கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 15,911 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெப்பிக்கு வயது பத்து தான். பல்லி மாதிரி மெலிந்து, ஒல்லியாய், ஓட்ட ஆட்டம் மிகுந்தவனாய் விளங்கினான் அவன். அவனது சூம்பிய தோள்களின் மீது பல வர்ணக் கந்தல்கள் தொங்கும். வெயிலாலும் புழுதியினாலும் கறுத்துப் போன சருமம் துணிகளிலுள்ள எண்ணற்ற கிழிசல்களின் வழியாக எட்டிப் பார்க்கும்.

காய்ந்து போன புல் மாதிரி, கடல் காற்று அப்படியும் இப்படியும் ஆட்டி அலைக்கழிக்குமே சருகு , அது மாதிரித்தான் அவனுமிருந்தான். பொழுது விடிந்ததிலிருந்து அடையும் வரை பெப்பி அந்தத் தீவிலுள்ள கற்கள் மீது ஒன்றிலிருந்து மற்றதுக்கென்று தாவிக் கொண்டேயிருப்பான். ஒடுங்காத அவன் குரல் ஓயாது மணிக் கணக்கிலே

‘எழில் மிகு இத்தலி
என்னரும் நாடே!’

என்று இசைந்து முழங்குவதை எவரும் கேட்க முடியும்.

மண் மீது மலர்ந்து மண்டிக் கிடக்கிற வண்ணப் பூக்கள், பாசி பற்றிய பாறைகளிடையே பதுக்கிப் பம்முகிற பல்லிகள், சிரத்தையுடன் சித்தரித்த எழில் உருவங்கள் போன்ற ஆலிவ் மர இலைகளூடும் கலைநய மென்கோடுகள் ஓடும் திராட்சைக் கொடியிலைகளினூடும் அமர்ந்திருக்கும் பறவைகள், ஆழ்கடலின் அடித்தலத்தில் உள்ள அடர்ந்த செடித் தொகுதிகளிடையே வைகும் மீன்கள், நகரின் ஒடுங்கி வளைந்த வீதிகளிலே நடமாடும் அயல்நாட்டு மனிதர்கள் – கத்தி வெட்டு ஏற்ற முகமுடைய தடி ஜெர்மானியன், ஜனத்துவேஷி வேஷம் போட்டுக் கொண்டு திரிபவன் போல் காட்சி தரும் இங்கிலீஷ்காரன், இங்கிலீஷ்காரன் மாதிரிக் தோன்ற வீண் பாடுபடும் அமெரிக்கன், கிலுகலும்பை போல் ஓயாக்கூச்சல் நிறைந்து ஒப்பற்று விளங்கும் பிரெஞ்சுக்காரன் – எல்லோரும் எல்லாமும் பெப்பிக்கு விந்தைப் பொருள்களேயாகும்.

பெரியதனப் பண்பால் ஊதி, அதனால் தலை ரோமங்கள் கூடக் குத்திட்டு நிற்குமோ என்னும்படியாக மிளிரும் ஜெர்மானியனை ஒளி நடமிடும் தன் கண்களால் நோக்குவான் பெப்பி, ‘மூஞ்சியைப் பாரடா! என் வயிறளவு பெரிசு இருக்கும் போல் தோணுதே இவன் மூஞ்சி’ என்று சொல்வான் தன் தோழர்களிடம்.

ஜெர்மானியனைப் பிடிக்காதுதான் பெப்பிக்கு. வீதிகள், மைதானங்கள், நகர மக்கள் ஒயின் குடித்து சீட்டாடி பத்திரிகை படித்து அரசியல் பிரச்னைகளை அலசிப் பிழிந்து தள்ளும் இருண்ட சிறு கடைகளிலெல்லாம் ஒலிக்கும் எண்ணங்களையும் கருத்துக்களையும் பிரதிபலிப்பவன் அவன்.

‘ஏழைத் தெற்கத்தியான்களாகிய நமக்கு பால்கன் நாட்டு ஸ்லாவ் இனத்தினர்தான் நெருங்கிய சொந்தக்காரர்கள்; நமது நேசதேச சகாக்கள் என்று சொல்லி, நம் நட்புக்குப் பதிலாக ஆப்பிரிக்க மண்ணை அள்ளி நமக்குத் தாராளமாகக் கொடுத்தார்களே அந்தப் புண்ணியவான்களை விட அவர்கள் நமக்கு வேண்டியவர்கள் தான்’ என்று சொன்னார்கள்.

தெற்கத்திய எளிய மக்கள் இதையே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டார்கள். பெப்பி எல்லாவற்றையும் கேட்பதுண்டு; எதையும் மறப்பதில்லை.

கத்தரிக்கோல் போன்ற கால்களை இழுத்து இழுத்துப் போட்டுக் கொண்டு தள்ளாடி நடக்கிறான் இங்கிலீஷ்காரன் ஒருவன். அவன் முன்னால் போய் பெப்பி ஒப்பாரியையோ அழுகுணிச் சிந்துவையோ ஓலமிடுவது போல் இழுப்பான்:

‘இறந் தொழிந்தான் என் நண்பன்;
இருக்கின்ற என் மனைவி
ஏனோ அழுகின்றாள்;
எனக்கேதும் புரியலியே!’

பின்னால் ஊர்ந்து வரும் பெப்பியின் தோழர்கள் சிரிய்புத் தாங்க மாட்டாமல் அவதியுறுவர். அந்நிய நாட்டான் குவிந்த கண்களைத் திருப்பி அமைதியாகப் பார்வை எறியும் போதெல்லாம் அவர்கள் புதர்களிலோ சுவரின் பின்னோ பதுங்கிவிடச் சுண்டெலிகள் மாதிரி விழுந்தடித்து ஓடுவர்.

பெப்பியைப் பற்றி இத்தகைய உல்லாசக் கதைகள் எத்தனையோ சொல்லலாம்.

ஒருநாள் ஒரு அம்மாள் தனது தோட்டத்தில் பழுத்த ஆப்பிள் பழங்களைக் கூடையொன்றில் வைத்து, தனக்குத் தெரிந்த ஒருவரிடம் கொண்டு போய்க் கொடுக்கும்படி அவனை அனுப்பினாள்.

‘உனக்கு ஒரு ஸால்டோ தருவேன். உனக்கே உனக்கு, இஷ்டம் போல் செலவு செய்’ என்றும் சொன்னாள்.

உடனே கூடையை எடுத்தான் பெப்பி. தலையில் பதிவாக வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். ஸால்டோ பெறுவதற்கு அவன் சாயங்காலத்திற்கு முந்தி வந்து சேரவில்லை.

‘ஏது, உனக்கு அவசரமில்லை போலிருக்கு’ என்றாள் அந்த அம்மாள்.

பெப்பி பெருமூச்செறிந்து சொன்னான்: ‘ஆஹ், என்னருமை ஸின்யாரா! நான் ரொம்பக் களைத்துப் போனேன்.’

‘பத்துக்கு அதிகமாகவே இருந்ததனால் தான் இப்படி’ என்றும் சொன்னான்.

‘ஆமா, பத்துக்கு அதிகமாக என்கிறாயே. கூடை நிறைய அல்லவா இருந்தது!’

‘ஆப்பிள்கள் அல்ல, அம்மா ! பையன்கள்.’

‘=அப்போ ஆப்பிள்கள் என்ன ஆச்சு?’

‘முதலில் பையன்கள் தான், ஸின்யாரா. மிக்கேல், கியாவனி…’

அவளுக்குக் கோபம் வந்து விட்டது. அவள் பெப்பியைத் தோள்களைப் பற்றி உலுக்கினாள். ‘உள்ளதைச் சொல்லு. ஆப்பிள் பழங்களைக் கொண்டு போய்க் கொடுத்தாயா இல்லையா?’ என்று கத்தினாள்.

‘சதுக்கம் வரை உள்ள தூரம் பூராவும் கூடையைச் சுமந்து கொண்டே போய்ச் சேர்ந்தேன். கேள் ஸின்யாரா. நான் எவ்வளவு நல்ல பையனாக நடந்திருக்கிறேன் தெரியுமா. ஆரம்பத்தில் நான் அந்தப் பயல்களின் கிண்டல்களுக்கு செவிசாய்க்கவேயில்லை. போகட்டும், என்னை ஒரு கழுதையுடன் ஒப்பிட்டு அவர்கள் பேசட்டும். ஸின்யாரா இடம் எனக்குள்ள மதிப்பைக் காப்பாற்ற நான் எதையும் சகித்துக் கொள்வேன். இப்படி எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எல்லாம் உனக்காகத்தான், ஸின்யாரா! ஆனால் அந்தப் பயல்கள் எங்க அம்மாவைப் பற்றி பேச்செடுத்ததும், பொறுத்தது போதும் என்று தீர்மானித்தேன். கூடையைக் கீழே இறக்கி வைத்தேன். அப்புறம் ஆப்பிள் பழங்களினாலே அந்தச் சைத்தான் குஞ்சுகளை என்னமா ஓடஓட அடித்தேன்கிறதை நீ கண்ணாலே பார்த்திருக்கணும் அம்மா. அந்த தமாஷை நீ ரசித்திருப்பாய்!’

‘என் பழங்களைத் திருடி விட்டார்களே’ என்று அலறினாள் அவள்.

சோகப் பெருமூச்சு உயிர்த்தான் பெப்பி. ‘இல்லவே இல்லை. பயல்கள் மீது படாமல் தவறிய ஆப்பிள் எல்லாம் சுவர் மீது மோதிக் கூழாகிவிட்டது. ஆனால் அந்தச் சண்டைக்காரப் பயல்களைத் தோற்கடித்து, அப்புறம் சமாதானமாகி விட்டதும், பாக்கியிருந்த பழங்களை நாங்கள் தின்று தீர்த்தோம்…’

பெப்பியின் சிறிய மொட்டைத் தலைமேலே வெள்ளம் போல் பாய்ந்த வசைமாரியைக் கொட்டினாள் அந்த அம்மாள், அவனோ மிகவும் பணிவாக அக்கறையோடு கவனித்து நின்றான். ‘ஆணிமுத்துப் போலே’ ஒருசொல் வந்து உதிரும் போது மிகுதியும் ரசித்து நாக்கைக் கொட்டி வியந்து போனான் அவன். ‘ஆகா, இதுவன்றோ அழகு! என்ன சொல்லாட்சி!’ என்று தான்.

அவளது கோபம் முழுவதும் காலியாகி அவள் அடங்கியதும் அவன் உற்சாகமாகக் கத்தினான்:

‘நீ கொடுத்த அற்புதமான ஆப்பிள்களை வீசி அந்த உதவாக்கரைப் பயல்களின் சாக்கடை மண்டைகளைக் குழைய வைத்த நேர்த்தியை நீ பார்த்திருந்தால், இப்படிப் பேசியிருக்க மாட்டாய். நீ மட்டும் அதைப் பார்த்திருந்தியோ, எனக்கு நீ ஒரு ஸால்டோ என்ன, ரெண்டு ஸால்டோக்களே தந்திருப்பாய்.’

வெற்றி பெற்றவனின் அடக்கமான கவகுணத்தைப் புரிந்து கொள்ள முடியாத அந்த அப்பாவி அம்மாள் முஷ்டியை ஓங்கி ஆட்டி பயமுறுத்தி விட்டுப் போனாள்.

பெப்பியின் சகோதரி அவனை விட வயது அதிகமானவள் தான். ஆனால் அவனை விட அதிகச் சமர்த்து என்று சொல்லமுடியாது. பணம் படைத்த அமெரிக்கன் ஒருவன் வீட்டிலே வேலை பார்க்கப் போய்ச் சேர்ந்தாள் அவள். அதிலிருந்து அவள் தோற்றமே மாறிவிட்டது. அழகும் அலங்காரமும் சேர்ந்தன. அவளது கன்னங்கள் ரோஜாச் சிவப்பு ஏற்றன. அவளே ஆகஸ்டு மாதத்துப் பீயர் மாதிரி மலர்ந்து கனிவுறத் தொடங்கினாள்.

‘நிஜமா நீ நிதம் சாப்பிடுகிறாயா அக்கா?’ என்று ஒரு நாள் அவளிடம் கேட்டான் அவன்.

‘இரண்டு வேளை, நினைத்தால் மூன்று தரம் கூடச் சாப்பிடுகிறேனே’ என்று பெருமைப்பட்டாள் அவள்.

‘உன் பல்லு தேய்ந்து போகாமல் பார்த்துக்கொள்’ என்று புத்தி சொன்னான் பெப்பி. பிறகு அவன் கேட்டான்: ‘உங்க முதலாளி ரொம்பப் பெரிய பணக்காரரோ?’

‘ஓ, ஆமா, ராஜாவை விட அவர் பெரிய பணக்காரர்னு தான் நினைக்கிறேன்.’

‘இது பேத்தல் தான். அவருக்கு எத்தனை கால்சட்டைகள் இருக்கும், சொல்லு.’

‘சிரமமான காரியம்தான்.’

‘பத்து இருக்குமா?’

‘ஜாஸ்தியே யிருக்கவாம்.’

‘சரி. போயி எனக்காக ஒரு டிரௌசர் எடுத்து வா. கால் பக்கம் ரொம்ப நீளமாகயிருப்பது வேண்டாம். எப்படியானாலும் குளிருக்கு அடக்கமாக இருக்கக் கூடியதாகப் பாரு’ என்றான் பெப்பி.

‘எதற்காகவாம்?’

‘உம். என்னிடமிருப்பதைத் தான் பாரேன்’.

அங்கே பார்ப்பதற்குப் பிரமாதமாக எதுவுமில்லை. ஏனெனில் பெட்பியின் கால் சட்டை எனத் தொங்கியது மிகவும் அல்பமே.

‘வாஸ்தவம். உனக்கு வேறு ஆடைகள் தேவை தான்’ என்று ஆமோதித்தாள் அக்காள். ‘ஆனால் நாம் அவர்கள் வீட்டில் திருடிவிட்டோம் என்று நினைக்க மாட்டார்களா?’

‘மற்றவர்களும் நம்மைப் போல் முட்டாள்களாக இருப்பார்கள் என்று நினைக்காதே. நிறைய வைத்திருப்பவர்களிடமிருந்து ஏதோ கொஞ்சம் எடுத்துக் கொண்டால் அது திருட்டே அல்ல; பங்கிட்டுக் கொள்வது. அவ்வளவு தான்.’

‘நீ பேசுவது மடத்தனம்’ என்றாள் அக்காள். ஆனால் அவள் மனக்கோளாறுகளை யெல்லாம் பெப்பி போக்கடித்து விட்டான். அவள் அழகிய மங்கிய சாம்பல் வர்ணக் கால்சட்டை ஒன்றை எடுத்து வந்தாள். அது பெப்பிக்கு ரொம்பப் பெரிதுதான். என்றாலும் சங்கடத்தைத் தவிர்ப்பது எப்படி என்பதற்கு அவன் அந்நேரத்திலேயே வழி கண்டு விட்டான்.

‘கத்தியை எடு’ என்றான்.

இரண்டு பேரும் சேர்ந்து, அமெரிக்கனின் கால் சட்டையை சின்னப் பையனுக்குத் தகுந்த வசதியான உடுப்பாக மாற்றி விட்டார்கள். கொஞ்சம் தொளதொளப்பான சாக்கு மாதிரி: ஆனால் தொந்தரவு கொடுக்காது. ஒரு கயிறின் உதவியால் அதைத் தோளில் தொங்க விட்டு, கயிறைக் கழுத்தைச் சுற்றிக் கட்டி முடிபோட்டு விடலாம் கால் சட்டையின் பைகள் பையனின் கைகள் தொங்குவதற்குத் துணை புரியும் பகுதியாகும் – இப்படி ஒரு பொருள் தான் அவர்களது உழைப்பின் விளைவு.

அவர்கள் உழைப்பின் நடுவிலே வீட்டு எஜமானியம்மா குறுக்கிடாம லிருந்திருப்பின், அதைவிடச் சிறந்த சௌகரியமான உடுப்பு ஒன்றை அவர்கள் உருவாக்கியிருப்பார்கள். அடுப்பங்கரைப் பக்கம் வந்தவள் பல பாஷைகளிலுமுள்ள மிக ஆபாச வார்த்தைகள் பலவற்றையும் கொட்ட ஆரம்பித்து விட்டாள். அவற்றைக் கூட, பொதுவாக எல்லா அமெரிக்கர்களும் செய்வது போலவே மகா மோசமாக உச்சரித்தாள்.

சொற் பெருக்கைத் தடுக்கும் திறன் பெப்பியிடமில்லை. அவன் முகம் சுளித்தான்: தன் மார்பைக் கையால் பற்றினான், செய்யும் வகையறியாமல் தலையைத் தடவினான்; கனத்த பெருமூச்செறிந்தான். ஆனால் அவளோ தன் புருஷன் அந்த இடத்திற்கு வருகிற வரையில் ஓயவேயில்லை.

‘என்ன விஷயம்?’ என்று விசாரித்தான் அவன்.

உடனே பெப்பி பேசத் தொடங்கினான்: ‘ஸன்யார், உங்கள் ஸன்யாரா கிளப்பியுள்ள குழப்பத்தைக் கண்டு நான் ஆச்சர்யப்படுகிறேன். உங்களுக்காக நான் சிறிது துயரப்படுகிறேன் என்றுகூடச் சொல்லலாம். எனக்குப் புரிகிற வரையில், இந்த அம்மாள் நாங்கள் டிரௌசரைப் பாழ்படுத்தி விட்டதாய் எண்ணுவதாகத் தெரிகிறது. உங்கள் கையிருப்பான கடைசிக் கால் சட்டையை நான் எடுத்துக் கொண்டது போலவும், உங்களுக்காக நீங்கள் வேறொரு சட்டை வாங்க இயலாதவர்கள் போலவும் இந்த அம்மாள் பண்ணுவதாகத் தோன்றுகிறது…’

இதுவரை அமைதியாகக் கேட்டு நின்ற அமெரிக்கன் குறிப்பிட்டான்: ‘சரி தம்பி, போலீஸ்காரனைக் கூப்பிட வேண்டியது தான் என்றே நான் நினைக்கிறேன்..!’

‘நிஜமாகவா? எதற்காகவோ?’ என்று வியப்புடன் வினவினான் பெப்பி.

‘உன்னை ஜெயிலுக்கு அழைத்துப் போக….’

பெப்பிக்கு அளவற்ற வேதனை ஏற்பட்டது. உண்மையில் அவன் அழத் தயாராகி விட்டான். எனினும் கண்ணின அடக்கிக் கொண்டு, கண்யம் குன்றாத முறையிலே பேசினான்.

‘ஸன்யார், மக்களை ஜெயிலுக்கு அனுப்புவது உமக்கு ஆனந்தம் அளிக்கிற தென்றால், அது உமது சொந்த விஷயம். என்னிடம் பல கால்சட்டைகளிருந்து, உம்மிடம் ஒன்று கூட இல்லாதிருக்குமானால், நான் உம்மைப் போல் நடந்து கொள்ள மாட்டேன். உமக்கு இரண்டு கால் சட்டைகள் கொடுத்து விடுவேன். ஒருவேளை மூன்று கூடக் கொடுத்தாலும் கொடுக்கலாம். ஒரே சமயத்தில் ஒருவன் மூன்று கால்சட்டைகளை அணிந்து கொள்ள முடியாது என்பதும் உண்மை தான். முக்கியமாக கோடை காலத்தில்…’

அமெரிக்கனுக்குச் சிரிப்பு பொங்கி வந்தது. பணக்காரர்கள் கூடச் சில சமயங்களில் தமாஷ்களை உணர்ந்து விடுகிறார்கள். ஆகவே அவன் பெப்பிக்கு சாக்கலெட் விருந்து அளித்தான். ஒரு பிராங்க் நாணயமும் கொடுத்தான்.

பெப்பி அக்காசைக் கடித்துப் பார்த்தான். ‘வந்தனம் ஐயா! இது நல்ல நாணயம் என்று தான் தோன்றுகிறது; இல்லையா!’ என்று கூறித் தன் நன்றியை அறிவித்துக் கொண்டான்.

பெப்பியின் உயர்வை அறிய வேண்டுமானால், அவன் தனியாக எங்காவது பாறைகளிடையே நின்று கருங்கல் லின் இருண்ட கதையைப் படிப்பதுபோல் பாறைப் பிளவுகளையே கூர்ந்து கவனித்து யோசனையில் ஆழ்ந்து விடுகிறபோது பார்க்க வேண்டும். அவ்வேளைகளில், ஒளி நிறைந்த அவனது கண்கள் வியப்பினால் விரிந்து மின்னும்; மென்கரங்கள் முதுகுக்குப் பின்னால் கட்டுண்டிருக்கும்; சற்றே சாய்ந்த தலை இளங்காற்றில் ஆடி அசையும் பெரிய புஷ்பம் போல அசைவுறும். ஏதேனும் ஓர் இன்னிசைப் பண்ணை முனங்கிக் கொண்டே நிற்பான் அவன் எப்பொழுது பார்த்தாலும் அவன் பாடிக் கொண்டுதானிருப்பான்.

பூக்களைக் கவனித்து நிற்கும் பொழுது, சுவர்கள் மீது மண்டிக் கிடக்கும் கொடிகள் பூத்துக் குலுங்குகிற பர்ப்பிள் நிறப் புஷ்பங்களைப் பார்த்து மகிழும் போதும், அவனைக் கவனிப்பது தல்லதுதான். கடற் காற்றின் மென் மூச்சால் துடிப்புறும் மலர்களின் பட்டு இதழ்களின் இன் துடிப்பைக் கூர்ந்து கவனிக்க முயல்கிறவன் மாதிரி, முறுக்கேறிய வீணைத் தந்தி போல், நிற்பான் அவன்.

கவனித்து நிற்கும் பேதே – ‘ஃபியாரினோ…ஃபியா ரினோ…’ என்று பாடிக்கொண்டு மிருப்பான்.

வெகு தொலைவிலிருந்து கடலின் ஆழ்ந்த பெருமூச்சு பொங்கி வரும், பெரிய தம்புரா எதுவோ ஒன்றின் நாதப் பெருக்கு போல, வன்ன மலர்களினூடே ஒன்றை ஒன்று துரத்தி விளையாடும் வண்ணப் பூச்சிகள். பெப்பி கலை நிமிர்ந்து, சூரிய ஒளி காரணமாகக் கண்களை மூடிமூடி முழித்தபடி அவற்றையே கவனிப்பான். பிரிந்த உதடுகளில் தவழும் புன்னகையிலே பொறாமையும் வருத்தமும் கலந்து தானிருக்கும். எனினும் மண்ணுலகத்து உயர்ந்த சிருஷ்டி சிதறும் தாராளச் சிரிப்பு அது.

மரகதப் பசும் பல்லி ஒன்றைப் பயமுறுத்தி ஓட்டுவதற் காகக் கைகளைக் கொட்டிக் கொண்டே ‘ஓஹி!’ என்று கத்துவான் அவன்.

கடல் கண்ணாடி மாதிரிக் களங்க மற்றிருக்கும் போது, பாறைகள் மீது அலைகளின் வெண்ணுரை படியாதிருக்கும் போது, தெளிந்த நீரிடையே தன் ஒளிக்கண் வீசி ஒரு கல் மீது அமர்ந்திருப்பான் பெப்பி. நீரினுள் கிடக்கும் செங்கிண்ணங்கள் போன்ற பாசிகளிடையே நீந்திக் களிக்கும் மீன்களை, அங்குமிங்கும் ஆடி ஓடி மகிழும் கடற்பூச்சிகளை, பக்கவாட்டிலே நகர்ந்தசையும் நண்டுகளை யெல்லாம் பார்த் திருப்பான். கொலுவிருக்கும் அமைதியினூடே; நீல நெடுக்கடல் மேலே, எங்கும் தவழ்ந்து ஒலிக்கும் அச் சிறுவனின் தெள்ளிய தீங்குரல்.

‘கடலே, ஓ கடலே…’

பெப்பியைப் பார்த்துப் பெரிய மனிதர்கள் வெறுப்போடு தலையாட்டுவார்கள். ‘இந்தப் பயல் அடங்காப் பிடாரியாகத் தான் வளருவான்’ என்பார்கள்.

ஆனால், அதிக தீர்க்க தரிசனமுடைய நல்ல மனிதர்கள் சிலரது அபிப்பிராயம் வேறுவிதமாகயிருக்கும். ‘பெப்பி தான் நமது வருங்காலக் கவிஞர்’ என்பார்கள்.

மரச்சாமான்கள் செய்யும் பாஸ்காலினோ இருக்கிறாரே, வெள்ளியில் வார்த்து எடுத்தது போன்ற தலையும் புராதன ரோமன் நாணயத்திலே அச்சிட்டிருந்தது போன்ற முகமும் பெற்ற கிழவர், எல்லோராலும் போற்றப்படும் அந்தப் புத்திசாலி பாஸ்காலினோ தனக்கெனத் தனி அபிப்பிராயம் கொண்டிருந்தார்.

‘நமது குழந்தைகள் நம்மைவிட எவ்வளவோ மேலானவர்களாகத் தானிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையும் எத்தனையோ மடங்கு சிறந்ததாகத்தானிருக்கும்’

பெரும்பலர் அவர் பேச்சை நம்புவதுமுண்டு.

– கடலில் நடந்தது (கதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 1951, எழுதியவர்: மாக்ஸிம் கார்க்கி, தமிழில்: வல்லிக்கண்ணன், வெண்புறா வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *