பெரியம்மா சொத்து…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 5,798 
 

பெரியம்மா இவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டி விடுவாரென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

இவள் இறப்பு இத்தனை பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

சொத்துக்கு எவ்வளவு போட்டி. .? எனக்குள் வியப்பு, திகைப்பு.

அப்பா வீட்டுக் கொடுக்கலாம். எதிராளியும் தழைந்து போய் ஒருவருக்கொருவர் சமரசம் ஆகலாம். இருதரப்புமே நியாயம் ..! என்று என் மனசுக்குப் பட்டது.

பெரியம்மா கோசலை. .. என் அம்மாவைவிட இரண்டு வயது மூத்தவள். என் அம்மாவைப் பெற்ற தாத்தாவிற்கு இரண்டு ஆண் , அப்புறம் அடுக்கடுக்காய் ஐந்து பெண்கள். பெரியம்மாவும் என் அம்மாவும் அடுத்தடுத்துப் பிறந்தவர்கள்.

பெரியம்மா சிறு வயதிலேயே அறுத்துப் போனவள். திருமணம் முடித்து ஒரு மாதம்கூட முழுதாய் வாழாமல் பெரியப்பா வயல் வரப்புக்குப் போய்… பாம்பு கடித்து செத்துப் போனதாக எனக்கு சொல் கேள்வி. தாலி அறுத்துப் போட்டதிலிருந்து பெரியம்மா ஜாக்கெட் போடுவதையும் விட்டாள். அது என்னவோ அந்த கால பழக்கம் அப்படி.

பெரியம்மாவுக்கு மேலும் கீழும் அக்கா, தங்கைகளிருந்தாலும் இவளுக்கு அடுத்துப் பிறந்த என் அம்மா மீதுதான் பாசம், பிரியம்.

பெரியம்மா வாழும் ஊருக்கும் நாங்கள் வசிக்கும் இடத்திற்கும் ஏறத்தாழ எழுபத்தைந்து கிலோ மீட்டர் தூரமென்றாலும்.. பெரியம்மா மாதம் இரு முறை எங்கள் வீட்டிற்குத் தவறாமல் வந்து நான்கு நாட்கள் தாங்கிப் போவாள்.

எங்கள் குடும்பத்தில் என்னையும் சேர்த்து மொத்தம் ஏழு சகோதரிகள். எல்லாருமே இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்துப் பிறந்தவர்கள். பள்ளிக்கூட விடுப்பில் நாங்களெல்லாம் படையாய்ப் பெரியம்மா வீட்டிற்குச் செல்வோம்.

பெரியம்மா வீடு… பெரிய பங்களாவோ, ஓட்டு வீடோ கிடையாது. நூறு தென்னை மரங்கள் உள்ள ஒரு தோப்பிற்கு நடுவே சின்ன ஓலை குடிசை. இது தவிர அவளுக்கு ஐந்து ஏக்கர் நஞ்சை, புஞ்சைகள் உண்டு. இந்த வருமானத்தில்தான் பெரியம்மா ஜீவனம், வாழ்க்கை.

அநேகமாக எங்கள் வீட்டிற்கு பெரியம்மா நெல் எடுத்து வரவில்லை. மற்றப்படி….கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை…. என்று அவளிடம் விளையும் அத்தனையையும் சிறுகச் சிறுக எடுத்து வருவாள். ஒரு காலகட்டம், அப்பா வேலை இல்லாமல் இருந்தபோது குடும்பத்தையே தாங்கினாள். அப்போது பெரிய பெரிய எருமைகளாய் ஏழெட்டுக் கொடுத்து முன்னேற்றியவளும் இவளே.

என் பெரிய தங்கை திருமணத்தின் போது… ‘ எனக்கெதுக்கு நகை நட்டு…? ‘ என்று சொல்லி தன்னிடமிருந்ததையெல்லாம் கொடுத்து உதவி சுமை குறைத்தாள். அடுத்து. . இன்னொரு தங்கைக்கு மாப்பிள்ளைப் பார்த்து தன் சொந்த செலவில் திருமணத்தை முடித்தாள். அம்மாவின் ஏழு பிள்ளைகளையும் சலிப்பின்றி பிரசவம் பார்த்தாள்.

இப்படிப்பட்டவளின் இறப்பிற்குப் பின்தான் பூகம்பம் !!.

துக்க சேதி வந்ததுமே…. பதறி அடித்து குடும்பமே போய் விழுந்தோம். ஊர்க்காரர்களில்லாமல் வேறு இரண்டு புதிய முகங்கள் இருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்தால் என் அப்பாவைவிட முக்கியமானவர்களாய்த் தெரிந்தது.

” யார். ..? ” குழம்பினேன்.

அப்பாவிடம் கேட்டேன்.

” அவர்கள் பெரியம்மாவோட கொழுந்தனார்கள். அவ புருசனோட அண்ணன் , தம்பிகள். பக்கத்து கிராமத்துல இருக்காங்க. ” சொன்னார்.

” நான் இவுங்களை பெரியம்மா வீட்டில் பார்த்ததில்லையே. .? ” என்றேன்.

” அண்ணன் செத்தபிறகு தொடர்பை தூண்டிச்சுக்கிட்டாங்க. .”

” இப்போ எதுக்கு வந்திருக்காங்க. .? ”

” விஷயமிருக்கு. .” அப்பா அதோடு நிறுத்திக்கொண்டார். எடுப்பு ஏற்பாடுகளைப் பார்த்தார்.

பெரியம்மாவின் உடலை சுடுகாட்டில் வைத்து வீடு திரும்பியதும்தான் பூகம்பம் வெடித்தது.

” கருமாதி முடிஞ்சதும் இந்த கொல்லைக்கு வேலி வைக்கணும், விவசாயம் பண்ணனும். .! ” என்று இருவரில் ஒருவர் மற்றவருக்குச் சொல்லி…. பிரச்சனையை ஆரம்பித்தார்.

அருகிலிருந்த அப்பா இதை எதிர்பார்த்தவர்போல் , ” எதுக்கு. .? ” கேட்டார்.

” வாரிசு இல்லாத அண்ணன் சொத்து தம்பிகளுக்குத்தானே. .! ” அப்பாவிற்கு இன்னொருத்தர் பதில் சொன்னார்.

”இல்லே ” அப்பா திடமாக மறுத்தார்.

” பின்னே. உங்களுக்கா. ..” அவர் வெடித்தார்.

” ஆமாம். .! ” அப்பா அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

” எழுதி வாங்கி இருக்கீங்களா. .? ”

” இல்லே. .”

” அப்புறம் எப்படி சொந்தமாகும். ..? ”

” கோசாலைக்கு நல்லது கேட்டது செய்ஞ்சிருக்கேன். இந்த நிமிசம் எடுப்பு செலவுவரை என்னுது. ”

” மாத்தி சொல்லாதீங்க. கோசாலைதான் உங்களுக்குச் செய்ஞ்சாங்க. அந்த காசுலதான் இப்போ நீங்க செய்ஞ்சது. தூசு. .! ”

” அப்படியே இருக்கட்டும். கோசாலைக்கு என் வீட்டுக்காரி மேல உசுரு. அதனாலதான் அவ தங்கச்சிக்கு நல்லது கேட்டது செய்ஞ்சாங்க . உங்க பாணியில் சொன்னா… குடும்பத்தையே தாங்கி இருக்காள். அவளுக்கும் தங்கைக்குக் கொடுக்கத்தான் ஆசை. அப்படி செய்ஞ்சாதான் கோசலை ஆத்மா சாந்தி அடையும். ” அப்பா விலாவாரியாக சொல்லி நிறுத்தினார்.

” அண்ணி. . தங்கைக் குடும்பத்துக்கு செய்தது வேற விசயம். .” கூட இருந்தவர் குதர்க்கமாய் பதில் சொன்னார்.

” அது என்ன விசயமாக இருந்தாலும் சொத்து எங்க கைக்கு வர்ரதுதான் சரி. ” – அடுத்தவர்.

” வைப்பாட்டி சொத்துக்கு உரிமை கொண்டாடுற முதல் ஆள் நீங்கதான். ! ” முதலாவதாக பேசியவர் இடியை இறக்கினார்.

இதைக் கேட்ட அடுத்த வினாடி. ..

எனக்குள் அப்பா மீது இருந்த மதிப்பு மரியாதையெல்லாம் பொலபொலவென்று விழுந்தது.

‘ பெரியம்மாள் உள்நோக்கத்தோடுதான் மூட்டைக்கு கட்டி வந்திருக்கிறாள். .! ‘ புரிய. .உள்ளுக்குள் இடி விழுந்தது.

நான் சிறுவனாய் இருக்கும்போது நடுநிசியில் விழிப்பு வர பெரியம்மாவும், அப்பாவும் உள்ளே இருட்டிலிருந்து வந்தது ஞாபகம் வர. …

அட. ..! சமைந்தேன்.

” அப்படியும் வைச்சுக்கலாம். .! ” அப்பாவிற்கு கோபம் வந்தது. முகம் சிவக்கச் சொன்னார்.

” அப்படி ஒன்னும் சட்டமில்லே. .”

” பார்க்கலாம் ! ” அப்பாவும் சளைக்கவில்லை.

அடுத்து காச் மூச் என்று ஒரே கலவரம். அவர்கள் இருவர். அப்பா ஒருவர். அடிதடி மூளும் நிலை.

ஊரார்கள் வந்துதான், ” நீங்க போங்க. .. நீ போப்பா. .” அவர்களையும் அப்பாவையும் பிரித்தார்கள்.

அம்மா பேசவில்லை.

‘ வெட்கக்கேடு !’ எனக்கு அவமானமாக இருந்தது.

அப்படியும் பிரச்சனை முடிந்தபாடில்லை.

அப்பாவும், அவர்களும். ..உர், முர் என்று முறைத்து உறுமினார்கள்.

அப்பாவின் கோபம். .’ அவமானம் ‘ என்பதாகத்தான் எனக்குப் பட்டது. !

விசயம் வெளிவருவதற்கு முன் வாயை அடைத்திக்கலாம். முரண்டாய் விட்டிருக்கலாம். அதை விடுத்து இப்போது கோபப்பட்டு என்ன லாபம். .?

உரிமை பிரச்சனை . அவர்களும் வெட்கம் விட்டு பேசியது கேவலம். !

” நாளைக்குப் பத்து ஆட்களைக் கொண்டு வந்து இங்கே வேலி வைக்கிறதுதான் முதல் வேலை. ..” இருவரில் ஒருவர் முணுமுணுத்தார்.

” பார்க்கலாம் ! ” அப்பாவும் திரும்ப பதில் கொடுக்க. ..

சமாதானப்படுத்திய ஊர்க்காரர் ஒருத்தருக்கு ஆத்திரம் வந்தது.

” இதோ பார்ப்பா ! நீங்க மூணு பேருமே வெளியூர் ஆளுங்க. இங்கே வந்து கட்சி கட்டி, கலவரம் பண்ணுனீங்கன்னா ஊர்க்கார நாங்க சும்மா இருக்க மாட்டோம். நாளைக்கு ஊருக்குப் போன பெருந்தலை நாட்டாமை விருந்துக்குப் போனவர்… திரும்புவார். அவர்கிட்ட பிரச்சனையைக் கொண்டு போவோம். அவர் சொல்றது நியாயமா இருக்கும். அதுபடி நடங்க. இல்லே. .. கோர்ட்டுக்குப் போங்க. .” முற்றுப்புள்ளி வைத்தார்.

அடங்கினார்கள்.

யோசிக்க. .யோசிக்க. .. எனக்கென்னவோ. .. இரண்டு பக்கமுமே நியாயமாகவும், அநியாயமாகவும் பட்டது. என் புத்திக்கு எட்டியவரை வழக்கு யார் பக்கம் ஜெயிக்கும் என்று தெரியவில்லை.

அண்ணன் சொத்து தம்பிக்கு இல்லை. திரும்ப தகப்பன் வீட்டிற்கு. அவர்கள் ஜெயிக்க வாய்ப்புண்டு. வக்கீல் வாதத்திறமை அப்பாவுக்கு ஜெயிக்கலாம்.

நாளை நாட்டாமை என்ன சொல்வார். ?!

அப்பாவும் விடமாட்டார். அவர்களும் பிடி கொடுக்க மாட்டார்கள்.

” ஒருத்தருக்கும் வேணாம். அனாதை ஆசிரமத்திற்கு சேர்ப்போம் ! ” – சொல்வாரா. இதுதான் தீர்ப்பா. ?!

மறுநாள்.

எல்லோருக்கும் பொழுது நல்லவிதமாக விடிந்தது.

நாட்டாமை காத்தமுத்து வயது 80 . காலையிலேயே துக்கம் விசாரிக்க வந்து விட்டார்.

எல்லோரும் கூடி இருந்தார்கள். பிரச்சனை சொல்லப்பட்டது.

மௌனம்

அவர் சிறிது நேரத்திற்குப் பின் வாயைத் திறந்தார்.

” புருசன் செத்துப் போய்ட்டான். பொண்ணு தவிக்கக் கூடாதுன்னுதான் புகுந்த வீடும், பொறந்த வீடும் ஆளுக்குப் பாதி கொடுத்ததுதான் கோசாலைக்குச் சொத்து சேர்ந்த வரலாறு. நியாயப்படி பார்த்தா….. அவள் இறப்புக்குப் பின் அப்படித்தான் பிரியனும். ! ” நிறுத்தினார்.

சம்பந்தப்பட்டவர்கள் எவர் முகத்திலும் ஈயாடவில்லை.

தொடர்ந்தார்.

” உரிமையான சொத்தாக இருந்தாலும்….. கோசலை தங்கள் தலையில விடிஞ்சிடுவாளோ என்னவோ என்கிற பயத்துல எந்தவித தொடர்பும் இல்லாம தூர நின்னு இருந்த முனுசாமி, கோவிந்தசாமிகள் இன்னைக்குச் சொத்து கேட்கிறது ஒரு வகையில சரி இல்லே.!

அதே மாதிரி… என்னாலதான் அவள் நிம்மதி அடைஞ்சாள். எனக்குத்தான் சேரணும்ன்னு அப்பாசாமி கேட்கிறதும் தப்பு. நீ. .. அவளுக்கு உடலால சாந்தி பண்ண. ..அவள் திரும்ப குடும்பத்துக்கு என்னனென்னவோ கொடுத்து சரி காட்டினாள். சரியாய்ப் போயிடுச்சி. பின்னே. … சொத்து யாருக்குச் சேரனும். ..? ” கேட்டு எல்லோரையும் பார்த்தார்.

யாரும் வாயைத் திறக்கவில்லை.

” அதுக்கு ஒரே ஒரு ஜீவனுக்குத்தான் தகுதி. அவதான் அப்பாசாமி மனைவி அன்னபூரணி ! ” பார்த்தார்.

கேட்ட எல்லார் முகத்திலும் வியப்பு, திகைப்பு.

” எந்த ஒருத்தியும்… எப்படிப்பட்ட என்ன சூழ்நிலையிலும் தன் புருசனைப் பங்கு போட விடமாட்டாள். ஆனா. . இவ, தன் அக்கா நிலை தெரிஞ்சி…. அவ மேல…. பாவப்பட்டு, இரக்கப்பட்டு புருசனை விட்டுக்கொடுத்து பொறுமையாய் வாழ்ந்திருக்காள். அவ பொறுமைக்கும், மனசுக்கும் இந்த சொத்தென்ன. .. இன்னும் கொடுக்கலாம். ..” முடித்து நிறுத்தினார்.

‘ அட. .! இந்த கிராமத்து பெரியவருக்கு என்ன ஒரு புத்தி , தீர்ப்பு ! ‘ எனக்குள் பளிச்சென்று வெளிச்சம் அடித்தது.

என்னப் போலவே எல்லார் முகங்களிலும் பளீர் வெளிச்சம், மலர்ச்சி.

அடுத்த வினாடி. ..அம்மா. . எனக்குள் மடமடவென்று வளர. ..

முனுசாமி, கோவிந்தசாமி தலைகுனிந்தவர்களாய் நிற்க…

அப்பா மட்டும் அதிர்வாய் நின்றார்.!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *