அந்த பூங்காவில் யாருமில்லா இடத்தில் அவனும் அவளும் தனித்து எதிரெதிரே கண்ணியமாக அமர்ந்திருந்தார்கள்.
தலைகுனிந்திருந்த அவளையே வெகு நேரமாக உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த அவன், ”அஸ்வனி ! முடிவா நீ என்னதான் சொல்றே ? ” மௌனத்தை உடைத்தான்.
”மன்னிக்கனும்ப்பா. சத்தியமா இதுக்கு எனக்கு சம்மதம், உடன்பாடில்லே.!” அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னாள்.
”இதுதான் உன் முடிவா ?”
”ஆமா சிவா. நீ யோக்கியன், நல்லவன்னு நெனைச்சிதான் நான் இத்தனை நாளாய் உன்னோட நட்பாய் இருந்தேன். மனம் விட்டு பேசினேன், பழகினேன். இன்னைக்கு உள்ளதைச் சொல்லி சுயரூபத்தைக் காட்டி நீயும் சாதாரண மனுசன்தான் என்கிறதை நிரூபிச்சுட்டே. இனி உன் பழக்கவழக்கம், நட்பு தேவை இல்லே. முறிஞ்சாச்சு வர்றேன்.” சொல்லி வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
ஏமாற்றம். அவள் செல்வதையே வெறித்த சிவா, ‘ போடி போ. புருசன் வெளியாட்டுல இருக்கான் ஏங்கிக்கிடப்பே தொட்டுக்கலாம் நெனைச்சா…மாறய்…. கற்பு கண்றாவின்னு மறுக்குறே…! இது என்ன எடுத்தால் தெரியற சமாச்சாரமா ? பாதிப்பு வராம இருக்க எல்லா வசதியும் இருக்குன்னு சொல்லியும் போறீன்னா…. உன்னைமாதரி பொழைக்கத் தெரியாதவ உலகத்துல கெடையாது.!’ மனசுக்குள் சொல்லி எழுந்தான்.
வீட்டிற்கு வந்தபோது வாசலில் புது செருப்பு.
‘யார் ? ‘ சட்டென்று சுவர் ஓரம் ஒதுங்கினான்.
”சொல்லு நிர்மலா ?” ஆண் பரிச்சயக் குரல்.
”முடியாது ! முடியாது!”
”பயப்படாதே நிர்மலா. எந்த பாதிப்பும் ஏற்படாம இருக்க நிறைய வழிகள் இருக்கு.”
”வேணாம.; அது துரோகம்.”
”புருசன் உனக்குத் துரோகம் செய்யாமல் ராமனாய் இருப்பான்னு நெனைக்கிறீயா ?”
”துரோகத்துக்குத் துரோகம். பழிக்குப் பழி. சரி இல்லே.”
”வீண் பிடிவாதம். இளமை வீணாகக்கூடாது நிர்மலா!”
”செருப்பால அடிப்பேன். அண்ணன் நண்பனாச்சேன்னு இதுநாள்வரை உன்னோடு பேசினேன், பழகினேன். அந்த மரியாதையிலதான் உன்னை வெயில நிக்க வைச்சு பேசி அனுப்பாம வீட்டுக்குள் விட்டு பேசினேன். இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினே அந்த மரியாதை இருக்காது. வெளக்கமாத்தால அடிச்சி வெளியே தொரத்துவேன். புருசன் வெளிநாட்டுல இருந்தா பொம்பளை அத்து மீறுவாள், அலைவாள் நெனைப்பா !? தமிழ்நாட்டுப் பெண். தவறமாட்டாள்.! என் அண்ணன் கோபக்காரன், கொலைக்காரன். வர்றதுக்குள்ளே ஓடிப்போயிடு போ.” கத்தினாள்.
சிவா எண்சாண் உடம்பும் ஒருசாணாக குறுக…சுவர் ஒட்டினான்.
வெங்கடேஷ் தலை கவிழ்ந்தவாறு….. வெளியே நடந்தான்.