பெரிய டாக்டர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 5,001 
 
 

(இதற்கு முந்தைய ‘தேன்நிலா’ கடையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

எனக்கு அப்போது வயது பதினைந்தோ அல்லது பதினாறோ…

ஒருநாள் நான் என்னுடைய அப்பா வழி பாட்டியைப் பார்க்க மீனம்பாக்கத்தில் இருக்கும் அவளுடைய வீட்டிற்குப் போயிருந்தேன். அப்போது சமையலறைக்குள் வந்து காபி போடுவதற்காக வைத்திருந்த பாலை திருட்டுத்தனமாக குடித்துவிட்டுப் போன ஒரு பூனையைப் பற்றி என்னிடம் அதை திட்டிக் கொண்டிருந்த பாட்டி திடீரென, “சிவாவிற்கு பூனைகளைப் பார்த்தாலே பிடிக்காது… அதுகளை கொஞ்சம் பக்கத்தில் பார்த்தாலே பயந்து நடுங்கிடுவா. யாராவது அந்தப் பூனையை விரட்டுங்களேன்னு சொல்லிக்கிட்டே கதவுக்குப் பின்னாடி ஓடிப்போய் ஒளிஞ்சிக்கிடுவா…” என்று சொன்னாள்.

பாட்டி சொன்ன ‘சிவா’ என்பது என்னுடைய சின்ன வயசிலேயே செத்துப் போய்விட்ட என்னுடைய அம்மாவை. என் அம்மாவின் முழுப்பெயர் ‘சிவசங்கரி’.

பாட்டி திடீரென்று இப்படிப் பேசியது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ‘என் அம்மாவுக்கு பூனைகளைப் பார்க்கவே பிடிக்காது பயம்’ என்ற விஷயத்தைவிட, பாட்டி என் அம்மாவைப் பற்றிப் பேசியது ஆச்சர்யத்தைத் தந்தது. பாட்டி என் அம்மாவின் மாமியார். பாட்டி என் அம்மாவைப் பற்றி பொதுவாக என்னிடம் பேசவே மாட்டாள்.

எனக்கு மூன்று வயதும் என் அக்காவிற்கு ஆறு வயதும் நடந்து கொண்டிருந்தபோது என் அம்மா இறந்துவிட்டாள். அம்மா இறந்துவிட்டது எனக்கும் என் அக்காவுக்கும் தெரியாதபடி எங்கள் பாட்டியும், அத்தையும் எங்களை ஜாக்கிரதையாக வளர்த்தார்கள். அத்தையின் கணவர் நீலகண்ட அத்திம்பேர் மீனம்பாக்கம் சிவில் ஏவியேஷன் டிபார்ட்மென்டில் கம்யூனிகேஷன் ஆபீஸராக அப்போது இருந்தார்.

“அம்மா எங்கே? அம்மாகிட்ட போகணும்” என்று அக்கா கேட்கும்போது, “அம்மா மானத்தில் ஆஸ்பத்ரில இருக்கா… உடம்பு சரியானதும் வந்துடுவா” என்று வானத்தைக் காட்டுவார்கள்.

“ம் ஹூம்… நாங்க இப்பவே அம்மாவைப் பார்க்கணுமே”

“இப்போல்லாம் பார்க்க முடியாது. இப்ப போனா பெரிய டாக்டர் உள்ள விடமாட்டார்.”

“பெரிய டாக்டர் யாரு?”

“அங்க பெருமாள்தான் பெரிய டாக்டர். அவர் மேலேருந்து அப்பப்போ நீங்க ரெண்டுபேரும் சமர்த்தா இருகீங்களான்னு எட்டிப் பார்ப்பார். நீங்க ரெண்டுபேரும் அழாம சமர்த்தா பாட்டியைப் படுத்தாம சாப்பிடணும். அத்தை சொல்ற கதையைக் கேட்டுட்டு தூங்கணும். அப்போதான் பெரிய டாக்டர் அம்மாவைப் பார்க்க விடுவார்.

“இல்லாட்டி?”

“பேட் கேர்ல்ஸ்னு சொல்லி உள்ள விடமாட்டார்.”

“சமர்த்தா இருந்தா?”

“குட் கேர்ல்ஸ்னு அம்மாகிட்டே அழைச்சிட்டுப் போவார்.”

அத்தையும் பாட்டியும் என் அம்மா இறந்து போவதற்கு முன், சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டிருந்த வேலூர் ஆஸ்பத்திரியைப் போலவே வானத்தில் கற்பனையாக ஒரு ஆஸ்பத்திரியை சிருஷ்டி செய்து அதைக் குழந்தைகள் மொழியில் ‘மானத்து ஆஸ்பத்திரி’ என்று கூறி வசீகரமான முறையில் எங்களை மயக்க வைத்தார்கள்.

‘பொய்மை’ என்பதன் அறிமுகமே ஆகியிராத கள்ளங்கபடமற்ற மழலைப் பருவம். அதனால் நாங்கள் அவர்கள் சொன்ன கதைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, மேலும் அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக நிறைய கேள்விகள் கேட்போம்.

“அத்தே அவ்ளோ உயரத்தில் இருக்கிற ஆஸ்பத்திரிக்கு எதில போறது?”

“ஏரோப்ளேன்லதான். ஏரோப்ளேன்ல ஏறி மேகத்துக்கு அந்தப்பக்கம் போனா, அப்படியே ஆஸ்பத்திரி வந்துடும். அதோ பார் இப்பக்கூட யாரோ போயிண்டிருக்கார்…”

அத்தை மேலே காட்டும்போது மினுக் மினுக் என்ற விளக்குகளின் வெளிச்சம் மூலம் மேகத்தினருகில் ஓர் ஆகாய விமானங்களுக்கு வழிகாட்டும் ‘கண்ட்ரோல் டவரிலேயே’ அத்திம்பேருக்கு வேலை என்பதால் ஆகாய விமானங்களைப் பற்றிய அறிமுகம் எங்களுக்கு இருந்தது. அதனால் விமானத்தில் ஏறி மானத்து ஆஸ்பத்திரிக்குப் போவது சாத்தியமே என்று நினைத்து, சற்றும் தயங்காமல் அடுத்தக் கேள்வி பிறக்கும்.

“அந்த மானத்து ஆஸ்பத்திரில இன்னும் யாரெல்லாம் இருப்பா?”

“அங்க தேவதைகள் எல்லாம் நர்ஸா வேலை பார்க்கறா… அவாள்லாம் உங்களுக்கு நிறைய சாக்லேட், ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித் தருவா.”

“ஹை ஜாலி. அப்புறம்?”

“குட்டிப் பாப்பா அழகா இருக்காளேன்னு உன்னைத் தூக்கிப்பா, உன் பேரென்னன்னு கேட்பா… நீ உன் பேரைச் சொல்லுவியா?”

“ஓ சொல்வேனே.. மை நேம் இஸ்” என்று ஆரம்பித்து நானும் என் அக்காவும் கோரஸாக அவரவர் பெயரைச் சொல்லுவோம்.

“வெரிகுட். வாங்க உங்களை அம்மாகிட்ட கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி நர்ஸ் தேவதை உங்களை அம்மாகிட்டே கூட்டிண்டு போவா. நீங்க ரெண்டுபேரும் அம்மாவைப் படுத்தாம, மேலே விழாம ஓரமா உட்கார்ந்திண்டு பேசணும். சரியா?” அத்தை இப்படிச் சொன்னவுடனேயே “ஹையா அம்மாகிட்டப் போறோம்… ஜாலி, ஜாலி” என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்போம்.

“சரி, சரி குதிச்சதெல்லாம் போதும்… இப்போ சமர்த்தா படுத்திண்டு தூங்கணும்” என்று அத்தை எங்களை இழுத்துப் படுக்க வைப்பாள். ‘அம்மாவைப் பார்க்கலாம்’ என்று கேள்விப் படும்போதே, அம்மாவை நேரிலேயே பார்த்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, அந்த மயக்கம்தரும் சந்தோஷத்திலேயே நானும் அக்காவும் தூங்கிப் போய்விடுவோம்.

“பெரிய டாக்டர் உள்ளே விடமாட்டார்” என்ற மந்திரச் சொல்லை வைத்துக்கொண்டே அவர்கள் நாங்கள் இருவரும் குளிப்பதற்கோ, சாப்பிடுவதற்கோ அல்லது வேறு எந்தக் காரணங்களுக்காகவோ அழுது பிடிவாதம் பிடிக்காதபடி பார்த்துக் கொண்டார்கள். எங்களை ஸ்கூலில் சேர்த்தபிறகு நாங்கள் குறித்த நேரத்திற்குள் ஸ்கூல் புறப்படுவதற்கும், ஸ்கூல் முடிந்து வந்தவுடன் வீட்டுப் பாடங்களை ஒழுங்காகச் செய்யவும் ‘பெரிய டாக்டர்’ ரொம்பவும் உதவினார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் என் அப்பா இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டு சித்தி வந்த பின்பும், சித்தி மூலம் அடுத்தடுத்து இரண்டு தம்பிகள் பிறந்தும் கூட ‘மானத்து ஆஸ்பத்திரி’ கதை தொடர்ந்தது.

எங்களை ஸ்கூலில் சேர்த்தது கூட அவர்களுக்கு இன்னொரு விதத்தில் சாதகமாகப் போய்விட்டது. “அம்மாவை எப்போது பார்க்கலாம்?” என்ற கேள்வி கேட்கப்படும் போதெல்லாம், “பெரிய லீவு” அதாவது கோடை விடுமுறை விட்டவுடன்தான் போய்ப் பார்க்க முடியும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

என் அப்பாவிற்கு ஊர் ஊராக மாற்றலாகும் வேலை என்பதால், கோடை விடுமுறையின் போது அப்பா வந்துதான் ஊருக்கு அழைத்துப் போவார். புதிய புதிய ஊர்களையும் அந்தந்த ஊர்களில் இருக்கும் மிருகக் காட்சிச் சாலைகளோ, கடற்கரையோ, கோயில்களோ அல்லது வேறு ஏதாவது சுற்றுலா இடங்களுக்கோ அப்பா அழைத்துப் போகும்போது எங்களின் கவனம் அவைகளின் பக்கம் திரும்பிவிடும். தப்பித் தவறி மானத்து ஆஸ்பத்திரிக்கு போகணுமே என்பது ஞாபகம் வந்து அப்பாவிடம் கேட்டால், “ பெரிய டாக்டருக்கு லெட்டர் போட்டிருக்கேன், இன்னும் பதில் வரலை. பதில் வந்ததும் நான் ஊருக்கு வந்து உங்களை அழைச்சிட்டுப் போறேன்” என்று சொல்லி விடுவார்.

திடீரென்று எங்கள் குடும்பத்தில் எதோ பிரச்னை ஏற்பட்டது. அதனால் என்னையும் அக்காவையும் கொண்டுபோய் கல்லிடைக்குறிச்சியில் இருக்கும் எங்கள் அம்மா வழி தாத்தாவிடம் விட்டு விட்டார்கள். சன்னதித் தெருவில் இருந்த அந்தக் கிராமத்து வீட்டில் தாத்தா மட்டும்தான். பாட்டி என் அம்மாவுடைய சின்ன வயதிலேயே இறந்து விட்டிருந்தார்கள். இப்போது எங்கள் அம்மாவும் இறந்துவிட்டதால் தாத்தாவிற்கு வீட்டில் இருக்கவே விருப்பமில்லாமல் எப்போதும் பெருமாள் கோயிலிலேயே இருப்பார்.

அவர் காலையிலேயே எங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்து வைத்துவிட்டு கோயிலுக்குப் போய்விடுவார். பிறகு கோயிலைப் பூட்டும் போதுதான் வீட்டிற்கு திரும்பி வருவார். அதிகமாக எதுவும் பேசமாட்டார். அவரிடம் ‘அம்மா’ என்று ஆரம்பித்தாலே அவர் கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்துவிடும் என்பதால் நாங்களும் அவரிடம் அம்மாவைப் பார்க்கணும் என்று எதுவும் கேட்க மாட்டோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *