பெரியநாயகி பெரியம்மா பெரிய ஸ்பெஷலிஸ்ட். ஒரு வாக்கியத்தி-லேயே இத்தனை ‘பெரிய’ இருப்பதைப் பார்த்து விட்டு அவர் எதில் ஸ்பெஷலிஸ்ட் என்று யோசிக்கிறீர்களா?
தலைவலி, ஜலதோஷம், தசைப்பிடிப்பு, எலும்புமுறிவு என்று ஒரு ‘லிஸ்ட்’டுக்கே அவர் ஸ்பெஷலிஸ்ட்! படிப்பு என்னவோ அந்தக் காலத்து எட்டாப்புதான். ஆனால், தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகிற எல்லா மருத்துவப் பத்திரிகைகளையும் ஒரு நாளைக்கு மூன்று வேளை கரைத்துக் குடித்து, கரை கண்டவர்.
போலி டாக்டராக போர்டு வைத்து.. போலீஸில் மாட்டி.. பேப்பரி போட்டோ வந்து.. என்று பப்ளிசிட்டி பண்ணிக் கொள்ளவில்லையே தவிர, உறவு வட்டங்களுக்கு மத்தியில் அவர் செய்து கொண்டிருந்தது அதே ‘சேவை’யைத்தான்!
வீட்டு வேலை பார்க்கும் தாயம்மா, பக்கத்து வீட்டு மங்களத்தம்மா பாட்டி, டிரைவர் கந்தசாமி.. என்று பெரியம்மாவுக்கென்றே பிறப்பெடுத்த சில அப்பாவிகளுக்கு அவர்தான் கைராசி டாக்டர்.
”அது என்னவோம்மா.. டாக்டர்கிட்ட போய் அலைஞ்சு, செலவு செஞ்சும் நோய் தீர மாட்டேங்குது. ஆனா, அம்மா சொல்லி ஒரு மாத்திரை வாங்கிப் போட்டா உடனே சரியாயிடுது” என்று வாயெல்லாம் பல்லாக பெரியம்மாவைப் புகழ்ந்து வைத்தது எவ்வளவு பெரிய சமூக விரோதச் செயல் என்பது தாயம்மாவுக்கு அப்போது புரியவில்லை.
ஒருமுறை பெரியம்மாவின் பக்கத்து வீட்டுக் குட்டிப் பையன் அஷ்வந்த்துக்கு அடிக்கடி தலைவலி வருவதாக அவன் அம்மா கீதா பேச்சுவாக்கில் சொல்லப் போக, துவங்கியது குழப்பம்!
”தலைவலியையெல்லாம் சாதார-ணமா நினைச்சுடாத கீத்து. கண்ணுல ஏதாவது பிரச்னையா இருக்கலாம். கவனிக்காம விட்டுட்டா, கண்ணே தெரியாம கூட போயிடலாம். அது-வாவது பரவாயில்ல. அன்னிக்கு ஒரு டி.வி புரோகிராம்ல சொன்னாங்க. சாதா தலைவலினு நினைச்-சாராம் ஒருத்தர். கடைசியில பார்த்தா அது பிரெய்ன் ட்யூமராம்..” என்று பெரி-யம்மா சொல்லி முடிக்கும் முன்னரே மயக்கமாகி விழுந்தாள் கீதா.
பிறகென்ன? எக்ஸ்ரே முதல் எம்.ஆர்.ஐ வரை அத்தனையும் கீதாவுக்கும் அஷ்வந்த்துக்கும் சேர்த்தே எடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. டாக்டருக்கு சில ஆயிரங்-களையும் பரிசோதனை நிலையங்-களுக்கு பல ஆயிரங்களையும் அழுத பிறகு, ‘உங்க குடும்பத்துல யாருக்கும் தலையில ஒண்ணுமே இல்லங்க’ என்று சர்டி-ஃபிகேட் வாங்கியதுதான் மிச்சம்.
டெஸ்ட்டுகளுக்காக ஸ்கூலுக்கும் ஹோம் வொர்க்குக்கும் லீவு விட்டதில் அஷ்வந்த்தின் தலைவலி ‘பாய்’ சொல்லிக் கொண்டு போய்விட்டது.
அதன் பிறகு, ஹேட்மாஸ்-டரைப் பார்த்ததும் ஓடும் குழந்தைகளைப் போல, பெரியம்மாவைப் பார்த்து பெரியவர்களே ஓட ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனாலும் விடுவாரா பெரியம்மா. மெனக்-கெட்டு பஸ் ஏறி நாகர்கோயிலில் இருக்கும் தன் நாத்தனார் வீட்டுக்குப் போயிருக்கிறார். இவரைப் பற்றி ஆதி அந்தம் தெரியந்ததுமே அவளும் இவரை அரக்கப்பறக்க கவனித்திருக்கிறாள்.
”இந்த கிளைமேட்டே உடம்புக்கு நல்ல மருந்துனு பத்திரிகையில படிச்சிருக்கேனே” என்று நாத்தனாரை விட்டுவிட்டு சீதோஷ்-ணத்தை சிலாகித்த பெரியம்மா, ஐந்தாறு நாளாகியும் அசராமல் அங்கேயே டேராவை ஆழப் பதித்திருக்கிறார்.
நான்கு நாட்களாக நாயாக அலைந்து திரிந்து வேலை பார்த்த அசதி ஆறாவது நாளில் நாத்தனாரை காய்ச்சலில் தள்ளி விட்டது.
”என்னடி இது.. கிழிஞ்ச நாராட்டம் இருக்கியே, ஏதாவது சாப்பிட்டீயா?” என்று பெரியம்மா கேட்க, அவளும் பலியிடுவதற்கு சம்மதம் சொல்லி, வேக வேகமாகத் தலையை ஆட்டும் ஆடு மாதிரி, ”இல்லை பெரியம்மா.. ரொம்பக் குமட்டுது..” என்றிருக்கிறாள்.
”அய்யய்யோ! சோர்வு, குமட்டல், காய்ச்சல்.. இத்தனை-யும் இருந்தா, அது நிச்சயம் மஞ்சக்காமாலையே–தான். ஆமா.. யூரின் கலர் எப்படி போகுது?”
”மஞ்சள்”
”அச்சச்சோ.. கீழா நெல்லியை பறிக்க ஆள் அனுப்பியாச்சா.. இன்னிக்கு கொழம்ப தாளிச்சுட்டியா? பரவாயில்ல நீ மட்டும் மோர் சேர்த்துக்கோ” என்று வீட்டை ரெண்டாக்கிவிட்டார் பெரியம்மா!
அவள் வீட்டுக்காரர் ஆபீஸிலிருந்து வரும் போது பால்கனி எல்லாம் இளநீர் இரண்டிரண்டாகப் பிளந்து கிடக்க, டென்ஷனாகிவிட்டார் மனிதர். ”உங்க அண்ணியைப் பத்தித் தெரியாதா? சாதாரண காய்ச்சலுக்கு இப்பிடி தேவையில்லாம அலட்டிக்-கிறியே!” என்று அவர் சத்தம் போட, இவளோ, ”எனக்கு ஏதாவதுன்னா ஏன்னு கேக்க இந்த வீட்டுல யார் இருக்கா?” என்று ஒருபாட்டம் ஒப்பாரி வைக்க, பொறுக்க மாட்டாமல் டாக்டரிடம் அழைத்துப் போய் எல்லா டெஸ்ட்களை-யும் எடுத்திருக்கிறார்.
ரிசல்ட் என்ன? வழக்கம்போல நார்மல்-தான்! காய்ச்சலுக்கு இரண்டு நாட்க-ளாக எடுத்துக் கொண்ட மாத்திரைகளால்தான் அசதி, குமட்டல், மஞ்சள் சிறுநீர் எல்லாமே!
”கண்ட மாத்திரையெல்லாம் போட்டா இப்படித்-தான். பேராசிடமா-லும் ‘விட்டமின் சி’யும் கலந்த மாதிரி நான் ஒரு மாத்திரை வாங்கித் தர்றேன் அதப் போட்டீன்னா..” என்று பெரியம்மா மேலும் வாய் திறக்க, நாத்தனார் வீட்டுக்காரர் ஆஸ்பத்திரியே இடிந்து விழும் அளவுக்கு அலறி இருக்கிறார்.
நாகர்கோயிலில் இத்தனை அவமானப்-பட்டு திரும்பி வந்தவர், ஸ்டேஷனில் வைத்தே சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? ”அவருக்கு லேசா ஹிஸ்டீரியா மாதிரி இருக்கு.. நல்ல சைக்கியாட்ரிஸ்ட்டை பார்க்கச் சொல்லணும்.. எங்கே.. மனுஷன் கேக்க மாட்டேங்கறாரே!”
பெரியம்மாவைப் பார்த்து உறவுகள் மட்டுமல்லாமல் அவர் குடும்பமே நடுங்க ஆரம்பித்தது சமீபத்தில்தான்.. அமெரிக்காவில் இருந்து நிச்சயம் செய்து கொள்-வதற்-காக விடுமுறையில் வந்த ஆனந்த்துக்கு (அட.. பெரியம்மா பத்து மாதம் சுமந்து பெத்த பிள்ளைங்க!) மார்புப் பக்கமாக ஒரு சின்ன வீக்கம் + வலி. சும்மா இருக்காமல் ஒரு ஃபைன் மார்னிங் தன் அம்மாவிடம் அவன் விஷயத்தைச் சொல்ல, அன்றிலிருந்து எல்லா மார்னிங்குகளுமே ஆனந்த்துக்கு ‘பெய்ன்’ மார்னிங்குகளாகிப் போனது!
”டேய்.. ஆண்களுக்குக்கூட மார்பில் புற்றுநோய் வரும்னு நேத்துத்தாண்டா ஒரு புக்ல படிச்சேன்” என்று பெரியம்மா கலக்கிய கலக்கில், பேசி வைத்திருந்த பெண் வீட்டார் வரை விஷயம் தெரிந்து, ஓடியே போய் விட்டார்கள்.
ஸ்கேனில் எல்லாம் நார்மல் என்று வந்து என்ன பயன்? பெண்ணிடம் பேசிய நினைவில் பிரமை பிடித்துப் போய்க் கிடக்கிறான் ஆனந்த்.
பெரியம்மா என்ன செய்கிறார் என்கிறீர்களா?
”இது ஒரு வகையான மன அழுத்தம்தான். ‘அப்சஷன்’னு சொல்லுவாங்க. இதைப் பத்திப் பெரிசா ஒண்ணும் கவலைப்பட வேண்டியதில்ல!” என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் உளறித் தள்ளுகிறார்.
உறவு வட்டமும் ”ஆனந்த்துக்கு கேன்சரெல்லாம் இல்லையாம். ஆனா, ஏதோ சைக்கியாட்ரிக் பிராப்ளமாம்! அவன் அம்மாவே சொல்றாங்க!” என்று கூடிக் கூடிப் பேசுகிறது.
கல்யாண மார்க்கெட்டில் ஆனந்தின் அமெரிக்கா இமேஜ், ஆஃப் ஆகிக் கிடக்கிறது!
– நவம்பர் 2008