும்போது, “பொங்கலோ பொங்கல”ன்னு கத்தறது, அதுலே கூட அந்த தெருவில் முதல் பொங்கல் நம்மது தான் இருக்கணும்னு….போட்டி கூட இருக்கும்.

அப்புறம் அந்த பூம் பூம் மாடு…ஜல் ஜல்ன்னு சலங்கை சத்தத்தோடு அதுங்க நடந்து வர்ற அழகு….அப்பா மாட்டுக்காரனுக்கு குடுக்கன்னு ஏதாவது துணி எடுத்து வச்சிருப்பார். .அப்புறம் தோட்டத்தில் பொங்கல் வைக்க போவோம்.ஏழு கன்னிமார்களுக்குன்னு ஏழு கல் பார்த்து எடுக்கிறது என் வேலை..அங்கேயே தோட்டத்தில் வேலை செய்யிற எல்லாரையும் உட்கார வச்சி சர்க்கரை பொங்கல் பரிமாறி..வேட்டி துண்டு சேலை குடுத்து, பொங்கலை சாப்பிட்டுட்டு அந்த மதகிலே குளிச்சு ஆட்டம் போட்டுட்டு வீட்டுக்கு வந்தா பொழுது சாஞ்சிரும்..

முதல் முதலே பொங்கலுக்கு வாழ்த்து அட்டை அனுப்பிச்சது நான் நாலாவது படிக்கும்போது என் ரேவதி டிச்சருக்கு தான்.

அவங்க எவ்ளோ அழகு ..கன்னத்தில் குழி விழ அவங்க சிரிக்கும்போது பார்த்துக்கிட்டே நிற்பேன்.அது என்னவோ அப்பா பொங்கல் வாழ்த்து அட்டை வீட்டுக்கு வாங்கி வந்தபோது டீச்சருக்கு அனுப்புனா என்னனு ஒரு ஆசை தயங்கிக்கிட்டே போயி அவங்க அட்ரஸ் கேட்டா குடுத்திட்டங்க. அப்புறம் என்ன ..அவங்களுக்கு அனுப்பிச்சுட்டேன்.லீவு முடிஞ்சு ஸ்கூல் போனப்ப, கிளாசில் எல்லோர் முன்னாலும் “கரெக்ட்டா சாப்பிடுறதுக்கு தட்டை எடுத்து வைக்கிறேன். போஸ்ட்டுன்னு வந்தது. பார்த்தா நீ தான் அனுப்பியுருக்க. ..தாங்க்ஸ்ன்னு சொன்னாங்க.. அப்படியே சந்தோஷத்தில்..மிதக்கறதுன்னா என்னன்னு அன்னிக்கு தெரிஞ்சது.

அதுக்கப்பறம் வேற எந்த மிஸ்ஸும் என்னை அந்த அளவுக்கு கவர்ந்ததில்லை..எனக்கு திரும்பவும் பொங்கல் வாழ்த்து அட்டையை ஞாபகப்படுத்தினதுன்னு பார்த்தா சாரங்கபாணி சார் தான்.

நான் காலேஜ் படிக்கும் போது எனக்கு தமிழ் பாடம் எடுத்தவர். அவருடைய பாண்டித்தியம் கல்லூரியில் ரொம்ப பிரசித்தம்.. ஒரு ஐம்பது வயசுல இருப்பார்.கொஞ்ச்ம வசதியானவர்ன்னு சொன்னாங்க.ஆனா அவரை பார்த்தா அப்படி தெரியாது. தும்பைப்பூ போல வெள்ளைவெளேருன்னு எட்டு முழ வேஷ்டி, நெத்தியில் குங்குமம்,விபூதி..பளிச்சுன்னு இருப்பார்.பசங்க மத்த க்ளாஸை கட் அடிக்கும்போதும் இவரோடதை செய்யமாட்டாங்க. அப்படி ஒரு வசீகரிக்கிற குரல். அவர் சிலப்பதிகாரம் நடத்தியதை கேட்டு தான் எனக்கு இலக்கியத்தின் மேல ஆசை வந்தது.

அவர் பாடம் நடத்தினால் அதில் கரைந்து போவது போலவே இருக்கும். இன்னைக்கு நான் மேடை பேச்சு, பட்டிமன்றம்ன்னு என் வேலைக்கு போய்ட்டே செய்துகிட்டு இருக்கேன்னா எனக்குள்ளே இருந்த அந்த தேடலுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தவர் அவர்தான்.

முதன் முதலெ எங்க வகுப்பில், அவர் தேவாரத்தில் ஒரு பாடல் நடத்தி கொண்டு இருந்தார். அதிலே ஒரு சம்பவத்தை விவரித்து சொல்லி கொண்டு இருந்தார்…

திருஞான சம்பந்தர் திருவையாறு போகிறார். அங்கு இருக்கும் இறைவனை பார்த்து “ஐம்புலன்களும் மயங்கும்போது அஞ்சேல் என்னும் நாதனே” என்று ஈசனைப் பார்த்து உள்ளம் உருகி பாடுவார்.

திருவையாறு கோயிலின் வெளி அழகைப் பற்றி பாடும்போது சொல்லுவார்…கோயிலின் உள்ளேயிருந்து கேட்கும் மத்து ஒலியை, வெளியே மரத்தில் இருக்கும் சில மந்திகள் இடியோசையோ என்று எண்ணி மரத்தின் உச்சிக்கு சென்று வானத்தை பார்க்குமாம்”.

இந்த இடத்தில் நான் எழுந்து “அது ஏன் சில மந்திகள் ன்னு போட்டுருக்குன்னு” கேட்டேன். கிளாஸ் கொலன்னு சிரிச்சது.எனக்கு சங்கடமா இருந்தது..

ஏதாவது அபத்தமா கேட்டுட்டேனோ?

ஆனால் அந்த கேள்வி தான் என்னை அவர் உற்று நோக்க ஆரம்பிச்ச இடம்னு நினைக்கிறேன். என்னை சில நொடி அமைதியா உற்று பார்த்தார். அப்புறம் சொன்னார்.

மற்ற மந்திகள் எல்லாம் உள்ளூர் மந்திகள் என்பதால் அவற்றிற்கு அந்த ஓசை மத்தோசை என்று தெரியும். வெளியூரில் இருந்து வந்த இந்த சில மந்திகள் தான் அது தெரியாமல்…

அதுக்கப்புறம் க்ளாசிலே சிரிப்பு சத்தம் அடங்க ரொம்ப நேரம் ஆச்சு.

ஆனால் அதுக்கப்புறம் என் சந்தேகங்களுக்கு தனி நேரம் ஒதுக்கி நிறைய சொல்லி கொடுத்தார். என்னுடைய அறிவு தேடல் இவ்ளோ காலம் நீண்டுக்கிட்டே போறது அந்த இடத்தில் ஆரம்பிச்சது தான்..

யோசிச்சுக்கிட்டே இருந்ததில் நேரம் போனதே தெரியலை. வீடு சப்தம் இல்லாமல் இருந்தது.எல்லோரும் மதிய விருந்து சாப்பிட்ட உறக்கத்தில் இருந்தனர்.

நான் மெல்ல அறையை விட்டு வெளியே ஹாலுக்கு வந்தேன். லேசா தலை வலிப்பது போல இருந்தது. ஈரத் தலையை காய வைக்க கூட நேரம் இல்லாமல் வேலையிலேயே இருந்ததால் மறந்துட்டது.. அடுககளைக்குள் நுழைந்து காபி போட்டு எடுத்து கொண்டு வந்து பால்கனியில் உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தேன்.

அவரை கடைசியா எப்ப பார்த்தேன்…ரொம்ப மாசம் தாண்டிருச்சுன்னு நினைக்கிறேன். ஏதாவது கூட்டம் அந்த பக்கம்னா போறது…

ஆனா அவர் காலேஜ்லே கடைசி நாள் சொன்னது இன்னிக்கும் ஞாபகம் இருக்கு.

“எனக்கு எப்பவாவது தான் உன்னை மாதிரி ஆர்வமுள்ள மாணவர்கள் கிடைப்பாங்க. உங்களோடெல்லாம் தொடர்பிலே இருக்கணும்னு எல்லோர் விலாசமும் இதோ இந்த நோட்டிலே குறிச்சு வச்சுக்கிட்டே வருவேன்.ஒவ்வொரு பொங்கலுக்கும் என்னோட பொங்கல் வாழத்து அட்டை உங்க எல்லோருக்கும் கண்டிப்பா என்கிட்டேயிருந்து வரும்.அப்படி வரலைனா நான் இல்லேன்னு நினைச்சுக்கோங்கன்னு சொன்னார்.

அவர் சொன்னது மாதிரி தான் தவறாம பொங்கல் அன்னிக்கு அவர் பொங்கல் வாழ்த்து அட்டை எனக்கு கைக்கு கிடைச்சுடும்..எப்படி தான் இத்தனை வருஷம் சரியா நேரம் பார்த்து அனுப்புறாரோ…

ஆமா இன்னிக்கும் அது வந்துருக்குமே…

சட்டென்று ஞாபகம் வந்தது. காலையிலேயிருந்து நியூஸ் பேப்பர் கூட படிக்காமல் இருந்தது அப்படினா அந்த லெட்டர் பாக்சிலேயே தான் எல்லாம் இருக்கும்.

கீழிறங்கி வந்து லெட்டர் பாக்ஸை திறந்தேன். கடிதங்கள், வாழ்த்து அட்டைகள்,…கிடந்தன. பரபரவென தேடினேன்…

அவர் பொங்கல் வாழ்த்து அட்டை மட்டும் அதில் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *