பேச்சுக் கலை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2023
பார்வையிட்டோர்: 5,178 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புக்குரிய சுஜாதா,

சில சமயம் பேசவே விஷயம் இருப்பதில்லை. விருந்தினர்கள் வந்தால் எதைப் பற்றிப் பேசுவதென்று யோசிக்க வேண்டியிருக்கிறது. பேசுவது ஒரு அரிய கலை. மேடைப் பேச்சுக்களைப் பற்றி நான் சொல்லவில்லை. அது வேறு விஷயம். சாதாரணமாக நம் குடும்பங்களில் ஒருவருக்கொருவர் பேசுவது. சிநேகிதர்களிடம் பேசுவது இவைகளையேதான் சொல்லுகிறேன்.

மௌனம் பல விதத்துக்கு நல்லது தான். ஒரேயடியாக மௌனமாயிருப்பதைவிடப் பிறர் மனத்தைக் குளிரச் செய்யும் வகையில் பேசுவதுதான் அதைவிடச் சிறந்தது. மற்ற ஜீவராசிகளுக்குக் கிடைக்காத வரப் பிரசாதம் நமக்குக் கிடைத்திருப்பது பேச்சுத்தான். அதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வதுதான் சரியாகும்.

கல்யாண வீடுகளில் சிலர் அசந்தர்ப்பமாகப் பேசுவதைக் கேட்கிறேம். ஒரு வீட்டில் பிரபல பாடகர் கச்சேரி செய்து கொண்டிருந்தார். அந்தச் சமயம் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த சில சகோதரிகள் அன்று காலை விமான விபத்தில் நேர்ந்த உயிர்ச் சேதங்களைப் பற்றி விஸ்தரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பாடகர் பாட்டையும் நிறுத்தி விட்டு, பக்க வாத்தியங்களையும் நிறுத்தி விட்டார். ஒரு நிமிஷத்தில் அந்த அம்மாளின் பேச்சு பந்தல் முழுவதும் கேட்டது. சங்கீதக் கச்சேரிகளில் பேசுவது மிகவும் கெட்ட வழக்கம். மேலும் கல்யாண வீட்டில் அசந்தர்ப்பமான பேச்சு மிகத் தவறுதானே.

ஒரு அம்மாள் தம் பிள்ளைக்குப் பெண் பார்க்கப் போயிருந்தார், பெண் ஆரோக்கியமாக, அழகாக இருந்தாள். அந்த மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல், “என் பெரிய நாட்டுப்பெண்ணும் கல்யாணத்தின்போது நன்றாக இருந்தாள். எங்கள் வீட்டுக்கு வந்தபிறகு நான் எவ்வளவு பார்த்துப் பார்த்துச் செய்தும் இளைத்துத் துரும்பாகி விட்டாள். எங்கள் வீட்டுச் சாப்பாட்டு ராசி போல் இருக்கிறது!” என்று சொல்லி விட்டாள். பெண்ணின் பெற்றோர்கள் ஜாதகம் பொருந்தவில்லை என்று எழுதி விட்டார்கள். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

நம்முடைய தவறு நமக்குத் தெரிவதில்லை. அதனால் கூடியமட்டும் பிறர் செய்கையைக் கவனமாகக் கவனித்தால் குற்றம் எளிதாகத் தெரியும். அத்துடனில்லாமல் நாமும் இக்குற்றங்களைச் செய்கிறோமா என்று அடிக்கடி நம்மையே ஆராய்ந்து கொண்டால் நல்ல பலன் இருக்கத்தான் செய்கிறது. தவறுகளைத் திருத்திக் கொள்ள முடிகிறது.

பல வருஷங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டுக்கு ஒரு உறவினர் குடும்பம் வந்திருந்தது. அந்த அம்மாளோ, கணவரோ தங்கியிருந்த மூன்று நாட்களிலும் எங்களைப் பற்றி ஒரு வார்த்தை விசாரிக்கவில்லை. மலேயா சுற்றுப் பிரயாணத்தையும் தங்களுடைய பெருமைகளையும், குழந்தைகளின் பிரதாபங்களையும் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு மிகவும் குறையாக இருந்தது. ஏன்? அழுகைகூட வந்து விட்டது. பிறரைப்பேச விடாமல் தாங்களே பேசும் சுபாவத்தை என்ன வென்று சொல்வது?

இன்று பெண்களாகிய நாம் பல துறைகளில் வேகமாக முன்னேறிக் கொண்டு வருகிறோம். ஒருவர் மனம் நோகப் பேச வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரிடமும் ஆண்டவனருளால் ஏதோ சில நற்குணங்கள், நற்செய்கைகள் இருக்கத் தானிருக்கும். சிலர் அபூர்வமான கைவேலைகள் செய்வார்கள், பாடுவார்கள், சமையல் சுவையாகச் செய்வார்கள். குழந்தைகளை நன்றாக வளர்த்திருப்பார்கள். அவற்றை மட்டும் குறிப்பிட்டுப் பேசுவோமே.

கஷ்டப்படும் மனத்துக்கு ஆறுதல் அன்பான பேச்சுத்தான். அவர்கள் கஷ்டத்தை ஓரளவு நம் மனத்தில் பதிய வைத்துக் கொண்டு ஆறுதல் சொல்வோமானால், அது சர்க்கரை பூசின வார்த்தைகளாகக் கூட இருக்காது: இதயத்தில் ஊறின அமுதமாக அவர்களுடைய மனப் புண்ணை ஆற்றும்.

இப்படிக்கு,
பூமாதேவி

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *