கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2023
பார்வையிட்டோர்: 4,272 
 
 

(2001 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏம் மச்சான், ஒங்காத்தா எப்ப வரும்?”

மாராப்பு மறைவில் குழந்தைக்குப் பால் புகட்டிக் கொண்டிருந்த சிவகாமி புருஷனைக் கேட்டாள்.

“என்னத்துக்குக் கேக்க?”

“என்னத்துக்கா, கொழந்தயப் பாக்கத்தான். ஒங்காத்தா வந்துச்சுன்னா நம்ம புள்ளக்கி என்ன பேரு வக்யன்னு ஆத்தாவயும் கேட்டுக்கலாம்ல?”

சிவகாமி ஆசையோடு பேசினதைக் காதில் வாங்கிக் கொள்ளாத மாதிரி பீடி ஊதியபடி உட்கார்ந்திருந்தான் மாடசாமி.

“ஒன்னயத்தாங்கேக்கேன் மச்சான், நம்ம புள்ளக்கி…”

அவள் வாக்கியத்தை முடிக்குமுன் மாடசாமி வழி மறித்தான்.

“அட, சும்மாக் கெட புள்ள. ஆத்தாட்ட கேட்டா அல்பாயுசுன்னு பேரு வக்யச் சொல்லும்.”

சிவகாமி அதிர்ந்து போனதில், குழந்தையின் வாய் விடுபட்டுப்போய் அது அழத்தொடங்கியது.

“என்ன மச்சான் இப்டி அபசகுனமாப் பேசுத. பேரு என்ன வக்யலாம்னு கேட்டா…”

“அதத்தாம்புள்ள சொல்லுதேன். ஆத்தா ரொம்பக் காட்டத்துல இருக்கு. பலவேசம் அண்ணாச்சி நேத்து ஆத்தாவப் பாத்தாவளாம். பேத்தியப் பாக்கப் போவலியான்னு கேட்டிருக்காவ. ஆமா போவணும், கள்ளிப் பாலுக்குச் சொல்லி வச்சிர்க்கேன், அத வேங்கிட்டுத்தாம் போவணும்ன்னுச்சாம்.’

கிலிபிடித்த குரலில் கணவனைக் கேட்டாள், “என்ன சொல்லுத மச்சான், ஒங்காத்தா எம்புள்ளயக் கொல்லவாப் பாக்குங்க?”

இவளுடைய பதற்றத்தை அங்கீகரிக்காமலே மாடசாமி பேசினான்.

“பெரிய வார்த்தயெல்லாஞ் சொல்லாத புள்ள. ஊரு ஒலகத்துல நடக்கதுதான இது? ஆத்தா அன்னிக்கே சொல்லிச்சி திருநவேலியில் பெரவேட் ஆசுபத்திரியில வயித்துக்குள்ள இருக்க புள்ள ஆம்பளயா பொம்பளயான்னு கண்டு பிடிச்சிச் சொல்ல மிசின் இருக்காம். போய்ப் பாருங்க. பொட்ட புள்ளன்னா அங்ஙனயே கலச்சிப் போட்டு வந்துருங்க, செலவ நாம் பாத்துக்கிருதேன்னு சொல்லிச்சி. நீதான் கெத்தா முடியாதுன்ட்ட. இப்ப பொட்ட புள்ளயாப் போச்சி. ஆத்தாக்கு ஆங்காரம் வரத்தான செய்யும்?”

சிவகாமிக்குக் கண்ணீரும் வியர்வையும் கலந்து முகத்தில் வியாபித்தன.

“ஏம் மச்சான், அது சரிதான்னு நீயும் சொல்லுதியா? எப்டி மச்சான் இந்தப் பச்ச மண்ணக் கொல்லணும்னு மனசால சொல்லுத. நீ பெத்த புள்ள மச்சான்!”

“இனியும் பொறத்தான போறேன். அடுத்தவாட்டி உருப்படியா ஒரு ஆம்பளப் புள்ள பெத்துக்குடு. அட என்னத்துக்குப் புள்ள வெட்டியா அளவுத! போன மாசங்கூட மேலத் தெருவு எச்சுமி வூட்ல இது நடக்கலியா? அதுக்கும் ஆத்தாவத்தாங் கூப்ட்டாவ! ஆத்தா பேய்த்தாங் கழுக்கமாக் காரியத்த முடிச்சிப்போட்டு வந்திச்சி. அதுக்கு முந்தி அதுக்கு முந்தி எங்க தச்சநல்லூர்ப் பெரியம்மா எங்க தச்சநல்லூர்ப் வூட்ல…”

“ஒங்க ஆத்தா இதே சோலியா அலையுது போல.”

“எளா, முந்தாநாள் பொறந்த பொட்டக் களுதக்யாக ஆத்தாதாவக் குத்தம் புடிக்காத, பெறவு எனக்குக் கெட்ட கோவம் வரும் பாத்துக்க.”

இவனுடைய ஆத்தாளை எதிர்கொள்ள நேரும் முன் இவனைச் சரிக்கட்டியாக வேண்டும். அது எப்படி என்று யோசனையாயிருந்தது. குழந்தை உறங்கி விட்டிருந்தது. அதைக் கைகளில் ஏந்திக் கொஞ்சம் எட்டப் பிடித்துப் பார்த்தாள், கண்ணீரினூடே. பிறகு குழந்தையை நெஞ்சோடு பதித்து நெற்றியில் முத்தமிட்டாள் வாஞ்சையோடு. தூளியில் குழந்தையைத் தூங்கப் போட்டுவிட்டுப் புருஷனை நோக்கி வந்தாள், ஒரு தப்பித்தல் திட்டத்தோடு.

“மச்சான் எனக்கு ஒரேயொரு ஒத்தாச மட்டும் பண்ணு மச்சான்” என்று கெஞ்சினாள்.

நுரையீரல் நிரம்ப பீடிப்புகையை இழுத்து விட்டு, “என்ன பண்ணச் சொல்லுத” என்றான் சர்வ அலட்சியமாய்.

“என்ன வல்லநாட்டுக்கு பஸ்ல ஏத்தி வுட்ரு மச்சான். நா எங்கப்பன் வூட்டுக்குப் போயிருதேன், எம்புள்ளயக் கொண்டுக்கிட்டு. எங்க அம்மெ உசுரோட இருந்திருந்தா அங்ஙன வல்லநாட்ல வச்சே பெரசவம் பாத்துருப்பாவ. நா நாதி கெட்ட அநாதியாப் பேய்ட்டேனேய்யா! நல்லாயிருப்ப மச்சான், இந்த ஒபகாரம் மட்டும் செஞ்சிரு மச்சான். ஒங்காலப்புடிச்சிக் கேக்கேன். எம்புள்ளயக் காப்பாத்து மச்சான்!”

தடாலென்று தரையில் விழுந்து அவனுடைய கால்களைக் கட்டிக்கொண்டு கதறினாள்.

“சீ, எந்தி புள்ள” என்று மாடசாமி கால்களை உதறியபடி எழுந்து கொண்டான்.

“இந்தா பாரு, ஆத்தாட்ட மல்லுக்கட்ட என்னால ஏலாது. ஆத்தாக்கு இது பளக்கப்பட்ட சமாசாரந்தா, புள்ளக்கி நோவே தெரியாம சுளுவாக் காரியத்த முடிச்சிப்புடும். ஒரு நாலு நாளக்கி நீ பெனாத்திட்டிருப்ப, அப்பால எல்லாஞ் சரியாப் போயிரும். மேக்கொண்டு ஒனக்குப் புள்ள பொறக்காமயா போயிரப் போவுது?”

தரையில் விழுந்திருந்த நிலையிலிருந்து எழுந்து நின்ற சிவகாமி, கூப்பிய கரங்களோடு புலம்பினாள். “வேணாஞ்சாமி, எம்புள்ளயக் கொன்னுப்புடாதீக. என்ன பஸ்ஸு ஏத்தி வுட்ருங்க. நாம் போயிருதேன். எங்கப்பன்ட்ட சொல்லி மொறப்பநாட்டு வயக்காட்ட ஒம்பேருக்கு எளுதிக் குடுக்கச் சொல்லுதேன் மச்சான்.”

உதட்டிலிருந்த பீடியைப் பிடுங்கியெறிந்து விட்டு மாடசாமி அவளைப் பார்த்தான்.

“சும்மனாத்துக்கும் சொல்லுத புள்ள. ஒங்கப்பன் வயக்காட்ட எழுதிக் குடுப்பான்னாக்கும்?”

இந்த அஸ்திரம் கொஞ்சம் வேலை செய்யும் போலத் தெரிந்தது. சிவகாமி இதையே கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள்.

“சத்தியமாச் சொல்லுதேன் மச்சான். எம்புள்ள மேல சத்தியம். ஊரு போய்ச் சேந்தவொடன மொத வேலயா எங்கப்பங் கையக் காலப் புடிச்சி வயக்காட்ட எழுதிக் குடுக்கச் சொல்லுதேன். நீ சந்தேகமே படாத மச்சான்.”

வயக்காடு வேலையைக் காட்டியது. மாடசாமி கொஞ்சம் இறங்கி வந்தான்.

“ஒத்தயில என்னமாப் போவ?”

“அபிசேகப்பட்டி வெலக்குல பஸ்ஸு ஏத்தி வுட்ரு மச்சான், நாம் போயிருவேன்”

“சங்சன்ல எறங்கி பஸ்ஸு மாறனும்லா?”

“நாஞ் சமாளிச்சிருவேன் மச்சான். வெசாரிச்சிப் போயிருவேன்.”

“அதெல்லாஞ் சரி வராது புள்ள. ஒத்தயில நீ பேய்க்கிர மாட்ட. திருநவேலி வரக்யும் நா வாறேன். அங்ஙன தூத்துக்குடி பஸ்ஸுல ஏத்திவுட்டா வல்லநாட்ல கண்ட்ரக்டர்ட்ட கேட்டு எறங்கிருவேல்லா?”

“மவராசனாயிருப்ப, கெளம்பு மச்சான், ஒங்காத்தா கண்ணுல மாட்டதுக்கு முந்தி வெரசாப் போயிருவோம்.”

தூளியில் கிடந்த குழந்தையை அவசரமாய் அள்ளிக் கொண்டாள். மாற்றுத் துணிமணிகளோ வேறு எந்தப் பொருளையுமோ எடுத்துக் கொள்ளத் தோணவில்லை. ‘குழந்தை, குழந்தை என் குழந்தை, என் குழந்தை.’ குழந்தையைத் தாண்டி சிந்தனை ஓடவில்லை. ‘அந்த ராட்சசி எந்த நேரத்திலும் வரக்கூடும். அதற்கு முன்னால் இங்கிருந்து காணாமல் போய்விட வேண்டும்.’

“பூட்டு எங்க புள்ள வச்ச?”

“பூட்ட வேணாம் மச்சான். ஆத்தா வந்து பூட்டுன கதவப் பாத்தா நம்ம பொறத்தாலேயே வந்தாலும் வந்துரும் சும்மா சாத்திட்டு வா. இங்ஙனதாம் பக்கத்துல போயிருக்காவன்னு நெனச்சிக்கிரட்டும்”

குழந்தையைப் பாதுகாப்பாய் அணைத்தபடி ஓட்டமும் நடையுமாய் வரப்புகளையும் ஒத்தையடிப் பாதைகளையும் கடந்தாள். பின்தொடர்ந்து வந்த மாடசாமிக்கும் இவளுக்கும் இடைவெளி விரிவடைகிறபோது, தவிப்போடு சில விநாடிகள் நின்று மூச்சு வாங்கிக் கொண்டாள்.

அவனைத் துரிதப்படுத்த முடியாது. இருந்தாற்போல அவன் முரண்டு பிடித்து விட்டால் காரியம் கெட்டுப் போகும்.

அபிஷேகப்பட்டி விலக்கையடைந்து, திருநெல்வேலி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பிறகுதான் பாதி உயிர் வந்தது.

பஸ் கிளம்புகிற போது, ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள், இவர்கள் நடந்து வந்த பாதையை. யாரும் பின் தொடரவில்லை.

கடவுளே!

பஸ், திருநெல்வேலி ஜங்ஷனை அடைந்ததும் அடுத்த இடி காத்திருந்தது.

பஸ் ஸ்டாண்டில் எங்கே நோக்கினாலும் பரபரப்பு.

திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் இணைக்கிற தாமிரபரணிப் பாலத்தை யொட்டிப் பெரிய கலவரமாம். போலீஸ் துப்பாக்கிச் சூடாம். ஆற்றுக்குள்ளே அநியாயத்துக்குப் பிணங்களாம்!

“கொக்கர கொளத்துல என்னமோ கலாட்டாவாம் புள்ள, பஸ்ஸு எதுவும் போவலேங்காவ. இங்ஙனயே குத்தவச்சி இரி. நாம் போய் வெசாரிச்சிட்டு வாறேன்.”

இவளைத் தனியாய் விட்டு விட்டு மாடசாமி நகர்ந்தான்.

‘இது என்ன ஆண்டவா புதுச் சோதனை’ என்று வேதனையோடு நட்டமாய் நின்று கொண்டிருந்தாள், குழந்தையை மார்பில் ஏத்தியபடி.

பஸ் ஸ்டாண்ட் முழுக்கப் போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு என்று தான் ஆளாளுக்குப் பேச்சு.

இவளுக்கு சமீபத்தில் ஏழெட்டு ஆண்களின் ஒரு சிறு கூட்டம். நடுவில் கழுத்தில் காமரா தொங்க ஓர் இளைஞன், கலவர நிகழ்ச்சிகளை மற்றவர்களுக்கு விவரித்தபடி.

சிவகாமி அந்தக் கும்பலை நெருங்கி, அவர்களின் கவனத்தைக் தன்பக்கம் ஈர்த்தாள்.

“ஐயா, வல்லநாட்டுக்கு பஸ்ஸு ஏதும் இப்பப் போவாதுங்களா?”

கிட்டத்தட்ட எல்லாரும் இவளைப் பார்த்தார்கள். அவர்களில் ஒருவன் எகத்தாளமாய்ப் பார்த்தான்.

“வாம்மா, ஒன்னயத்தான தேடிட்டிருக்கோம்! அவனவன் துண்டக்காணும் துணியக்காணும்னு ஓடிட்ருக்கான். ஒனக்கு வல்லநாட்டுக்கு பஸ்ஸா! காலாகாலத்துல வீட்டுக்குப்போய்ச் சேரும்மா, ரெண்டு நாளக்கி பஸ் ஸ்டாண்ட் பக்கமே வராத.”

இன்னொரு பெரியவர் கொஞ்சம் சமாதானமாய்ப் பேசினார்.

“பாலத்தத் தாண்டி வண்டி ஏதும் ரெண்டு நாளக்கிப் போகாதும்மா. ஊரே டென்ஷனாக் கெடக்கு. ஊரடங்கு உத்தரவு போடப் போறாங்காக. வெள்ளன வீடு போய்ச் சேரு. கொளந்தய வேற வச்சிருக்க. தனியாவா வந்த?”

“இல்லிங்கய்யா, எங்க மச்சான், எம்புருசன் வந்தாவ. பஸ்ஸு வெசாரிச்சிட்டு வாறேம்னுட்டுப் போனாவ. இன்னா வந்துட்டாவளே, மச்சான் பஸ்ஸு ஏதும் இப்பப் போவாதுங்காவளே, பெசல் பஸ்ஸு ஏதும் வல்ல நாட்டுக்கு வுட்ருக்காவளான்னு கேட்டியா?”

இறுக்கத்தை மீறி ஒரு சிரிப்பெழுந்தது அந்தச் சிறு கூட்டத்தில். மாடசாமிக்கோ சரியான கடுப்பு.

“பெசல் பஸ்ஸும் கெடயாது, ஒரு தாலியுங் கெடயாது. சத்தங்காட்டாம வா, ஊரப்பாக்கப் போவலாம்.”

“சார், இவ்ளோ நேரம் சொல்லிட்டிருந்தாரே கேக்கலியாம்மா? எல்லாத்தையும் போட்டோ புடிச்சி வச்சிர்க்கார். நாளக்கிப் பேப்பர்ல வரும் பாரு”.

சிவகாமிக்கு ஓர் அசட்டு தைரியம் வந்தது. அந்தக் காமராக்கார இளைஞனைக் குறித்துக் கேட்டாள்.

“இந்த அண்ணாச்சி பேப்பர்க்காரவுளா?”

“அவிய யாராயிருந்தா ஒனக்கென்ன புள்ள? கெளம்பு. பெறவு தேரஞ் செல்லச் செல்ல எல்லா பஸ்ஸயும் நிறுத்திப் புடுவாக”

தன்னுடைய கையைப் பற்றியிழுத்த கணவனைப் பொருட்படுத்தாது அந்த காமராக் காரனை எதிர் கொண்டாள், இன்னுங்கொஞ்சம் தைரியமாக.

“அண்ணாச்சி நா ஒங்கட்ட ஒரு சாமாசாரம் பேசணும்.”

அவன் அவளை அக்கறையாய்ப் பார்த்தான். “என்ட்டயா. என்ன விஷயம்மா? எதாவது இன்ட்ரஸ்ட்டிங் ஸ்டோரி வச்சிருக்கியா?”

லேசாய்ச் சிரித்தான் அவன்.

“எளா, இப்ப நீ வாறியா, நாம் போவட்டா?” மாடசாமி அவளை மிரட்டிப் பார்த்தான்.

காமராக்காரன் மாடசாமியை மடக்கினான்.

“கொஞ்சம் இருங்கண்ணாச்சி. அந்தம்மா என்னமோ சொல்ல வருது. சொல்லட்டுமே. நீ சொல்லும்மா. சீக்கிரஞ் சொல்லு.”

குரலில் தெம்பை வரவழைத்துக் கொண்டு சிவகாமி பேசினாள்.

“அண்ணாச்சி, எங்க ஊர்ல ஒரு அக்கரமம் நடந்துட்டிருக்கு. பொறந்த பொட்டப்புள்ளகளயெல்லாம் கள்ளிப் பாலக் குடுத்துக் கொல்லுதாவ.”

எல்லாக் கண்களும் சிவகாமியின் மேலே. அங்கேயிருந்த எல்லோருக்கும் சுவாரஸ்யம் தட்டியது, காமராக்காரனைத் தவிர. அவன் அலட்டிக் கொள்ளாமல் சொன்னான், “இது ரொம்பப் பழைய ஸ்டோரிம்மா. ஏற்கனவே வேற பத்திரிகையில வந்திருச்சி. வேறே ஏதாச்சும் விசேஷம் உண்டா ஒங்க ஊர்ல?”

சிவகாமிக்கு சப்பென்று ஆகிவிட்டது. இருந்தாலும் நம்பிக்கையை முழுமையாய் இழந்துவிட மனசில்லை.

“என்னண்ணாச்சி அவ்ளோ சுளுவாச் சுளுவாச் சொல்லிப் சொல்லிப் பிட்டீய! எம்புள்ளயக் கொல்ல வாராக அண்ணாச்சி. அதான். பயந்துக்கிட்டு நாம் பொறந்த வூட்டுக்குப் பொறப்பட்டேன்.”

“ஒம் புள்ளயக் கொல்ல வாறாகளா, யாரது கொல்ல வாறது?”

இந்தக் கட்டத்தில் அவளுடைய காலை மிதித்துக் குறிப்பறிவித்தான் மாடசாமி.

சிவகாமி சமாளித்தாள்.

“அது வந்து, தெரிஞ்ச பொம்பளதான். பக்கத்து ஊர்க்காரப் பொம்பள.”

“கொல்ல வந்ததாகதான, கொல்லலியே?”

“அப்ப உசுரு போனப் பெறவுதா நீங்கக் காப்பாத்த வருவியளாக்கும்?”

“காப்பாத்தறது பத்திரிகைக்காரன் வேலயில்லம்மா. நீங்க போலிஸ் ஸ்டேஷன்ல போய்க் கம்ப்ளய்ன்ட் குடுங்க”

பத்திரிகைக்காரன் சொல்ல விட்டுப் போனதை இன்னொருவன் சொன்னான்.

“போலீஸ் ஸ்டேஷன் பக்கம் இன்னிக்கிப் போயிராதீக. போலீஸ்காரன் ஒவ்வொர்த்தனும் கையில லத்தியக் கொண்டுக் கிட்டு எவனச் சாத்தலாம்னு கோட்டி புடிச்சி அலயுதான்.”

சிவகாமிக்குள்ளே சின்னதாய்த் துளிர்த்த ஒரு நம்பிக்கையும் தகர்ந்து போனது.

“சொல்லி முடிச்சாச்சில்லா, கெளம்பு” என்று மாடசாமி அவளை நெட்டித் தள்ளினான்.

“அண்ணாச்சி. கொஞ்சம் இருங்க. ஒங்கபேரு என்ன அண்ணாச்சி?”

பத்திரிகைக்காரன் கேட்டதற்கு மாடசாமி நின்று தன்னுடைய பெயரைச் சொன்னான்.

“மாடசாமியண்ணாச்சி. ஒங்க ஊர்ல போன் இருக்கா?”

“அங்ஙன ஏதுங்கய்யா போன். அபிசேகப்பட்டிக்கித்தா வரணும்.”

“படிக்கத் தெரியுமா?”

“அஞ்சாப்பு படிச்சிருக்கேங்கய்யா. இவ என்ன விட சாஸ்தி படிச்சிருக்கா. எதுக்குக் கேக்கிய?”

“ஒண்ணுமில்ல, இந்தக் கார்ட வச்சிக்கிருங்க. எதாச்சும் சமாசாரம் நடந்தா எனக்கு போன் பண்ணுங்க. நாங்க வந்து போட்டோ எடுப்போம். ஓங்க பேரு படமெல்லாம் பத்திரிகையில வரும். அப்ப நாங் கௌம்பறேன். மெட்ராஸ்க்கு ஸ்டோரி அனுப்பணும்.”

அவனை வழிமறித்து, அந்தக் காமராவைப் பிடுங்கி அதைக்கொண்டு அவன் மண்டையைப் பிளக்க வேண்டுமென்றிருந்தது சிவகாமிக்கு. அவன் சொன்னதன் உள்ளர்த்தம் உறைத்தபோது ரத்தம் உறைந்தது.

இனி செய்வது என்ன என்று தெரியவில்லை. தெய்வத்தில் நம்பிக்கை வைத்து, கடவுளை உச்சரித்துக் கொண்டே கணவன் பின்னால் நடந்தாள், குழந்தையை இறுக அணைத்தபடி.

அபிஷேகப்பட்டி விலக்கு வழியாய்ப் போகிற பஸ் கிளம்பத் தயாராய் இருந்தது.

மெய்ன் ரோடில் இறங்கி கிராமத்தைப் பார்க்க நடந்த போது சூரிய வெளிச்சம் மயங்க ஆரம்பித்திருந்தது.

எந்த உறுத்தலுமில்லாமல், ஒரு பீடியைப் பற்ற வைத்து இழுத்தபடி மாடசாமி முன்னே நடக்க, ‘கடவுளே, கடவுளே’ என்கிற ஜெபத்தோடு அவனைப் பின் தொடர்ந்தாள் சிவகாமி.

குடிசையை அடைந்த போது, சாத்திவிட்டுப் போன கதவு கொஞ்சம் விலகியிருப்பது புலப்பட்டது.

‘ஆத்தா வந்திருக்கும்’ என்ற ரெண்டே வார்த்தைகளில் இவளுக்கொரு கிலியைக் கொடுத்து விட்டு, கதவை மெல்லத் தள்ளித் திறந்து உள்ளே பார்வையைச் செலுத்தினாள் மாடசாமி.

பிறகு, இவளைப் பார்க்கத் திரும்பினான்.

“ஆத்தா அசந்து தூங்குது. சத்தங்கித்தம் போடாம உள்ள போய் இரி. புள்ள அளாமப் பாத்துக்க, ஆத்தாத் தூங்கங் கெட்ரப் போவுது. நா ஓட வரக்யும் போய்ட்டு வந்திருதேன்.”

திரும்பவும் ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு மாடசாமி ஓடையை நோக்கி எட்டி நடந்தான்.

அவன் பார்வையிலிருந்து மறைந்த பின்னால் சிவகாமி உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பூப்போல தரையில் கிடத்தினாள், வாசலுக்கு வெளியே.

பிறகு ஓசையில்லாமல் வாசல் கதவைத் திறந்தாள். மங்கலான வெளிச்சத்தில் மாமியார் மல்லாக்கப் படுத்துக் கிடந்தது தெரிந்தது.

குறட்டையோடு கூடிய சுகமான உறக்கம்.

திறந்த வாயோடு உறங்கிக் கொண்டிருந்த மாமியார்க் காரியைப் பார்த்த போது சிவகாமி, அவள் எதிர் பாராமலேயே ஓர் அனுகூலமான சந்தர்ப்பம் அவளுக்கு அமைந்து விட்டதை உணர்ந்தாள்.

மிக நுட்பமான சாதுர்யத்தோடு இதை பயன் படுத்திக் கொள்ள வேண்டும். மாடாக்குழியில் பார்வையைச் செலுத்தினாள். நினைத்தது சரிதான்.

மாடாக்குழியில் ஒரு கிண்ணம். பழைய அட்டை கொண்டு மூடப்பட்டிருந்த கிண்ணம்.

அட்டையை விலக்கிப் பார்த்தாள்.

அரைக்கிண்ணத்துக்கு வெள்ளையாய் ஒரு திரவம். பால் மாதிரி.

பால் தான்.

கள்ளிப் பால்.

கவனமாய்க் கிண்ணத்தைக் கைகளிலேந்திக் கொண்டு படுத்திருந்த மாமியார்க்காரியை நோக்கி அடிமேலடி வைத்து முன்னேறினாள்.

மெல்ல மெல்ல மெல்ல மெல்ல.

பட படத்த நெஞ்சின் அதிர்வில் கிண்ணம் நடுங்கியது,

தோல்ப் பரப்பிலிருக்கிற வியர்வைச் சுரப்பிகளெல்லாம் படு சுறுசுறுப்பாய் இயங்க ஆரம்பித்திருந்தன.

கடவுளே, கடவுளே, கடவுளே, கடவுளே

பாதுகாப்பான அருகாமையில் மாமியார்க்காரியின் முகத்தை நோக்கிக் குனிந்தாள். சாராய நெடி மூச்சு முட்டியது.

நடுங்கும் கரங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, திறந்திருந்த வாய்க்குள்ளே கிண்ணத்தைக் கவிழ்த்தாள்.

களக் களக் க்ளக்.

அந்த ஒட்டைக்குச்சி உடம்பு ரெண்டு முறை சிலிர்த்து அடங்கியது.

ஒரேயடியாய் அடங்கிப் போனது.

அந்தக் குரூரமான முகத்தை சலனமற்றுச் சில விநாடிகள் பார்த்தபடியிருந்தாள் சிவகாமி. மனசு சமனப்பட்டது.

காலிக் கிண்ணத்தை மாடாக்குழியில் வைத்து அட்டையால் மூடினாள்.

சீலைத்தலைப்பால் முகம், கழுத்து, கைகளையெல்லாம் அழுந்தத் துடைத்தபடி வாசலுக்கு வந்தாள்.

அப்போதுதான் கண்விழித்த குழந்தை தாயைப் பார்த்து முதன் முறையாய் சிரித்தது. அதை வாரியெடுத்து, ரெண்டு கன்னங்களிலும் மாறி முத்தங்களைக் பதித்தாள்.

“எம்புள்ளக்கி என்ன பேர் வக்யலாம்?’

“சூரி சம்ஹாரி!”

பின்விளைவுகளைப் புறக்கணித்துப் புன்னகை பூத்தாள் சிவகாமி.

சுவாசப் புன்னகை. வெற்றிப் புன்னகை.

பிறகு, திரும்பவும் அதை உச்சரித்தாள்.

“சூரி சம்ஹாரீ!”

ஓடைக்குப் போயிருந்த மாடசாமி திரும்பி வந்தான்.

“என்ன புள்ள வெளிய நிக்ய? ஆத்தா முழிச்சிரும்னு புள்ளய வச்சுக்கிட்டு வெளியவே நிக்கியாக்கும்?”

“ம்”

அவன், இவளைத் தாண்டிக்கொண்டு குடிசைக்குள் நுழையப் போனபோது அவனை நிறுத்தினாள்.

“மச்சான், கொஞ்சம் நில்லு”

“என்னத்துக்குப் புள்ள?”

“சங்சன்ல அந்தப் போட்டோக்கார ஆளு ஒரு கார்டு குடுத்தானே வச்சிர்க்கியா?”

“ஆமா, சட்டப்பையில இருக்கு. எதுக்குக் கேக்க?”

சிவகாமி அவனை ஊடுருவிப் பார்த்தாள். பிறகு பிசிறில்லாத குரலில் கணவனுக்குக் கட்டளையிட்டாள்:

“இப்படியே நட அபிசேகப்பட்டிக்கிப் போயி அந்த ஆளுக்கு போன் போட்டுக் பேசு. எங்க கிராமத்துல ஒரு சமாசாரம் நடந்திருக்கு, வந்து போட்டோ புடிச்சிட்டுப் போன்னு சொல்லு.”

– 15.10.2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *