கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 8,638 
 
 

ராமையாப்பிள்ளைக்கு வர்ஷினியிடம் அலாதிப் ப்ரியம் என்ன இருந்தாலும் தவமிருந்து பெற்ற பிள்ளையல்லவா, பாசம் இல்லாமல் போகுமா. வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிடிப்பு வேண்டுமே – ராமையாப்பிள்ளைக்கு பிள்ளைப் பாசம். வர்ஷினிக்கு ஏதாவது ஒன்று என்றால் ராமையாப்பிள்ளைக்கு மூஞ்சி செத்துப் போய்விடும். இரண்டரை வயது தான் ஆகிறது அது பேசும் மழலை இருக்கிறதே. குழலும் இனிதில்லை, யாழும் இனிதில்லை மழலைதான் இனிதுயென சும்மாவா சொன்னார்கள்.

ராமையாப்பிள்ளைக்கு திடகாத்திர சரீரம் தான். ஆனால் பிள்ளைப்பேறு என்னவோ தள்ளிப் போய்விட்டது. என்ன இருந்தாலும் தலையில என்ன எழுதி இருக்கானோ அது தானே நடக்கும். சகட யோகம் தான் என்ன செய்வது. நகை போட்டு அழகு பார்க்க ஆசை வரத்தானே செய்யும். எந்தப் பெண் பிள்ளையும் அப்பாவுக்கு இளவரசி தானே. மளிகை கடை வரும்படி வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாக இருக்கிறது. மதியம் சாப்பிட வரும்முன் ராஜிக்கு பத்து தடவையாவது போன் வந்துவிடும், வர்ஷனி என்ன செய்கிறாள் தூங்கினாளா, சாப்பிட்டாளா என்று!

ராஜி ராமையாப்பிள்ளையும், வர்ஷினியையும் கண்ணுக்குள் வைத்துதான் பாதுகாத்து வந்தாள். குழந்தையின் மழலைப் பேச்சின் அர்த்தத்தை அம்மாக்கள் எப்படித்தான் புரிந்து கொள்கிறார்களோ? குழந்தை என்று வந்தவுடன் மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சமாக ஆகிவிடுகிறது அம்மாக்களுக்கு. தாய்மையை மதம் தெய்வீகத்துடன் தொடர்பு படுத்துவது இதனால் தானோ. பேறு காலத்தில் அம்மாக்களின் கனவு என்னவாக இருந்திருக்கும்? பிரசவம் இரண்டாம் பிறப்பு என்று சும்மாவா சொன்னார்கள்.

தன்னலத்தை தியாகம் செய்துவிடுவதால் தான் தாய் தெய்வமாகிவிடுகிறாள். ராமையாப்பிள்ளைக்கு வரும்படி குறைவு என்றாலும் அதை வைத்து குடும்பம் நடத்த தெரிந்திருந்தது ராஜிக்கு. நகை நட்டுக்கு ஆசைப்பட்டாலும் அதை வெளிப்படுத்தாமல் உள்ளத்திலேயே வைத்து பூட்டிக் கொள்வாள். தெய்விகம் மனதில் குடிகொள்ளும்போது கணவன் மனைவி உறவே புனிதத்தன்மையை அடைந்துவிடுகிறது. ராமையாப்பிள்ளை செய்த புண்ணியம்தான் ராஜி அவருக்கு மனைவியாக அமைந்தது. அது கொண்டா இது கொண்டா என நச்சரித்தால் ராமையாப்பிள்ளையால் நிம்மதியாக இருக்க முடியுமா? இன்னாருக்கு இன்னாரென்று இறைவன் தானே எழுதி வைத்திருக்கிறான்.

ராஜி அளந்து அளந்துதான் பேசுவாள். தன் பேச்சால் கணவனின் உள்ளம் நோகக்கூடாது என்பதில் குறியாய் இருப்பாள். வீட்டிற்கு படியளப்பவள் அன்னபூரணிதானே. சலனமற்ற குளத்தில் கல்லெறிபவன்தானே கடவுள். அவனுக்கு அது வேடிக்கை நமக்கு. இந்தக் கலிகாலத்துல ராஜி சீதையைவிட மேலானவள்தான். ராமையாப்பிள்ளை பெயரில் மட்டுமல்ல நிஜத்திலும் ராமர் தான். பொய் மானுக்கு ஆசைப்பட்டது தானே சீதை செய்த பெருந்தவறு. ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் மனிதனின் வாழ்க்கை முழுமையும் வனவாசம் தானே. பதிவிரதை என்பதால் விதி வேலை செய்யாமல் விட்டுவிடுமா என்ன? ஆட்டுவிப்பவன் ஒரு தான்தோன்றி அவனிடம் போய் பந்த பாசத்தைப் பற்றி பேச முடியுமா? அவன் வலையை இழுக்கும் வரைதான் இங்கு விளையாட்டு கூத்தெல்லாம். உறவைச் சொல்லி அழுவதை காது கொடுத்து கூட அவன் கேட்க மாட்டான்.

ராமையாப்பிள்ளைக்கு ராஜி எது சமைத்துப் போட்டாலும் தேவாமிர்தம்தான். வீடு இளைப்பாறும் இடமாக இருந்துவிட்டால் வேறொன்றும் தேவையில்லை ஒருவனுக்கு. அவளுடைய அன்பான வார்த்தைகளால் குடும்பசுமை பாரமாகத் தெரியவில்லை ராமையாப்பிள்ளைக்கு. ஒன்பதாம் மாதம் வளைகாப்பு நடத்துவதற்குக் கூட மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான் ராமையாப்பிள்ளை, ஆனாலும் ராஜி முகம் கோணவில்லை. பிரசவத்திற்கு ராஜி நகையை அடகு வைக்க நேர்ந்த போதும் அவள் அமைதியாக இருந்தாள். அவளைப் பொறுத்த வரை தாலி வெறும் மஞ்சள் கயிறு அல்ல. கணவன் கையாலாகாதவனாக இருந்தாலும் மனைவிக்கு ஸ்ரீராமன் தானே.

அவள் சீதனமாகக் கொண்டு வந்ததை அடகு வைக்க நேர்ந்த போதும் அவள் கல்லைப் போலத்தான் இருந்தாள். சிவனும் சக்தியும் இணைந்து சிவமாகிவிடுவது ஒருசிலர் வாழ்க்கையில் தான் நேரும். ஆண்கள் புத்திப்பூர்வமாக வாழ்பவர்கள். பெண்கள் இதயப்பூர்வமாக வாழ்பவர்கள் என்பது உண்மைதான். நடக்கப் போவதை எப்படியோ யூகித்து விடுகிறது பெண்கள் மனம். குழந்தையை இடுப்பிலும், கணவனை மனதிலும் சுமக்கும் அவள் தனது உள்ளக்கிளர்ச்சிகளை சம்ஹாரம் செய்து கொள்கிறாள். தியாகத்தின் மூலம் மட்டுமே தெய்வத்தை அடைய முடியும் என்பதற்கு ராஜி ஒரு நல்ல உதாரணம்.

ராமையாப்பிள்ளைக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உண்டு என்பதை கல்யாணமான புதிதில் தான் அறிந்தாள் ராஜி. அவள் மீது செய்து கொடுத்த சத்தியத்தினால் தான் அவர் இந்த நொடிவரை சிகரெட்டை தொடாமல் இருக்கிறார். ராமையாப்பிள்ளைக்கு பேச்சு ஒன்று செயல் வேறொன்று என்று கிடையாது. இதுவும் அவர் முன்னேறாததற்கு ஒரு காரணம். இப்போதெல்லாம் வியாபாரத்தில் பொய்யைத்தானே முதலாகப் போடுகின்றார்கள். பணத்தை வைத்திருப்பவனின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் தெரியும் அவன் எப்படிச் சம்பாதித்தானென்று. சமூகம் உண்மை பேசுபவனை அலட்சியப்படுத்தும் பிழைக்கத் தெரியாதவன் என முத்திரை குத்தும். ஏய்த்து பிழைப்பு நடத்துபவர்கள் மற்றவர்களின் முதுகினை படிக்கல்லாகப் பயன்படுத்துவார்கள். வலியச் சென்று ஏமாறுபவர்கள் எந்நாளும் நல்லவர்களை நாடி வரமாட்டார்கள்.

ராமையாப்பிள்ளைக்கு சாண் ஏறினால் முழம் சறுக்குகிற கதைதான். மூணு வயதில் வர்ஷினிக்கு காது குத்த வேண்டுமென்று ராஜி ஞாபகப்படுத்தியதிலிருந்து அவர் பணம் தோதுபண்ணுவது எப்படி என யோசிக்க ஆரம்பித்தார். மூலவராக தெய்வம் இருந்தாலும் பணம் தானே பாதாளம் வரை பாய்கிறது. பணம் பண்ணும் காரியம் தெரியாதவர்கள் உலகில் செத்தாரைப் போலத்தான் திரிய வேண்டியிருக்கிறது. உலகை ஆள்பவனுக்கு நாலு முழ வேட்டி போதும், மனிதர்களுக்குத்தான் ஆயிரம் படாடோபங்கள் தேவைப்படுகிறது. தேடிப்போனவர்களைத் தன்னைப்போல் ஆண்டியாக்குபவன் தானே முருகன். ராமையாப்பிள்ளையின் வயதையொத்தவர்கள் புண்ணியப் பலன்களை சேர்த்து வைததிருந்தார்களோ இல்லையோ பணம் சம்பாதிக்கும் கலையை நன்கு அறிந்திருந்தனர். காசேதான் கடவுள் என்பவர்கள் மூன்று தலைமுறைக்கு சேர்த்து வைத்துவிட்டுத்தான் சாகிறார்கள். விதியை மாற்றி எழுதத்தான் மருத்துவர்கள் இருக்கிறார்களே. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையென சொல்லிவிட்டுத்தானே சிலையாய் நிற்கிறார் திருவள்ளுவர்.

கோயிலுக்கு போகின்றவர்களைத்தான் சோதிக்கிறது சாமி. கோயில் யாருக்கும் மோட்சத்தை அளிக்காது. பிறப்பருக்கும் வித்தையை உனக்கு சொல்லித் தந்துவிட்டால் அப்புறம் கோயில் எதற்கு சாமிதான் எதற்கு. ஆறுதலுக்கு ஒரு மகளிருக்கிறாள் அவளுக்கு நாளும் கிழமையுமாய் சடங்கு, சம்பிரதாயம் செய்யத்தானே வேண்டியிருக்கிறது. வர்ஷினிக்கு தோடு செய்ய ராஜியின் வளையலை விற்கலாம் தான், ஆனால் வளையலோ மார்வாடியிடம் இருக்கிறது ராமையாப்பிள்ளை என்ன செய்வார். விதி சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது அவரை. மளிகை கடைக்கு வாடகை பாக்கி, கடைப் பையன்களுக்கு சம்பளப் பாக்கி வேறு. உறவுகளை அறுத்துவிட்டு ஓடிவிடலாம் தான் சாமானியர்களால் இது முடிகிற காரியமா?

வட்டிக்கு எவ்வளவு தான் வாங்குவாய் பத்திரத்தைக் கொண்டுவா என்று சொல்லிவிட்டான் மார்வாடி. பத்திரத்தில் வில்லங்கம் இருக்குமென்று ராமையாப்பிள்ளைக்குத் தெரியுமா என்ன? மார்வாடி கைவிரித்துவிட சொல்லாமல் கொள்ளாமல் அமைதியாக வீட்டிற்கு வந்து சாப்பிடாமல் படுத்தவர்தான். மாரடைப்பால் உயிர் பிரிந்து விட்டது. பிரக்கனை இல்லை என்று பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து வந்த ராஜி, ராமையாப்பிள்ளை தன்னையும் குழந்தையையும் அனாதையாக்கிவிட்டுச் சென்றுவிட்டார் என்பதை அறிந்து சிலையாக நின்றுவிட்டாள்.

ராமையாப்பிள்ளை வர்ஷினியிடம் விளையாடும் போது அவள் பொம்மைத் துப்பாக்கியால் சுடுவாள். ராமையாப்பிள்ளை செத்துவிடுவது போல் கீழே விழுந்துவிடுவார். வர்ஷினி ஓடிவந்து அவர் பாதங்களை வருடும் போது உயிர்த்தெழுவது போல் டாணென்று எழுந்துவிடுவார். இதை மனதில் வைத்துக் கொண்டு வர்ஷினி சடலத்தின் பாதங்களை வருடுவதைப் பார்த்து யாரால்தான் ஜீரணிக்க முடியும். கடவுளுக்கு கண்ணிருந்தால் இந்நேரம் ராமையாப்பிள்ளை உயிர்த்தெழுந்திருக்க வேண்டாமா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *