(இதற்கு முந்தைய ‘சூதானம்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது)
பூரணி சொன்ன பொய்யால் அத்தனை சொந்தக்காரப் பயல்களும் ஓடிப்போய்விட்டான்கள். அதுவும் எப்படி? ‘வெளி வேசத்தைப் பார்த்து யாரையும் நம்பக்கூடாது’ என்று பேசியபடி…
செந்தூர் பயல்களே இப்படிப் பேசினான்கள் என்றால் பாளை வியாபாரிகள் பேசாமல் இருப்பார்களா? அவர்கள் அதற்குமேல் பேசித் தீர்த்தார்கள்.
“பாண்டி துட்டே சம்பாரிச்சிருக்க மாட்டான்னு ஒரேமுட்டா சொல்லிர முடியாது. கை நெறைய சம்பாரிச்சிருப்பான். ஆனா சம்பாரிச்ச துட்டு எல்லாத்தையும் விட்டிருப்பான். அதான் ஊர் ஊரா போயிட்டும் வந்துட்டும் இருந்தானே? போர வார இடத்துல எப்படி இருந்தான்னு யாருக்குத் தெரியும்? பொம்பளை சகவாசம் ஏதாச்சும் இருந்திச்சோ என்னவோ?”
“பொம்பளை சகவாசம் இருந்தாத்தேன் போதுமே, துட்டெல்லாம் கரையரதுக்கு.”
“இந்த வெத்துவேட்டு பயலைப்போய் நம்ம சங்கத்துக்கு காரியதரிசியா போட்டமே, நம்மளைச் சொல்லணும்.”
“பாவம் பாண்டியோட சம்சாரம்தான் ரொம்ப சின்ன வயசுக்காரி. கரும்பு கனக்கா நெகுநெகுன்னு இருக்கா…”
“பயங்ககரமான பயலைவேறு பெத்து வச்சிருக்கா.”
“நம்ம ஊரு ஸ்டேஷன் மாஸ்டர் வீட்ல வீட்டுவேலை செய்யப் போயிட்டாளாம் பூரணி.”
“பொறவு என்னத்தைச் செய்ய… அரை வவுத்துக்காவது கஞ்சி குடிச்சாகனுமே.”
“என்னத்துக்கு அவளுக்கு சொந்த வீடு, அதை வித்துப்புட வேண்டியதுதானே?”
“என்னமோ அதாவது இருக்கே…”
“இருந்து என்ன செய்ய? கடனை அடைக்கவா போறா? என்னைக்காவது கடன்ல அந்தவீடு முங்கத்தானே போகுது?”
இப்படியே பாளை வியாபாரிகள் வாய் வலிக்க வம்பு பேசிக்கொண்டு கிடந்தார்கள்.
பூரணி ஒரு பேச்சு பேசாமல் காரியத்திலேயே கண்ணாக இருந்தாள். அவ்வளவு சின்ன வயசிலேயே மனுச குணம் என்ன என்பதை அப்பட்டமாகத் தெரிந்து வைத்திருந்தாள். துட்டு இருப்பது தெரிந்தால் கருவாட்டைச் சுத்தி சுத்தி வரும் பூனை மாதிரி சொந்தக்காரன் ஒவ்வொருத்தனும் வருவான். தேன் ஒழுக பேசுவான். அது தெரிந்துதான் பூரணி தன்னிடம் துட்டே இல்லை என்று சத்தியம் செய்துவிட்டாள். வீட்டின் மேலேயே கடன் இருக்கிறதாகவும் கதை கட்டி விட்டாள்.
இரை கிடைக்காத கூரை மேல் எந்தக் காக்கா வந்து உட்காரும்? துட்டு பூராவையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை எண்ணி மண் சட்டிக்குள் துணியால் சுற்றிவைத்து, வீட்டுச் சமையல் அறையின் மூலையில் ஒரு குழியைத் தோண்டி பத்திரமாகப் புதைத்துவிட்டு, அந்த இடத்தில் பெரிய தகரப் பெட்டியை வைத்து மறைத்தாள். எல்லோருடைய கண்ணிலும் மண்ணைத்தூவ கொஞ்ச நாளைக்கு யார் வீட்டிலாவது வீட்டு வேலைக்கு போகவும் முடிவு செய்தாள்.
ஆனால் அவளுடைய ஜாதிக்காரர்களாகிய பாளை வியாபாரிகள் யார் வீட்டிலும் போய் வேலை செய்ய மனசு வரவில்லை. அதெல்லாம் வம்பு. ஆகையால் வேறு ஜாதிக்காரர்கள் வீடாகப் பார்த்தாள்.
பாளையங்கோட்டை ஸ்டேஷன் மாஸ்டர் ஆராவமுதம் ஐயங்கார் குடும்பம் ரொம்ப ஆசாரமானது. மரியாதைக்குரியது. ஆனாலும் அவர்கள் பூரணியை வேலைக்கு வைத்துக்கொள்ள சிறிதும் தயங்கவில்லை. ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் அவர்கள் மிகவும் ‘கன்டிசனாக’ இருந்தார்கள். பூரணி வீட்டு விலக்காகும் ‘அந்த’ மூன்று நாட்களும் கண்டிப்பாய் வேலைக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.
அதையும் பூரணி தனக்குச் சாதகமாக பயன் படுத்திக்கொண்டாள். பொட்டப் பிள்ளைகள் பள்ளிக்கு எதிரில் கடை போட்டுக்கொண்டாள். கடலைமிட்டாய்; இலந்தைப்பழம்; சீனிக்கிழங்கு; கருப்பட்டி வடை; நெல்லிக்காய் விற்றாள். திடீர் திடீரென்று பள்ளிக்கூடத்தின் எதிரில் மூன்று நாட்கள் அவள் கடைபோட்டு உட்கார்ந்து விடுவதின் மர்மம் ஐயங்கார் குடும்பத்தினரைத் தவிர, பாளையில் வேறு யாருக்குமே தெரியாது. ஐயங்காரின் வீட்டில் வேலை பார்த்த ரெண்டு வருசமும் பூரணி பிறந்த வீட்டில் இருப்பது மாதிரிதான் ‘அக்கடாவென்று’ இருந்தாள். அவளை அப்படிப் பார்த்துக்கொண்டார்கள் அவர்கள். தீபாவளி, பொங்கல் என்றால் பூரணிக்கும் அவளின் பிள்ளைக்கும் புதுத்துணிகள் உண்டு. ஆனால் ஊர்க்காரப் பயல்கள்தான் பூரணியின் மகன் இசக்கியை எப்போதும் ‘பனங்காட்டுப் பயல்’ என்று கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். இதற்கு நேர் எதிர் ஐயங்கார் குடும்பத்தினர். அவர்கள் அவனை ‘இசக்கிப் பாண்டி’ என்று முழுப்பெயரையும் சொல்லித்தான் வாய் நிறைய அழைப்பார்கள்.
ஆராவமுதம் ஐயங்காருக்கு தமிழ்ப்பற்று ரொம்ப ஜாஸ்தி. பிரபந்தம் சொல்கிறவர்கள் குடும்ப வழியில் வந்தவரானாலும் தன்னுடைய ஒரு மகனுக்கு தமிழ்ச்செல்வன் என்று பெயர் வைத்தவர். அப்படியென்றால் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்…. ஆனால் ஒன்று, ஐயங்கார் பிறந்து வளர்ந்த திருவஹிந்திபுரத்தில் சும்மாவே வேதக்காரர்கள் பிரபந்தகாரார்களை மதிக்க மாட்டார்கள்! அப்படி இருக்கும்போது இப்படியெல்லாம் தமிழ்ச்செல்வன் என்று பெயர் வைத்தால் விடுவார்களா? “அவனைப்பத்தி பேசாதீரும், அவன் பிராமணனே இல்லை” என்பார்கள்.
ஆராவமுதம் ஐயங்கார் பற்றிப் பேச்சு வரும்போது அவர்களுடைய எரிச்சலை அதிகப்படுத்துவது போலத்தான் ஐயங்காரும் ஒவ்வொரு காரியமும்செய்வார். வருஷா வருஷம் அவருடைய வீட்டில் விநாயகர் சதுர்த்தி அமர்க்களமாகக் கொண்டாடப்படும். வீர வைஷ்ணவாள் செய்யற காரியமா அது? ஆனால் ஒன்று, விநாயகர் பொம்மைக்கு ஆராவமுதம் ஐயங்கார் ஞாபகமாய் ஒரு நாமத்தை போட்டு வைத்துவிடுவார்…!
வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஐயங்காரின் வீட்டின் ஒவ்வொரு ஆசாரங்களும் பூரணிக்கு ஆச்சர்யமாக இருக்கும். ராத்திரிப் பொழுதாகிவிட்டால் உப்பு என்ற சொல்லைக்கூட சொல்ல மாட்டார்கள் . சொல்லித்தான் ஆகவேண்டும் என்கிற நேரங்களில் ‘மோர் சக்கரை’ என்பார்கள். பூரணிக்கு சிரிப்பாக வரும். இப்படியுமா மனுசர்கள் இருப்பார்கள் என்று… என்ன ஜாதியோ, என்ன ஆசாரங்களோ! ஆனால் அடிப்படையில் மனுசர்கள் எல்லோருமே ஒன்றுதான் என்று அவளுக்குத் தோன்றும்.
பாளை வியாபாரிகளும் செந்தூரில் பனை மரத்தில் ஏறி இறங்குகிறவர்களும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் பாளை வியாபாரிகள் அந்த செந்தூர்க்காரர்களை காலணாவுக்கு மதிக்கமாட்டார்கள். அதே காரியம்தான் வேதகாரர்கள் செய்வதும்; பிரபந்தக்காரர்களை மதிக்கவே மாட்டார்கள். தர்ப்பையை வைத்து நாக்கில் பொசுக்க வேண்டுமென்று அலட்சியமாகத் திட்டுவார்கள். பிரபந்தக்காரர்கள் வீட்டில் பெண்கூட எடுக்கமாட்டார்கள் வேதகாரர்கள். அது மட்டும்தானா? வேதகாரர்கள் பிரபந்தக்காரர்களின் வீட்டுச் சின்னக் குழந்தையைக் கூப்பிடுவார்கள். குழந்தையும் ஆசையுடன் ஓடிவருவான்.
“எதுக்கு மாமா கூப்பிடறேள்…?
“ஒங்காத்து மனுஷாள்ல்லாம் என்ன கட்சின்னு தெரியுமோ நோக்கு?”
“தெரியாதே மாமா.”
“நான் சொல்லட்டுமா?”
“ஓ சொல்லுங்களேன்.”
“பெருமாளுக்கு பிருஷ்டத்தைக் காட்டற கட்சி..!”
ஏதேனும் உற்சவத்தில் பெருமாள் பிரதான தெருக்களில் வரும்போது பெருமாளுக்கு மின்னால் பிரபந்தக்காரர்கள் போவர்கள். பொதுவாய் பெரியவர்களைப் பார்க்கப் போகும்போதும், பகவானை தரிசிக்கச் செல்கிறபோதும் – விடை பெற்றுக்கொள்கிறபோது முதுகைக் காட்டாமல் நேர்முகமாகவே உத்தரவு வாங்கிக் கொள்ளவேண்டும் என்பது ஐதீகம். ஆனால் இந்தப் பிரபந்தக்காரர்கள் பெருமாளுக்கு தங்கள் பின்புறத்தைக் காட்டியபடி ஊர்வலத்தில் போகிறார்களாமே…! அது சரிதான். அதற்காக இப்படியா ஆபாசமாகக் கிண்டல் பண்ணியாக வேண்டும்..? அதுவும் இல்லாமல் வேதம் படித்துவிட்டா இப்படி அசிங்கமாய்ப் பேசுவது?
பிரபந்தக்காரர் ஆராவமுதம் ஐயங்காரின் வீட்டில் பூரணி வேலைபார்த்த ரெண்டு வருஷமும் ரெண்டு நிமிசமாக ஓடிவிட்டது. ஐயங்காருக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றலாகிவிட்டது. ஊரின் பெயரைக் கேட்டதும் நெகிழ்ந்து போய்விட்டார் ஐயங்கார்.
மாதுஸ்ரீ ஆண்டாளோட ஷேத்திரம் ஆச்சே…!
வேதவாய்த் தொழிலார்கள் வாழ்வில்லி
புத்தூர் மன்விட்டு சித் தன்றன்,
கோதையாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி
வைகுந்தம் சேர்வரே.
கைகூப்பிப் பாடி கண்ணீர் சொரிந்தவாறு ஆராவமுதம் ஐயங்கார் ஸ்ரீவில்லிபுத்தூர் போய்ச் சேர்ந்தார். அதற்கு அப்புறம் பூரணி யாருடைய வீட்டிலும் போய் வேலை பார்க்கவில்லை. ஐயங்காரின் வீட்டில் போய் வேலை செய்ததே அவளைப் பொறுத்தமட்டில் ஒரு கண் துடைப்பு வேலைதானே!? சோற்றுக்கு வழி இல்லாமல் வீட்டுவேலை பார்த்து வயிற்றைக் கழுவுகிறாள் என ஊரார்களும் சொந்தக்காரர்களும் எண்ண வேண்டும் என்பதுதானே! அந்த எண்ணம் நிறைவேறிவிட்டது. அசந்து மறந்துகூட எந்தச் சொந்தக்காரனும் பூரணி வீட்டுப்பக்கம் வந்துவிடவும் இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டமாக இருக்கிறதென்று துட்டு கிட்டு அவள் கேட்டுவிட்டால் என்ன பண்ணுவது? அதனால் சோலி இருந்தால்கூட பூரணி வீடு இருந்த தெருப்பக்கம்கூட எவனும் தலைகூட வைத்துப் படுத்து விடாமல் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தாள்.
அடுத்து என்ன செய்யலாம் என பூரணி யோசித்தாள். வீட்டு வாசலிலேயே சின்னக் கடை வைத்தால் என்னவென்று தோன்றியது. பெரிய கடையாக வைத்துவிடக் கூடாது. இவ்வளவு பெரிய கடை வைக்க துட்டு எங்கிருந்து வந்தது என்று பாளை வியாபாரிகள் யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் பூரணி சோத்துக்கே தாளம் போடுகிறவள். ஏதோ அரை வயித்துக் கஞ்சி குடிக்க வீட்டு வாசலில் அவளாலான ஒரு சின்னக்கடை வைத்து கஷ்ட ஜீவனம் செய்து கொண்டிருக்கிறாள். அந்த நாய்படாத பாட்டிலும் பிள்ளையை நல்லபடியாக வளர்த்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பயலும் ரெண்டே வருடத்தில் நாலு வயசுப் பயல் மாதிரி நல்ல உசரமாய் வளர்ந்திருந்தான். பனைமரம் மாதிரி கருப்பு. நெட்டுலிங்க மரம் மாதிரி உசரம். ஆராவமுத ஐயங்கார் இருந்தவரை ‘கடோத்கஜன்’ என்றுகூட சில சமயங்களில் இசக்கிப் பாண்டியை குறிப்பிடுவார்.
இசக்கியும் பல சமயங்களில் பூரணியுடன் கடையில் உட்கார்ந்துகொள்வான், ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி. ஆனால் அவனின் கவனம் பூராவும் விற்பதற்காக கடையில் இருக்கிற தின்பண்டங்களின் மேலேயே இருக்கும்.
பிள்ளையின் மனசு தெரிந்து பூரணியும் அவித்த இலந்தைப் பழத்தை கருப்பட்டிச் சாற்றுடன் ஒரு கிண்ணம் நிறைய எடுத்துத்தான் கொடுப்பாள். கொடுத்த நிமிசத்தில் அந்தக் கிண்ணம் காலியாகிப் போகும். கருப்பட்டிச் சாறு வாசனை கிடைத்தால் ஈயெல்லாம் சும்மாயிருக்குமா? படை திரட்டிக்கொண்டு பறந்து வரும். இசக்கியின் உடம்பு பூராவும் ஈ உட்கார்ந்து மொய்க்கும். பயல் ஆடாமல் அசையாமல் அவன் பாட்டுக்கு வால்மீகி முனிவர் மாதிரி உட்கார்ந்திருப்பான். எறும்பு புற்றே கட்டிவிட்டது வால்மீயைச் சுற்றி ஒரு சமயம். ஆனால் வால்மீகி தியானத்தில் இருந்தார். இசக்கி இலந்தைப் பழ தியானத்தில் இருந்தான். எவ்வளவு கொடுத்தாலும் போதாது. அவ்வளவையும் தின்றுவிட்டு இலந்தைப் பழம் இருக்கும் சட்டியையே பார்ப்பான்.
பூரணியும் பிள்ளை ஆசைப்படுகிறதே என்று எடுத்து எடுத்து கொடுத்துக்கொண்டே இருப்பாள். கடைசியில் சட்டியில் இருந்ததெல்லாம் இசக்கியின் தொந்திக்குள் இருக்கும். அது மாத்திரமா? பயல் ஆளே கருப்பட்டிச் சாற்றால் அபிஷேகம் செய்து வைத்த மாதிரி இருப்பான்.
பொதுவாய் இலந்தைப் பழம் கொஞ்சம் தின்றாலே ஏப்பம் ஏப்பமாய் வரும். காற்றுப் போகும். ஆனால் வத்தல் மாதிரி நன்றாகக் காயப்போட்டு எடுத்த இலந்தைப் பழங்களை நல்லா அவித்துவிட்டு கருப்பட்டிப்பால் எடுத்து அதில் ஊற வைத்துவிட்டால் ஏப்பத் தொந்திரவு ஒண்ணுகூட வராது. ருசியிலும் வேற எதுவும் கிட்டக்கூட நெருங்க முடியாது. கருப்பட்டிப்பால் சேர்த்து விடுவதால் உடம்புக்கு நல்லது. அவித்த இலந்தைப்பழம் ஆச்சா?
அடுத்தது கமாலட்டு கமர்கட்டுதான். ஒரு டப்பா நிறைய கமாலட்டைத் தின்று தீர்ப்பான். அதுவும் ஆச்சா? அப்புறம் பணியாரம்; அதிரசம்; சூட மிட்டாய்; எலிப் புழுக்கை மிட்டாய்..! இதற்கெல்லாம் மேல தெருவில் போகிற குச்சி ஐஸ் வேறு. பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பேதியாகிவிடும் ! அப்படித் தின்று தீர்ப்பான் இசக்கி.
‘ராச்சசப் பயல், அவன் அம்மையையே தின்னு தீக்கப் போறான் ஒரு நாளக்கி’ என்று எசக்கியைப் பற்றி பேசாதவர்கள் அந்தத தெருவிலேயே யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட தின்னிப்பயல் இசக்கிப்பாண்டி. இசக்கி தின்பதற்காகவே தயாரிக்கப்பட்ட வேறு பல தின்பண்டங்கள் வீட்டுக்குள் தனியாய் இருக்கும். அதுவும் யாராவது வருகிறவர் போகிறவர்களின் பார்வையில் படாமல் பத்திரமாய் பரண்மேல் இருக்கும். யாராவது பார்த்துவிட்டால் கண்பட்டுப் போகுமாம்.! இந்த ஒன்றிலிருந்தே தெரிந்துகொண்டு விடலாம் பூரணி எவ்வளவு கண்ணுங் கருத்துமாய் பிள்ளையை வளர்த்தாள் என்று. இத்தனை அக்கறையாய் வளர்த்ததால் ஒரு ஆம்பிளைப் பிள்ளை புண்ணாக்கு உரமாகப் போட்டு வளர்ந்த கருவேப்பிலைச் செடி போல இல்லாமல் வேறு எப்படி இருப்பான்? .
ஆனால் இசக்கிப்பாண்டிப் பயல் இப்படி இருப்பதைப் பார்த்து பாளை வியாபாரப் பயபுள்ளைகளுக்கு ரொம்பப் பெரிய அங்கலாய்ப்பு… சோத்துக்குத் தாளம் போடுகிறவன் எப்படி யானைக்குட்டி மாதிரி இருக்கான்னு! ஏன்னா அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு போர்ன்விட்டா, ஓவல்டின் கொடுத்தாலும் குச்சிக் கருவாடு மாதிரி மெலிஞ்சிபோய் கம்மந்தட்டையைத்தான் நின்றார்கள்.
ஏண்டா இசக்கி “உனக்கு இதென்ன வயிரா இல்லே வண்ணான் தாழியா” என்று அந்தத் தெருவில் ஒருத்தர் பாக்கியில்லாமல் கேட்டார்கள்.
“ரெண்டு வயசுக்கு பிள்ளைங்க அப்படித்தேன் தின்னும்” பூரணி சொல்வாள்.
“அதுக்கு இப்படியா?”
“அவுக ஐயா சின்ன வயசில இப்படியேதான் இருந்தாகளாம்.”
“அதுனாலதான் குலசேகரப்பாண்டி அப்படி போகக்கூடாத வயசிலேயே போய்ச் சேர்ந்தான்.” பூரணி இந்தப் பேச்சுக்களை காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. மகனுக்கு திருஷ்டி சுற்றிப்போட்டுவிட்டு சீனிக்கிழங்கு அவித்துக் கொடுப்பாள்.
‘நீ தின்ரா ராசா’ ன்னு சொல்லி ஒரு முத்தம்வேறு கொடுத்து… அவ்வளவுதான் ஆரம்பித்துவிடுவான் இசக்கி… சீனிக்கிழங்கிற்குப் பிறகு, பச்சரிசி மாம்பழம்; கொடுக்காப்புளி; நெய்த்தக்காளி இதெல்லாம் போதாமல் பக்கத்து வீட்டில், எதிர்த்த வீட்டில் பயல்கள் ஏதாவது தின்று கொண்டிருந்தால் படாரென்று தட்டிப் பறித்து வாயில் போட்டு அதை ஒரு நிமிசத்தில் முழுங்கிப்பிடுவான்.
அஞ்சு வயசாகும் போதே ரெண்டு மூணு ஸ்டூல் போட்டு பரணில் பூரணி வைத்திருக்கும் தின்பண்டங்களைத் திருடித் திங்கவும் தொடங்கிவிட்டான். இதில் ஒரு வித்தியாசத்தை இசக்கி நடைமுறையில் வைத்திருந்தான். வீட்டில் திருடியதை தெருவில் ஓடிப்போய் தின்பான். தெருப் பிள்ளைகளிடம் திருடுவதை தன்னுடைய வீட்டிற்கு எடுத்துப்போய் தின்பான். சுருக்கமாகச் சொன்னால் அந்த அஞ்சு வயசிலேயே இசக்கிக்கு வால் மாத்திரம்தான் இல்லை. வேற எல்லாம் இருந்தது.
அப்படியும் இப்படியுமாக இசக்கிக்கு அஞ்சு வயசு முடிஞ்சு ஆறாவது வயசு ஆரம்பித்தது. பள்ளிக்கூடத்தில் சேர்க்கணுமே? ஆனி மாசம் நல்லநாள் பார்த்து இசக்கிக்கு புதுச்சட்டை, புது டிரவுசர் எல்லாம் மாட்டி, அதுக்கு முந்தின நாளில் தலைமுடியை ஓட்ட வெட்டி அவனை தயார் செய்தாள் பூரணி.