பெயரை மாற்ற வேண்டும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 6,446 
 
 

உங்களின் பெயரை, நீங்கள் சொல்லிப் பார்க்கும்போது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அப்படீன்னா நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி.

பிறகு என்னங்க? எனக்கு என்னுடைய பெயரே சிறிதுகூட பிடிக்கவில்லை.

கூடிய சீக்கிரம் நான் என்னுடைய பெயரை அரசிடம் விண்ணப்பித்து, முறையாக மாற்றிக்கொண்டு சந்தோஷமாக இருக்கப் போகிறேன்.

ராஜேஷ், ரமேஷ், சுரேஷ், காமேஷ் என்று ‘ஷ்’ல் முடியும் எத்தனை நல்ல பெயர்கள் இருக்கின்றன? இல்லையெனில் ‘க்’ல் முடியும் கார்த்திக், ரித்திக், விவேக் என்று எவ்வளவு அழகான பெயர்கள்?

இதயெல்லாம் விட்டுவிட்டு எனக்கு ‘குஞ்சுமணி’ என்று என் அப்பா பெயர் வைத்துவிட்டார். அதனால் கடந்த முப்பது வருடங்களாக என் பெயர் குஞ்சுமணி. என் பெயரைச் சொன்னாலே நிறையப்பேர் கிண்டலாக சிரிக்கிறார்கள் என்பதே எனக்கு எட்டு வயதில்தான் உரைத்தது. கடந்த இருபத்திரண்டு வருடங்களாக பள்ளியிலும், கல்லூரியிலும், பின்பு வேலையிலும் என் பெயரால் எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? அந்த வேதனைகள் எனக்கு மட்டுமே புரியும்.

எங்களின் பரம்பரையில் ஆண்கள்தான் அதிகம். எங்கள் பரம்பரையே குஞ்சில்தான் உழல்கிறது என்றால் நம்புவீர்களா? என் தாத்தாவின் பெயர் குஞ்சாபகேசன். அப்பா பெயர் குஞ்சிதபாதம். பெரியப்பாவின் பெயர் குஞ்சிதகுமார். இன்னபிற ஆடவர்களின் பெயர் குஞ்சிதகோபி, பரமகுஞ்சு, பொன்குஞ்சு, குஞ்சிதராமர் இப்படி ஏராளமான குலக் குஞ்சுகள். எனக்கு இந்தப் பெயர்களைக் கேட்டாலே வாந்தி வரும்.

என் அப்பாவிடம் இதுகுறித்து சில வருடங்களுக்கு முன்பு பெரிதாக ஆதங்கத்துடன் சண்டை போட்டேன். அதற்கு அவர், “இது நம்ம குலப் பெயர்டா குஞ்சு… இந்தப் பெயரோடயே நீ பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சு இப்ப நீ சென்னையிலேயே ரொம்பப் பெரிய வேலைல இல்லையா? அடிக்கடி அமெரிக்கா பறக்கலையா? நல்ல இடத்துல கல்யாணமும் உனக்கு ஆகலையா? உனக்கு இப்ப என்ன குறைச்சல்?” என்றார் அலட்சியமாக. என் பெயரைப்பற்றி அவருக்கு சிறிதுகூட குற்ற உணர்வே கிடையாது.

தவிர, என் அப்பா சொன்னால் சொன்னதுதான். அவரைமீறி எங்கள் வீட்டில் எதுவும் நடக்காது. நடக்கவும் கூடாது.

எங்களுடைய பூர்வீகம் சேலத்துக்கு அருகே குஞ்சாண்டியூர். எங்களின் குலதெய்வம் அந்த ஊரில் உள்ள மஹாமஹக் குஞ்ச பெருமாள். எங்கள் பரம்பரையில் அந்தப் பெருமாளுக்குத்தான் படையல்கள் படைத்து, குழந்தைகளுக்கு முதல் மொட்டையடிப்போம். நானும் என் அம்மா, அப்பாவுடன் சில தடவைகள் அந்தப் பெருமாளைப் போய் தரிசித்திருக்கிறேன். அவர் மற்ற பெருமாள்களைப்போல் ஆஜானுபாகுவான உடலமைப்பில் கறுப்பாக இருப்பார். அவரை உற்றுப் பார்த்ததில் மற்றபடி வேறு மஹா விசேஷங்கள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை.

படிப்பில் நான் கெட்டி. அதனால் என்னுடைய முதல் இன்டர்வியூவிலேயே எனக்கு வேலை கிடைத்துவிட்டாலும், அப்போது என் பெயரைவைத்து என்னைக் கிண்டல் செய்தனர். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு வேதனையாக இருக்கிறது.

“அது எதுக்கு ஒரே அர்த்தத்தில் இரண்டு பெயர்கள்? குஞ்சு என்றாலே மணி. மணி என்றால் குஞ்சு. பின் எதற்கு குஞ்சுமணி?” என்று ஒரு பேனல் மெம்பர் குசும்பாகக் கேட்டபோது எனக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.

நல்ல வேளையாக இந்தப் பெயருடன் எனக்கு மீனா என்கிற அழகான கல்லூரி உதவி விரிவுரையாளருடன் திருமணம் நடந்தது.

மீனா மிகவும் அமைதியானவள். பண்பானவள். என்னிடம் பாசமாகவும், அன்பாகவும் இருந்து என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறாள். தற்போது அவள் மூன்று மாதமாக முழுகாமல் இருக்கிறாள். லேடி டாக்டர் கன்பர்ம் செய்துவிட்டார். முதல் பிரசவம். என் பெயரை சொதப்பிய அப்பா, நல்லவேளையாக எனக்கு ஒரு நல்ல மனைவியை தேடித்தேடி திருமணம் செய்து வைத்தார்.

அதில்கூட எனக்கு ஒரு சின்ன எரிச்சல் மீனாவின் தோழி மூலமாக ஏற்பட்டது. ஆதற்காக மீனாவே என்னிடம் பின்பு வருத்தம் தெரிவித்தாள்.

நான் மீனாவுக்கு தாலிகட்டி முகூர்த்தம் சிறப்பாக நடந்த அன்று இரவு, முதல்இரவுக்காக மலர்களால் ஜோடிக்கப்பட்ட தனியறையில் என் மீனாவுக்காக காத்திருந்தேன். தோழிகளின் படைசூழ மீனா அழைத்து வரப்பட்டாள். ஜன்னல் பக்கமாக காத்திருந்த என்னைக் கவனியாத மீனாவின் தோழி குறும்புடன் மீனாவிடம், “நீ ரொம்பக் குடுத்து வச்சவடி அவருக்கு உயிர்ப்புடன் உடம்புல ஒண்ணு, பேர்ல ரெண்டு….மொத்தம் மூணு. ஜமாய்டி, மச்சக்காரி நீ….” என்றாள். இதைக்கேட்டு மற்ற தோழிகள் அனவைரும் பெரிதாகச் சிரித்தனர்.

“அதெப்படி உன் தோழி இப்படி அசிங்கமாக பேசலாம்?” என்று மீனாவிடம் நான் கேட்டபோது, தோழியின் பொருட்டு மீனா என்னிடம் வருத்தம் தெரிவித்தாள்.

இவ்வளவுக்குப் பிறகும், எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு, குஞ்சில் பெயர் வைக்க நான் என்ன மடையனா? அவனுக்கு ரொம்ப ஸ்டைலாக ஒரு பெயரை யோசித்து வைத்துள்ளேன். என் அப்பா முரண்டு பிடிப்பார். அதுபற்றி எனக்கு கவலையில்லை. நான் பட்ட கஷ்டங்களை என் மகன் படவே கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

மீனாவுக்கு பிரசவ நேரத்தில் என்னுடைய ப்ராஜக்ட் விஷயமாக நான் கண்டிப்பாக அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. எனினும் என் குடும்பத்துடன் அடிக்கடி தொடர்பில் இருந்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை காலை என் மீனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. நார்மல் டெலிவரி…..தாயும் சேயும் மிக்க நலம், குழந்தை அவிட்ட நட்சத்திரம் என்றார்கள். எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததில், மஹாலட்சுமியே பிறந்தாச்சு என மிகவும் சந்தோஷமடைந்தேன்.

எல்லாத்தையும்விட, இந்தக் குஞ்சு பெயர் தொல்லை விட்டது என்பதால் நெஞ்சை நிமிர்த்தி சென்னை திரும்பினேன்.

குழந்தை பிறந்த பத்தாம் நாள் புண்ணியாஜனம் என்று பெயர் சூட்டுவிழா கொண்டாடினார்கள். ஐயரைக் கூப்பிட்டு புனித மந்திரங்கள் ஓதப்பட்டன.

தரையில் நெல் பரப்பி என் அழகிய பெண்ணின் பெயரை எழுத என் அப்பாவைப் பார்த்து ஐயர் “என்ன பெயர் எழுத?” என்றார். நானும் மீனாவும், ஏற்கனவே முடிவு பண்ணி வைத்திருந்த “தீபா” என்கிற பெயரைச் சொன்னோம்.

ஆனால் என் அப்பா, “நீங்க எப்படி வேணுமின்னாலும் கூப்பிடுங்க…அது உங்க இஷ்டம். ஆனா என் பேத்தியின் பெயர் நம்ம குலதெய்வம் சார்ந்த பெயராகத்தான் இருக்க வேண்டும்…. ஐயரே, நீங்க ‘குஞ்சிதபங்கஜம்’ என்கிற பெயரை நெல்லில் எழுதி விடுங்கள்” என்றார்.

ஐயரும், “ஓ பேஷா இருக்கே” என்று சொல்லி குஞ்சிதபங்கஜம் என்று மூன்று முறைகள் நெல்லில் எழுத, உறவினர்கள் எல்லோரும் கைதட்டி மகிழ்ந்தனர். குழந்தையின் காதில் என்னைவேறு மூன்றுமுறை அந்தப் பெயரைச்சொல்லி கூப்பிடச் சொன்னார்கள்.

அதன்பிறகு எனக்கு வாழ்க்கையே சுவாரசியமற்றுப் போய்விட்டது. இப்படியா குஞ்சு என்னைத் துரத்தும்!?

குழந்தையை என் அப்பாவும் அம்மாவும் “குஞ்சு…. குஞ்சு” என்று தினமும் சீராட்டினார்கள்.

குழந்தைக்கு ஆறு மாதங்கள் இருக்கும்போது ஒருநாள் என் அப்பா திடீரென மாரடைப்பால் மரித்து விட்டார். எனக்கு அது ஒரு மிகப்பெரிய இழப்பு. என்னை நன்கு படிக்கவைத்து இந்தச் சமூகத்தில் என்னை தலைநிமிரச் செய்த ஆசான் என்னுடைய அப்பா. அவருடைய பிரிவின் சோகம் என்னை மிகவும் வாட்டியது.

என்னுடைய அப்பாவைப் பற்றி நிறைய யோசிக்கையில், எனக்கும், என் அன்பு மகளுக்கும் அவர் பெயர் வைத்ததை மட்டும் என்னால் இன்றளவும் ஜீரணிக்கவே முடியவில்லை. எனினும் என் அப்பாவின் மீதான மரியாதை நிமித்தம் இனிமேல் என்னுடைய பெயரை நான் மாற்றிக்கொள்ளும் எண்ணம் எனக்குள் செத்துவிட்டது….

ஆனால் வளர வேண்டிய என் அருமை அன்பு மகள்!?

மறுநாள் என் அலுவலக வேலைக்கு லீவு போட்டுவிட்டு, நங்கநல்லூர் கார்ப்பரேஷன் அலுவலகம் சென்றேன்.

என் மகளின் பெயரை குஞ்சிதபங்கஜத்திலிருந்து, என் அருமை மனைவியின் மற்றும் என்னுடைய விருப்பப்படி தீபா என்று பெயர் மாற்றச்சொல்லி அதற்கான படிவத்தை நிரப்பிக் கொடுத்தேன்.

அடுத்த வாரத்தில் அவள் பெயர் தீபா என்று மாற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து குழந்தை தீபாவின் ஆண்டுவிழாவை நாங்கள் மிகச் சிறப்பாக கொண்டாடினோம். “தீபா தீபா” என்று வாய் நிறைய அவளைக் கூப்பிட்டு மகிழ்ந்தோம். இந்தக் குஞ்சு விஷயம் என்னுடன் முடிந்துவிடும்….இதற்கு மேலும் என்னைத் துரத்தாது என்று நினைக்கையில், நான் புல்லரித்துப் போனேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *